இத்தனை நேரம் மயக்க மருந்தின் உதவியால் வலி தெரியாதிருக்க, இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கைக்கு உணர்வு வரத் தொடங்கியிருந்தது. கை வலியில் முகத்தைச் சுளித்தான் குமரன்.
“என்ன குமரா, வலிக்குதா?” சிந்து அவன் முகத்தைப் பார்த்துப் பதற, அப்போதுதான் மனோஹரியும் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். ஏனோ அழுகை வரும் போலிருந்தது அவளுக்கு. கொஞ்சம் கோபமும் அதிக பயமும் அவளை அலைகழித்துக் கொண்டிருக்க, அதை உரியவனிடம் ஒப்படைக்கச் சொல்லி மனம் துடித்ததில், விழிகளில் மெதுவாய் நீர் நிரம்பத் துவங்கின. இத்தனை நேரமிருந்த உறுதி அவன் முகத்தைப் பார்த்து அமிழ்ந்து போவது போலொரு எண்ணம் வியாபித்தது.
மனம் சொல்ல யத்தனித்து மௌனித்துப்போன வார்த்தைகள் எல்லாம் தொண்டையை அடைக்க, அவனிடம் அழுதுவிடத் துடித்தது நேசம் கொண்ட நெஞ்சம். குமரன் அவள் முகத்தில் வந்து போன பாவனைகளைப் பார்த்திருந்தான். ஏனோ அத்தனை திமிறும் அலட்சியமும் தன்னம்பிக்கையும் நிரம்பியப் பெண், தான் என்ற வரையறைக்குள் மட்டும் ஏன் இப்படி உடைந்து போகிறாள் என எண்ணி அவளைப் பார்த்தான் குமரன்.
“அத்தை, அந்தத் தண்ணியை எடுங்க. சாப்பிட்டு இந்த மாத்திரையைப் போடணும். வலி தெரியாம இருக்கும்!” பார்வையை அவனிடமிருந்து பிரித்தவள் மாத்திரையைக் கணவனிடம் நீட்டினாள். எதுவும் பேசாது அதை விழுங்கினான் குமரன்.
“டேப்லெட் போட்டாச்சா மேம்? இந்த இன்ஜெக்சன் எல்லாம் வாங்கிட்டு வாங்க, டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது போடணும்!” என செவிலியர் உள்ளே நுழைந்து குமரனை ஒருமுறை சோதித்துவிட்டு கூறி அகன்றார்.
“நான் போய் வாங்கிட்டு வரேன் அத்தை!” என மனோ எழவும், திவாகர், ராதாமணி, ரங்கராஜன் அதேநேரம் சரியாய் மூவரும் உள்ளே நுழைந்தனர்.
“குமரா, என்னாச்சு, பார்த்து ட்ரைவ் பண்ணக் கூடாதா?” திவாகர் பதற்றத்துடன் அருகே வந்தான். மற்ற இருவர் முகத்திலும் அதே கேள்விதான். திருமணத்திற்குப் பிறகு ரங்கராஜன் இன்றுதான் அவனைக் காண்கிறார். என்னதான் பிடிக்காத மருமகனாக இருந்தாலும், அவர் ஒருகாலத்தில் அதிகம் நம்பிக்கை வைத்தவனாகிற்றே! அந்தப் பாசம் அவரை அழைத்து வந்திருந்தது.
“கவனமாதான் போனேன் திவாகர், டர்ன் ஆகும்போது ஸ்லிப் ஆகிடுச்சு!” என்றவனின் வார்த்தையைத் தந்தையும் மகனும் நம்பவில்லை. அத்தனை கவனக்குறைவானவன் குமரன் இல்லையென மனம் அடித்துக் கூறியது.
ரங்கராஜன் அவனருகே உள்ள இருக்கையில் அமர்ந்தார். இவனும் அவரைத்தான் பார்த்திருந்தான். “யாருன்னு தெரியுமா, நான் விசாரிக்க சொல்லவா?” என்றவரின் கேள்வியில் அவருக்குத் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தவன், “இல்ல, நான் பார்த்துக்குறேன். தெரியாம நடந்த ஆக்ஸிடென்ட் தான்!” என்ற குமரன் அந்தப் பேச்சைத் தொடர விரும்பவில்லை என்பது போலக் கத்தரித்தான்.
“மனோ, டாக்டரைப் பார்த்தீயா? என்ன சொன்னாங்க? பெரிசா ஒன்னும் இல்லைல?” ராதா மகளிடம் கேள்விக் கேட்கத் துவங்க, அவரது கேள்விக்குப் பதிலளித்தவளின் கவனம் குமரனிடம்தான். அவன் பதில் இவளுக்கு உவப்பாய் இல்லை. கண்டிப்பாக பொய்யுரைக்கிறான் என மனம் பதறியது.
சிறிது நேரம் ஆழ்ந்த மௌனம் கோலோச்சியது. சில நிமிடங்கள் அமர்ந்திருந்த ரங்கராஜன் விடைபெற யத்தனித்தவாறு மனைவியைப் பார்த்தார்.
“மனோ, நான் போய்ட்டு நைட்க்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் டி. மதியம் சாப்ட்டீங்களா?” என வினவினார்.
“கேண்டீன்ல வாங்கி சாப்ட்டோம் மா!” அவள் பதிலுரைக்க, “சரி, சரி டி. வெளிய வாங்கியே சாப்ட்டா உடம்பு சீக்கிரம் தேறாது. நான் சமைச்சு எடுத்துட்டு வரேன்!” என அவர்கள் இருவரும் விடை பெற்றனர். திவாகர் அங்கே அமர்ந்துவிட்டான். பெண்கள் இருவரும் எங்கேயும் தனியே சென்றுவர முடியாது. அதுவும் அல்லாது குமரனுக்கும் எதாவது உதவியென்றால் கண்டிப்பாக ஆண்துணை வேண்டுமென ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
“நான் பார்மஸிக்குப் போய்ட்டு வரேன் திவா” மனோஹரி கூற, “குடு மனோ, நானே வாங்கிட்டு வரேன்” என அவளிடம் மருந்துசீட்டை வாங்கிக்கொண்டு மருந்தகம் சென்றான்.
“அத்தை, டீ, காபி வாங்கிட்டு வரவா? உங்களுக்கு வேணுமா?” என்றவளின் பார்வை கணவனிடம் திரும்பியது. வேண்டாம் என்பது போல அவனது தலை அசைய, “எனக்கெதுவும் வேணாம் மா!” என பெரியவர் பதிலளித்தார்.
விக்ரமின் கைகளில் திசைமாற்றியிருக்க, மகிழுந்து அத்தனை வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அவனது முகம் இறுகியிருக்க, அருகே அமர்ந்திருந்த ஷெண்பாவின் விழிகளில் உவர்நீர் வழிந்த வண்ணமிருந்தன. குமரனுக்கு விபத்து என அறிந்ததும் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கிளம்பியிருந்தனர்.
“விக்கி, குமரனுக்கு ஒன்னும் ஆகிருக்காதில்ல. எனக்குப் பயமா இருக்கு!” என தேம்பியழுத ஷெண்பா பத்தாவது முறையாக இந்தக் கேள்வியைத் தொடுத்தாள்.
“அவனுக்கு ஒன்னும் ஆகிருக்காது!” என அத்தனை பொறுமையாய்க் கூறிய விக்ரம் மனதிலும் அவனுக்கு எதுவும் நிகழ்ந்திருக்கக் கூடாது என முதல்முறையாகக் கடவுளிடம் வேண்டுதல் வைத்தது.
ஷெண்பா சுத்தமாய் நிதானத்தை இழந்திருந்தாள். ‘குமரனுக்கு எதுவும் நிகழ்ந்திருக்கக் கூடாது. அவன் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு என்னுடைய அண்ணன் வேண்டும்!’ மனம் ஊமையாய் அழுது தொலைத்தது.
“விக்கி, குமரன் கூட இனிமே நம்ம சண்டை போட வேணாம். அவன் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா போதும். எனக்கு என் குமரன் வேணும், என் அண்ணன் வேணும் விக்கி… அவனுக்கு எதுவும் ஆச்சுன்னா, என்னாலயே என்னை மன்னிக்க முடியாது. சரியான ஈகோ எனக்கு. இத்தனை நாள் அவனைப் பிரிச்சு வச்சதுக்கு கடவுள்தான் பெருசா கொடுத்துட்டாரு போல. இப்போதான் எனக்குப் புரியுதுண்ணா!” என என்ன புலம்புகிறோம் என தெரியாது பிதற்றினாள். மனம் நிலையில்லாது தவிக்க, கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.
நீ தானே எனக்கு என சிறுவயதிலிருந்தே அவனை நம்பிச் சுற்றி வந்தவளை திடீரென கையைத் தட்டிவிட்டு சென்ற குமரன் மேலிருந்த சிறுவயது கோபமெல்லாம் இப்போது கரைந்து போயின. அறியா வயதில் அவனுடன் சிரித்து, பேசி, மகிழ நினைத்து தவித்த நாட்களை யாரின் முன்னிலையிலும் வெளிப்படுத்த இயலாத ஏக்கங்களும் எச்சங்களும் ஏற்படுத்திய காயங்களால் இத்தனை நாட்கள் வீம்பாய் அவனை ஒதுக்கி வைத்து தவறிழைத்து விட்டோமே என விம்மித் துடித்துப் போனது ஷெண்பாவின் மனது. கண்டிப்பாக இனிமேலும் அவனைப் பிரிந்திருக்க இயலாது என மனம் ஆணியடித்துக் கூறியிருந்தது.
“ஷெண்பா, முதல்ல அழுறதை நிறுத்து. அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது!” என விக்ரம் தங்கை அழப்பொறுக்காது அதட்டலிட்டான். இந்தப் பெண் அழுதே உடலிலிருக்கும் மொத்த சக்தியையும் இழந்துவிடுபவள் போல செய்து கொண்டிருந்தாள்.
அவன் அதட்டல் வேலை செய்ய, இப்போது அழுகை விசும்பலாய் மாறியிருந்தது.
சிறிது நேரத்திலே அவர்கள் மருத்துவமனையை அடைந்தனர். குமரன் பெயரைக் கூறி விசாரித்து அவனது அறை நோக்கிச் சென்றனர்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஷெண்பா அப்படியே நின்றுவிட்டாள். அழுகையை அடக்க உதட்டைக் கடித்தபடி நின்றவளுடன் விக்ரமும் உள்ளே நுழைந்தான். கையிலும் காலிலும் கட்டுப் போட்டு அமர்ந்திருந்த குமரனைப் பார்த்து ஷெண்பாவிற்கு மீண்டும் விழிகள் உடைப்பெடுத்தன. மௌனமாய் வறண்ட ஒரு புன்னகையை உதட்டில் தேக்கி அவனைப் பார்த்தாள் பெண்.
அவர்கள் இருவரையும் குமரன் எதிர்பார்க்கவில்லை என முகத்தின் பாவனைக் கூறியது.
தங்கையின் அழுது சிவந்திருந்த முகம் அவளது நிலையை எடுத்துரைக்க, “ஷெண்பா குட்டி…” என நீண்ட நெடிய காலங்கள் கழித்தான அவனது அழைப்பு கனிந்து போய் தங்கையிடம் விழ, விம்மலுடன் குமரனை தாவிச்சென்று அணைத்தாள். அவள் உடல் அழுகையில் குலுங்கியது. வார்த்தைகள் எல்லாம் வற்றிப் போக தேம்பல் மட்டுமே வெளிப்பட்டது. விக்ரம் அமைதியாய் அவர்களைப் பார்த்திருந்தான். அவனது விழிகளும் லேசாய் கலங்கிப் போயின.
மனோஹரி ஷெண்பாவை முறைத்துப் பார்த்தாள். எங்கே அடிபட்டக் கையை அவள் இடித்துவிடுவாளோ என்ற பதைபதைப்பு அவளிடம். அது மட்டுமல்ல ஏனோ சிறிய பொறாமை கூட முகிழ்த்தது.
மருந்து வாங்கச் சென்ற திவாகர் அறைக்குள் நுழைந்தவன் அப்படியே நின்றுவிட்டான். ஷெண்பாவின் அழுதக் குரலும் சிவந்த முகமும்தான் அவனை வரவேற்றது. அவளைப் பார்த்தபடியே நின்றவனின் விழிகள் ஓரிரு திங்களுக்குப் பின்னரான சந்திப்பில் அவளை தன்னில் சேர்த்துக்கொள்ள, அவளது அழுகை இவனை அந்த இடத்தில் நிற்கவிடவில்லை. அந்தக் குரல் இவனை அந்நொடி அமைதியாய் நிற்கவிடும் என நிச்சயமாய்த் தோன்றவில்லை. தேம்பி கேவியபடி வெளிவந்த குரல் இவனுக்குள் பரிதவிப்பை உண்டு செய்தது. வந்த வழியே விறுவிறுவென வெளியேறியிருந்தான்.
தொடரும்…