உள்ளம் – 20.1

கடைக்குச் சென்ற மனோஹரியும் திவாகரும் வெறும் கையோடு திரும்ப, ராதாமணி அவர்களைக் கேள்வியாகப் பார்த்தார்.

“ஏன்டி, துணியெடுக்க கடைக்குப் போய்ட்டு எதுவுமே வாங்காம வந்துருக்கீங்க?” அவர் வினவ,

“உன் மகளையேக் கேளு மா. போன இடத்துல சண்டையை இழுத்துட்டு வந்துருக்கா!” திவாகர் தங்கையை முறைத்துவிட்டு செல்ல, அவள் அலட்டிக் கொள்ளவில்லை.

“மனோ, யார்கிட்டே டி உரண்டை இழுத்த?” ராதா பதற, “ப்ம்ச்… ஒன்னும் இல்லை. நீ பதறாத மா” என்றவள் அங்கு நடந்ததை விவரிக்கவும் அவர் மகளை முறைத்தார்‌.

“ஏன்டி, உனக்கெதுக்கு தேவையில்லாத வேலை. போனோமா, ட்ரெஸ் எடுத்தோமான்னு வராம, வம்பிழுத்துட்டு வந்திருக்க!” ராதா மகளை அதட்டினார்.

“எதுமா தேவையில்லாத வேலை, என் புருஷன் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்குத் தேவையானதுதான். அதுவும் இல்லாம என் நாத்தனாருக்கும் எனக்கும் இடையில ஆயிரம் இருக்கும். நாளைக்கே அவ என் புருஷனோட ராசியானா, அவகிட்ட நானும் பேசுவேன். சோ, நீ எதையும் மண்டையில ஏத்திக்காத!” அலட்டிக்காது மகள் அளித்த பதிலில் அவர் அசந்து போனார். தாயாய் அவருக்கு மகளின் குணம் தெரியுமே. சட்டுசட்டென வாயை விட்டுவிடுவாள். எதிரிலிருப்பவர் யார் எவரென பிரித்தரிந்து யோசிக்காது, அவளுக்கென ஒரு நியாய அநியாய வரையறைகளை வகுத்து அதன்படியே செயல்படுவாள். அப்படி இருக்கையில் புகுந்த வீட்டில் எங்கணம் அவள் இணக்கமாக இருக்கக் கூடும் என்ற கவலை அவரை அரித்தது.

ஆனால், தற்போதைய அவள் பேச்சு, அந்தக் கவலைக்கெல்லாம் வேலையே இல்லை என்பது போலிருக்க, ராதா அசந்து போனார்.

இரவு கவிழத் துவங்க, மனோஹரி புகுந்த வீட்டிற்கு கிளம்பினாள். அவளை அங்கே விட்டுவிட்டு வருவதற்காக திவாகரும் உடன் சென்றான். பத்து நிமிடத்தில் அவர்கள் வீட்டை அடைந்தனர். மனோ மகிழுந்திலிருந்து இறங்காது தமையனை நோக்க, அவன் என்னவென்பதாய் அவளைப் பார்த்தான்.

“என்னாச்சு திவா, உன் முகமே சரியில்லை. அதிசயமா இன்னைக்கு என் மேல இருக்க கோபத்தை இழுத்துப் பிடிச்சு வச்சிருக்க?” என்றவளின் குரல் திவாகரை ஆழம் பார்த்தது. ஏதோ அவனிடம் சரியில்லை என உள்மனம் எச்சரித்தது.

“ச்சு… அப்படியெல்லாம் இல்லை. நீ உள்ள போ!” மனோவின் முகத்தைக் கூட அவன் காணவில்லை.

அவன்புறம் குனிந்து முகத்தை நிமிர்த்தியவள், “ஏன் டா, உன்னைக் கஷ்டப்படுத்துற மாதிரி நான் எதுவும் பண்ணிட்டேனா?” என்றவளின் விழிகள் திவாகரின் சோர்ந்திருந்த முகத்தில் அழுத்தமாய் பதிந்தது. தான்தான் அவனை காயப்படுத்திவிட்டோமோ என்ற எண்ணம் வியாபித்து அவள் மனதினோரம் வருத்தத்தைக் கொடுத்தது.

தங்கையின் குரலில், அதிலிருந்த பாவனையில் தெளிந்தான் திவா. ஷெண்பாவிற்கு முன்னே இவள் வந்து நிற்க, தன்னையே நிந்தித்தவன், மனோவின் தலையில் வலிக்காது தட்டினான்.

“ச்சு… ஒன்னும் இல்ல டி. எப்பவும் போல அப்பா, பிஸ்னஸ்னு அதைப் பத்தின டென்ஷன் தான். வேறெதுவும் இல்ல!”

“ஏன் திவா, தனியா எல்லாத்தையும் பார்த்துக்க கஷ்டமா இருக்கா? பழையபடி நான் ட்ரேடர்ஸல அக்கவுண்ட்ஸைப் பார்த்துக்கிறேன். உனக்குக் கொஞ்சம் வேலை குறையும் இல்லை!” என அவள் ஆறுதலாகப் புன்னகைத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் மேடம். நீங்க உங்கக் குடும்ப பஞ்சாயத்தைப் பாருங்க. அதுவே பெரிய வாரா இருக்கும் போல!” என தங்கையின் கன்னத்தில் தட்டியவன் முகத்தில் சிரிப்பு விரவியது.

“ம்க்கும்… நீ வேற டா. அண்ணனும் தங்கச்சியும் சரியான இம்சைங்க, நடந்ததையே இன்னும் நினைச்சு அவரையும் போட்டுப் படுத்துதுங்க.‌ அதான் இன்னைக்கு ஒரு வாங்கு வாங்கிவிட்டிருக்கேன். கண்டிப்பா நான் பேசுனதெல்லாம் யோசிச்சு குழப்பி தெளிவாகுவா தங்கச்சிகாரி… இவங்களை சேர்த்து வைக்கிறதுக்குள்ள எனக்குத்தான் டென்ஷன் ஏறுது!” என்றவளின் குரலில் திவாகர் முகம் நொடியில் மலர்ந்து போனது.

“சேர்த்து வைக்கத்தான் அப்படி பேசுனீயா மனோ… அப்புறம் ஏன் இனிமே குமரனைப் பார்க்கக் கூடாதுன்னு சொன்ன?” இவன் குரலில் ஆர்வம் கொட்டிக் கிடக்க, அவனை சந்தேகமாய்ப் பார்த்த மனோ, “ஆமா திவா, நான் எது செய்யக் கூடாதுன்னு சொல்றனோ அதை வீம்புக்குன்னு செய்ற குணம் ஷெண்பாவுக்கு. அவங்க அண்ணன் மேல ரொம்ப பெசசீவ் அவ! அத்தை நிறைய கதை சொல்லி இருக்காங்க. சோ, அதை லைட்டா தட்டிவிட்டிருக்கேன். என்ன ஆகுதுன்னு பார்ப்போம்!” என பெருமூச்சுவிட்டாள். திவாகருக்கு மனோவின் எண்ணத்தில் பெரியதொரு நிம்மதி மனதெங்கும் விரவியது. அவன் நினைத்தது போல தங்கை யாரையும் பிரிக்க நினைக்கவில்லை. உறவை ஒட்ட வைக்கத்தான் போராடுகிறாள் என்ற எண்ணம் இத்தனை நேரமிருந்த அலைப்புறுதலை கரைத்திருந்தது.

“நல்லதா நடக்கும்… சரி நான் கிளம்புறேன்!” என புன்னகையுடன் விடை பெற்றவனை இவள் யோசனையாய் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஷெண்பா வீட்டிற்கு சென்றவள் அறைக்குள்ளே முடங்கிப் போனாள். ஏனோ மனோவின் பேச்சு அவளை அத்தனையாய் சுட்டது. அதிலிருந்த உண்மை உறைத்ததில் இவளுள் பெரிய குற்றவுணர்வு பெருகியது. மனோ கூறியது போல நடந்ததை ஏற்றுக்கொண்டு நிதர்சனத்தை ஏற்றிருக்கலாமோ? என மனம் தாமதமான அறிவுரையைக் வழங்கியது.

அன்றைய குமரனின் பேச்சு தங்களுக்காகவென பிராயம் முதிர்ந்தப் போது உணர்ந்தாலும், ஏனோ தன்முனைப்பும் கோபமும் கண்ணை மறைத்திருந்தது. ஒருவேளை மனோஹரி கூறியது போல குமரனது தவறை மன்னித்து அவன் மனதை புரிந்து கொண்டிருந்தால், அவனுடைய திருமணத்தில் மூன்றாம் மனிதராக எட்ட நின்று வாழ்த்த வேண்டிய துரதிஷ்ட நிலை வந்திருக்காதோ என தன் தவறை முதன்முதலில் உணர்ந்திருந்தாள் பெண்.

ஏன் எத்தனையோ கஷ்டக் காலங்களில் குமரனுக்கு தோள் கொடுத்து அவன் துவண்ட நேரத்தில் முன்னின்று தேற்றி இருக்கலாமோ? உப்புக்கும் பெறாத கோபமும் தன்முனைப்பும் அத்தனை அழகிய தருணங்களை தட்டிப் பறித்ததை மூளை இப்போது எடுத்துரைக்க, விழிகளில் சரசரவென நீர் வழிந்தது.

ஒவ்வொரு முறையும் குமரன் காயம்பட்டு நிற்கையில் அவளும்தானே வலியை சுமக்கிறாள். இப்படி அவனையும் கஷ்டப்படுத்தி தாங்களும் ஏன் அழுது கரைய வேண்டுமெனத் தோன்றித் தொலைக்க, ஏனோ தன் மீதே கோபம் வந்தது.

‘சொந்த மகன் திருமணத்தைக் காண முடியாது குமரன் திருமணத்தன்று வருத்தம் தொனித்தக் குரலில் சொக்கநாதன் பேசியது இப்போதும் செவியை அடைய அதிகமாக வலித்தது. அவன் வேண்டாம் என விட்டுச் சென்றாலும் தங்கள் அவனை விட்டிருக்கக் கூடாதோ? இழுத்துப் பிடித்திருக்கலாமோ? அருகே இல்லாதிருப்பினும் அவன் மீதான தன் நேசம் உண்மைதானே? தூரச் சென்றால் அனைத்தும் மாறிவிடுமா என்ன?’ மனம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.

இவள்தான் குமரன் மனோவின் திருமணத்தை புகைப்படங்களாகவும் காணொளியாகவும் காண்பித்திருக்க, சொக்கநாதன் கண்கலங்கிப் போனார். விக்ரமும் இவளும் சேர்ந்து அவரை அதட்டி சரிசெய்த கணங்கள் மனதை கனக்கச் செய்தன.

இரண்டு நாட்களாக முகத்தை சேகமாய் வைத்திருந்த தங்கையை விக்ரம் அதட்டி உண்மையை வாங்கிருந்தான். நடந்ததைக் கூறி மனதிலிருந்த எண்ணத்தையெல்லாம் அவனிடம் வார்த்தையால் வடித்து அழுதேவிட்டாள் ஷெண்பா.

“ஷெண்பா! இப்போ எதுக்காக நீ அழற?” விக்ரம் குரலை உயர்த்த, “அவன் தப்பு பண்ணான்னு சொல்லி சொல்லி இத்தனை நாள் ஒதுக்கி வச்சு நம்மளும் தப்புப் பண்ணிட்டோம் விக்கி!” எனத் தேம்பியழுதவளைக் கனத்த மனதுடன் பார்த்தான் தமையன்.

“இப்போ என்ன பண்ணலாம்?” அவன் வினவ, அவளிடம் பதிலில்லை. தன் தோளில் சாய்த்திருந்தவளின் தலையை தடவியவன், “நீ ரொம்ப குழம்பியிருக்க. தெளிஞ்சதும் ஒரு முடிவை எடு. இப்போ எதையும் யோசிக்காத!” என அவன் கூற, தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டாள் அவள்.

விக்ரம் கூறியது போல ஷெண்பா ஒரு வாரமாய் யோசனையிலே அலைந்தாள். நடந்தது அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு இனிவரும் நாட்களாவது பழைய ஷெண்பாவாகவும், எப்போதும் போல இரண்டு தமையன்களுடனும் நாட்களைக் கடக்க வேண்டும் என மனம் விரும்பித் தொலைத்தது. தங்கையின் யோசனை முகத்தைதான் விக்ரம் கண்டது. ஷெண்பாவைப் போலவெல்லாம் அவனுக்கு சிந்தனை செல்லவேயில்லை. இன்னுமே அவன் கோபத்தில்தான் இருந்தான். அவனால் அத்தனை எளிதில் இறங்கிவர முடியும் எனத் தோன்றவில்லை.

error: Content is protected !!
Scroll to Top