உள்ளம் – 21.1

“நெக்ஸ்ட் பேஷண்டை உள்ள வர சொல்லுங்க!” மனோ செவிலியரிடம் பணித்துவிட்டு கொஞ்சம் தளர்வாக காலை இழுத்து இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்தாள். கீழே நீண்ட நேரம் தொங்கவிட்டிருந்த கால்கள் மரத்துப் போனது போலொரு உணர்வு. கணவனைத் திட்டிக் கொண்டே வந்தவளை வேலை உள்ளிழுத்துக் கொள்ள, காலையில் நடந்ததை மறந்து போயிருந்தாள்.

“இன்னைக்கு அப்பாயின்மெண்ட்ஸ் அவ்ளோதான் மேம்!” செவிலியர் கூறவும், தலையை அசைத்தவள் அலைபேசியைக் கையிலெடுத்து அதில் விழிகளை மேயவிட்டாள். விரல்கள் அன்னிச்சை செயலாய் தங்களது திருமணப் புகைப்படத்தை தொட, அது திரையை நிறைத்தது. குமரனும் மனோஹரியும் தம்பதி சமேதராக நின்றிருக்க, இவள் கண்களில் அத்தனை மகிழ்ச்சி மின்னின.

‘கல்யாணம் அப்போ கூட முகத்தை எப்படி வச்சிருக்காரு இந்த மனுஷன்!’ என உதடுகள் கணவனை வஞ்சித்தாலும் விரல்கள் என்னவோ அவனது முகத்தை ஆசையாய் வருடின. இன்னுமே குமரன் கொடுத்த முத்தத்தின் குறுகுறுப்பு கழுத்தணியை மட்டுமல்ல அவளையும்விட்டு அகலாதது போன்ற எண்ணம். முதல் நெருக்கம், முதல் முத்தம் எப்போதோ நுகர்ந்த அவனின் நறுமணம் போல நாசியை இந்நொடியும் நிறைத்து தொலைத்தது. ஏனோ அவன் அருகே இருப்பது போலொரு உணர்வு உதட்டில் மென்னகையை படரச் செய்து.

‘அழகிடி நீ!’ செவியோரம் கிசுகிசுத்த குரலை இப்போது நினைத்தாலும் அடிவயிற்றிலிருந்து ஏதோ செய்து தொலைக்க, அறையிலிருந்த கண்ணாடியை எட்டித் தன்னைப் பார்த்துக் கொண்டாள். அதிசயமாய் இன்று காயம்பூ நிறத்தில் பருத்தி புடவை ஒன்றை அணிந்திருந்தாள். ஒரு முறை மடிப்பை நீவி சரிசெய்தாள். கணவன் முதன்முதலில் தன் புற்தோற்றத்தைப் பற்றிக் கூறியதும் மனம் நிறைந்து போயிருந்தது. வாழ்க்கையில் கடந்து சென்ற எத்தனையோ பேர் தன் புறத்தோற்றத்தைப் பற்றிக் கூறியிருந்தாலும், நேசம் கொண்டவன் உரைத்ததில் கொஞ்சமே கொஞ்சம் கர்வமும் வந்தமர்ந்து கொண்டது.

கைகள் கழுத்தணியிலிருந்த முருகன் படத்தைத் தடவின. திருக்குமரன் முருகனின் மறுபெயர் என்றுதானே அவரின் படமிட்ட கழுத்தணியை முதல்மாத சம்பளத்தில் வாங்கி அணிந்தாள். ஏனோ குமரனின் மூளை இத்தனை கூர்மையாய் இருக்க வேண்டாம் என மனம் கொஞ்சம் அவன் புத்திக் கூர்மையில் பொறாமைக் கொண்டது. அலைபேசியில் கைகள் அலைய, மனம் கொண்டவனைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தது.

குமரன் புதிதாய் கட்டும் கட்டிடத்தின் முதலாளி ஒருவரை சந்தித்துப் பேசிவிட்டு சூளைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். யாரோ தன்னைத் தொடர்ந்து கொண்டிருப்பது போல எண்ணம் தோன்ற, பார்வையைச் சுற்றிலும். படரவிட்டான். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் நீண்ட நெடிய நேரமாய் அவன் பயணிக்கும் பாதையிலே சுற்றுவதாய் உள்மனம் எச்சரிக்கை செய்தது. அவர்கள் இருவரும் முகத்தை முழுதாய் மறைத்து தலைக்கவசம் அணிந்திருந்தனர்.

‘யாராய் இருக்கும் இவர்கள்?’ என்ற சிந்தனையுடன் வாகனத்தை இயக்கிய குமரன் அவர்கள் வலப்புறம் செல்வார்கள் என எண்ணி இடதுபுறம் ஒடித்து வாகனத்தைத் திருப்ப, வேண்டுமென்றே இவனது வாகனத்தின் மீது வேகமாய் வந்து அவர்கள் இடித்திருந்தனர். ஒரு நொடி குமரன் நிதானம் தப்பியிருக்க, கீழே விழுந்தவன் வலக்கையை ஊட்டியிருந்தான். கால் வேறு வாகனத்தின் அடியில் மாட்டியிருந்தது. கையிலிருந்த எலும்பு முறிந்து குருதி கொட்ட ஆரம்பிக்க, “ஏய்! யாருப்பா அது? சீக்கிரம் வந்து தூக்குங்க!” என சுற்றியிருப்பவர்கள் தன்னைத் தூக்கியதும் விழிகள் மங்கத் துவங்க, தலைக்கவசத்தை அவிழ்த்து நக்கலாய்க் குமரனைப் பார்த்தான் ஒரு வாலிபன்.

‘இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோம்!’ மூளை அந்நொடி கூட அலசி ஆராய, ‘கனியமுன், ஷெண்பாவின் தோழன்!’ என படபடவென நினைவுகள் அவனை அடித்த நாளை நோக்கி நகர, விழிகளை மெதுவாய் மூடினான் குமரன். சிறிது நேரத்திலே அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். அவனுக்கு சிகிச்சை துரிதக் கதியில் ஆரம்பிக்கப்பட்டன. உடனடியாக குருதியைத் துடைத்து எலும்பு முறிவை சரிசெய்து கையில் கட்டிட ஆரம்பித்திருந்தனர்.

மருத்துவமனையில் குமரனை சேர்த்தவர்கள் சிந்துவிற்கு அழைத்து விஷயத்தைக் கூறினர். பின்னர் மனோஹரிக்கும் தகவல் பகிரப்பட்டது.

அலைபேசியில் கேட்ட செய்தியை உள்வாங்கிய மனோவின் கரங்கள் நடுங்க ஆரம்பித்தன. எந்த மருத்துவமனை என தெளிவாய்க் கேட்டவள், கைப்பையைத் தேடி எடுத்தாள். உடல் அவளையும் மீறி பதற்றத்தில் உதரத் தொடங்க, நெற்றியோரம் வியர்வைத் துளிகள் படர ஆரம்பித்தன. இத்தனை நேரம் சீராயிருந்த மூச்சு லேசாய் வாங்கத் துவங்க, சில நொடிகள் தன்னை நிதானப்படுத்த எடுத்துக் கொண்டாள். விபத்து என்றளவில்தான் செய்தி கூறப்பட்டது. அது எந்த அளவிற்கு என அவர்கள் உரைக்காததில் பயந்து போனாள் பெண்.

‘அவருக்கு ஒன்னும் இல்ல மனோ!’ என ஒரு நொடி தன்னை நிதானப்படுத்தியவள், இருசக்கர வாகனத்தில் பறந்திருந்தாள். நொடியில் மனம் பலவித கற்பனைக் குதிரைகளை ஓட விட, முகத்தில் எதையும் காட்டாது சாலை ஒன்றே பிரதானம் என்ற வகையில் அதில் கவனத்தை செலுத்தினாள்.

குமரனின் கையிலிருந்த எலும்பு முறிவிற்கு கட்டுடிட்டு, காலிருந்த காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு முடிய, தனி அறைக்கு மாற்றப்பட்டான் அவன்.

சிந்து தானியில் வந்து இறங்க, மனோஹரியும் வந்திருந்தாள்.
“மனோ, குமரனுக்கு ஆக்சிடெண்ட்னு போன் வந்துச்சு மா… எப்படி இருக்கான்னு தெரியலை!” பெரியவரின் குரல் கலங்கி வெளிவர, அவரது முகம் வெளுத்துப் போயிருந்தது. மகனுக்கு ஒன்றென அழைப்பு வந்ததும் உயிர்வரை பயம் கவ்வியிருந்தது அவரை. எப்படி மருத்துவமனைக்கு வந்தார் என்ற பிர்கஞை கூட இல்லை சிந்துவுக்கு. மருமகள் முகத்தைப் பார்த்தவரின் கண்கள் நீரை உகுக்கத் தயாராகின. இவளுக்குமே உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது கட்டியவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணமும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் வந்திருந்தாள்.

“அத்தை, ஒன்னும் இல்ல. பெருசா அடிபட்டிருக்காது. வாங்க!” தனக்கும் அவருக்கும் சேர்த்தே ஆறுதல் கூறி குமரனிருக்கும் அறை எதுவென விசாரித்து இருவரும் நுழைந்திருந்தனர்.

“மிஸ்டர் திருகுமரன் பேஷண்டோட ரிலேட்டீவா நீங்க?” அவன் அறைக்கு வெளியிலிருந்த செவிலியர் வினவ, “ஆமா சிஸ்டர், அவருக்கு எப்படி இருக்கு இப்போ?” என படபடவென மனோவிடம் கேள்வி வந்து விழுந்தது.

“பயப்பட்ற அளவுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்ல, கைல போன் ப்ராக்சர் ஆகியிருக்கு. கால்ல லேசான அடிதான். டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது எல்லாத்தையும் டீடெய்லா சொல்லுவாரு. இப்போ நீங்க அவர்கூட உட்கார்ந்திருங்க!” என அவள் அகல, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

வலதுகையில் கட்டு கழுத்தோடு சேர்த்துப் போடப்பட்டிருக்க, இடது காலில் காயம் காய்ந்து கட்டிற்கு வெளியே இரத்தம் உறைந்திருப்பது நன்கு தெரிந்தது. குமரனுக்கு பெரிதாய் எதுவும் நிகழவில்லை என்றதும்தான் இரண்டு பெண்களுக்குமே உயிரே வந்தது.

சிந்து மகனருகே சென்றார். விழிகளை மூடிப் படுத்திருந்தான். சிறிது நிமிடங்களுக்கு முன்புதான் அவனுக்கு மயக்கமே தெளிந்திருந்தது. விழிகளை மூடியிருந்தவனின் மூளை விபத்து நடந்ததை ஒருமுறை மீட்டிப் பார்த்து என்னவென்று ஆராய்ந்து கொண்டிருக்க, சிந்துவின் கரம் அவனது அடிபட்ட கைகளை வருடியது. அந்த ஸ்பரிசத்தில் விழிகளைத் திறந்தான் குமரன். அவரது முகமே அகத்தைக் காண்பித்துக் கொடுத்தது.

தாய் மிகவும் பயந்திருக்கிறார் என்பது அவரது பாவனைகளை வைத்தே குமரனால் புரிந்து கொள்ள முடிந்தது. லேசாய் அவரது கண்களில் நீர் திரையிட்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்னரான மனதின் தவிப்பை தான் மட்டுமே அறிவார். ஒற்றை மகன்தான் உலகமென வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்மணியை சிறிது நேரத்தில் ஆட்டம் காண வைத்திருந்தான் இந்தக் குமரன். அவருடைய கண்ணீர் இவனை அசைத்துப் பார்த்தது. தந்தையை விட்டு வந்த தினத்தன்று தாயின் விழிகளில் நீரைப் பார்த்தான். அதற்குப் பின் இன்றுதான் அவர் அவனறிந்து கண்ணீர் சிந்துகிறார்.

error: Content is protected !!
Scroll to Top