உள்ளம் – 22.4

“என்ன… என்ன வேணும்?” என்றவள் கைகளை உருவப் போராடினாள். பேச்சில் கோபமோ அல்லது அந்நியத் தன்மையோ அப்பட்டமாய் விரவியிருந்தது.
ஆனால் அவனின் பிடி இறுக்கமாய் இருந்தது.

“என் முகத்தைப் பாரு டி!” அதட்டலாய் உரைத்தவனை முறைத்தவள், “ஆமா! இப்போ முகத்தைப் பாரு, மூஞ்சியைப் பாருன்னு வருவாரு! தங்கச்சி வந்தா நாங்க எல்லாம் கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது!” என்று முணுமுணுத்தவளின் வார்த்தைகளில் அவனது அதரங்களில் புன்னகை.

“ஏய், சின்ன புள்ளை கூடப் போய் நீ சரிக்கு சரியா நிப்பியா டி?” என்றவன் கேள்வியில் கோபமாய் கரத்தை உதறினாள் மனோ. நொடியில் அவளது ஒருபக்க இடையை சுண்டி இழுத்து மனைவியின் இடையோடு கட்டிக்கொண்டு முகத்தைப் புதைத்திருந்தான் கணவன். ஏனோ காலையில் நடந்த விபத்தில் உடைந்திருந்தாலும், மற்றவர்களுக்காக என அத்தனையும் உள்ளுக்குள்ளே வைத்து அழுத்திக்கொண்டு இயல்பாய் முகத்தை வைத்திருந்தவளின் பாவனை
மனதில் ஆழப்பதிந்திருக்க, அதில் மனைவியின் அணைப்பு வேண்டுமென உடல் அனத்தியதில் அவளை இறுக கட்டிப்பிடித்திருந்தான் கணவன்.

மனோஹரி ஒரு நொடி திகைத்துப் போனாள். ஆனால், மறுகணம் அவளது கரங்கள் குமரனது தலையோடு தன் வயிற்றில் அழுத்தியது போல தானும் இறுக்கி அணைத்தாள். உடல் நடுங்கியது அவளுக்கு. விபத்து நடந்ததிலிருந்து நிகழ்ந்தவை எல்லாம் அடுத்தடுத்து நினைவில் வர, “ஏன் இப்படி பண்ணீங்க, அறிவிருக்கா உங்களுக்கு?” கோபமாய் கேட்க முயன்றாலும் குரல் உடைந்திருந்தது பெண்ணுக்கு.

மெல்லிய விசும்பல் அவளிடம் தென்பட, “அழறீயா டி?” என குமரன் நிமிர்ந்து அவளின் முகத்தைப் பார்க்க, “நான் ஏன் அழப் போறேன், நான் அழலை!” ரோஷமாய் உரைத்தவளைப் பார்த்து கணவன் சிரிக்க, அவனை முறைத்தவளின் இதழ்கள் கணவன் நெற்றியில் அழுத்தமாய் பதிய அவன் உடல் தளர்ந்து போனது. அந்த முத்தத்தையும் அவளது உடல் வெப்பத்தையும் சுகித்தான் குமரன்.

“ஏன் இப்படி பண்ணீங்க? இதுக்குப் பயந்துதான் அடிதடி செய்யவிடக் கூடாதுன்னு அப்பாகிட்டே உங்களை வேலை பார்க்கவிடலை. உங்களுக்கு எதுவும் ஆகியிருந்தா, உங்களை மட்டுமே உலகமா நினைச்சிட்டிருக்க உங்கம்மா என்னவாகி இருப்பாங்கன்னு யோசிச்சீங்களா? நான்… எனக்கு… அது எப்படி இருப்பேன்னு உங்களுக்குத் தோணலை இல்ல?” கோபமாய் கேட்க முயன்று தோற்றவளின் குரலில் ஆற்றாமை பொங்க, விழிகளில் குபுகுபுவென நீர் வழிந்தது. கட்டியவனுக்கு எதுவும் ஆகியிருக்குமோ என்று துடித்துப் போன இதயம் இப்போது வேறெதுவும் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என மீண்டும் பரிதவித்தது.

குமரன் மனைவியைப் பார்த்தான். அவளது ஆதங்கம் இவனுக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் அவனது தொழில் இதுவென்றானப் பிறகு வேறு என்ன செய்ய? பெரு மூச்சை வெளிவிட்டவன், அவளை தன்னருகே அமர வைத்தான்.

“சரி, அழாத மனோ. ட்ரை பண்றேன் டி. பட் இப்போ நடந்தது ஆக்ஸிடென்ட் தான்!” என்றவனை முறைத்துக் கண்ணீரைத் துடைத்தவள், “பொய் சொல்லாதீங்க. எனக்குத் தெரியும், இது ஆக்ஸிடென்ட் இல்லன்னு…” கீழ் கண்ணால் முறைத்தவளை ஆசையாய் பார்த்தான். அவள் நம்பமாட்டாள் என்று தெரிந்துதானே பொய்யுரைத்தான். அழுகை நின்று அவனை முறைத்தக் கண்ணில் முத்தமிடும் வேகம். தனக்காகவென ஷெண்பாவிடம் சண்டையிட்ட இதழ்களுடன் தானும் முத்தச் சண்டையிட வேண்டும் என்ற உந்துதல். ஆசையாய் ஆர்வமாய் பார்வையிலே மனைவியை கபளீகரம் செய்தவன், “மனோ, உன் கழுத்துல என்னவோ இருக்கே!” என்றான்.

“என்ன? என்ன இருக்கு?” குனிந்து கழுத்தைப் பார்த்தவள், “ஒன்னும் இல்லையே…” என்றாள்.

“ச்சு… இங்க வா, நான் பார்க்குறேன்…” அவன் குரலின் பேதம் உணராதவள் குனியவும் அவளது கழுத்தணியோடு சேர்த்து மனைவிக்கும் ஒரு முத்தம் கொடுத்தான். அவனது செய்கையில் பதறி, திகைத்து, விழித்து, “என்ன பண்றீங்க, இது ஹாஸ்பிடல்!” என மிரட்டினாள் மனைவி. உடல் உதறியது அவளுக்கு.

“ஹக்கும்… என்ன என்ன பண்ணேன். இப்போதைக்கு என்னால வேறெதையும் பண்ண முடியாது!” ஏக்கமாய் கைக்கட்டையும் மனைவியையும் பார்த்தவன் பார்வையில் மனோஹரி மொத்தமாய் சிவந்து போனாள்.

“எல்லாம் நீங்களே இழுத்துவிட்டது தானே? பேசாம படுங்க!” என கட்டிலை காட்டினாள் மனைவி.

“எல்லாம் எந்நேரம் டி. இத்தனை நாள் கழிச்சு என் பிரம்மச்சாரிய வாழ்க்கைக்கு எண்ட் கார்ட் போடலாம்னு நினைச்சேன். முடியாமப் போச்சு, ஹக்கும்!” தொண்டையைக் கணைத்தவனின் பேச்சு போகும் திசையை உணர்ந்தவள், “என்ன… என்ன பேசுறீங்க!” என்று அதட்டினாள் இவள். இப்படியெல்லாம் இவன் பேசுகிறானே என்ற ஆச்சர்யத்தோடு வெட்கமும் சேர்ந்து கொண்டது.

“ஏன்டி, எதுவும் செய்ய முடியாமதான் பேசீட்டு இருக்கேன். பேச கூட விட மாட்டீயா?” குமரன் முறைக்க, “கடவுளே! போதுங்க. உங்க பேச்சே சரியில்லை!” கோபமாய் அதட்டி கருவிழிகளை உருட்டிய மனைவியை கலைத்து களைத்துப் போடும் எண்ணம் கணவனுக்கு. இத்தனை இணக்கமான பேச்சுக்கள் திருமணமான நாள் முதலாய் இன்றுதான் வாய்த்திருக்கிறது. ஆனாலும் கையில் கட்டோடு எதையும் செய்ய முடியாத நிலையை எண்ணி நொந்தவன், “ஸ்… கை வலிக்குது டி…” என்றான் திடீரென.

“என்னாச்சுங்க!” மனோ பதறி கட்டிலில் ஏறி மறுபுறம் எட்டிக் கையைப் பார்க்க, குமரன் சிரிப்புடன் மீண்டும் அவளது வயிற்றோடு அணைத்துக் கொண்டான். முன்பு போல் அல்லாது இப்போது சேலையை விலக்கி வெற்று இடையில் முகத்தைப் புரட்டியவனின் செய்கையில் அவளின் உடல் தூக்கிப் போட்டது.

“ஹாஸ்பிடல்ல வச்சு என்னங்க இது!” விலக்கவும் முடியாது அனுமதிக்கவும் முடியாத அவஸ்தையாய் நெளிந்தாள் பெண்.

“ச்சு… நான் என்னடி பண்ண? காலையிலே சேலையைக் கட்டி மனுஷனை டெம்ப்ட் பண்ணது நீதான்!” என்றவன் முகத்தை அவளது வயிற்றில் வைத்துத் தேய்த்தான். பெண்களின் வாசனை புதிது. அதிலும் மனைவி வாசனை மயக்கியது. விட முடியும் எனத் தோன்றவில்லை. என்னென்னவோ, ஏதேதோ கற்பனைகள் காலையில் சிந்தையை நிறைத்திருக்க, இப்படி விபத்து ஏற்படும் என நினைக்கவில்லை. மூளை போதுமென நிறுத்தச் சொல்ல, ஆனாலும் முடியவில்லை.
பாவமாய் அவளை நிமிர்ந்து பார்த்தான் குமரன். மனோஹரியும் அந்த முகத்தைதான் பார்த்தாள். அவளுக்குமே கணவன் அருகாமை வேண்டுமெனத் தோன்றியது.

“போடி… போய் படு!” என்றவன் அவளிடமிருந்து பிரிந்து தலையணையில் கோபமாய் முகம் புதைக்க, அவனின் செய்கையில் இவளுக்கு சிரிப்பு
வந்துவிட்டது.

“சிரிக்காத டி!” குமரன் அதட்ட, மனோ பொங்கிச் சிரித்தாள். அவளை ஆசை ததும்பப் பார்த்திருந்தான் கணவன். இந்த இணக்கம், பேச்சு, மகிழ்ச்சி, புரிதல் இன்னும் எத்தனையோ வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என மனம் நினைத்தது. மனைவியும் மனம் நிறைந்தாள்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top