வாகனத்தை இயக்கச் சென்றவளுக்கு சாவி அவனிடம்தான் இருக்கிறது என உறைக்க, “ஸ்கூட்டீ சாவி வேணும்!” என முகத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டு கணவனிடம் வினவினாள்.
நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் அலைபேசியில் கவனத்தை வைக்க, “எனக்கு ஸ்கூட்டீ சாவி வேணும்!” அழுத்தமாய்க் கேட்டவளின் பற்கள் நறநறவென அரைபட, பார்வை அவன் முகத்தில் படர்ந்தது.
“என்கிட்டயா கேட்ட… நான் ஏதோ சுவத்துக்கிட்ட பேசுறேன்னு நினைச்சேன் மனோ!” என்றவன் குரலில் நக்கல் தொனி.
“உங்ககிட்டே தான் கேட்டேன்!” மனைவி முறைக்க, “எதுக்கு?” என்ற கேள்வி அவனிடமிருந்து வந்து விழுந்தது.
“என்ன எதுக்கு, ஹாஸ்பிடல் போகத்தான்!” இவள் பொறுமையை இழுத்துப் பிடிக்க, “அதான் ட்ரைவர் நான் இருக்கேனே. அதெதுக்கு?” என்றவன் குரலில் எள்ளல் தெறித்தது.
அவன் பேச்சில் விழித்தவள், “நீங்களா அப்படி நினைச்சுக்கிட்டா நான் ஏதும் பண்ண முடியாது!” என்றாள் எரிச்சலான குரலில்.
“ஓஹோ! நீ என்னை ட்ரைவரா நினைக்கலை?”
“ஆமா! நினைக்கலை!”
“அப்போ உங்க வீட்ல இருந்தப்போவும் என்னை ட்ரைவரா நினைக்கலை. அதான் இந்த செயினை வாங்குனீயா?” எனக் கேட்டவனின் குரலில் என்ன இருந்ததென மனைவி உணரும் முன்னே அவனது விரல்கள் அந்த கழுத்தணியோடு அவளையும் சேர்த்திழுத்திருக்க, மனோ சுதாரிக்கும் முன்னே இருவருக்கும் இடையிலிருக்கும் இடைவெளி சுழியமானது போது மனைவியின் நெஞ்சுக் குழியில் மத்தளம் கொட்ட ஆரம்பித்திருந்தது.
“சொல்லு டி, என்னை நினைச்சுதானே முருகன் பட டாலர் செயின் வாங்குன?” விழிகள் மொத்தமும் மனோஹரியைச் சுருட்டிக் கொள்ள, அடர்ந்தக் குரலில் வினவினான் குமரன். இவளுக்கு குப்பென வியர்த்துப் போனது.
கண்டு கொண்டானே என்று ஆச்சர்யமும் அதுகொடுத்த வெட்கத்தில் கன்னம் லேசாய் சிவந்து தொலைத்தது.
குமரன் சாதரணமாகப் பேசினாலே இவளுக்குள் அத்தனை ரசாயன மாற்றங்கள் நிகழும். தன்னை மறைக்கத்தானே வீட்டில் வேலை செய்த போதும் அவனை முறைத்துக்கொண்டு அலட்சியப்டுத்தியும் சுற்றுவாள். இப்போது இந்த நெருக்கத்தில் பேச்சு வராது குரல் அடைத்துப் போனது.
“உண்மையை சொல்லு டி!” குமரன் குரலின் டெசிபல் உயர, கண்கள் மனைவியைவிட்டு அகலவில்லை. அவள் பதிலுக்காய் விழிகள் முழுவதும் ஆர்வத்துடன் நோக்கினான்.
“அது… அது அப்படியெல்லாம் இல்ல!” இவள் குரலில் ஏகத் திணறல்.
“பொய் சொல்லாத டி!” அதட்டலாய்க் கணவன் கேட்க,
“ஆமா… உங்களுக்காகத்தான் போட்டேன். போதுமா, செயினை விடுங்க!” என பின்னோக்கி நகர முயன்றவளால் முடியாது போனது.
“எவ்ளோ நாளா என்னைப் பிடிக்கும் உனக்கு?” குமரனிடம் மீண்டுமொரு கேள்வி.
‘இதை இப்போதுதான் கேட்க வேண்டுமா?’ என அவஸ்தையுடன் அவனைப் பார்த்து, “நாலு வருஷமா பிடிக்கும்!” என்றவளின் முகம் பக்கவாட்டில் திரும்பியது.
“ஆனால் எனக்கு அப்படித் தெரியலையே!” என்றவனை இவள் கேள்வியாகப் பார்க்க, “உனக்கு என் கூட வாழ இஷ்டம் இருக்க மாதிரி தெரியலையே! எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டுதானே டி சுத்துற!” என்றவனின் விரல்கள் அந்த கழுத்தணியை ஒரு சுற்று சுற்ற, மொத்தமாய் அவன் மீது சாய்ந்துவிட்டாள் மனோ.
அவன் பதிலில், “ஆமா, வாழ இஷ்டம் இல்லாமதான் கட்டுனா இவரைத்தான் கட்டுவேன்னு கல்யாணம் பண்ணி இருக்கேன்!” என பல்லைக் கடித்தவள் அவனிடமிருந்து நகர முயற்சிக்கவில்லை.
“நீ பண்றதை பார்த்தா அப்படியொன்னும் எனக்குத் தோணலையே டி…” என்ற குமரன் குரலின் அழுத்தம் இவளை அழுத்தப்படுத்தியது.
“என்ன பண்ண, எனக்குத்தானே என் புருஷனை பிடிச்சிருக்கு. அவருக்கு நான் பிடிக்காத பொண்டாட்டி தானே?” என்றவள் பேச்சின் காரத்தில் கையை கழுத்தணியிலிருந்து எடுத்தவனுக்கு எரிச்சல் படர்ந்தது.
“ஏய், அதை விடவே மாட்டீயா டி நீ?” இத்தனை நேரமிருந்த இலகு பாவம் மறைந்து குமரன் குரலில் கோபம் தெறித்தது.
“ச்சு… நீங்கதானே சொன்னீங்க. நானா கற்பனை ஒன்னும் பண்ணலை!” மனோ உதட்டை சுழிக்க, அதை தனது கையில் அடக்கியவன், “முறைச்சு, வெறிச்சுப் பார்த்தப்பவே இந்த மூஞ்சியை, அதுல இருக்க அலட்சியத்தை, திமிர அவ்வளோ பிடிக்கும் டி. நான்தான் வேணும்னு யாரு பேச்சையும் கேட்காம எனக்காக பட்டினி கிடந்து மயங்கி விழுந்தவளை எப்படி பிடிக்காம போகும். குமரன் குமரன்னு என் பின்னாடியே வந்த இந்தப் பொண்ணை அவ்வளோ பிடிக்கும் எனக்கு… இப்போன்னு இல்ல, எப்பவுமே!” என்றவன் ஒரு நொடி நிறுத்தி, “முறைச்சுட்டேனாலும் உன் பார்வை என் மேல இருக்கதை நான் எத்தனையோ தடவை உணர்ந்து இருக்கேன் டி. அப்போ எல்லாம் கூட நான்தான் தப்பா நினைக்கிறேன்னு நினைச்சேன். ஆனால் கேடி டி நீ!” என்றவன் குரல் இப்போது மனோவை சிவக்கச் செய்திருந்தது.
“ஆமா… பார்த்தேன், இனிமேலும் பார்ப்பேன். இந்த மூஞ்சியைத்தான் காலம் முழுக்க பார்த்துகிடக்கணும்னு தவம் பண்ணித்தான் கட்டிகிட்டு வந்திருக்கேன்!” உண்மையை ரோஷமாய் உரைத்து அவன் கையைத் தட்டிவிட்டு மறுபுறம் திரும்பி நின்றவளுக்கு லேசாய் மூச்சு வாங்கியது.
அந்தப் பதிலில் குமரன் முகத்தில் வசீகரப் புன்னகை. ஏனோ உன்னைத்தான் பிடித்திருக்கிறது நீ தான் வேண்டும் என மனைவி ஒவ்வொரு முறை கூறும் போதும் இவனுக்கு ஏதோ போதையேறியது போலிருந்தது. இன்னும் எத்தனை முறை கூறினாலும் இந்த உணர்வு மாறாது எனத் தோன்றவும் கரங்கள் பின்னங்கழுத்தை வருடிப் போயின. உதடுகளில் புன்னகை மிளிர்ந்தன. இந்நொடி இந்தப் பெண்ணை அத்தனைப் பிடித்து தொலைத்தது.
அவனிடம் பேச்சில்லாது போனதில் மனோ திரும்பிப் பார்க்க, நொடியில் அவளை அருகே இழுத்த குமரனின் இதழ்கள் முருகன் படத்தோடு அவளது கழுத்தில் அழுத்தமாய் பதிய, மனைவி உறைந்து போனாள். இதயம் தொண்டைக் குழியில் வந்து துடிப்பதை உணர்ந்தவளின் கரங்களில் அத்தனை நடுக்கம். பிடித்த கணவன் என்றாலும் முதல் தொடுகையில் கூசி சிலிர்த்துப் போனது பெண்மை. அவனுக்கு அப்படியில்லை போல. நீண்ட நாட்களாய் தன்னை இம்சை செய்த கழுத்தணியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
பின், குளித்து அத்தனை வாசமாய் இருந்த மனைவியின் சுகந்தத்தை நுகர்ந்தான். “அழகி டி நீ!” ரசனையாய் ரசிகனாய் மாறி கிசுகிசுப்பாய் செவியில் கணவனின் குரல் ஒலித்ததில் உலகையே வென்ற திருப்தி திரண்டு மனோவின் நெஞ்சை அடைக்க, இத்தனை நாட்களிருந்த பிணக்குகள் எல்லாம் வெறும் கணக்குகளாகிப் போயின. இப்படியெல்லாம் இவன் பேசக் கூடுமோ என்ற ஆச்சர்யமும், பேசுவனா என்ற எதிர்பார்ப்பும் அவளை சுருட்டியதில் சுயம் மறந்தவளின் மொத்த உடலும் கணவனை முத்தமிட்டு உறவாடியது.
“காலங்காத்தால என்ன பண்றீங்க, நான் வேலைக்குப் போகணும்!” தொண்டை வரண்டு போக, கடினப்பட்டு பேசினாள். அவனிடமிருந்து பிரிய மனமில்லை பெண்ணுக்கு. உதடுகள் பொய்யைத் தழுவின.
“அப்போ, நைட் பண்ணா பரவாயில்லையா?” அடர்ந்த கரகரத்துப் போன குரல் செவியோரம் வசியம் செய்தது.
மனோ பேச்சு வராது அவனைப் பார்க்க, குமரனுக்கு சிவந்து நின்ற மனைவியை அள்ளி அணைக்க வேண்டும் என்ற உந்துதல். ஏனோ மனதிலிருப்பதை நேற்றே உரைக்கலாம் என்றிருந்தான். பின்னர் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு பேசலாம் என அவன் எண்ணியிருக்க, இந்தப் பெண் பேச வந்தவனை என்னென்னவோ செய்தாள்.
“மனோ… சாப்பிட வரலையா?” சிந்து குரல் கொடுக்க, குமரனைப் பிடித்து தள்ளிவிட்டு வெளியே ஓடிப் போனாள் மனோஹரி. அவளை முறைத்தவன், ‘நைட்டுப் பார்த்துக்கிறேன் டி உன்னை!’ என நினைத்துவிட்டு கிளம்பிவிட்டான். மறக்காது அவளது வாகனச் சாவியை வைத்துவிட்டே சென்றிருந்தான்.
தன்னைக் கடந்து செல்லும் கணவனை மனோஹரி நிமிர்ந்து பார்க்கவேயில்லை. இன்னுமே படபடப்பு அடங்காது அதிகம் சுரந்த அட்ரீனலின் அவளை சாதாரணமாக இருக்கவிடவில்லை. அவன் சென்றதும் உண்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினாள்.
திடீரென அவனின் செய்கையில் திகைத்துப் போனாள் மனோஹரி. தன்னைப் பிடிக்கும் எனக் கூறி சிவக்கச் செய்து என்னவெல்லாமோ பேசியவனின் உருவம்தான் மனதில். சிரிக்கத் தெரியாத துர்வாச முனிவர் என்ற ஸ்தானத்தில் அவனை வைத்திருக்க, தற்போதைய அவனின் பேச்சு மொத்தத்தையும் விழுங்கியிருந்தது. நடுங்கிய கரத்துடன்தான் சாலையில் பயணித்தாள் பெண்.
‘அறிவே இல்ல இவருக்கு. காலங்காத்தால என்னப் பேச்சு, என்ன செஞ்சாரு!’ சரமாரியாகத் திட்டிக்கொண்டே மருத்துவமனையை அடைந்தாள்.
வேலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சிறிது நேரத்திலே குமரனுக்கு விபத்தென்று அழைப்பு வர, உலகம் ஒரு நொடி நின்றிருந்தது.
தொடரும்…