உள்ளம் – 1.2

“வா குமரா… வா!” என்ற ரங்கராஜனின் குரலில் இத்தனை நேரமிருந்தப் பதட்டம் தணிந்து போயிருந்தது. குமரனைக் கண்டதும் இனி அவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் பதட்டம் பின்னகர்ந்து கொள்ள, அவரது உடல் தளர்ந்தது. என்னவோ இந்தப் பையன் தலையிட்டால், அந்த விஷயம் கண்டிப்பாகச் சரியாகிவிடும் என கடந்த பத்து வருடங்களில் குமரன் பல முறை நிரூபித்திருந்தான்.

“என்னாச்சு சார்?” என்றவனின் பார்வை மொத்தக் கூட்டத்தையும் ஒருமுறை வலம் வந்தது.

“குமரா, திடீர்னு சூளைக்கு ரெய்ட் வராங்களாம். இப்போதான் இன்பர்மேஷன் வந்தது.
அதான் டாக்குமெண்ட்ஸ், பணம் எல்லாத்தையும் இடம் மாத்த சொன்னேன். எப்படியும் ரெய்ட் சூளையோட மட்டும் முடியாது. குவாரிலயும் நடக்கும். சோ நீ போய் எல்லாம் சரியா நடக்குதான்னு பாரு‌. நான் கொஞ்ச நேரத்துல வரேன்!” என்றவரின் குரல் பேதத்தை உணர்ந்தவன், “ஓகே சார், நீங்க சூளைக்கு வர வேணாம். நானே பார்த்துக்கிறேன். கண்டிப்பா வீட்டுக்குத்தான் முதல்ல ரெய்ட் வருவாங்க. லேடிஸ் மட்டும் வீட்ல இருந்தா, அது சரியா வராது.
அதனால நீங்க இங்கேயே இருங்க!” என்றவனின் பார்வை நீள்விருக்கையில் அமர்ந்திருந்த மனோஹரியில் படிந்து மீள, அங்கிருந்த ஆட்களை அழைத்துக்கொண்டு செங்கல் சூளையை நோக்கி நகர்ந்தான். அவன் பார்வையைப் பாவையும் உணரத்தான் செய்தாள்.

காலையிலே கணவர் பரபரப்பாய் சுற்றவும், ராதாமணிக்கும் அது தொற்றிக் கொண்டது. மெலிதாய் விழிகளில் பயத்தைத் தேக்கிப் பார்த்தவர், ரங்கராஜனுக்கு தேநீரைக் கலந்து கொடுத்தார்.

“ப்பா, டென்ஷன் ஆகாதீங்க‌. அதான் குமரன் போய் இருக்கான்ல. அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான். நான் குவாரியைப் போய் பார்த்துக்கிறேன்!” ரங்கராஜனின் தோளைத் தட்டினான் திவாகர்.

“சரி திவா, நீ போய் என்னென்னு பாரு…” என்றவர், “இதுக்கும் அந்த சொக்கனுக்கும் சம்பந்தம் இருக்குமோ?” என மகனிடம் வினவினார்.

“தெரியலை பா. முதல்ல ரெய்ட் முடியட்டும், அப்புறம் யாருன்னுத் தேடலாம்!” என்ற திவாகர் உடையை மாற்றிக்கொண்டு மணல் குவாரியை நோக்கிப் பயணித்தான்.

இத்தனைப் பரபரப்பிற்கும் பேச்சிற்கும் தனக்கேதும் தொடர்பில்லை என்பது போல கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து விழிகளை மூடியிருந்தாள் மனோஹரி. நீல வண்ண இலகுவான உடை அவள் உடலைத் தழுவியிருக்க, இரவு நன்றாய் உறங்கியதில் முடிகள் எல்லாம் கலைந்திருந்தன. தந்தையின் பேச்சையும் அதன் சாரம்சத்தையும் உள்வாங்கியவளுக்கு, இன்றைக்குப் பணிக்குச் செல்ல முடியாது எனத் தெளிவாய்ப் புரிந்தது. செவியில் அனைவரது குரலும் விழத்தான் செய்தன.

“மனோ, டீயைக் குடிடி. ஆறப் போகுது!” ராதாமணி குரலில் விழிகளைத் திறந்தவள், தேநீரை எடுத்துப் பருகலானாள்.

ரங்கராஜன் அந்த ஊரின் பெரும்புள்ளிகளில் ஒருவர். இரண்டு முறை எம்.ஏல்.ஏவாக இருந்தவர், இப்போதுதான் அரசியலிலிருந்து சற்றே விலகியிருக்கிறார். செங்கல் சூளை, மணல் குவாரி எனக் கட்டிடங்கள் கட்டப் பயன்படும் கட்டுமானப் பொருட்களும், அது சார்ந்தவையும்தான் அவருடைய பிரதான தொழில்.

மனோஹரி கட்டிடப் பொருளகம் திருச்சியில் பெயர்பெற்ற ஒன்று. மகளின் மீதிருந்த பிரியத்தால் கடைக்கு அவளது பெயரை சூட்டினார். முதலில் சிறிய அளவிலிருந்த தொழில் படிப்படியாய் இன்று அசுர வளர்ச்சிப் பெற்று நிற்க, பணமும் கணக்கில்லாது அவரிடம் புழங்கத் துவங்கியது. அரசாங்கத்திற்கும் கணக்கு காண்பித்தும் காண்பிக்காமலும் பினாமி பெயரில் இன்னும் பல தொழில்களை நடத்தி வருகிறார்.

ரங்கராஜன் பரம்பரைப் பணக்காரர்களில் ஒருவர். அவர்களது குடும்பம் வழிவழியாய் சுகபோகமாய் வாழ்ந்தக் குடும்பம். தன் தந்தையின் சொத்தை இன்று பன்மடங்கு பெருக்கி இருந்தார் . இன்னும் பல தலைமுறைகள் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்துகளை சேர்த்துவிட்டார்.
அனைத்தையும் இரண்டு பிள்ளைகளின் பேரில்தான் வைத்திருந்தார்.

கடந்த பத்து வருடங்களில் அவரது வளர்ச்சி அசுரத்தனமானது. அதற்கு குமரனின் பங்கும் அளப்பரியது. பதினேழு வயதில் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தவன், இன்று அவனில்லாது ஒரு தொழிலும் இல்லை என்பது போல அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தான். அனைத்து தொழிலிலும் அவனது நிழலின் தடத்தை தடயமாய்ப் பதித்திருந்தான். அவனது புத்திக் கூர்மை தான் தொழிலில் நெளிவு சுளிவுகளையும் நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள உந்தியது.

ரங்கராஜன் இடதுகை, வலதுகை என்பது போல அவருக்கு எல்லாவற்றிலும் குமரன் முதன்மையாகிப் போனான். வந்தப் புதிதில் எதுவும் தெரியாது சிலவற்றில் சறுக்கினாலும், அடுத்தடுத்து அனைத்தையும் நேர்த்தியாய் செய்ய ஆரம்பித்திருந்தான். அதைவிட அவனது தொழில் பக்தியும், நேர்மையும் ரங்கராஜனுக்குப் பிடித்துவிட, அவனை நிரந்தரமாகத் தன்னுடனே வைத்துக்கொண்டார். அவர் வளர்த்தப் பையன்தான் குமரன். ஆனால், இன்று அவருக்கே ஆலோசனை கூறும் அளவிற்கு உயர்ந்திருக்கிறான்.

error: Content is protected !!
Scroll to Top