இதயம் 9.2

ரிஷி நியமித்த ஆள் மலருக்கு வேலையை நன்றாக சொல்லித்தர, மலரும் ஆர்வமாய் கற்றுக்கொண்டாள். மிகவும் கடினமான வேலை இல்லை. ஆதலால், அவளால் விரைவில் கற்றுக்கொள்ள முடிந்தது.

அவளது வேலை, அவர்களது நிறுவனத்தில் இருந்து மகிழுந்து வாங்கியவர்களுக்கு வாகனக் காப்பீடு போட்டுத் தருவது. ஏற்கனவே காப்பீடு வைத்திருப்பவர்களது காப்பீடு காலாவதியாகும் நாளுக்கு முன் அவர்களுக்கு நினைவுபடுத்தி, காப்பீட்டை புதுப்பிப்பது. இதுதான். கல்லூரியில் கற்றுக்கொண்ட கணினி அறிவு ஓரளவு இருந்ததால், இந்த வேலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

ரிஷியின் வீட்டில் தான் வேலை பார்ப்பதை மல்லிகாவைத் தவிர்த்து வேறு யாரிடமும் அவள் கூறியிருக்கவில்லை. பெரிதான காரணங்கள் ஏதுமில்லை. கூற விருப்பமில்லை; அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டாள்.

அன்று எப்போதும் போல அலுவலக வேலை முடிந்ததும் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிவிட்டு, ரிஷியின் வீட்டை அடைந்தவள் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தாள்.

வழக்கமாய் ஒரு முறை அழுத்தியதும் ரிஷி வந்து கதவைத் திறந்துவிடுவான். இப்போது இரண்டு நிமிடங்கள் ஆகியும் கதவைத் திறக்கவில்லை. ஒருவேளை இன்னும் வரவில்லையோ என்று அவனது மகிழுந்து நிறுத்தத்தை காண, வாகனம் அங்கேதான் நின்றிருந்தது.

“ஏன் கதவைத் திறக்கவில்லை? ஏதாவது வேலையாக இருக்கிறாரா?” என்று எண்ணி மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினாள்.

இப்போதும் ரிஷி வரவில்லை. ஆதலால், அலைபேசியை எடுத்து அவனது எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பு முழுதாகச் சென்று துண்டிக்கப்பட்ட நேரம், கதவைத் திறந்திருந்தான் ரிஷிகேஷவ்.

மலர் அவனை ஆராய்ச்சியாக நோக்கினாள். காரணம், அவனது கண்கள் இரண்டும் சிவந்திருந்தது; முகமும் சோர்வடைந்திருந்தது.

“என்னாச்சு ரிஷி சார்? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று மலர் வினவிட,

“நத்திங்,” என்று பதில் அளித்தவன், அவளுக்கு வழியை விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்து விட்டான்.

“பாக்க உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு. ஆனா எதுவும் இல்லன்னு சொல்றாரு,” என்று சிந்தித்தவாறே காபியை தயாரித்தவள், அவனது அறைக் கதவைத் தட்ட,

“டேபிள்ல வச்சுட்டு போ, மலர். எடுத்துக்கிறேன்,” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான்.

“வேற எதுவும் பிரச்சனையா இருக்குமோ?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள் சமையல் வேலையை கவனித்தாள்.

சமையலை முடித்து, பாலை காய்ச்சி எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் அவனது அறைக் கதவைத் தட்டி உணவருந்த அழைத்தாள்.

இப்போது கதவைத் திறந்தவனது முகம் அதீத சோர்வை அப்பியிருந்தது. கதவருகே நின்றிருந்தவளுக்கு அவனது உடல் வெம்மை உறைத்திட,

“உங்களுக்கு காய்ச்சலா, ரிஷி சார்? நான் மாத்திரை வாங்கிட்டு வந்து தரவா சார்?” என்று வினவினாள்.

“லைட்டாதான் ஃபீவர். நான் பாத்துக்குறேன், மலர்,” என்று ரிஷி மறுக்க,

“சார், உங்களால நிக்கவே முடியல. லைட்டா ஃபீவர்னு சொல்றீங்க. இந்த ஏரியால ஒரு டாக்டர் இருக்காரு. போன் பண்ணா வீட்டுக்கே வந்து ட்ரீட்மென்ட் பார்ப்பாரு. அவருக்கு கால் பண்ணி வர சொல்லட்டுமா சார்? ஒரு ஊசி போட்டா சரியாயிடும்,” என்று அவனது முகத்தை கேள்வியாக நோக்கினாள்.

சம்மதமாய் தலையசைத்தவன் வெளியே வந்து கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டான்.

என்னவென்று தெரியவில்லை. திடீரென ரிஷிக்கு காய்ச்சல் வந்திருந்தது. மதியம் போலவே அவனுக்கு தலைவலியும் சோர்வும் வந்துவிட, சரியாகிவிடும் என்று விட்டுவிட்டான்.

இப்போது சிறிது நேரத்திற்கு முன் மலர் கேட்கும்போதும், உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தான். ஆனால், நேரமாக நேரமாக உடல் வெப்பநிலை கூடிக்கொண்டிருந்தது. அதனால்தான் இப்போது அவள் கேட்டதும் சரியென்றிருந்தான்.

மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தவள், “டாக்டர் கிட்ட பேசிட்டேன். பத்து நிமிஷத்துல வந்துடுறேன்னு சொன்னாரு. நான் போய் அதுக்குள்ளே உங்களுக்கு ரசம் வைச்சு சாதம் வடிக்கிறேன் சார். காய்ச்சலுக்கு ரசம்தான் நல்லா இருக்கும்,” என்றவள் அவனது பதிலை எதிர்பாராது சமையலறைக்குச் சென்று சாதத்தை குக்கரில் வைத்து, ரசத்திற்குப் பொடியை அரைக்கத் தொடங்கினாள்.

ரசத்தை வைத்து விட்டு மலர் வெளியே வர, அழைப்பு மணி ஓசை கேட்டது.

“டாக்டர்தான் வந்துட்டார்னு நினைக்கிறேன் சார். நான் போய் பார்க்கிறேன்,” என்று ரிஷியிடம் கூறியவள் கதவைத் திறக்க, மருத்துவர் நின்றிருந்தார்.

சுதாகர் மகனுக்கு மருத்துவம் பார்க்க அடிக்கடி வந்து செல்வதால், மருத்துவருக்கு மலர் நல்ல பரிட்சயம்.

உள்ளே நுழைந்ததும், “என்ன மலர், யாருக்கு ஃபீவர்?” என்று வினவிட,

“இதோ இவருக்குத்தான் சார். சாரோட பேர் ரிஷி. சுதாகரன் அண்ணாவோட ஃப்ரெண்ட்,” என்று அறிமுகம் செய்தவள், “காலையில நல்லாத்தான் இருந்தாங்க. இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காய்ச்சல் வந்திடுச்சு,” என்று விளக்கினாள்.

ரிஷி விழிகளைத் திறந்து மருத்துவரை வரவேற்கும் விதமாக தலையசைக்க, அவன் அருகே அமர்ந்தவர், “எப்போதுல இருந்து சிம்ப்டம்ஸ் இருக்கு?” என்று கேட்டவாறே அவனை பரிசோதிக்கத் தொடங்கினார்.

ரிஷி மெல்லிய குரலில், “ஆப்டர்நூன்ல இருந்து இருக்கு,” என்று பதிலளிக்க,

“நார்மல் ஃபீவராத்தான் இருக்கணும். டெம்பரேச்சர் கொஞ்சம் ஹையாத்தான் இருக்கு. ஒரு இன்ஜெக்ஷன் போட்டு டேப்லட் கொடுக்கிறேன். டுடேஸ் ஃபாலோ பண்ணுங்க. இன்கேஸ் சரியாகலைனா, ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்,” என்றவர் அவனுக்கு ஊசி போட்டுவிட்டு மாத்திரை கொடுத்தார்.

ரிஷி மருத்துவருக்கு கட்டணத்தை கொடுக்க வேண்டும் என்று தனது பர்ஸை எடுத்து வர எழ முயல,

“நான் பணம் கொடுத்துக்கிறேன். என்கிட்ட இருக்கு. நீங்க ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க,” என்று தடுத்துவிட்டு தானே அவருக்கு பணத்தை கொடுத்தாள்.

பிறகு ரசம் சாதத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்து அவன் முன்னே வைத்தவள், “சாப்பிட்டு மாத்திரை போடணும். சாப்பிடுங்க சார்,” என்று கூற,

ரிஷி அதனை எடுத்து உண்ணத் தொடங்கினான்.

காய்ச்சல் வந்த வாய்க்கு ரசம் நன்றாக இருந்தது.

இதற்குள் மலர், மாத்திரை போடுவதற்கு வெந்நீர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, நீரை சிறிதாக சூடு செய்து ஆற வைத்து எடுத்து வந்தாள்.

உண்டு விட்டு மாத்திரையை விழுங்கிய ரிஷி, “நீ கிளம்பு மலர். நான் பாத்துக்குறேன். வெளி கேட்டை பூட்டிரு,” என்றுவிட்டு அறைக்கு எழுந்து சென்றான்.

உள்ளே சென்று படுத்ததுதான் தெரிந்தது. அடுத்த நொடியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான்.

மறுநாள் காலையில் புரண்டு படுத்தவனுக்கு லேசாக விழிப்பு தட்ட, விழிகளைத் திறந்தவன் மீண்டும் மூடிக்கொண்டான். காய்ச்சல் வந்ததால் உடம்பே அடித்துப் போட்டது போல் இருந்தது. ஒருவித சோர்வு இன்னும் உடலில் மீதமிருக்க, சில நிமிடங்கள் புரண்டு படுத்தவன் பின் எழுந்து முகம் கழுவி வந்தான்.

சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க, அது ஏழு என்று காண்பித்தது. நேற்று மருத்துவர் வந்துவிட்டு சென்றது வரைதான் நினைவில் இருந்தது.

சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்த்துவிட்டு, பின் காபி போட்டுக் குடிக்கலாம் என்று அறையில் இருந்து வெளியே வந்தவன், கூடத்தில் படுத்திருந்தவர்களைக் கண்டு திகைத்து நின்றுவிட்டான்.

காரணம், அங்கே கூடத்தின் ஒரு ஓரத்தில் போர்வையை விரித்து மலரும் அவளது தம்பி முரளியும் படுத்து, ஒருவர் மேல் ஒருவர் கையை போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.

“இவங்க ரெண்டு பேர் ஏன் இங்க தூங்குறாங்க?” என்று நினைத்தபடி ரிஷி அவர்களை காண, உறக்கமின்றி விழிகளை மூடி படுத்திருந்த மலர், ரிஷியின் அரவத்தில் எழுந்துகொண்டாள்.

“எழுந்துட்டீங்களா, ரிஷி சார்?” என்றபடி தனது கூந்தலை கொண்டையிட்டவள், “உங்களுக்கு நைட் காய்ச்சல் ரொம்ப அதிகமா இருந்துச்சு. அதான் தனியா விட்டுப் போக வேணாம்னு தம்பியை வர சொல்லி இங்கே தங்கிட்டேன் சார்,” என்று விளக்கம் அளிக்க,

ரிஷி அமைதியாய் கேட்டுக்கொண்டான்.

“உங்களுக்கு காபி போட்டு தரவா சார்?” என்று மலர் வினவ,

எதிரில் இருந்தவன் சம்மதமாய் தலையசைத்தான்.

“அஞ்சு நிமிஷத்துல காபியோட வர்றேன் சார்,” என்று நகர்ந்தவள், “கேக்க மறந்துட்டேன்… காய்ச்சல் சரி ஆயிடுச்சா?” என்றபடி அவனருகே வந்து கன்னத்தில் கை வைத்து பார்த்திருந்தாள்.

அவள் கரங்கள் கன்னத்தை தொட்டதும், அதன் குளிர்ச்சியை மின்னலாய் உணர்ந்தவன் திகைத்து சடுதியில் பின்னகர்ந்திட, மலரின் கைகள் அந்தரத்தில் நின்றது.

ரிஷி திகைப்பாய் அவளது கரத்தைக் காண, அந்தக் கணம்தான் தனது செய்கையினை உணர்ந்திருந்தவள் பட்டென்று கையை இறக்கிவிட்டாள்.

நொடியில் முகம் வெளுத்துவிட,

“அது சார்… அது வந்து…” என்றவளுக்கு பேச வார்த்தை வராது, நா சதி செய்தது.

error: Content is protected !!
Scroll to Top