ஒருவேளை ஷெண்பா குமரனுடன் சமாதான உடன்படிக்கை வாசித்தாலும் இவன் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தோடுதான் சுற்றினான்.
குமரனுக்கு எப்படியாவது சூளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதை போட்டு அழுத்தியதில் பல வங்கிகளில் அலைந்து திரிந்து, கடைசியாய் ஒரு வங்கி அவனுக்குத் தேவைப்படும் பணத்தைக் கொடுப்பதாக முன்வந்திருக்க, இத்தனை நாள் அலைந்த அலைச்சலுக்கு அன்று பலன் கிடைத்ததை எண்ணி ஆசுவாசம் கொண்டான்.
இன்னும் ஒரு மாதத்தில் பணம் கைக்கு வந்துவிடும் வகையில் அனைத்தையும் சரியாய் செய்து முடித்த குமரன், மலர்ந்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான். வெளியே சென்று வந்த களைப்பையும் மீறி மகன் முகத்திலிருந்த மகிழ்ச்சி தாயையும் தொற்றிக் கொண்டது போல.
“என்ன டா, லோன் கிடைச்சுடுச்சா?” சரியாய்க் கணித்து வினவியவரைப் பார்த்து இவன் சிரிப்புடன் தலையை அசைத்தான்.
“சந்தோஷமா இருக்கு டா. உனக்கு லோன் கிடைக்கலையேன்னு எனக்குமே கவலைதான்!” என்ற சிந்துவின் குரலில் மகிழ்ச்சி ததும்பி வழிந்தது.
இவன் நீள்விருக்கையில் கால்களை நீட்டி சட்டையிலிருந்த இரண்டு பொத்தான்களை அவிழ்த்துவிட்டு தளர்ந்து அமர்ந்தான். விழிகள் மனைவியைத் தேடின. ஏனோ தன் மகிழ்ச்சியை அவளிடமும் பகிர வேண்டும் என்ற அவா.
“மனோ வீட்ல இல்லை டா! அவங்க கடை வரைக்கும் போய்ருக்கா!” மகனின் பார்வை உணர்ந்து உரைத்த சிந்து, “காபி வேணாம் டா. பால் பாயசம் செய்யவா?” என வினவினார். அவர் குரலில் கொஞ்சம் துள்ளல். தன்னுடைய மகிழ்ச்சி துக்கம் கோபம் அனைத்தும் இந்தப் பெண்மணியைப் பாதிக்கிறது என உணர்ந்தவன் அவரது கரத்தை எடுத்து கன்னத்தில் வைத்து அழுத்தினான். அவரது உலகமே தான்தான் என்ற எண்ணம் உவகையை வாரி வழங்கியிருந்தது.
எத்தனை வருடங்கள் கழித்தான மகனின் புன்னகையில் தாய்க்கு உருகிவிட்டது. அவனது தலையைப் பாசமாய்க் கோதியவர், “பத்து நிமிஷத்துல வரேன் டா!” என சமையலறைக்குள் விரைந்தார். அவரை சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தான் குமரன்.
சிந்து பால்பாயசம் செய்துக்கொண்டு வெளியே வர, மனோஹரி உள்ளே நுழைந்தாள்.
செம்பவள நிறச் சுரிதார் அணிந்திருந்தவளின் ஒரு பக்கத் தோளில் துப்பட்டா வழிய, மறுபுறம் கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது. வெளியே சென்றுவிட்டு வந்த அலுப்பு முகம் முழுவதும் அப்பிக் கிடந்ததது. குமரன் அவளை ஆசை பொங்கப் பார்த்தான்.
மகனுக்கு ஒருவாய் பாயசத்தை ஊட்டியவர், மருமகளைக் கண்டதும், “வா மனோ, கரெக்டா வந்துட்ட. நீயும் பாயசம் சாப்பிடு!” என அவளைப் பேசவிடாது ஊட்டியிருந்தார்.
அவரை செல்லமாக முறைத்து அதை உண்டவள், “அத்தை, என்ன விசேஷம்?” என வினவினாள்.
“இவனுக்கு லோன் கிடைச்சுடுச்சு மா. அதான் பாயசம் செஞ்சேன்!” அவர் பதில் இயம்ப, நொடி நேரம் அவளது முகம் மலர்ந்து விரிந்தது. அவளது இதழ்கள் மென்னகையில் விரிய, உதட்டிலேறிய சிரிப்புடன் மனையாளைத்தான் குறுகுறுவென பார்த்திருந்தான் கணவன். குமரனது பார்வை உணர்ந்தவள், திரும்பி அவனை முறைத்தாள்.
‘என்னுடைய பணத்தை நீ வாங்கவில்லை!’ என்ற அர்த்தம் அதில் பொதிந்திருக்க, இவன் அசட்டையாகத் தோளைக் குலுக்கினான்.
எதுவும் பேசாது மனோ அறைக்குள் நுழைய, சிந்து ஒரு குவளையில் மகனுக்குப் பாயசம் ஊற்றிக் கொடுக்க, அதை குடித்துவிட்டு தானும் அறைக்குள் நுழைந்தான்.
உடைமாற்றி வெளியே வந்து நீண்ட முடியை கொண்டையிட்டவளிடம்தான் அவனின் பார்வை. குறுகுறு பார்வைக் கொடுத்த உணர்வில், இவள் திரும்பிக் கணவனை முறைத்தாள். அவன் அதையெல்லாம் கண்டு கொள்வதாயில்லை. உதட்டிலிருந்த பார்வை அப்படியே அவளது முருகன் படம் பதிந்த கழுத்தணியில் நிலைத்தன. தனக்காகத்தான் அதை அணிந்திருக்கிறாள் என கண்டுபிடித்த தினத்திலிருந்து மனைவியோடு சேர்த்து அதுவுமே அவனை இம்சித்தது. ஒருமுறை அதை சேர்ந்துவிடு என உதடுகள் துடித்தன.
கணவனது பார்வைப் பதிந்த இடத்தைக் கண்டு விட்ட மனோஹரிக்கு குப்பென வியர்த்துவிட, அவனை முறைத்துவிட்டு வெளியேறச் சென்றவளின் கவனத்தை மேஜை மீதிருந்த பொருள் ஈர்த்தது.
‘என்ன இது?’ என யோசித்தவாறே அதை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தவளின் முகம் முழுவதும் முறைப்புதான். குமரன் வேலையாகத்தான் இருக்கக் கூடும் என உணர்ந்தவள் அவனைக் கடுப்புடன் ஏறிட, மனைவியின் முகத்தில் வந்து போகும் பாவனையை சன்னமான சிரிப்புடன் பார்த்திருந்தான் அவன். வங்கிக்கடன் கிடைத்துவிட்டதில் அப்படியொரு குஷியில் இருந்தவனுக்கு அவளை சீண்டிப் பார்க்கும் எண்ணம் உதித்தது.
அதுதான் வரும் வழியில் ஒரு கடைக்குள் நுழைந்து பன்னிரெண்டு வண்ணத்தில் நகப்பூச்சுகளை வாங்கி வந்திருந்தான். அதை வாங்குவதற்குள் கடை ஊழியப் பெண்ணிடம் இவன் சங்கடமாகக் கேட்டு விழித்து, அந்தப் பெண் சிரித்துக்கொண்டே கொடுத்தாள்.
‘அப்படியென்ன அவசியம் வாங்க வேண்டும்? அவளைக் கோபம் கொள்ளச் செய்ய வேண்டும்?’ என மனதில் கேள்வி உதித்தாலும், அதை அசட்டை செய்து வந்திருந்தான்.
“என்னது இது?” மனோ பல்லைக் கடிக்க, “ஓ… தெரியலையா மனோ உனக்கு? அது பேர் நெயில் பாலிஷ். நகத்துல வச்சுக்கலாம்…” என இழுத்தவனிடம் ஏக நக்கல்.
‘கொழுப்பு…’ என முணுமுணுத்து நகர்ந்தவளிடம் இவனது பார்வை அத்தனை ரசனையாய் படிந்து மீண்டது. மனோஹரி வசீகரியாகிப் போனாள். இந்த சில நாட்களாக அவனது பார்வை முழுவதும் மனையாள்தான் நிறைந்து போயிருந்தாள்.
மறுநாள் காலையில் அவள் மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, சிந்துவின் குரல் பெண்ணைக் கலைத்தது.
“என்ன மனோ, ஸ்கூட்டீயை சரி பண்ணியாச்சா? வாசல்ல நிக்குது?” என அவர் வினவ, இவள் வாயிலில் சென்று பார்த்தாள். உடைந்த பாகங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு அவளது இருசக்கர வாகனம் மின்னியது. ஒரு நொடி விழிகள் விரிய அதிர்ந்தவள், பின்னர் வாகனத்தை கரங்களால் தடவிப் பார்த்தாள். முதன் முதலில் தனக்கென வாங்கிய வாகனம் என்பதால் ஏனோ மனதுக்கு நெருக்கமாகிப் போன ஒன்று அது. குமரன் அதை உடைத்துவிடவும் இவளுக்கு கோபம் கனன்றது. ஆனால், அந்தக் கோபம் இந்நொடி கொஞ்சமே கொஞ்சம் தணிந்திருந்தது என்னவோ உண்மை. சிந்து தன் முகத்தைதான் கேள்வியாகப் பார்க்கிறார் என்பதை உணர்ந்தவள்,
“ஆங்… ஆமா அத்தை. சரி பண்ணிட்டேன்!”எனக் கூறிவிட்டு விறுவிறுவென அறைக்குள் நுழைந்தாள்.
அன்று போல தான் இன்றும் வாகனத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அமர்ந்திருந்தான் குமரன். சில நொடிகள் அவன் முன்னே நின்றவளை அவன் அலட்சியப்படுத்த, ‘போடா… நீதானே உடைச்ச. இப்போ சரி பண்ணிக் கொடுத்ததும் தேங்க்ஸ் சொல்லணுமோ?’ என சடைத்துக் கொண்டவள் தனது வாகனத்திலே மருத்துவமனைக் கிளம்பலாம் என எண்ணி ஆயத்தமானாள்.