உள்ளம் – 16.1

ரங்கா கையிலிருந்த அர்ச்சதையை மணமக்கள் மீது தூவ, சரியாய் அதே நேரம் எதேச்சையாய் பார்வையை அவரதுபுறம் திருப்பிய மனோஹரி அவரைப் பார்த்திருந்தாள். தன் பிரம்மையோ என இவள் இமையைச் சிமிட்டிப் பார்க்க, அவர்தான் நின்றிருந்தார். நொடியில் இவளுக்கு விழிகள் நனைந்து போக, “அப்பா… தேங்க்ஸ் பா!” என இவளது உதடுகள் அவரைப் பார்த்து மெலிதாய் முணுமுணுத்தன. அது அருகிலிருந்த குமரனின் செவியையும் தவறாது அடைய, அவனும் நிமிர்ந்து பார்க்க, அவர்கள் இருவரையும்தான் பார்த்திருந்தார் மனிதர்.

“அம்மா… அப்பா மா!” மனோ நிமிர்ந்து தாயைப் பார்க்க, “அந்த மனுஷன்தான் வரலை இல்ல டி. அப்புறம் என்ன அப்பா அப்பான்னுட்டு இருக்க நீ?” குனிந்து அவளது தலையிலிருந்த அரிசிகளைத் தட்டிவிட்டவாறு ராதா எரிச்சலாய் உரைக்க, “ம்மா… அவர் வந்துட்டாரு. அங்கப் பாரு, கிளம்பிப் போறதுக்குள்ள இங்க கூட்டீட்டு வா மா!” என்று படபடவென பொரிந்தாள். எங்கே கிளம்பிச் சென்றுவிடுவாறோ என்ற பதற்றம் குரலில் கொட்டிக் கிடந்தன.

ராதாமணிக்கு ஆச்சர்யம் தாளவில்லை. முகம் குழல்விளக்கைப் போல மின்ன, ‘மகளுக்காகவாது இந்த மனுஷன் வந்தாரே… ஆண்டவா! என் புருஷனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துட்டீங்க!’ என மனதிலே கடவுளுக்கு நன்றியை நவில்ந்த வண்ணம் கீழே இறங்கிச் சென்றவர், “ஏங்க, இப்போவாது வரணும்னு தோணுச்சே! பெத்த புள்ளைக் கல்யாணத்துல ஏன் மூனாவது மனுஷன் மாதிரி இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என அவருக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தார்.

ரங்கராஜன் எதுவும் கூறாது மனைவியைப் பார்க்க, “வாங்க மேடைக்கு, முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு?” என கணவர் கைகளைப் பற்றி மேலே அழைத்துச் சென்றார். ரங்காவும் மேடையேறி மனைவியோடு ஓரமாய் நின்றார். அவரது கண்கள் மகளிலே நிலைகுத்தி நிற்க, மனதில் ஆயிரம் எண்ணங்கள். ஆனால், முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை.

ஏழு முறை அக்னியை வலம்வந்தனர் தம்பதியினர். இத்தனை நேர அழுத்தம் விடை பெற்றிருக்க, மனோஹரி தன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்குள் மனநிறைவோடு நுழைந்திருந்தாள்.
குமரன் குனிந்து அவளது காலில் மெட்டியை அணிவித்தான். இவளது பார்வை ஒருமுறை தாயையும் தந்தையும் தொட்டு மீழ, ஏனோ மனம் அந்நொடி அவர்களது இருப்பில், அது கொடுத்த இன்பத்தில் அகம்மகிழ்ந்திருக்க, மனம் நிறைந்தவனே கைகூடியிருக்க, அந்நொடியை விவரிக்க இயலாது சந்தோஷத்தில் முதன்முதறையாய் பேச்சுத் தடைபட்டு தொண்டை அடைத்துப்போனது. விழியோரம் துளிர்த்த நீர் இமைதாண்டி கீழே மெட்டியிட்டு நிமிர்ந்த குமரனின் முகத்தில் பட்டுத்தெறித்தது. நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்த்தான் கணவன்.

இவளும் அவனது முகத்தை ஆழமாய்ப் பார்த்தாள். இத்தனை போராட்டங்கள் வேதனைகள் வலிகள் என அனைத்தையும் கடந்து கைக்கூடிய வாழ்க்கைக் கொடுத்த மகிழ்ச்சியில் மின்னிய முகமும் சிரித்த உதடும், அவனை விழுங்கிய விழிகளும் முதன் முதலாய் ஆடவனைத் தடுமாறச் செய்தன. அந்தப் பார்வையை அது கொடுத்த உணர்வை உள்வாங்க முடியாது நொடியில் விழிகளை மற்றவர்களிடம் திருப்பியிருந்தான் குமரன். அவனைத் தடுமாற வைத்த முதலும் கடைசியுமானப் பெண் மனோஹரி மட்டும்தான் என்பது திண்ணம்.

அடுத்தடுத்த சடங்குகள் நடைபெற, இருவீட்டுப் பெற்றவர்களும் மணமக்களை ஆசிர்வாதித்தனர். குமரன் முதலில் சிந்து காலில் விழச் செல்ல, காலில் விழும்முன்னே அவரின் கரம் மகன் மருமகளின் தலையைத் தடவ, அகமகிழ்ந்து போனார். இந்நேரம் சொக்கநாதன் அருகில் இல்லையென்ற குறையத் தவிர வேறெதுவும் அந்தப் பெண்மணியின் மனதிலில்லை. தனக்குப் பின்னால் அவனுக்கான கூட்டின் அஸ்திவாரம் இன்று வலுவாய் எழுப்பப்பட்டதை ஒரு தாயாய், தனி மனுஷியாய் சந்தோஷமாய்ப் பார்த்திருந்தார். தான் இல்லாவிட்டாலும் மனோஹரி அந்த இடத்தை நிரப்புவாள் என்றொரு எண்ணம் இத்தனை நாட்கள் அவரது மனதிலிருந்த பாரத்திற்கு விடை கொடுத்தனுப்பியிருந்தது.

ரங்காவும் ராதாமணியும் மணமக்களை ஆசிர்வாதம் செய்ய, மனோஹரி தந்தையைப் பார்த்தாள். அவளுக்கு அழுகை வரும் போலிருக்க, “மனோ… அழுது வைக்காத டி!” என ராதா அதட்டலிட, கலங்கிய விழிகளை சிமிட்டி நீரை உள்ளிழுத்தாள். ரங்கராஜன் அவள் முகம் பார்க்காது கிளம்ப முனைய,

“ஏங்க, எங்கப் போறீங்க? மொத்தக் கூட்டமும் இங்கதான் பாக்குறாங்க. அமைதியா நில்லுங்க, போற வர்ற எல்லாரும் கேள்வி கேட்டு சாகடிக்குறானுங்க!” மனைவியின் எரிச்சல் நிரம்பிய ஆதங்கமான குரலுக்கு செவிசாய்த்து அவர் நின்றுவிட்டார். வனிதாவும் கோவிந்தனும் வாழ்த்தினர்.

அடுத்தடுத்து உறவுகள் ஆசிர்வாதம் செய்ய, வாழ்த்துக்களைப் பகிர என நேரம் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருந்தது.

கீழே ஓரமாய் அமர்ந்திருந்த ஷெண்பாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டார் சிந்து. நீண்ட நாட்களுக்குப் பின்னே அவர்களைப் பார்த்தவருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. மேடையில் வைத்து எதையும் பேச முடியாது என இத்தனை நேரம் அமைதி காத்தவர், வாய்ப்புக் கிடைத்ததும் அவளிடம் வந்திருந்தார். “ஷெண்பா குட்டி, எப்படி இருக்க டா? இந்த சிந்துமாவைப் பார்க்கணும்னு உனக்குத் தோணவே இல்லையா?” என வாஞ்சையாக அவளது முகத்தை வருடிப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் இவளுக்கு விழியோரம் பனித்தன.

ஏனோ குமரனிடம் காண்பிக்கும் கோபமுகத்தைப் இந்தப் பெண்மணியிடம் காண்பிக்க துளிகூட மனதிடமில்லை. அவரை ஆதங்கமாகப் பார்த்தவள், “ஏன் சிந்து மா, குமரன் கல்யாணத்துல கூட நாங்க யாரோ மாதிரி நிக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சுல்ல… ஏன் மா இப்படி பண்ணீங்க? அவன்தான் அறிவுக்கெட்டத் தனமா பண்ணா, நீங்களும் அப்படி செய்யணும்னு என்ன அவசியம்? எங்கக் கூடவே இருந்திருக்கலாம் இல்ல. சொல்லுங்க மா!” குரல் அடைக்க விழிகள் தளும்ப ஆதங்கமாய்க் கேட்டாள். சொந்தத் தமையனின் திருமணத்திற்கு யாரோ ஒருவர் போல வந்து நிற்கும் கொடுமையில் மனம் விம்மதித் துடித்தது. அதை சிந்துவிடம் கொட்டினாள்.

“ச்சு… ஷெண்பா மா, ஏன் இப்போ இந்த அழுகை. உன்னை யாரு யாரோ மாதிரி நிக்க சொன்னது. உங்க அண்ணன் பக்கத்துல வந்து நில்லுன்னு தானே நான் சொல்றேன். போ, போய் அவன் பக்கத்துல நில்லு!” சிந்து கூற, அவரை முறைத்தாள்.

“எப்படி சிந்து மா எதுவுமே நடக்காத மாதிரி நடந்துக்குறீங்க நீங்க? எல்லாம் மறந்துட்டீங்களா? இல்ல மறந்த மாதிரி நடிக்குறீங்களா? எப்போதுல இருந்து என் சிந்துமா இப்படி மாறுனாங்க?” முகத்தைப் பக்கவாட்டாகத் திருப்பி உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கிய குரலில் ஷெண்பா வினவினாள்.

“நல்ல நாள் அதுவுமா ஏன் டா நடந்ததை எல்லாம் பேசணும். அதெல்லாம் முடிஞ்சு போனது, விடுடா. இப்போ போ, அங்க மேடையில நிக்கிற உங்கண்ணன் உன்னையேதான் பார்த்துட்டு இருக்கான். கண்ணைத் தொடச்சிக்கோ!” என அவர் கூறவும், இவள் நிமிர்ந்து குமரனைப் பார்த்தாள்.

வாழ்த்து கூறுபவர்களிடம் நன்றியைத் தெரிவித்து பரிசுப் பொருட்களை வாங்கினாலும், அவனின் பார்வை என்னவோ இவர்களிடம்தான். ஷெண்பாவின் அழுகையும் பேச்சையும் அவனால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. அந்த அழுகை இவனை அசைத்துப் பார்ப்பதாயிருக்க, யாருமறியாது அவளிடம் பார்வையை இறைஞ்சலாய் பரிசளித்தான். கண்ணைத் துடைத்து அவனை முறைத்தாள் இவள். ஏனோ தங்கையின் அழுகை வற்றியிருந்ததில் குமரனின் மனம் சமன்பட்டது.

error: Content is protected !!
Scroll to Top