குமரன் அகன்றதும் வீடு புயலடித்து ஓய்ந்ததைப் போல அதீத அமைதியைத் தத்தெடுத்திருந்தது. மனோஹரி அவன் வார்த்தைக் கொடுத்த அழுத்தமும் வலியும் தாங்காது இத்தனை நேரமிருந்த கோபத்தை விழி நீர் மூலம் இறக்கி வைக்க முயன்று கொண்டிருந்தாள். குபுகுபுவென தொண்டை வர மேலெழுந்த பெயரிடப்படாத உணர்வு குமரனின் வார்த்தையில் சிக்கித் தொக்கி, அவளை மொத்தமாய் அமிழ்த்தப் பார்க்க, உள்ளங்கை இரண்டிலும் முகத்தைப் புதைத்தாள். உடல் அழுகையில் குலுங்கியது.
ரங்கராஜன் மகளின் செயலில் அது தந்த வேதனையில், கோபத்தை யாரிடம் காட்டுவது எனத் தெரியாது அறைக்குள் சென்று முடங்கினார். அத்தனை பேசி, திட்டி, ஏன் இதுவரை ஒரு சொல் அதட்டிப் பேசியிராத மகளை இன்று கைநீட்டி அடித்தும் கூட, அவள் முடிவில் உறுதியாய் நின்றதை நினைத்து இவரது மொத்த நிம்மதியும் பறந்திருந்தது. அடுத்து என்ன செய்வது என மூளை யோசிக்கக் கூட திராணி இல்லாது ஸ்தம்பித்துப் போய்விட்டது அந்தப் பெரியவருக்கு.
அதைவிட குமரன், அவர் வளர்த்தப் பையன். இதற்குமுன் அவனிடம் இப்படியான கோபத்தை அவர் பார்த்ததில்லை. பத்து வருடங்கள் மரியாதைத் ததும்ப பார்த்தப் பார்வையில் இன்று மொத்தமாய் தான் இறங்கிவிட்டோம் எனப் புரிந்தது. அவனுடைய பேச்சும் செயலும் இவரது வயிற்றில் பயபந்தை சுழலச் செய்திருந்தது. குமரனது குணம் அவரறியாதது இல்லையே.
அவனுக்கொன்று வேண்டும் என்றால், எந்த வழியிலும் சாதித்துக் கொள்ளும் வகையில் சேர்த்தி. அதற்குச் சான்று பதினேழு வயதான சுயம்பு இன்று அவர் நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறதே! தானில்லை என்றால் அவனில்லை என்று இவர் இறுமாந்திருந்த காலங்கள் எல்லாம் கடந்த பத்து நாட்களில் தூள் தூளாகச் சிதறியிருந்தன.
குமரனில்லாது வேலைகள் அத்தனையும் நிலுவையில் நின்றுவிட்டன. இதுவரை அமைதியாய்ப் பதுங்கியிருந்த தொழில் எதிரிகள் அவனின் இன்மையை உணர்ந்து தலை தூக்கத் தொடங்கியிருந்தனர். இவரது அடித்தளமே ஆட்டம் காணத் துவங்கியிருக்க, அந்நொடிதான் குமரன் என்னும் தனி மனிதனின் அவரறியாத மதிப்பு வெளிச்சத்திற்கு வந்ததிருந்தது. அப்படிப்பட்ட குமரனை இந்த விஷயத்தில் அவரால் எளிதாக எடை போட முடியவில்லை.
அதற்கும் அப்பாற்பட்டு, இன்று அவன் மனோஹரியைப் பாரத்தப் பார்வை இன்னுமே இவரது விழிகளைவிட்டு அகலவில்லை. அந்தப் பார்வை புதிது. அது சொன்ன செய்தி புதிது. இனியொரு முறை மனோஹரியின் மீது கையை வைத்தால் நான் பொறுப்பில்லை எனப் பார்த்தவனின் பார்வையில் இவருக்கு ஏகக் கோபம். தான் வளர்த்தச் செடி, முட்களால் தன்னையே பதம் பார்ப்பதை ரங்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
கண்டிப்பாக மகள் குமரனைவிடமாட்டாள். அதைவிட குமரன், அவன் என்ன நினைக்கிறான் என இவரால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், கண்டிப்பாக ஏதோ தவறாக, அவருக்கு ஒவ்வாத விஷயம் நடக்கப் போவதை உள்மனம் எச்சரித்துத் தொலைத்தது.
பணம், அந்தஸ்து எல்லாம் இப்போது பின்னகர்ந்து குமரனின் ஜாதியும் சொக்கநாதனும் மட்டுமே பெரிய பிரவாகமாகத் தெரிந்தனர். குமரன் தொழிலில் கால் பதித்துவிட்டால், தன்னைவிட ஓரிரு மடங்கு விரைவிலே ஓங்கிவிடுவான் என்பதில் துளியேனும் அந்த மனிதருக்கு ஐயமில்லை.
ஆனால் ஜாதி, அவன் இரத்தம் முழுவதும் கீழ் ஜாதிக் கறைப் படிந்திருக்கிறதே! அதை அவரால், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ‘வேற்று ஜாதிக்காரனை வீட்டின் மருமகனாக ஏற்க மனம் ஒரு போதும் சம்மதிக்காதே!’ என எண்ணி எண்ணி மாய்ந்து போனார்.
கோபத்தில் மனோவின் மீது கை நீட்டியிருந்தாலும், பாசம்கொண்ட மனது அந்த நொடி துடித்துப் போனதென்னவோ உண்மை. அவள் உதட்டிலிருந்து வழிந்த குருதியில் இவரது இதயம் வலித்தது. ஆனாலும், மகளின் பேச்சை அவரால் சகித்துப் போக முடியவில்லை. அத்தனை பெரிய அடியை அடித்தும் தன் முடிவில் உறுதியாய் இருந்த மனோ இவரை மொத்தமாய் அசைத்துப் பார்த்திருந்தாள்.
“சொல்ல சொல்ல கேட்காம அவ பேச்சுக்கு ஆடுனீங்களே! இது எங்கக் கொண்டு வந்து நிறுத்தியிருக்குன்னுப் பார்த்தீங்களா? இதுக்கும் மேல என்ன செய்ய காத்திருக்காளோ பாவி மக! இவளைப் பெத்ததுக்கு இன்னும் என்னென்ன அசிங்கமெல்லாம் படணுமோ?” வாய் ஓயாது ராதா மகளை அர்ச்சித்தார். அவரால் மனோவின் செய்கையை எளிதில் கடக்க முடியவில்லை. அந்நியர்கள் முன்னிலையில் மகள் தங்களை அசிங்கப்படுத்திவிட்டாளே என மனம் குமைந்தது. ஆற்றாமையில் என்ன பேசுகிறோம் எனத் தெரியாது கத்திக் கொண்டிருந்தார்.
கட்டிலில் சாய்ந்தமர்ந்து விழிகளை மூடியிருந்த மனோவின் செவியிலும் அனைத்தும் விழத்தான் செய்தன. இன்னும் எத்தனை தூரம், எத்தனை நாட்கள் இந்தப் போராட்டம். எப்போது இது முடிவிற்கு வரும் எனத் தெரியாது உள்ளம் பதற, உதட்டில் விரக்திப் புன்னகை பூத்தது.
ஜாதியும் மரியாதையும் முக்கியம் என பெற்றப் பிள்ளையை கை நீட்டி அடித்த தந்தையை எண்ணி கண்ணீர் வடிப்பதா? இல்லை தன் விருப்பத்திற்கு ஒரு நொடி கூட மதிப்பளிக்காது தன்னுடைய செயலே பிரதானம் என்றிருந்த தாயை நினைத்து வருந்துவதா? தந்தைக்கும் பேச முடியாது தனக்கும் ஆதரவாய் நிற்க முடியாது இருதலைக் கொல்லி எறும்பாய்த் துடிக்கும் தமையனை நினைத்து அழுவதா எனத் தெரியாது இதயம் மரத்துப் போயிருந்தது.
‘போ… எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்!’ என ஏகவிரக்தி மனநிலைக்கு வந்திருந்தாள். தந்தையும் தாயும் கொடுத்தப் பரிசு கன்னத்தில் விண்விண் என தெரித்து தன்னிருப்பை உணர்த்தியது.
திவாகர் வந்து தன்னருகே நின்றதை இவள் உணராமல் இல்லை. ஆனாலும், அமைதியாய் விழிகளை மூடியிருந்தாள். மூடியிருந்த இமைகளுக்குள் குமரன்தான். எங்குத் திரும்பினாலும் அவன் பேசிய பேச்சுக்கள் எதிரொலித்து அவளை சித்திரவதை செய்துக் கொண்டிருந்தது. இனிமேல் உங்களிடம் போராட என்னிடம் திராணி இல்லை என ஓய்ந்து போய் அமர்ந்திருந்தவளின் தோற்றம் கண்டு திவாகரின் விழிகள் பனித்தன.
“மனோ!” தோளைத் தொட்ட கரத்தில், அந்த குரலின் கலங்கிய பாவனையில் கடினப்பட்டு விழிகளை மலர்த்தி அவனைப் பார்த்தாள். அந்த முகத்தில் அவளுக்கான வேதனை அப்பிக்கிடந்தது.
“ஒன்னும் இல்ல திவா, நான் நல்லா இருக்கேன்!” எத்தனை முயன்றும் உதட்டிலிருந்த புன்னகை விழிகளை எட்டவேயில்லை.
இந்த நிலையிலும் தனக்கு ஆறுதல் அளிக்கும் தங்கையை நினைத்து திவாகருக்கு நெஞ்சம் நனைந்து போனது. “மனோ, நான் ஒன்னு சொல்றேன். கேட்பீயா?” என்றவனை கேள்வியாய் நோக்கினாள்.