தங்கம்மாளுக்கு சுமதியும் சிந்துவும் ஒற்றுமையாய் இருப்பது அறவே பிடிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்துவின் மீதான தன்னுடைய வக்கிர எண்ணங்களுக்கு உவமையும் உருவகமும் கொடுத்து சுமதியின் மனதில் விதைத்தார்.
பத்து மாதத்திலே சுமதி அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்திருக்க, அருணாச்சலம் அகமகிழ்ந்து போனார். பேரனைக் கண்டுவிட்ட திருப்தியில் மனிதர் காலனடியில் சரணடைந்தார்.
குழந்தைப் பிறப்பிற்கு பிறகான சுமதியின் நடவடிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரிய ஆரம்பித்திருந்தது. அமைதியாவன சுபாவம் என எண்ணியிருந்தவை எல்லாம் கானல் நீர் போலாகின.
வேலையாட்கள் அனைவரும் சிந்துவிற்கு அளிக்கும் மரியாதை தனக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததில் தங்கம்மாளுடன் சேர்ந்து அவரது பாட்டிற்கு தாளம் தட்ட ஆரம்பித்தார் சுமதி.
சிந்துவிற்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. இப்படி நடக்குமென ஏற்கனவே எண்ணியிருந்தவர், அதை பெரிதுபடுத்தவில்லை. தானாக அனைத்திலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்தார். தேவைக்கு அதிகமாக அறையிலிருந்து வெளிவரவில்லை பெண்மணி.
நடுகூடத்திலிருந்த அவரது அறை வாயிலை ஒட்டியிருந்த அறைக்கு மாற்றப்பட்டது. அனைத்தையும் கவனித்தாலும் தாயை எதிர்த்துப் பேச முடியாத சொக்கநாதன் சிந்துவிடம் தனிமையில் வருந்துவார். காயம்பட்ட மனதிற்கு அது ஆறுதலாக இருந்தாலும், இதை அவரது தாய் முன்னே இவர் பேசப் போவதில்லை என்ற உண்மை அவரை ஒவ்வொரு நாளும் சுட்டது. சொக்கநாதன் மட்டும் அப்படியொரு சத்தியம் வாங்கியிராவிட்டால் சிந்து என்றோ வீட்டைவிட்டு வெளியேறியிருப்பார். ஆனாலும் சொக்கநாதனின் அன்பை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. தைரியம் இல்லாத துணிவில்லாத மனிதர் என்றாலும் தன்மீதான அவரின் அன்பு அத்தனை தூய்மையென அவர் அறிந்ததே.
விக்ரம் பிறந்து இரண்டு வருடத்தில் சிந்து கருத்தரிக்க, சொக்கநாதன் இன்பமாய் அதிர்ந்தார். ஆனால், தங்கமாளுக்கும் சுமதிக்கும் அது அத்தனை உவப்பாய் இல்லை. அதிலும் தங்கம்மாள் தங்கள் வீட்டு வாரிசு அவளது வயிற்றில் வளரக் கூடாது என நாக்கில் நரம்பற்றுப் பேச, இத்தனை நாட்கள் தாயின் பேச்சைப் பொறுத்த சொக்கன் அன்று மொத்தத்தையும் வார்த்தையில் கவிழ்த்திருந்தார்.
“ம்மா, என்ன பேசுறீங்க? அவ என்னோட பொண்டாட்டி, அது என்னோட குழந்தை. உங்களுக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்கலைன்னா, நானும் அவளோட சேர்ந்து வீட்டைவிட்டு வெளியே போய்டுறேன்” மகனின் பேச்சில் தங்கம்மாளின் வாய் பூட்டுப்போட்டுக் கொண்டது. வேறு எதையும் அவரால் பேச முடியவில்லை.
சுமதிக்கு கணவன் பேச்சு அதிர்ச்சி. சிந்துவிற்காக தன்னையும் மகனையும் விட்டுவிட்டு சொல்லுமளவு தங்கள் முக்கியமற்றுப் போய்விட்டோமா என்று குமைந்தவரின் கோபமும் ஆற்றாமையும் சிந்துவின் புறம் திரும்பியது. அதற்குமுன் வரை சிந்துவிடம் பட்டும்படாமலும் பேசி விக்ரமை சிறிது நேரம் அவரிடம் கொடுத்து வந்தவர், இப்போது பேச்சை மொத்தமும் குறைத்திருந்தார். பார்க்கும் பார்வையில் கூட வெறுப்பை உமிழ்ந்தார். விக்ரமை சிந்துவிடம் அண்ட விடவில்லை.
ஏதும் பிடிபற்றிருந்த வாழ்க்கையில் சிந்துவின் வாழ்க்கைக்கு ஆதாரமாக திருக்குமரன் பிறந்திருந்தான்.
சொக்கநாதன் மகிழ்ந்து போனார். சிந்துவிற்கு வார்த்தைகள் எல்லாம் வற்றிப் போனது. தன்னுடைய மகன் என்று குமரனைக் கொண்டாடி தீர்த்தார். விக்ரமும் ஏதுமறியா வயதில் தம்பி என குமரனைச் சுற்றிவர, சுமதி மகனைப் போட்டு அடி வெளுப்பார்.
‘குமரனைத் தொடக் கூடாது, பேசக் கூடாது! அவன் அசிங்கம்!’ தங்கம்மாள் பிஞ்சு விக்ரமின் மனதில் நஞ்சை விதைக்க, ஏனோ அவனுக்கு அதெல்லாம் சுத்தமாய்ப் புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. அவனுக்கு தன்னுடன் விளையாட மற்றொரு குழந்தை வந்ததில் ஏகக் குஷி. சின்னவன் மீது அத்தனைப் பிரியமாயிருந்தான். அதைவிட தன்னை ஒரு வார்த்தை திட்டியிராத, எப்போதும் பாசமாய்ப் பார்த்துக் கொள்ளும் சிந்துமாவின் மீது அலாதியான பிரியம்.
தாய் மற்றும் அப்பத்தாவிற்குத் தெரியாது அவர்களைப் பார்த்து வருவான். மேலும் சில வருடங்களிலே ஷெண்பா பிறந்துவிட, இருவர் மூவராகினர். சுமதியும் தங்கம்மாளும் எத்தனை முயற்சி செய்தும் பிள்ளைகளைப் பிரித்து வைக்க முடியவில்லை.
விக்ரம் ஷெண்பா குமரன் என அவர்கள் மூவருக்கும் இடையேயான பிணைப்பு நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே போனது. சொக்கநாதனும் மூன்று பிள்ளைகளையும் ஒரே போல நடத்தினாலும் குமரன் மீது ஒரு துளி பாசம் கூடுதலாகிப் போகும். குமரனுக்கும் தந்தை மீது அத்தனைப் பிரியம். தாயைவிட தந்தை மீது அத்தனை நேசம் வைத்திருந்தான். அதைக் கண்டு சுமதி மேலும் கோபமாகிப் போனார். தன் பிள்ளைகள் தன்னைப் போல இரண்டாம் பட்சமாகப் போய்விட்டார்கள் என அவரது மனம் வெதும்பியது.
பிள்ளைகள் வளர ஆரம்பித்தனர். விக்ரமிற்கும் குமரனுக்குமான இடையில் ஷெண்பாவின் மீதான உரிமை போராட்டத்தில் இருவருக்கும் சண்டை வெடிக்கும். சின்னவள் தான் இருவரையும் சமாதானம் செய்து வைப்பாள். முதலில் இருவரும் முறுக்கிக்கொண்டு திரிந்தவர்கள், காலப்போக்கில் சமாதானக் கொடியைப் பறக்கவிட்டு சகோதரப் பாசத்தை நெய்து கொண்டனர்.
தங்களுக்கு இடையே எத்தனைப் பிணக்குகள் இருந்தப் போதும் பெரியவர்கள் பிரச்சனையை சின்னவர்கள் தங்களுக்கு இடையே வளரவிடவில்லை.
தங்கம்மாள் ஒருநாளும் குமரனின் பெயரை சொல்லி அழைத்தது இல்லை. அவனது ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அழைத்து, திட்டுவதுமாய் இருப்பார். சிறு வயதில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை எனினும் அவர் வார்த்தைகள் கொடுத்தக் காயத்தில் அழுது கொண்டே தந்தையிடம் முறையிட, அவனைத்தான் மனிதர் சமாதானம் செய்வாரொழிய தாயை எதிர்க்கமாட்டார். அந்த வயதில் அது அவனது கவனத்தில் பதியவில்லை.
மகனை சமாதானம் செய்ய வெளியே அழைத்துச் சென்று அவனுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பார். குமரனும் நடந்ததை மறந்து விடக் கூடிய பிராயத்தில் இருந்ததால், அதை அப்படியே விட்டுவிடுவான். தங்கம்மாளின் பேச்சு எல்லைக் கடந்தால், சிந்துதான் மகனுக்காக அவரிடம் பேசுவார். என்ன நடந்தது என்று புரியாவிடினும் விக்ரமும் ஷெண்பாவும் அவரது பக்கத்தில் சென்று ஒட்டிக் கொள்வார்கள்.
குமரன் அழுவதைக் கண்டு தானும் அழுது உணவுண்ண மாட்டேன் என அடம்பிடிப்பார்கள். அந்த சமயத்தில் சிந்துவிற்கு கண்கள் கலங்கிவிடும். சுமதி குமரனை வேற்று ஆளாகப் பார்த்தாலும் இவர் ஒருபோதும் பிள்ளைகளிடம் பாரபட்சம் காண்பித்தது இல்லையே. அதனாலே மூவரும் சிந்துமா என அவரை சுற்றித்தான் வருவார்கள். அதைக் கண்டு சுமதி பிள்ளைகளை சில சமயம் அடித்து வெளுக்க, சொக்கநாதன் அவரை அதட்டுவார்.
இப்படி பொழுதொரு சண்டையும் சமாதானமுமாக நாட்கள் நகர நகர மூவரும் பெரியவர்களாக வளர ஆரம்பித்தனர். சிறு வயதில் புரியாதது எல்லாம் விக்ரமிற்கும் குமரனுக்கும் புரிய ஆரம்பித்தது.
தங்கம்மாள் குமரனை ஜாதியை வைத்துக் குறை கூறும்போது மீசை அரும்பிய வயதில் விக்ரம் அவனுக்கு ஆதரவாக சண்டையிட, ஷெண்பாவும் குமரனுக்காக அவரிடம் மல்லுக்கு நிற்பாள். குமரனும் கோபத்தில் சில சமயம் அவரிடம் சண்டையிட்டாலும், தனிமையில் தாயிடம் அழுத நாட்களும் உண்டு. சிந்து என்ன செய்வது எனத் தெரியாது தானும் கலங்கிப் போய் அமர்ந்த நேரங்களில் அவரது இரண்டு விழிகளையும் இரண்டு பிஞ்சுக் கரங்கள் துடைத்துவிடும். இந்த அன்பிற்காக, கணவனின் வார்த்தைக்காக கட்டுப்பட்டு சிந்துவும் குமரனும் அந்த வீட்டில் தங்கியிருந்தனர்.
ஆனால், அவர்கள் வீட்டைவிட்டு செல்லும் நாளும் வந்தது. இளையவர்கள் இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பினர். விக்ரம் கல்லூரியில் பயின்று கொண்டிருக்க, குமரன் பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்தான். ஷெண்பா ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது.
ஷெண்பாவின் தலையிலிருந்த பூவை சற்றே தட்டிவிட்டு சிரிப்புடன் குமரன் வீட்டிற்குள் ஓட, “குமரா…” என இவள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள்.
இருவரும் உள்ளே நுழைய, கூடத்தில் நின்றிருந்த தங்கம்மாள் பெருங்குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தார். சுமதி முகத்தில் எரிச்சலைக் காட்டியவாறு நிற்க, அவர்கள் முன்னே கொதித்துப் போய் நின்றார் சிந்து.