கட்டிடப் பொருளகத்தில் ஏதோ சிறிய பிரச்சனை என அழைப்பு வர, விரைந்து சென்று என்னவெனக் கேட்டு அதை தீர்த்து வைத்தவன், அங்கேயே அமர்ந்துவிட்டான்.
அந்த மாதத்தின் வரவு செலவுகளை ஆராய்ந்தான். ஒரு ரூபாய்க் கூட குறையாது சரியாய் இருந்தது. மனோஹரி தான் அதைப் பொறுப்பாய் கவனித்துக் கொள்வாள். திவாகர் எப்போதும் மணல்குவாரியைக் கவனித்துக்கொள்ள, குமரனுக்கு செங்கல் சூளைதான் பிரதானம். இருந்தும் அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்துவிடுவான். எதிலும் எப்போதும் முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என எண்ணுபவன் குமரன். அதுவும் அன்றி ரங்கராஜன் தன்னை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார் என்ற விழிப்புணர்வு எப்போதும் அவனிடம் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் செங்கல், மணல், ஜல்லிகள் விற்பனைக்குப் போகும் போதே மனிதர்களை எடை போட்டுவிடுவான். மனிதர்களை ஓரளவிற்குக் கணிக்கும் திறன் கால மாற்றத்திலும் அனுபவத்திலும் கிடைத்திருந்தது. இவர்கள் மறுமுறை மீண்டும் வாங்க வருபவர்கள் என மூளை கண்டறிந்துவிட்டால், அவர்களுடனான நட்புறவை பேணுவான். அதற்காக தானாக வழிய சென்று பேச மாட்டான். அவர்களுக்கு உரிய மரியாதையை சரியாய் அளிப்பான்.
குமரனுக்கு வயது குறைவாக இருப்பினும், அவனது செயலும் பேச்சும் தானாய் மரியாதையை ஈட்டித் தரும். எல்லோரிடமும் வேலை வாங்கும் போது அவனறியாமலே ஆளுமை வெளிப்படும். ஆனால், பெரிதாய் அலட்டிக் கொள்ளமாட்டான். வேலையில் சிரத்தையாய் இருப்பவன், ரங்கராஜனுக்கு விஸ்வாசமாய் இருப்பான்.
வந்திருந்த வாடிக்கையாளரைக் கவனித்துப் பேசி அனுப்பிய குமரனின் விழிகள் அனிச்சை செயலாய் கடிகாரத்தை நோக்கின. நேரம் ஐந்தைத் தொட இருபது நிமிடங்கள் இருக்க, இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மனோவை அழைக்கச் சென்றான்.
இவன் உள்ளே நுழைய, “லாஸ்ட் பேஷண்டை மேம் பார்த்துட்டு இருக்காங்க. ஃபைவ் மினிட்ஸ் சார்…” வரவேற்பாளினி மெல்லிய புன்னகையுடன் முகத்தைச் சுருக்கி கூறவும், தலையை அசைத்தவாறு வெளியே உள்ள இருக்கையில் அமர்ந்தான்.
மனோவின் குரல் இவனுக்கும் கேட்டது. எப்போதுமே அவளின் குரல் உரக்கத்தான் இருக்கும். அவளது இயல்பும் கூட. அறைக்குள்ளே இருந்த மனோ குழந்தைக்கு விளையாட்டு காண்பித்தவாறே செவித்திறனை சோதித்தாள். பின்னர் குழந்தையின் பெற்றவர்களிடம் சில சோதனைகள் செய்து பார்க்க வேண்டும் எனத் தெளிவாய் விளக்கி, நாளை மருத்துவரை ஒருமுறை பார்த்துவிடுமாறு கூறினாள்.
அவர்கள் மேலும் சில சந்தேகங்களைக் கேட்டறிந்து விடைபெற, மனோவும் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள். திருக்குமரன் எழுந்துவிட்டான். இவள் சென்று வாயிலில் நிற்கவும், அவன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து வந்தான். எப்போதும் போல சுண்டு விரல் கூட அவன்மீது படாதவாறு தள்ளி அமர்ந்தாள். அதைப் பார்த்தவனுக்கு எரிச்சல் படர்ந்தது. இவளை அழைத்து வர முடியாது என ரங்கராஜனிடம் கூறிவிடலாம் எனக் கூட யோசித்து இருக்கிறான். ஆனால், முடியவில்லை.
முதன்முதலில் மனோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது கூட, “குமரா, நீ போ. திவாவும் நீயும் அவளை விட்டுட்டு வாங்க!” என்றுதான் கூறினார். அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டிருக்கிறான்.
அவன் முகத்தின் எரிச்சல் இவளது விழிகளுக்குத் தென்பட்டாலும், பெரிதாய் எதிர்வினை எதையும் காட்டவில்லை. முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
இருவரும் வீட்டை அடைந்தனர். மனோ அறைக்குள் நுழைய, ரங்கராஜன் இவனைப் பார்த்தார். அவரது பார்வையிலே நடந்ததை அறிந்து கொண்டார் என இவனால் உணர முடிந்தது.
அவர் முன்னே சென்று நின்றான்.
“சொல்லு குமரா…” அவர் கேட்கவும், “மார்த்தாண்டம்தான் சார் காரணம். இந்த டைம் கவர்மெண்ட் ஆஃபிஸ் கட்டுற பில்டர்ஸ்கிட்டே ஆர்டர் நம்ம வாங்கிட்டோம். அவனுக்கு அது கிடைக்கலைன்னு கோபம். அதான் காட்டிட்டான்!” நடந்ததை விளக்கினான் குமரன். பார்வை அவரிடம்தான்.
“அவனை என்ன செய்யலாம் சார்?” இவன் குரலிலிருந்த அலட்சிய பாவனையில் அவரது முகத்தில் மெல்லிய புன்னகை.
“என்ன செஞ்ச மேன் நீ?” எனக் கேட்டவரின் குரலில் ஆர்வம் கொட்டிக் கிடந்தது.
“பெருசா எதுவும் இல்லை சார். இனிமே அவன் சூளையை மறுபடியும் ரன் பண்ணி, பழைய மாதிரி வர குறைஞ்சது ஒருவருஷம் ஆகும்!” என்றவனின் குரல் எப்போதும் போலொரு பாவனைதான். ஆனால், அவன் செயலின் வீரியம் அனுபவிப்பர்கள் மட்டுமே அறிவர்.
ரங்கராஜன் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது. உடை மாற்றி தேநீர் அருந்துவதற்காக சமையல் அறைக்குள் நுழைந்த மனோவின் செவியிலும் இவர்களது உரையாடல் தெளிவாய் விழத்தான் செய்தது. இருவரது பேச்சிலும் தந்தையின் சிரிப்பிலும் இவளது முகம் கடுகடுத்தது.
“நாசா விஞ்ஞானிங்க மாதிரி பேசீட்டு இருக்காங்க மா, ஒருத்தன் குடியைக் கெடுத்துட்டு!” மனோவின் குரலில் அத்தனை காரம். முகத்திலும் அது தெரிந்தது.
“ப்ம்ச்… இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத வேலை. உங்கப்பா எல்லாத்தையும் பார்த்துப்பாரு!” ராதாமணி மகளை அதட்டினார்.
“என்ன பார்த்துப்பாரு. ஒவ்வொரு டைமும் இப்படி மூட்டை மூட்டையா பாவத்தை சேர்த்துட்டு இருக்காரு இந்த மனுஷன்…” இவள் இரைந்தாள்.
“மனோ, டீ ஆறப் போகுது. குடிச்சிட்டு ரூம்க்குப் போ…” ராதாமணி குரலை உயர்த்தினார்.
எதுவும் பேசாது விறுவிறுவென கூடத்திற்குச் சென்று ரங்கராஜனின் அருகில் அமர்ந்தாள்.
“எனக்குத் தெரியும் டா. நீ யாரா இருந்தாலும் முடிச்சிட்டுதான் சொல்லுவன்னு…” பெரியவர் குரலில் பெருமிதம் மிளிர்ந்தது. குமரன் எந்தவித எதிர்வினையும் ஆற்றாது நின்றிருந்தான்.
“ஏன் பா, முடிக்கிறதுன்னா எப்படி? மொத்தத் தொழிலையும் முடக்கி, அந்தக் குடும்பத்தை நடுத்தெருவுக்குக்கொண்டு வர்றதா?” மனோஹரி கோபமான வார்த்தையால் தந்தையைச் சுட்டினாள். அவளைத் தவிர யாராலும் அவரிடம் இப்படி பேச முடியாது. மனோ தந்தை என்றில்லை யாராய் இருந்தாலும் முகத்திற்கு நேராய்க் கேட்டுவிடுவாள். பேசும் வார்த்தைகள் சொற்பம்தான். ஆனால், அதன் வீரியம் அதிகம்.
“ச்சு… இதெல்லாம் உனக்குப் புரியாது மனோ…” ரங்கராஜன் குரலில் கடுமை எட்டிப் பார்த்தது.
“என்ன புரியாது பா. எல்லாம் புரிஞ்சுக்கிற வயசுதான் எனக்கும். இன்னும் எத்தனை நாள் அடுத்தவனை அடிச்சுட்டே இருக்கப் போறோம். இதெல்லாம் பெரிய பாவம்…” எனப் பொரிந்தாள்.
“அவங்களை அடிக்கலைன்னா, நம்மளை அவங்க அடிச்சு சாப்ட்டு போய்டுவாங்க. இது சர்வைவல் நெசசிட்டி!” குமரனிடம் பதில் வந்தது. அசட்டையாய் அசிரத்தையாய் அதைவிட அலட்டிக் கொள்ளாது குமரன் பதிலளித்தில், மனோ ஏகத்திற்கும் கடுப்பாகிப் போனாள்.
“எது சர்வைவல் நெசசிட்டி? ஹம்ம்… ஃபுட், ட்ரெஸ்,
ஷெல்டர்னு நம்மளோட அடிப்படை தேவைகள் மட்டும்தான் அதுல அடங்கும். இப்படி அடுத்தவனை அடிக்கிறது இல்லை!” இவள் குரலில் முழுதாக சீற்றம்.
குமரன் பதிலளிக்கும் முன், “மனோ, முதல்ல உள்ள போ!” என்ற ரங்கராஜனின் குரலில் அதை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது. குமரனை அழுத்தமாய்ப் பார்த்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.
“நீ எதுவும் நினைச்சுக்காத குமரா. அவ அப்படித்தான்னு உனக்குத் தெரியும் இல்ல…” என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவர், “அந்த நிலத்தை பேசி முடிச்சிட்டீயா?” என வினவினார்.
“முடிஞ்சது சார், நாளைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிடலாம்!” குமரன் பதிலளிக்க, “ஹம்ம், திவா பேர்லயும் மனோ பேர்லயும் பண்ணிடலாம். காலைல அந்த வேலையை முடிச்சுவிட்ரு…” ரங்கராஜன் கூறினார். இவன் தலையசைத்து விடைபெற்றான்.