உள்ளம் – 16.2

அலைபேசியில் யாரிடமுமோ பேசிவிட்டு வந்த விக்ரம், “ஷெண்பா, வா கிளம்பலாம்!” என்றான். அருகிலிருந்த சிந்துவைப் பார்த்தும் அவனது எதிர்வினை அவ்வளவுதான். அதற்கெல்லாம் நான் சுணங்க மாட்டேன் என்றொரு பாவனையைக் கொடுத்த சிந்து, “விக்கி கண்ணா, ரொம்ப பெரிய பையனா வளர்ந்துட்ட டா! பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு… உனக்கும் காலகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணணும்!” என்று இயல்பாய் பேசி, கரத்தைப் பிடித்தவரை உணர்வுகள் துடைத்த முகத்துடன் அவன் பார்த்தான்.

“ஷெண்பா, டைமாச்சு… உன்கிட்டதான் பேசுறேன். கிளம்பு!” பக்கவாட்டில் திரும்பி அவளைப் பார்த்து இவன் அழுத்திக் கூறவும், “விக்கி கண்ணா, அம்மா மேல கோபம் இன்னும் போகலையா டா?” என பெரியவர் கேட்டார். அந்த முகத்தையும் குரலையும் புறக்கணிக்க முயன்று தோற்றவன், “உங்களுக்கு உங்கப் புள்ளை குமரன் மட்டும் போதும்தானே சிந்து மா. நான் வெறும் வாய் வார்த்தைக்குதானே புள்ளை?” எனக் கேட்டவனின் குரலில் அப்பட்டமானக் கோபம்.

“டேய், ஏன் டா இப்படி பேசுற? நடந்ததை ரெண்டு பேரும் மறக்கவே மாட்டீங்களா? அதை விடுங்க. நல்ல நாள் அதுவுமா இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காதீங்க. மேடைக்குப் போங்க!” அவர் குரலை உயர்த்தி அதட்டலாய்க் கூறவும், இருவரும் அவரை முறைத்தனர்.

“இந்த முறைப்பெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். மேடைக்குப் போங்க இப்போ!” பழைய தொனியில் சிந்து உரிமையும் கண்டிப்புமாய் அவர் கூற, இவர்கள் அடங்கிப் போயினர்.

கணவரைப் பிரிந்து வந்த நாளிலிருந்து எங்கே காண நேரந்தாலும் இவர்கள் முறுக்கிக்கொண்டு திரிய, சிந்து என்ன சமாதானத் தூதனுப்பியும் இருவரும் இறங்கிவரவே இல்லை. ஒவ்வொரு முறை காணும்போதும் ஷெண்பா கண்ணைக் கசக்குவதும் விக்ரம் யாரோ பரிட்சயம் இல்லாதவர்களைக் கண்டது போல நடந்து கொள்வதும் கன்னித்தீவு போல தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சிந்துவால் அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க முடியவில்லை. முன்பானால் சிறிய குழந்தைகளுக்குப் புரியாது என்ற எண்ணத்தில் பதிலளிக்காது விட்டுவிட்டார். இப்போதெல்லாம் ஏனோ காலம் கடந்தப் பின்னர் நடந்த நிகழ்வை மீண்டும் பேசுவதில் என்ன பயன் என்றொரு எண்ணம் அவருக்கு. அதன் விளைவாய் காயம் மட்டுமே விஞ்சி நிற்கும். அதனாலே அவர்களின் கேள்வியையும் ஆதங்கத்தையும் தட்டிக் கழித்துவிடுவார்.

அவருக்கும் வருத்தங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், காலத்தின் கோலம் இதுதான் என்னும் போது அவரால் அதை எதிர்த்துப் போராட முடியவில்லை.
ஏற்றுக்கொண்டுவிட்டார், அனைத்தையும். கணவன் எங்கிருந்தாலும் அவரது இன்மை இல்லாத வாழ்வு சுகிக்காது எனத் தெரிந்தும் மகனின் ஒரு வார்த்தைக்காய், அவனது கண்ணீருக்காக சொக்கனிடம் தான் அளித்த சத்தியத்தையும் மீறியிருந்தார். அந்த விஷயத்தில் அவரது மனமே அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. அதனாலே பத்து வருடங்களாக அவரைக் காண சந்தர்ப்பம் எத்தனையோ அமைந்த போதும், அனைத்திலிருந்தும் நழுவியிருந்தார்.

எங்கே மீண்டும் சொக்கனைக் கண்டால் அவரிடம் சரணடைந்து விடுவோமா? என்றொரு பெரிய அச்சம் நெஞ்சைக் கவ்வியது. அழகாய், அற்புதமாய் அமைந்த திருமண வாழ்வு நிலைக்காது போனதில் யாரையும் குறைக் கூற அவர் விரும்பவில்லை.

‘போகட்டும், என் விதி எப்படியோ அப்படியே இருக்கட்டும்!’ என தன் வாழ்க்கை மீதான காயங்களுக்கு ஒருவரையும் குறைகாணாத மனம் கொண்ட அந்தப் பெண்மணியின் வலியும் வாதையும் மனம் மட்டுமே அறிந்த ரகசியம். பெற்ற பிள்ளையிடம் கூட கூற முடியாத உணர்வுகளை மனக்கிடங்கில் பதுக்கிவிட்டிருந்தார். தன் மனவேதனைகளை ஒருவரிடமும் கொட்டியதும் இல்லை, காட்டியதும் இல்லை. அனைவரின் முன்பும் அவர் நிமிர்வான, தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணி. அப்படித்தான் தன்னை தகவமைத்துக் கொண்டார். அது சூழ்நிலையின் கட்டாயமும் கூட.

குமரனின் பார்வை அடிக்கடி ஷெண்பாவைத் தொட்டு மீண்டுக் கொண்டிருக்க, அவனருகே நின்ற திவாகர், “என்ன வேணும் குமரா? அவங்களைக் கூட்டீட்டு வரவா?” என வினவியவனின் விழிகள் ஷெண்பாவின் பாவனைகளை சிந்தாமல் சிதறாமல் உள்வாங்கியது.

“இல்ல திவாகர், அவங்களே வருவாங்க!” என்றவனின் உறுதியைப் பொய்யாக்காது இருவருமே மேடையேறினர்.

ஷெண்பா தன் கையிலிருந்த பரிசுப் பொருளை மணமக்களை நோக்கி நீட்ட, குமரன் முகத்தில் புன்னகை. இவர்கள் வாங்கிக் கொள்ள, மற்ற இருவரும் நகர முற்ப்பட்டனர்.

“ஃபோட்டோ எடுத்துட்டுப் போகலாம் ஷெண்பா, விக்கி!” எனக் குமரன் கூற, விக்ரம் அவனை முறைத்தான். அதெல்லாம் புறந்தள்ளியவனின் கரங்கள் ஷெண்பாவை தன்னருகே இருத்திக்கொள்ள விழைய, “கையை விடு குமரா!” என அவள் விலகப் பார்த்தாள்.

“ஃபோட்டோ எடுத்துட்டுப் போகலாம்!” அழுத்தமாய் இவன் உரைக்க, “எனக்கு இஷ்டம் இல்ல. சீன் கிரியேட் பண்ணாம கையைவிடு நீ. விட்டுட்டுப் போனவனுக்கு இப்போ மட்டும் என்ன அக்கறை!” அவள் பல்லைக் கடித்து குமரனுக்கு மட்டும் கேட்குமாறு பேச, இவன் முகம் விழுந்து போனது. விக்ரம் இருவரையும் அமைதியாய்ப் பார்த்திருந்தான்.

“அதான் இஷ்டமில்லைன்னு சொல்றாங்க இல்ல. விட வேண்டியது தானே? அப்படியென்ன அவசியம்?” ஏனோ ஷெண்பாவின் பேச்சில் வாடிய குமரனின் முகம், மனோவைப் பேச வைத்திருந்தது.

“அதான் உன் பொண்டாட்டியே சொல்லிட்டாங்க இல்ல குமரா, அப்புறம் என்ன? என் கையை விடு முதல்ல!” ஷெண்பா சீற, மனோவைத் திரும்பிப் பார்த்தவன், “திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்!” என்றான் அனல் தெறிக்க.

அந்த வார்த்தையில் நிமிர்ந்து அவனிடம் உஷ்ணப்பார்வையை வீசியவள், “நான் ஒன்னும் உங்க பழைய ஓனர் பொண்ணு மனோ இல்ல. இப்போ உங்கப் பொண்டாட்டி, அதனால இதுவும் என் பிஸ்னஸ்லதான் வரும்!” என்றவளின் குரலில் அப்படியொரு கோபம் கொட்டிக் கிடந்தது.

அந்தப் பேச்சில் இவன் ஏகத்திற்கும் அவளை முறைக்க, “குமரா, இது யாருப்பா? தெரிஞ்ச புள்ளையா?” என உறவினர் ஒருவரின் கேள்வியில் அனைவருக்கும் புறத்தூண்டல் உறைத்தது.

ஷெண்பா அந்தக் கேள்வியில் இறுகிப் போக, குமரனைக் குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்தாள்.
‘பதில் சொல்லு!’ என அவளது விழிகள் இவனுக்கு கட்டளையிட,
“நாத்தனார் முடிச்சை இந்தப் புள்ளைதானே போட்டா! தங்கச்சி முறையா குமரா, நான் பார்த்ததே இல்லை. வெளியூரா?” அந்தப் பெண்மணி கேள்விகளை அடுக்க, இவன் எதுவுமே பேசவில்லை.

“ஷெண்பா, வா போகலாம்!” விக்ரம் இறுகிப் போனக் குரலில் தங்கையை அழைத்துக்கொண்டு அகலப் பார்க்க, “அவ என்னோட தங்கச்சி, கூடப் பொறந்த தங்கச்சி. பக்கத்துல நிக்கிறவன் என் அண்ணன்!” என்ற குமரனின் வார்த்தைகள் இவர்களது நடையை நிதானப்படுத்தின.

“ஏன் பா, கூடப் பொறந்த தங்கச்சியா? இத்தனை நாள் எங்களுக்கு இது தெரியாம போச்சே!” அப்பெண்மணி அங்கலாய்க்கவும், “கனகு, உன் வீட்டுக்காரரு அங்க உன்னைத் தேடிட்டு இருக்காரு. நீ இங்க நின்னு கதை பேசீட்டு இருக்க! மனுஷன் ஏதோ கோபத்துல இருக்காரு போல!” ராதாமணி சூழ்நிலையை சமாளிக்க கூற, “ஆமா ராதா, போனோமா வந்தோமான்னு சீக்கிரம் வான்னு சொன்னாரு. இப்போ நேரமாச்சே! அதான் முகத்தை தூக்கிவச்சிடுப்பாரு…” என அவர் கூறிவிட்டு அகன்றார்.

மேடைக்கு மறுபுறம் வந்த ராதா, “ஏன் மா, ஃபோட்டோவுக்குள்ள நிக்காம ஏன் தள்ளி நிக்குறீங்க? தம்பி உள்ள வந்து நில்லுப்பா!” இயல்பாய்க் கூறுவது போல அவர்களை நகர்த்திவிட்டுச் செல்ல, நால்வரும் நிழற்படமாய் பதிந்திருந்தனர். ராதாவும் இத்தனை நேரப் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தார். குமரனை மனம் ஒன்றி மருமகனாய் ஏற்றப் பிறகு, என்றாய் இருந்தாலும் அவனது சொந்தங்கள் இவர்கள் வாழ்வில் இடம்பெறத்தானே போகிறார்கள். அதனால் அனைத்தையும் பழகிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை புகைப்படமெடுக்க உந்தியிருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top