“உனக்கு குமரன் வேணும்னா, அவனோட போய்டு. இல்லை அப்பா முக்கியம்னா, அவர் பேச்சைக் கேளு. ரெண்டு பேரையும் உன்னால ஒரே கோட்டுல பயணிக்க வைக்க முடியாது. அது நடக்காது! உன் முயற்சி எல்லாமே உன்னைதான் காயப்படுத்தும். ரெண்டு பேர்ல ஒருத்தரை தான் நீ தேர்ந்தெடுக்க முடியும்!” என்று நிதர்சனத்தையும் உண்மையும் ஒரு சேர உரைத்தவனைப் பார்த்தவளின் முகத்தில் என்ன இருந்தது என இவனால் கணிக்க முடியவில்லை. ஆனால், அவளது தலை மட்டும் மாட்டேன் என்பது போல இடம் வலமாக ஆடியது.
“ஐ நீட் போத் திவா. அப்பாவும் வேணும், குமரனும் வேணும். ஒருத்தருக்காக ஒருத்தரை இந்த ஜென்மத்துல என்னால விட முடியாது!” வெகு அழுத்தமாய் உறுதியாக உரைத்தவளை என்ன செய்தும் மாற்ற முடியாது எனப் புரிந்தவன், இந்த குருஷேத்திர யுத்தம் என்று முடிவுக்கு வரும் என இப்போதே காத்திருக்கத் தொடங்கினான். சிரிப்பும் சந்தோஷமும், செல்ல சண்டையுமாய் இருந்த வீடு இன்று சண்டையின் வசிப்பிடமாய் மாறியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் கனத்துப் போக, தங்கைத் தலையைப் பாசமாகத் தடவி நகர்ந்திருந்தான்.
விழிகள் சாலையில் பயணிக்கவில்லை, ஆனால் அந்த இருசக்கர வாகனம் மட்டும் பிரதான சாலையை ஒட்டி உறவாடிக் கொண்டிருக்க, அதை இயக்கியவன் புறத்தூண்டல் எதுவும் சிந்தையில் பதியாது இலக்கின்றி அலை பாய்ந்த மனதுடன் எங்கு செல்கிறோம் எனத் தெரியாது நகர்ந்து கொண்டிருந்தான்.
கோபம்! ஆற்றாமை! வேதனை! வலி இது எல்லாவற்றையும் கடந்து மனோ என்ற பெண் அவனுக்கு இந்நொடி இக்கணம் பிரதானமாகிப் போனாள். இதோ, பத்து வருடங்களுக்கு முன்பு ஷெண்பா அழுது, தங்கம்மாளிடம் அடிவாங்கித் தன்னை ஏக்கமாய்ப் பார்த்தப் பார்வை அவனது எத்தனையோ இரவுகளைக் களவாடியிருந்தது. இதோ, இப்போது இந்தப் பெண்ணும் அவனை அசைத்துப் பார்த்திருந்தாள். அவளது விழிகளில் வழிந்த ஒவ்வொரு சொட்டு நீரும் இவனை பதம் பார்த்திருந்ததது.
சிந்தையை முழுவதும் சிக்கனமின்றி ஆக்கிரமிப்பு செய்திருந்தாள் மனோஹரி. எங்கேயும் எண்ணத்தை திருப்ப முடியவில்லை. சற்றுமுன் அவளிடமிருந்த அழுத்தமும் உறுதியும், அவள் தாங்கிய வேதனையும் குமரன் என்ற ஒற்றைச் சொல்லுக்காக என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாது கோபம் பொங்கியது.
‘அப்படியென்ன இந்தப் பெண்ணிற்கு தன் மீது பிடித்தம்?’ என்ற ஆற்றாமை. எங்கே செல்வது எனத் தெரியாது அன்று முழுவதும் அலைந்து திரிந்து பின்மாலை பொழுதிலே வீட்டை அடைந்தான். சிந்துவைப் பார்க்காது அறைக்குள் சென்று முடங்கினான். அவனின் முகத்தைப் பார்த்தால், தாய். என்னவென கேட்டுவிடுவாரோ? என்று அஞ்சி உணவை மறுத்துவிட்டு அறைக்குள்ளே சென்று படுத்துவிட்டான். ஆனால், உறக்கம் என்பது எட்டாக் கனியாகிப் போய்விட்டிருந்தது.
அழுது சிவந்த முகமும், ஏக்கமாய் தன்னை பார்த்த விழிகளும் அவனது தூக்கத் களவாடிச் சென்றிருந்தன.. வேண்டாம் என நொடி நொடியாய் உருப்போட்டுத் தன்னை சுற்றியிருந்த இரும்பு வளையத்தை வளைக்கரம் மொத்தமாய் வளைத்து உடைத்ததை அவனால் கண்கூடாகக் காண முடிந்தது. தலையணையில் முகம் புதைத்து நித்திரையை விரட்டிப் பிடிக்க முயன்ற நேரம் தூரத்தில் எங்கோ கேட்ட கோழியின் கூவல் பொழுது புலர்ந்ததை அறிவித்திருந்தது. எழுந்துவிட்டான், இதற்கு மேலும் உறக்கம் வருமென அவனுக்குத் தோன்றவில்லை.
எழுந்து குளித்து முடித்து பணிக்குச் சென்றான். ஆங்காங்கே வேலை பார்த்தவர்களிடம் சிறிய தலையசைப்பும் ஓரிரு பேச்சுமாய், வேலையில் தன்னைப் புகுத்தி மனோஹரியிடமிருந்து தப்பிக்க முயன்று கொண்டிருந்தான்.
முகத்தை தலையணையில் புதைத்திருந்தவளின் உதட்டுக் காயம் எரிந்ததில் விழிகளை கடினப்பட்டு திறந்தாள் மனோ. இரவு முழுவதும் உறங்காது சிவந்திருந்தன விழிகள். நேற்றைய அடியைத் தாங்காத உடலும் மனதும் ஒரு சேர வலித்தது. லேசாய் உடலில் வெப்பம் பரவியிருந்தது. எதையும் பொருட்படுத்தவில்லை மனோ.
எழுந்து குளித்துவிட்டு யார் முகத்திலும் விழிக்காது மருத்துவமனைக்குக் கிளம்பியிருந்தாள். வீங்கியிருந்த முகத்தைக் காட்சிப் பொருளாக்க விழையாது முகத்தை முககவசத்தால் மறைத்திருந்தாள்.
நேற்று முழுவதும் உணவுண்ணாத வயிறு அமிலம் சுரந்து தன்னிருப்பை உணர்த்தியது. இருந்தும் சாப்பிடும் மனநிலை துளிகூட இல்லை அவளுக்கு. நேற்று நடந்த பிரச்சனையில் இரவுதான் மற்ற மூவரும் உணவுண்ண அமர, மனோ வரவேயில்லை.
“விடுங்க, பசிச்சா அவளே வந்து சாப்பிடப் போறா. திவா, ஒழுங்கா நீயாது பெத்தவங்க பேச்சைக் கேளுடா. இவளை மாதிரி யாரையும் பிடிச்சிருக்குன்னு குடும்ப மானத்தைக் வாங்கிடாத டா!” என அப்போதும் ராதாவின் குத்தல் பேச்சுகள் தொடர்ந்தன.
அது கொடுத்த வலியிலும் ரோஷத்திலும் மனோ உணவு உண்ணவில்லை. ஏற்கனவே மனம் சோர்ந்து போயிருக்க, அதோடு சேர்த்து உடலிலும் மொத்த ஆற்றலும் வடிந்திருந்தது.
மனம் முழுவதும் வீம்பும் வைராக்கியமும் குடி கொண்டிருக்க, மறுநாளும் உணவு உண்ணாது வேலையில் ஆழ்ந்து போனாள்.
நேற்று எடுத்த விடுமுறைக்கும் சேர்த்து இன்று நோயாளிகள் குவிந்திருக்க, ஒவ்வொராய் கவனித்ததில் வீட்டுப் பிரச்சனை சிறிதுநேரம் பின்னகர்ந்திருந்தது.
மதிய உணவையும் தவிர்த்துவிட்டாள். மாலை வேலை முடிய, வரவேற்பாளினியிடம் சிறு புன்னகையை உதிர்த்து விடை பெற்றவள், இருசக்கர வாகனத்தை இயக்கினாள். சாவியை அதில் பொருத்திய போது கரங்களில் மெல்லிய நடுக்கம் பிறந்தன. தன்னை சமன் செய்துகொண்டு, வாகனத்தை இயக்கி வீட்டை நோக்கிப் பயணித்தாள்.
இரண்டு நாட்கள் உணவு ஈயாத உடல் இப்போது வேலையைக் காண்பிக்க ஆரம்பித்திருக்க, அதோடு காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. லேசாய் விழிகள் மங்கலாகத் தொடங்க, இமையை சிமிட்டி சிலுப்பி பிரதான சாலையைக் கடந்து வயல்காட்டுப் பாதையில் நுழைந்திருந்தாள்.
கீழே சரிந்துவிடுவேன் என உடலும், முழுவதும் மயங்கத் தொடங்கிய மூளையும் அவளை கவனத்துடன் வாகனத்தை இயக்கவிடவில்லை. எதிரே வந்த மகிழுந்தில் மோதச் சென்றவள், நொடி நேரத்தில் தன்னை சுதாரித்து வாகனத்தை வலப்பக்கம் திருப்பியிருந்தாள்.
கண நேரத்தில் உயிர் பிழைத்திருந்தவளின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்க, இதற்கு மேல் முடியாது என இறங்கி வாகனத்தை தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
ஒரு அழைப்பை விடுத்தால் திவாகர் வந்துவிடுவான். இல்லை ரங்கராஜனிடம் கூறினால், நிமிடத்தில் ஆட்களை அனுப்பிவிடுவார்தான். ஆனாலும் ரோஷம் கொண்ட மனது எதையும் செய்யவில்லை. வீம்பாய் வீடுவரை வாகனத்தைத் தள்ளிக்கொண்டு சென்றுவிடலாம் என்ற வைராக்கியத்தில் நடக்கத் தொடங்கியவளின் உடல் சத்தியமாய் அவளுக்கு ஒத்துழைப்பை நல்கவில்லை.
பார்வை மங்கியது, கரங்கள் நடுங்க, உடல் சோர்ந்தது. இருந்தும் மனதிலிருந்த உறுதி சோர்ந்து போகவிடாது அவளைத் தட்டி தூக்கி நிறுத்தியிருந்தது.
குமரன் பணிவிஷயமாக வெளியே சென்று கொண்டிருந்தான். பிரதான சாலைகள் அத்தனை இருந்தப் போதும் ஏன் இந்த ஒற்றையடிப் பாதையில் வர வேண்டும் என்று கேள்வி கேட்ட மூளையைத் தட்டி அடக்கியவனின் மனம் மனோஹரிக்காகத் தான் வந்தது. நேற்றைய அவளது நிலை இவனை சத்தியமாய் நிம்மதியாய் இருக்கவிடவில்லை. கண்டிப்பாக வீம்புக்கென்றே மருத்துவமனைக்குச் சென்றிருப்பாள் என அவள் குணம் அறிந்திருந்தவன், இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.
‘இது நேசமல்ல! வெறும் கரிசனம், அக்கறை, சக மனிதரின் மேல் கொள்ளும் அன்பு!’ மனதுக்குப் புரிய வைக்க முயன்று தன்னை ஏமாற்றிக் கொண்டே சாலையில் பயணித்தவன் விழிகள் மனோவைக் கண்டுவிட்டன.
இவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் மங்கலாய் இருந்தாலும், குமரனைக் கண்டுவிட்டவளின் கண்கள் நொடி நேரம் மின்னி மறைந்தன. ஆனாலும் நேற்றைய அவன் வார்த்தைகள் கொடுத்த காயம் இன்னும் காயக்கூடவில்லையே. அது அவளை உசுப்பியிருந்தது.
குமரனின் வார்த்தைகள் அந்நொடி மீண்டும் மீண்டும் கண்முன்னே தோன்றி எதிரொலிக்க, காதலுக்கு முன்னே கோபமும் தன்முனைப்பும் முதலாக வந்து நின்றது. முகத்தைத் திருப்பி அவனைக் காணாது நடக்கத் துவங்கினாள். குமரனும் அவளைத்தான் பார்த்தான்.
அவளிடம் ஏதோ வித்யாசமாகத் தோன்றாமல் இல்லை. ஏன் வாகனத்தைத் தள்ளிக்கொண்டு போகிறாள் என்ற கேள்வியெழ, தன் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி அவளிடம் விரைந்தான். முன்னே வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் மனோ.
“ஸ்கூட்டில என்ன பிராப்ளம்? ஏன் தள்ளிட்டுப் போற மனோ?” என்றவனின் புருவங்கள் கேள்வியாய் சுருங்கின. மனோவின் இருளடைந்த முகத்திலும் அவ்வப்போது சிமிட்டிய விழிகளிலும் பார்வை நிலைக்க, “மனோ, என்னப் பண்ணுது?” என மீண்டும் கேள்வியெழுப்பினான்.
“அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க, நீங்க யாரு எனக்கு, பிடிக்காது, வேண்டாம்னு சொன்னவருக்கு என் மேல என்ன அக்கறை?” எள்ளலாகக் கேட்டவளின் குரல் முழுவதும் கோபமும் ஆற்றாமையும் நிரம்பி வழிந்தது.
“மனோ…” என அவள் தோளைக் குமரன் கோபமாய்த் தொட்டதும், அது கொடுத்த அதிர்வில் வாகனத்தை நழுவவிட்டிருந்தாள். பொத்தென்று இருசக்கர வாகனம் கீழே விழுந்திருந்தது. குமரனின் கரங்கள் மனோவின் உடல் சூட்டை நொடியில் ஸ்பரிசித்திருந்தன.
அவனை நிமிர்ந்து முறைத்துக் கையைத் தட்டிவிட்டவள், குனிந்து இருசக்கர வாகனத்தைத் தூக்க முயன்றாள். உடலில் வலுவில்லாது போக, அந்நொடி அவளால் வாகனத்தை தூக்க முடியவில்லை. அதில் விழிகள் லேசாய் கலங்கின.