உள்ளம் – 1.3

தன் குடும்பத்தைத் தவிர ரங்கராஜன் பெரிதாய் நம்புவது குமரனைத்தான். இதுவரை தனக்கு எதிராய் எதையும் செய்ய சிந்தித்துக்கூட அவன் பார்த்திருக்க மாட்டான் என அவருக்குத் தெரியுமே. குமரன், எள் என்றால் எண்ணெயாக நிற்கும் வகையில் சேர்த்தி. இதுவரை ரங்கராஜனின் தொழில் எதிரிகளை உருத்தெரியாது அழிந்து போனதில் அவனுடைய பங்கு அளவிட முடியாதது. அவ்வப்போது சண்டைகள், சச்சரவுகள் என வரும்போது குமரன் எதையும் பற்றிக் கவலைப்படாது கையை நீட்டிவிடுவான். கோபம், அத்தனைக் கோபக்காரன்தான் குமரன். ஆனாலும் நிதானம் தவறாத கோபக்காரன்‌. யாரை எங்கே அடித்தால் வீழ்வார்கள் என எழ முடியாத அளவிற்கு வீழச்செய்யும் மூளைக்காரனும் கூட. அவ்வளவு எளிதில் யாரையும் தன் சிந்தனைக்குள்ளேகொண்டு வரமாட்டான். அப்படி வந்துவிட்டால், அவர்களை மொத்தமாய் அழித்துவிடுவான். அதனாலே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் குமரனுக்கு எதிரிகள் ஏராளம் உண்டு.

அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாத அலட்சியமான பாவனைக்குச் சொந்தக்காரன் திருக்குமரன். முகம் கூட எப்போதும் இறுகிப் போனது போலொரு தோற்றத்தில்தான் இருக்கும். அவன் புன்னகைத்துப் பேசும் ஒரே ஜீவன் சிந்து மட்டும்தான். தாய் என்ற மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன். அவன் இப்படி உயர்ந்திருப்பதற்கு சிந்துவிற்கு மகன் மேலிருந்த நம்பிக்கைதான் காரணம்.

‘எதுவும் வேண்டாம்! யாரும் வேண்டாம்!’ என அனைத்தையும் உதறிவிட்டு திருக்குமரன் வெளியேறும்போது மகன் மீதான நம்பிக்கையில் அவன் கையைப் பிடித்துக்கொண்டு தானும் வெளியேறியிருந்தார் சிந்து. அந்த நம்பிக்கையை இன்றுவரையிலும் நூலளவு பிசகாது காத்துக் கொண்டிருக்கிறான் மகன்.

குமரன் செங்கல் சூளையை நெருங்கி இருக்க, ஏற்கனவே கதவு திறக்கப்பட்டிருந்தது‌. இவன் உள்ளே நுழைய, “வா குமரா, ஐயா காலைலயே போன் பண்ணிட்டாரு!” என்று ஐம்பது வயது மதிக்கத்தக்கப் பெரியவர் இவனைக் கண்டதும் வரவேற்றார்.

“மணி அண்ணே! பேசுறதுக்கு நேரம் இல்லை. சீக்கிரம் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இடமாத்தணும்!” தீவிரக் குரலில் கூறிய குமரன் அலுவலக அறைக் கதவை திறந்தான்.

எல்லா சான்றிதழ்களையும் பிரித்து எடுத்தவன், “அண்ணே, இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் செங்கல் சுட்ற தீயில போட்ருங்க!” எனக் கட்டுக்கட்டாய்க் காகிதங்களை அவர் கையில் கொடுத்தான்.

“ஐயாகிட்டே ஒரு வார்த்தைக் கேட்டுக்கலாமே தம்பி. இதெல்லாம் தேவையில்லையா?” தங்கமணி குரலில் ஏகத் தயக்கம்.

“ப்ம்ச்… இதெல்லாம் வச்சிருந்தா, நம்மளை நாமே காட்டிக் கொடுக்குற மாதிரிண்ணே! சொன்னதை செய்ங்க!” குமரன் குரலில் கொஞ்சம் எரிச்சல் படர்ந்திருந்தது. ஏற்கனவே அவசர அவசரமாய் அவன் எல்லாவற்றையும் ஆராய, இவர் வேறு கேள்வி கேட்கிறாரே எனக் கோபம் எட்டிப் பார்த்தது. தங்கமணி குமரன் கொடுத்த சான்றிதழ்களை நெருப்பிலிட்டுப் பொசுக்கி இருந்தார்.

மேஜைக்கு அடியிலிருந்த பணத்தை எல்லாம் மூட்டைக் கட்டியவன், அலைபேசியில் யாரையோ அழைத்து எடுத்துப் போகச் சொன்னான். சூளையிலிருந்த பொருட்களும் பணமும் கைமாற்றிவிட்டவன், மணல் குவாரிக்கும் சென்றான். திவாகர் ஏற்கனவே எல்லாவற்றையும் தனியாகப் பிரித்தெடுத்து வைத்திருந்தான். இவன் சென்று வேண்டாதவற்றை அப்புறப்படுத்தி கணக்கு வழக்குகள் எல்லாம் சரியா உள்ளதா எனப் பார்த்துக் கொண்டான்.

“நான் இங்க வர்றவங்களைப் பார்த்துக்குறேன் குமரா, நீ சூளைக்கு வர்றவங்களை கவனிச்சுக்கோ!” திவாகர் குமரனை அனுப்பவிட, “ஹம்ம்… எல்லாம் பக்கவா இருக்கு. வர்றவங்க அது, இதுன்னு கேள்வி கேட்டு வாயைக் கிளறுவாங்க. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க!” அறிவுரை மொழிந்துவிட்டே அகன்றான்.

மனோஹரி கட்டிடப் பொருளகத்தில் பெரிதாய் எந்தவித சான்றிதழ்களும், சட்டத்திற்கு புறம்பாய் கருப்பு பணத்தையும் எப்போதுமே ரங்கராஜன் பதுக்கியது இல்லை. காரணம் மகள்தான். அவள் பெயரில் இருக்கும் எதிலும் நேர்மை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பாள். சிறு வயதிலே அது என்ன? இது என்ன? என அத்தனைக் கேள்வி கேட்டுத் தந்தையை ஒரு வழியாக்கியிருந்தாள். அதனாலே அங்கு எதையும் அவர் வைத்துக் கொள்வது இல்லை. மனோஹரி செங்கல் சூளைக்கோ, மணல் குவாரிக்கோ அதிகம் வருகைத் தர மாட்டாள். எப்போதாவது ஒருமுறை சென்று பார்ப்பாள். ஆனால், கட்டிடப் பொருளகத்திற்கு வாரத்திற்கு இருமுறை சென்று வருவாள்.

கட்டிடப் பொருளகம் நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதும்
அதற்கொரு காரணம். செங்கல் சூளையும், மணல் குவாரியும் ஊரின் கடைசியில் அமைந்திருக்கின்றன.

குமரன் சூளைக்குத் திரும்ப, அங்கே எப்போதும் போல வேலைகள் ஆரம்பித்திருந்தன. அப்போதுதான் அவனும் நேரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதைக் கடந்திருந்தது. காலையிலிருந்து சொட்டுத் தண்ணீர் கூட அருந்தவில்லை என உலர்ந்த நாக்கு மேலும் உலர்ந்து உணர்த்த, நீரை எடுத்து மடமடவெனப் பருகினான். பின்னர் முகத்தையும் நன்றாய் அடித்துக் கழுவினான்.

தங்கமணி அவனருகே வந்து நிற்க, “அண்ணே! நீங்க எப்பவும் போல வேலையைப் பாருங்க. எந்த டைம் ரெய்டுன்னுத் தெரியலை!” என்றவன், ஒரு இருக்கையை இழுத்துப்போட்டு கால்களை நன்றாய் நீட்டி அமர, தங்கமணி பணியைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

எப்போதும் போல வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஒருபுறம் மணலில் தண்ணீரைக் கலந்து செங்கல் செய்யும் பதத்திற்கு மாற்றப்பட, மறுபுறம் நேற்றையக் கலவையை அச்சிலிட்டு இரண்டு இரண்டு செங்கலாக வார்த்து, அதில் எம்.டி என ஆங்கில எழுத்தைப் பதிந்து கொண்டிருந்தனர்.

அச்சிட்ட செங்கலை காய வைப்பதற்காக சிலர் மறுபுறம் நகர்த்திக் கொண்டிருக்க, தானியங்கி நகரும் இயந்திரங்களும் செங்கலை அச்சு வார்த்துக் கொண்டிருந்தன. முன்பெல்லாம் உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருந்த தொழில் செங்கல் சூளை. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதனின் வேலையை கால் பங்காய் குறைத்திருந்தது. இருந்தும் ஒருபுறம் மனித உழைப்பும் தேவைப்பட்டது. செங்கலை தீயில் சூட, அதை இடம்மாற்ற என மனிதனின் தேவையும் இன்றியமையாததாக இருந்தது.

சிறிது நேரத்திலே வருமான வரித்துறையிலிருந்து ஆட்கள் வந்துவிட்டனர். செங்கல் சூளையின் பிரதானக் கதவை இழுத்து மூடியவர்கள், தங்கள் சோதனையைத் தொடங்கினர். ஒரே நேரத்தில் வீடு, சூளை, மணல்குவாரி, கட்டிடப் பொருளகம் என நான்கு இடத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

“இது என்ன? அந்த டாக்குமெணட் என்ன?” என வருமான வரித்துறை அதிகாரிகள் குமரனிடம் கேட்டுக் குடைந்து அனைத்தும் சரியாக உள்ளதில் அவர்களுக்கு சற்றே எரிச்சல். குமரனும் அதை கவனித்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. இரண்டு மணி நேரங்கள் நடந்த சோதனையில் அரசுக்கு புறம்பான எந்தவித ஆதரங்களும் அதிகாரிகளுக்கு அகப்படவே இல்லை.

“எல்லா டாக்குமெண்ட்ஸூம் சரியா இருக்கு மிஸ்டர் குமரன். சாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ்!” என அவர்கள் விடைபெற, இவன் உடனே மணல் குவாரிக்குச் சென்றுவிட்டான்.

“ரெய்ட் நடக்குது. யாரும் உள்ளே வரக்கூடாது!” அதிகாரி ஒருவர் கூற, என்ன செய்வது எனத் தெரியாது நெற்றியைத் தேய்த்தபடி குவாரியின் வாயிலில் நின்றான் குமரன்.

“குமரா, நீ எங்கே இங்க?” வந்திருந்த அதிகாரிகளில் இவனுக்குப் பரிட்சயமானவர் ஒருவர் விழிளுக்கு புலப்படவும், அவரின் கேள்விக்குப் பதிலளித்தவாறே உள்ளே நுழைந்திருந்தான்.

திவாகர் கையில் ஏதோ ஒரு கோப்பை வைத்துக்கொண்டு விழிக்கவும், இவன் அருகே சென்று பார்த்து அந்த அதிகாரியிடம் பேசி சரிசெய்தான். சிறிது நேரத்தில் அவர்களும் விடை பெற்றனர். வீட்டிலும் கூட ரங்கராஜனிடம் தொந்தரவு செய்ததற்காக மன்னிப்பை வேண்டிவிட்டு மற்றைய வருமான வரித்துறை அதிகாரிகளும் அகன்றனர்.

error: Content is protected !!
Scroll to Top