“ம்மா… ஒன்னும் இல்லை மா எனக்கு!” என நன்றாய் எழுந்து அமர முயன்றவனின் முதுகுக்குப் பின்னே தலையணையை நிமிர்த்தி வைத்தாள் மனோஹரி. கணவன் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை அவள். அவன் நன்றாய் இருக்கிறான் என்ற வார்த்தையை அவள் உணர்ந்து உள்வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். விழிகள் அவனது காலிலும் கையிலும் தொடர்ந்து படர்ந்து நலம் விசாரித்தன.
‘வலித்திருக்குமே இவருக்கு! எப்படி தாங்கியிருப்பார்?’ என்று அவன் மீதான கரிசனத்தில் கண்கள் கரித்தது பெண்ணுக்கு. எங்கே முகத்தைப் பார்த்தால் உடைந்து விடுவோம் என்றே தவிர்த்தாள்.
“ஏன் குமரா, வண்டி ஓட்டும் போது பார்த்து ஓட்ட மாட்டீயா? சின்ன காயம்னால சரியா போச்சு. பெருசா எதுவும் ஆகியிருந்தா, என்னாகுறது? எங்களைப் பத்தி யோசிக்க மாட்டீயா நீ?” ஆதங்கமும் வருத்தமுமாய்க் கேட்டவருக்கு உடல் லேசாய் குலுங்கியது. மகனுக்கு ஒன்றுமில்லை என மனதில் அழுந்தப் பதிய வைத்துக் கொண்டிருந்தவரின் கரத்தை தன் அடிபடாதக் கையால் பிடித்தான்
குமரன்.
“அம்மா, நான் நல்லா இருக்கேன். இது சின்ன அடிதான்!” என்றவனின் பாவனை இந்த விபத்து என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போலத்தான் இருந்தது. ‘கையிலிருக்கும் கட்டை எஞ்சிப் போனால் ஒரு மாதத்தில் அவிழ்த்துவிடலாம். நான் நன்றாக இருக்கிறேன்!’ என்ற எண்ணம் அகத்திலும் முகத்திலும் பிரதிபலித்தது. சிந்து அப்படியல்ல, குமரனைப் பார்த்ததும் அந்தப் பெண்மணியின் குரல் லேசாய் இடறிப் போனது.
“அத்தை, நீங்க முதல்ல உட்காருங்க. உங்கப் பையனுக்கு ஒன்னும் இல்ல… அழுது நீங்களே அவரை நோயாளியாக்கக் கூடாது. சின்ன அடிதான், பயப்பட ஒன்னும் இல்ல. பதறாம உட்காருங்க!” என மனோ அவரை அதட்டியபடி ஒரு இருக்கையை இழுத்துப்போட, சிந்து அமர்ந்தார். மருமகளின் அதட்டல் வேலை செய்தது போல. அவரது கண்ணீர் வற்றியிருக்க, உணர்ச்சிகளின் பிடியிலிருந்து வெளிவரவும், புறத்தூண்டல் உறைத்தது. நிதானத்திற்கு வந்தார் பெண்மணி.
“வலிக்குதா குமரா? கால்ல இன்னும் ரத்தம் வருது? நர்ஸ் பொண்ணு சொன்னா பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இல்லைன்னு. டாக்டரைப் பார்க்கலாமா?” எனக் கேட்டவர் குரலில் இப்போது தெளிவிருந்தது.
குமரன் பதில் இயம்பும் முன், “அத்தை, நான் போய் டாக்டரைப் பார்த்துப் பேசிட்டு வரேன்!” என அவ்விடத்தைவிட்டு அகன்ற மனோஹரியின் விழிகளில் இத்தனை நேரம் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்தன. கணவனுக்கு ஒன்றும் இல்லையென இத்தனை நேரம் துடித்துக் கொண்டிருந்த மனது அமைதியடைந்திருந்தது.
காலையில் தன்னிடம் வம்பிழுத்து, பேசி சிவக்கச் செய்து காதல் செய்து என கொள்ளை கொள்ளையாய்க் கொள்ளை கொண்டவன் கட்டிலில் ஓய்ந்து போய்ப்படுத்திருக்கவும் விழியோரம் ஈரம் துளிர்த்தது. தான் கலங்கினால் சிந்துவை யார் தேற்றுவது என்றெண்ணிதான் அதட்டி அவரை சரிசெய்திருந்தாள்.
‘இது எதிர்பாரது நிகழ்ந்த விபத்தா? இல்லை யாரேனும் திட்டமிட்டு செய்தார்களா?’ என்ற கேள்வி மூளையைக் குடைந்ததில் ஆங்காங்கே ஒட்டியிருந்த கொஞ்ச நிம்மதியும் எங்கோ பறந்திருந்தது.
‘அப்படி திட்டமிட்டு செய்திருந்தால், யாராய் இருக்கக் கூடும். கண்டிப்பாக தன் தந்தையிடம் வேலை பார்க்கும்போது சண்டையிட்ட, வஞ்சம் வளர்த்தவர்களாகத்தான் இருக்கக் கூடும்!’ என நினைத்தவளுக்கு பயம் நெஞ்சுக் குழிவரை கவ்வியது. அதுவும் குமரனின் எதையோ ஆழ்ந்து சிந்திப்பது போன்ற பாவனையை வைத்து, தன்னுடைய எண்ணம் சரியே என்ற முடிவிற்கு வந்தவளுக்கு, ஏனோ தந்தை மீது அத்தனைக் கோபம் வந்தது. இப்படியெல்லாம் எதாவது சூழ்நிலை வரக்கூடும் என்றுதானே ரங்காவிடமிருந்து குமரனைப் பிரித்திருந்தாள். இருந்தும் தந்தையும் அவர் சார்ந்த விஷயங்களும் இவனைத் துரத்துகிறதே? இது அவனை விட்டு விலகவே விலகாதா? வாழ்நாள் முழுவதும் துரத்துமா? என்ற எண்ணமே குபுகுபுவென தொண்டையை அடைக்கச் செய்து, தளரச் செய்தது.
‘என்ன செய்து இதை சரிசெய்ய வேண்டும்?’ என மூளை அதிலே தேங்கி நின்றுவிட, மனதிலிருந்த உறுதியெல்லாம் மொத்தமாய் வடிந்துவிட்ட உணர்வு.
மருத்துவர் அறையை அடைந்ததும் மற்றைய எண்ணத்தைக் கிடப்பிலிட்டவள், “சிஸ்டர், டாக்டரைப் பார்க்கணும்!” என செவிலியரிடம் உரைத்தாள்.
“ரவுண்ட்ஸ் வரும்போது பார்க்கலாம் மேம்” அவள் பதில் இயம்ப, “இல்ல, அர்ஜெண்டா பார்க்கணும்!” என மனோ அழுத்திக் கூறினாள்.
“வெயிட் பண்ணுங்க, கேட்டுட்டு வரேன் மேம்!” என மருத்துவரிடம் அனுமதிப் பெற்று இவளை அனுப்பினாள்.
“யெஸ் சொல்லுங்க!” மருத்துவர் வினவ, அவர் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தவள், தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
“வேற எதுவும் பெருசா இன்ஜூரி இருக்கா டாக்டர்?”
“டோன்ட் வொர்ரீ மனோஹரி, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. கைல பிராக்சர் மட்டும்தான். பட், ஒன் மந்த் கையை அசைக்கக் கூடாது. ஆப்டர் தட் ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு என்னென்னு டிசைட் பண்ணலாம். கால்ல இருக்க இன்ஜூரி இன்ஃபெக்ஷன் ஆகாம இருக்கத்தான் இன்ஜெக்சன், டேப்லெட் எல்லாம் கொடுத்துருக்கோம், அதை ரெகுலரா ஃபாலோ பண்ணா போதும். கைக்கு எந்த ஸ்ட்ரெஸூம் கொடுக்காதீங்க!” என்றவரிடம் மேலும் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டு நன்றியுரைத்து விடை பெற்றாள்.
உயிருக்கு ஆபத்தில்லை என புத்திக்கு உறைத்தாலும், மனம் என்னவோ மருத்துவரின் வாய்வழியாய்க் கேட்ட பின்புதான் சமாதானம் அடைந்தது.
மதிய உணவு நேரம் கடந்து மாலையாகிவிட்டதை உணர்ந்தவள் பணிமனைக்குச் சென்று தேநீர் ஒன்றைக் குடித்துவிட்டு அவர்கள் இருவருக்கும் உணவை வாங்கி வந்தாள்.
அறைக்குள் நுழையும் மனோவின் முகத்தையே சிந்து பார்க்க, “அத்தை, எந்த பிராப்ளமும் இல்ல. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க…” எனக் கூறி அவரை அமைதிப்படுத்தியவள், “டைமாகிடுச்சு, நீங்க சாப்பிடுங்க. அவருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன்!” என உணவை அவர்முன்னே நீட்டினாள்.
“குமரா, நானே ஊட்டிவிட்றேன், நீ சாப்பிடு!” என்றவர் அவனுக்கு உணவை ஊட்டிவிட்டார். சின்ன தலையசைப்புடன் அவன் உண்ண, இடையிடையே மனோஹரிக்கும் அவர் ஊட்டிவிட, “அத்தை, இப்போதான் டீ குடிச்சுட்டு வந்தேன். வயிறு ஃபுல்லா இருக்கு!” என இவள் மறுத்தாள்.
“டீ எல்லாம் என்னதுக்கு காணும் மனோ. முதல்ல சாப்பிடு நீ!” என மருமகளை அதட்டியவரை இருவரும் புன்னகையுடன் பார்த்தனர். பழைய சிந்து மீண்டிருப்பது குரலிலே தெரிந்தது. அவரும் உண்டு முடித்தார்.
வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தைப் பேசாத, தன் முகத்தைக் கூட ஏறிடாத மனைவியைத்தான் குமரன் பார்த்திருந்தான். அவன் பார்வை உணர்ந்தாலும் அங்கேயிருந்த மருந்து மாத்திரைகளை கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனோ நிமிரவே இல்லை. அவள் என்ன நினைக்கிறாள் என கணவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. கோபமா, ஆற்றாமையா? அழுகையா என எதுவுமே அவளது முகம் பிரதிபலிக்காது போக, இவன் முகத்தில் சிந்தனைக் ரேகைகள் படர்ந்தன.