திருக்குமரன் மகிழுந்தை செலுத்த, அவனுக்கு அருகில் திவாகர் அமர்ந்தான். மனோஹரி பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள, நகரத்தை நோக்கிச் சென்றனர். கருங்குளத்திலிருந்து திருச்சியை சென்றடைய கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் தேவைப்படும்.
இவர்கள் சென்று சேரவே முன்னிரவைத் தொட்டுவிட்டது. மனோ விறுவிறுவென அந்தக் கண்ணாடி கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டாள். “குமரா, நீயும் உள்ள வா!” திவா அழைக்க, இவன் மறுத்துவிட்டான்.
“இல்ல, நீங்க போயிட்டு வாங்க. நான் கார்லயே வெயிட் பண்றேன்…” குமரன் பதில் இயம்பவும் தோளைக் குலுக்கிய திவாகர் நகர்ந்திருந்தான்.
சென்ற அரைமணி நேரத்தில் மனோ உடையை தேர்வு செய்து முடித்திருந்தாள். திவாகர் கூட ஆச்சர்யப்பட்டுப் போனான்.
“மூனு ட்ரெஸ் போதுமா?” திவா வினவவும், “போதும் டா. நான் என்ன ஒரு ஊருக்கேவா ட்ரெஸ் எடுக்க வந்தேன்!” என அவனை முறைத்து வைத்தாள் தங்கை. இருவரும் பணம் செலுத்திவிட்டு வந்தனர்.
“அப்புறம் இதுக்கு மேட்சா, ஜ்வெல்ஸ், காஸ்மெடிக்ஸ் எல்லாம் வாங்கலையா மனோ?”
“டைம் இப்போவே நைன் ஆச்சு திவா. நாளைக்கு ஹாஸ்பிடல் போய்ட்டு வரும்போது நான் வாங்கிக்கிறேன்!” மனோ கூறவும் மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
குமரன் விடைபெற, இவர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
மகள் வாங்கியிருக்கும் உடையை ஆராய்ந்த ராதாமணி, “முதல் தடவை உருப்படியா ட்ரெஸ் எடுத்திருக்க டி!” எனக் கூறவும், அவரை முறைத்தவள், உடையை அறைக்குள் எடுத்து சென்றுவிட்டாள். எப்போதும் ஆண்கள் அணிவது போல மேலுடையும், கால்சராயும் எடுத்து வருவாள். இல்லையென்றால் முழு உயரத்திற்கும் மொத்தமாய் பெரிய பெரிய சுரிதார்கள் எடுத்து வருவாள். ஆனால், முதல்முறையாக மனோ சேலை ஒன்றை எடுத்து வந்திருக்கவும், ராதாமணி ஆச்சர்யப்பட்டார். சேலைக்குப் பின்னே மகள் வைத்திருக்கும் வெடிகுண்டை அவர்கள் அறியவில்லை.
மறுநாள் காலையில் சிறிது தாமதமாக எழுந்ததால் விரைவாய் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மனோஹரி. புதிதாய் வாங்கிய கடல் நீல வண்ண நீண்ட சுரிதார் அவளது நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. முடியைப் பின்னலிட்டு முடியவும், அதில் மல்லிகைப் பூவை சூடிவிட்டார் ராதாமணி. பூ விளைவிப்பதால் எப்போதும் ராதாமணி பூவைக் கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பார்.
“போதும் மா. விட்டா, பூக்காட்டையே என் தலையில வச்சுவிடுவ நீ…” மனோ தாயை முறைக்க, அதையெல்லாம் சட்டை செய்யவில்லை அவர். உணவை மேஜைமீது எடுத்து வைக்கவும், உண்டுவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
“மனோ, எனக்கு குவாரில வேலை இருக்கு . நீ குமரனோட போ!” திவாகர் அவளிடம் பேசியவாறே மகிழுந்தை எடுத்துக்கொண்டு அகன்றிருந்தான்.
“குமரா, அந்த நிலத்தை ஓனர் நமக்கே தரேன்னு சொல்லிட்டான். நீ மனோவை ஹாஸ்பிடல்ல இறக்கிவிட்டுட்டு லாயரைக் கூட்டீட்டுப் போய் நிலத்தைப் பார்த்து பேசி முடி. எல்லாம் சரியா இருந்தா, நாளைக்கே ரிஜிஸ்டர் பண்ணிடலாம்!” ரங்கராஜன் கூறவும், தலையை அசைத்தவன் தனது இருசக்கர வாகனத்தை இயக்கி மனோஹரிக்காகக் காத்திருந்தான். திவாகர் அல்லது குமரனோடுதான் பணிக்குச் சென்று திரும்புவாள். வேறு யாருடனும் ரங்கராஜன் மகளை அனுப்ப விரும்பமாட்டார்.
மகிழுந்தில் சென்றால் மனோ வேலை பார்க்கும் மருத்துவமனையை அடைய ஒரு மணி நேரமாகிவிடும். ஆரம்பத்தில் ரங்கராஜன் வேலைக்குச் செல்ல வேண்டாம் என மனோவைத் தடுக்க, அவள் உறுதியாய் இருந்துவிட்டாள். சரியென்று ஒப்புக்கொண்டு அவளுக்கென இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். ஒரே வாரத்தில் கீழே விழுந்து கையை ஒடித்திருந்தாள் மனோ. ஒரு மாதம் தொடர்ந்து ஓய்வுக்குப் பின்னர் குமரன்தான் அவளை அழைத்துச் செல்கிறான்.
மருத்துவமனைக்கு மாற்றுவழி ஒன்றிருந்தது. ஆனால் அது ஒற்றையடிப் பாதை. அதனால்தான் மகிழுந்தை விடுத்து, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வான் குமரன்.
சில நிமிடங்களில் மனோ அவனது இருசக்கர வாகனத்தில் அமரவும், குமரன் வாகனத்தை இயக்கினான். கடந்த ஒரு வருடமாக இவன்தான் அவளுக்கு சாரதியாகிப் போயிருந்தான். ஆனால், தேவைக்கு அதிகமாக அவனிடம் ஒரு வார்த்தைக் கூட மனோ பேசியதில்லை. அவனும் அதையெல்லாம் எதிர்பார்த்ததும் இல்லை.
கவனமாய் அவன் மீது விரல்கூட படாதவாறு ஒதுங்கிதான் அமர்வாள். முதலில் அது சுயபாதுக்காப்பு என்றெண்ணி இருந்தான். ஆனால், வேகத்தடை வந்தப் போதும் கூட, பின்னிருக்கும் கம்பியை இறுகப் பற்றுவாள். கீழே விழச் சென்றாலும் கூட, இவன் நிழலைக் கூட தொடவில்லை. அதில் குமரன் ஏகத்திற்கும் கடுப்பாகிவிட்டான்.
‘அப்படியென்ன தீண்டத் தகாதவனாகப் போய்விட்டேன் நான்?’ என இவனும் முன்புறம் நன்றாய் தள்ளி அமர்ந்துவிடுவான். அரைமணி நேர பயணத்தில் மருத்துவமனை வந்துவிடவும், விறுவிறுவென இறங்கி உள்ளே நுழைந்துவிட்டாள். இந்த ஒரு வருடத்தில் ஒருமுறை கூட மனோ சென்று வருகிறேன் என தலையசைத்தாகவோ இல்லை நன்றி கூறியதாகவோ குமரனுக்கு நினைவில்லை. அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டான். இதனாலே இவள் திமிர் பிடித்தவள் என்ற எண்ணம் மனதில் வேரூன்றிப் போனது. நேராக வண்டியை வழக்கறிஞர் வீட்டிற்குச் செலுத்தினான்.
மனோஹரி மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் பி.ஏ.எஸ்.எல்.பி எனப்படும் செவித்திறன் குறைபாடு மற்றும் காது கேளாதோர்ககளுக்கான சிகிச்சை அளிக்கும் படிப்பை முடித்துவிட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தைகள் பிரிவில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வருகிறாள். அவள் கைப்பையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் ஏராளமிருக்கும். வீட்டில் கூட திவாகர் அவளை சில சமயம் வம்பிழுத்தது உண்டு. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மனோ வேலையை அத்தனை சிரத்தையாகச் செய்வாள். அவள் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்தப் படிப்பு. அதற்கான முழு அர்ப்பணிப்போடுதான் பணிபுரிகிறாள்.
குமரன் வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசிவிட்டு, அவரையும் அழைத்துக்கொண்டு நிலத்தைப் பார்க்கச் சென்றான். நில உரிமையாளரும் வந்திருந்தார்.
இருவரும் சேர்ந்து நிலத்தின் தாய்ப்பத்திரம், வில்லங்கப் பத்திரம் என அனைத்தையும் சரிபார்த்து, திருப்தியாகினர். விலை ஏற்கனவே ரங்கராஜன் பேசியதுதான். குமரன் பேசி இன்னமும் கொஞ்சம் குறைத்தான்.
“சரிங்க தம்பி, நாளைக்கே ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம். எனக்கும் ரொம்ப அவசரப் பணத்தேவை. அதான் இந்த நிலத்தை விக்க வேண்டியதா போச்சு!” வருத்தம் தொனித்த குரலில் கூறி அவர் விடை பெற்றார்.
“சரி குமரா, நாளைக்கு ரிஜிஸ்டர் ஆஃபிஸ்க்கு போய்டு. சூட்டோட சூடா ரிஜிஸ்டரேஷனையும் முடிச்சுட்டா வேலை முடியும்…” வழக்கறிஞர் கூற, இவன் தலையை அசைத்தான்.
“உங்களை வீட்ல விட்டுட்டு நான் கிளம்புறேன். வாங்க சார்…” என அவரை வீட்டில்விட்டவன் அலைபேசியை எடுத்து யாரிடமோ பேசினான். முகம் தீவிரமாக இருந்தது. பின்னர் குரலில் கோபம் தெறித்தது.
“அப்போவே நினைச்சேன். அவன்தான் இதைப் பண்ணி இருப்பான்னு…” சினத்தில் பற்களை நரநரத்தவன், “வேணாம், நீ எதுவும் பண்ணாத. நான் பார்த்துக்குறேன்…” என அழைப்பைத் துண்டித்தான். சிந்தனை அடுத்து என்ன செய்யலாம் என ஆராய்ந்தது.
ஆட்களை வைத்து மிரட்டினாலும், அடித்தாலும் கூட அது வெறும் உடல்வலியோடு போய்விடும். மனவேதனையைக் கொடுத்து நிம்மதியையும் குலைக்க வேண்டும். இனிமேல் மீண்டும் எழுந்து வர முடியாத அளவிற்கு என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு மூளையில் பளிச்சென ஒரு எண்ணம் குமிழிட்டது. அதன் சாதகப் பாதகங்களை ஆராய்ந்துகொண்டே செங்கல் சூளையை அடைந்திருந்தான்.
இவனைக் கண்டதும் தங்கமணி புன்னகைக்க, “கவர்மெண்ட் ஆபிஸ் கட்டுறதுக்கு சரக்கு அனுப்பியாச்சா அண்ணே?” என வினவியவாறே அலுவலக அறையைத் திறந்தான்.
“போன வாரமே அந்த ஆர்டர் முடிஞ்சது குமரா. இப்போ ஹாஸ்டல் ஆர்டர் போகுது!” தங்கமணி பதில் இயம்பியதும், தலையை அசைத்து அவரை அனுப்பியவன், அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான். சில நிமிடங்கள் பேசி, என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்தவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அதன்பிறகு சிறிது நேரம் சூளையிலிருந்துவிட்டு, மணல் குவாரிக்குச் சென்றான். மதிய உணவு நேரம் வரவும் வீட்டிற்கு சென்று உணவு உண்டான்.