உள்ளம் – 16.3

நால்வரில் ஒருவர் முகத்தில் கூடப் புன்னகையின் சுவடில்லை. அவர்களை முதன்முதலாக இணைத்திருந்தது அந்நிழற்ப்படம்.

நொடியும் தாமதிக்காது ஷெண்பா விறுவிறுவென கீழே இறங்க, விழிகளில் உவர் நீர் தளும்பி நின்றது. யார் முகத்தையும் காணாது குனிந்த தலையோடு வாயில்வரை சென்றுவிட்டாள். விக்ரம் குமரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அகல, அவன் கனத்த மனதுடன் இருவரையும் கண்டிருந்தான்.

விக்ரம் மகிழுந்தை எடுத்து வரச்செல்ல, ஷெண்பா யாருக்கும் புலப்படாத ஓரிடத்திற்குச் சென்று நின்றாள். இப்போது இமைகள் விழிநீருக்கு எவ்வித தடையும் விதிக்காது விட்டுவிட, கன்னத்தோடு உடலும் அதில் நனைந்தன.

‘அடுத்தவங்க யாருன்னு கேட்டு தங்கச்சின்னு அறிமுகம் செய்ற அளவுக்கு நம்ம உறவை வச்சிருக்க குமரா? ஏன்ண்ணா இப்படி பண்ண? எங்க கூடவே எல்லாரும் ஒன்னா இருந்திருக்கலாம் இல்ல. உனக்கு மத்தவங்க மேல இருக்க கோபம்தான் பெருசா போச்சா? உனக்காக ரெண்டு பேர் இருக்கோம்ன்றது மறந்து போச்சுல்ல? அவ்வளோ சுயநலவாதியா நீ?’ மனது விம்ம, உடல் கோபத்தில் தணிய மறுத்தது. இந்நேரம் தங்களுடன் அவனிருந்திருந்தால், இப்படியா திருமணம் செய்திருப்போம். அவனுக்கென யாருமில்லாது நிற்கிறானே என்ற எண்ணத்தில் ஆற்றாமை பொங்கியது.

துடைக்க துடைக்க வழியும் நீரைத் துப்பட்டாவால் அவள் நனைக்க, அவள் முன்னே ஒரு கரம் கைக்குட்டையோடு நீண்டது. தன்னருகே நின்ற நிழல் யாரென மூளை விழித்துக்கொள்ள, நிமிர்ந்து பார்த்தாள் ஷெண்பா. திவாகர் நின்றிருந்தான்.

யாரென்று ஒரு பார்வையை வீசியவளின் கண்ணீர் இப்போது நின்றிருந்தது. அவன் பதிலேதும் உரைக்கவில்லை. அவளுக்கு முன்னே நீட்டிய கரத்தையும் பின்னிழுக்காதிருக்க, “நோ தேங்க்ஸ்!” என்று நகர்ந்திருந்தாள். அவன் பார்வை விக்ரம் ஓட்டிவந்த மகிழுந்தில் அவள் ஏறிச் செல்லும்வரை அவளிடம்தான் நிலைத்தன. அந்தப் பார்வையில் என்ன இருந்தது என இருவருமே அறியவில்லை.

“அக்கா, இப்போ ஒரு அண்ணாவும் அக்காவும் வந்துட்டுப் போனாங்க இல்ல, அவங்க எல்லாம் யாருக்கா?” செபாவின் குழந்தையைத் தோளில் தட்டி தூங்க வைத்தவாறு மேடையிலிருந்த அக்ஷயா வினவினாள்.

“அப்புறம் சொல்றேன் அக்ஷயா!” மனோ அந்தப் பேச்சைக் கத்தரித்திருந்தாள். அவளது பார்வை இறுகியிருந்த குமரனிடம்தான் நிலைத்தன. ஏனோ இந்த இடத்தில் நிற்பதே பிடித்தமில்லையென அவன் முகம் எடுத்துரைத்தது. அந்தப் பாவனையில் இவளுக்கு மனதில் சுணக்கம் வந்தது. திருமண நாளில் கூட மகிழ்ச்சி இல்லையே என எரிச்சலாய் வர, அவளுக்குமே அந்த இடத்தைவிட்டு அகலவேண்டும் என உந்துதல்.‌ ஆனாலும் சூழ்நிலை கருதி பல்லைக்கடித்தபடி நின்றிருந்தாள்.

“மனோ, நீயும் தம்பியும் வந்து சாப்டுங்க. எவ்வளோ நேரம் நின்னுட்டே இருப்பீங்க!” மைதிலி வந்து அழைக்க, இருவரும் உணவுண்ண அமர்ந்தனர்.
உணவு உள்ளே இறங்கவே இல்லை. கடமைக்கென உண்டு முடித்தனர்.

சிறிது நேரத்தில் உறவினர்கள் கூட்டம் மெல்ல கரையத் துவங்க, மணமக்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நடுகூடத்தில் அமர வைக்கப்பட்டிருந்த இருவரது முகத்திலுமே மகிழ்ச்சி துடைக்கப்பட்டிருந்தது. ஏனோ பிடிக்காத விருந்தாளியை உபசரிக்கும் பாவம் இருவர் அகத்திலும் முகத்திலும் கூட.

அதை கவனித்துவிட்டு, “ஏன் மைதி, உன் தங்கச்சி ஆசைபட்டுதானே அவனைக் கல்யாணம் பண்ணா! ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கா?” லோகேஷ் மைதிலியிடம் வினவ, அவளும் மனோவின் முகத்தைதான் பார்த்திருந்தாள்.

“மனோ, ஏன் முகத்தை ஒரு மாதிரி வச்சிருக்க?” அவள் வினவ, “ச்சு… தலைவலி கா. ஒன்னும் இல்ல!” என்று பதில் இயம்பினாள். சிந்து வீட்டிற்கு வந்திருந்தவர்களை கவனிக்க, வனிதா மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தார். திவாகரும் ஹரியும் மண்டபத்தில் அனைத்தையும் பார்த்து முடித்து காலி செய்து ஒப்படைத்துவிட்டு வர நேரம் பிடித்தது. ராதா அடுத்து என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும் என அதில் முழ்கிவிட்டார். எத்தனை அழைத்தும் ரங்கா இங்கே வர மறுத்துவிட, அடுத்தடுத்து வேலைகள் வரிசைகட்டி நிற்க, அவர் போகட்டுமென விட்டுவிட்டார் பெண்மணி.

சிறிது நேரத்திலே மனோவினருகே அமர்ந்திருந்த குமரன் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள, இவள் ஆற்றாமையுடன் அவனைப் பார்த்தாள். ஏனோ விருப்பமில்லாத திருமணத்தை அவனுக்கு கட்டாயப்படுத்தி செய்து வைத்தது போலொரு பாவனையை முகத்தில் தாங்கியிருந்தவனைக் கண்டு இவளுக்கு கோபமும் ஆற்றாமையும் ஒரு சேரப் பொங்கியது.

‘நான்தான் இவன் வேண்டுமென திருமணம் செய்து வந்திருக்கிறேன். இவனுக்கு அப்படியில்லை!’ என மனம் உபரித் தகவலாய் எடுத்துரைக்க, ஏனோ அழுகை வருவது போலானது. உதட்டைக் கடித்து அமர்ந்திருந்தவளின் உடல்மொழி அவள் இயல்பாய் இல்லையென பறைச்சாற்றின.

தங்கை முகத்தை பார்த்திருந்த திவா, “மனோ, என்ன? என்ன ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க? குமரன் எதுவும் சொல்லிட்டானா?” பதட்டத்துடன் கேட்டான்.

“ப்ம்ச்… ஒன்னும் இல்ல திவா. நீ போ முதல்ல!” இவள் குரலில் எரிச்சல் அப்பட்டமாய் தெறித்தது.

“அண்ணா, நீ போ, நான் அக்கா கூட இருக்கேன்!” அக்ஷயா வந்து அவளருகே அமர, சினேகாவும் கார்த்திக்கும் அவளைத்தான் பார்த்தனர்.

“சித்தி, நானும் இவனும் சேட்டை செய்ய மாட்டோம். நீங்க கோபப்படாதீங்க!” கார்த்திக் மனோவின் கரத்தைப் பிடிக்க, மற்றொருபுறம் சினேகா பிடித்தாள். அந்தக் குரலில் இவளுக்கு என்னவோ போலானது.

குழந்தைகள் தன் முகத்தைதான் பார்க்கின்றனர் என்பது புரிய, “சித்திக்கு ஒன்னும் இல்லை டா. ஐ யம் ஓகே!” என அவர்கள் கன்னத்தைக் கிள்ளினாள். அக்ஷயா முகம் மாறாது லேசான வருத்தத்துடன் இவளைப் பார்க்க, அவளது கன்னத்தில் தட்டியவளின் விழிகள் திவாகரைத் தேட, நொடியில் அவள் முன்னே நின்றான்.

தன்னுடைய முகச்சுணக்கம் இத்தனை பேரை பாத்திக்கிறது என்பது புரிய, “சாரி திவா, அது…” என்ன சொல்வதெனத் தெரியாது தடுமாறி, “ஐ கேன் ஹேண்டில். நீ ஒன்னும் கவலைப்படாத!” என்றாள் ஆறுதலாய்ப் புன்னகைத்து. அதில் திவாகரின் முகம் தெளிய, உடல் தளர்ந்தது.

“அவர் எதுவும் என்னை சொல்லலை. குற்றக் கண்ணோட பார்க்காத!” பழைய மனோஹரியாய் இவள் அதட்ட, அவன் சிரித்தான். நொடியில் சூழ்நிலையை இயல்பாய் மாற்ற குழந்தைகளை அன்றி யாராலும் முடியாதே. இவர்கள் புன்னகைத்ததில் அவர்களும் சிரித்தனர்.

இரவு கவிழத் துவங்கியது. மனோஹரி குளித்து முடித்து மீண்டும் புதுப்புடவை உடுத்தி கண்ணாடி முன் அமர வைக்கப்பட, அலங்காரம் முடிந்திருந்தது.

அக்ஷயாவுடன் செபாவும் குழந்தைகளையும் வனிதா அந்த வீட்டிற்கு அனுப்பிவிட, எஞ்சியிருந்தது பெரியவர்கள் மட்டும்தான். திவாகர், ஹரி, கோவிந்தன் ஆண்கள் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, வனிதா மைதிலி ராதா என பெண்கள் மூவரும் மனோவை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

ராதாமணி மகளுக்கு அறிவுரை என்ற பெயரில் தன் அனுபவங்களோடு யதார்த்த வாழ்க்கையின் நடைமுறை சிக்கல்களை பட்டும்படாமலும் உரைத்துக் கொண்டிருக்க, மனோஹரியின் சிந்தனை இங்கே இல்லை. ஏனோ குமரனின் முகமும் அது பிரதிபலித்த பாவனையும் மனதை அரித்ததது. ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருந்தவள், இப்போது ஏக சினத்திலிருந்தாள்.

“பெரியம்மா, போதும்! உங்க மக பயந்துடப் போறா. இனி வாழ்க்கை முழுசும் இங்கதானே இருக்கப் போறா. ஒவ்வொன்னா கத்துக்குவா!” மைதிலி இடைபுகவும்தான் அவரது பேச்சு தடைபட்டது.

“விடு மைதி, பெரியவங்க அனுபவத்தை சொல்லதான் செய்வாங்க” வனிதா ராதா கூற்றை ஆமோதிக்க, சிந்து கையில் பால் சொம்புடன் நுழைந்தார்.

மனோஹரி எழுந்து நிற்க, “ஆசிர்வாதம் வாங்கிக்கோ மனோ…” மைதிலி கூற, “என் ஆசிர்வாதம் எப்பவும் என் மருமகளுக்கு உண்டு!” என்றவரின் தோள்சுருங்கிய கைகள் மினுமினுப்பாய் மின்னி, அவளது தலையைத் தடவிப்போயின. அவளது கையில் சொம்பைக் கொடுத்தார் பெரியவர்.

“நல்லா இரு டி!” என்ற ராதா காலையிலிருந்து திடமாய் இருந்தாலும் இப்போது குரல் லேசாய் இடறியது.

“அம்மா!” மனோ அவரைப் பார்க்க, அவரும் ஆசிர்வாதம் செய்தார். மைதிலி சென்று மனோவை அறை வாயிலில் விட்டுவிட்டு வர, மற்றவர்கள் விடை பெற்றனர்.

அறைக்குள் நுழைந்த மனோஹரி கையலிருந்த சொம்பை அருகிலிருந்த மேஜைமீது நங்கென வைத்தாள். அத்தனை கோபத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தவனை இவள் உருத்து விழிக்க, அவனது பார்வையும் இவளிடம்தான்.

உள்ளம் கேட்கும்…

error: Content is protected !!
Scroll to Top