இதயம் 10.1

இதயம் 10:

நிமிடங்கள் கடந்தும் என்ன பேசுவது என்று தெரியாமல் திணறியவள், “நான் உங்களுக்கு காபி போடுறேன்,” என்று விட்டு சமையல் அறைக்குள் நுழைந்து, அடக்கி வைத்திருந்த மூச்சை, “ஊஃப்…” என்று வெளியிட்டாள்.

“என்ன காரியம் பண்ணிட்ட மலர்? உனக்கு அறிவே இல்லையாடி! ரிஷி சார் உன்னோட முதலாளி. அவர் கணத்தில போய் கையை வச்சு பார்த்திருக்க. உன் கைப்பட்டுச்சுனு அந்த டிரஸ்ஸே வேணாம்னு போடாம தூக்கிப் போட்டவர், கன்னத்துல போய் கை வச்சிருக்கியே! உன்னைப் பற்றி என்ன நினைப்பாரு அவரு?” என்று புலம்பியபடி திரும்பியவள், சமையலறையின் வாயிலில் நின்றிருந்தான் ரிஷி.

அவனை எதிர்பாராது திகைத்தவளது புலம்பல் சடுதியில் நின்றுவிட, மீண்டும் மலங்க மலங்க விழித்தாள்.

என்ன கேட்பது, என்ன பேசுவது என்று எதுவும் அவளுக்கு அந்த நொடி தெரியவில்லை.

ரிஷி எதுவும் பேசாமல் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட, மீண்டும் மூச்சை இழுத்துவிட்டவள் பாலை எடுத்து அடுப்பில் காய வைக்கத் தொடங்கினாள்.

அவன் வெளியே சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு, “என்னடி மலரு, இப்படி சொதப்பி வைக்கிற?” என்று தலையில் தட்டியவள், அப்போதுதான் தன் கையில் இருந்து வந்த மீன் வாசத்தை கவனித்தாள்.

“அச்சச்சோ! இதனாலதான் தள்ளிப் போனாரா? மீன் வாசமே ஆகாத மனுசனுக்கு, இப்படி மீன் விக்கிறவ கன்னத்துல கை வச்சா எப்படி இருக்கும்? வாசமே வராம பாத்துக்குறேன்னு சொல்லித்தானே மலரு வேலைக்கு சேர்ந்த? காபி போட்டுக் குடுத்துட்டு வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு, சுத்தப் பத்தமா வரணும்,” என்று தன் போக்கில் புலம்பியவள், காபியைத் தயாரித்து எடுத்துச் சென்றாள்.

ரிஷி நீள்விருக்கையில் சாய்ந்து, விழிகளை மூடியவாறு அமர்ந்திருக்க, “சார்… காபி,” என்று மெல்லிய குரலில் கூறியவள், அவன் முன்பிருந்த டீபாயில் காபி கப்பை வைத்தாள்.

“வச்சிட்டு போ, மலர்,” என்றவன் விழிகளைத் திறக்காது பதிலளிக்க, சமையலறை சென்று காபி போட்ட பாத்திரங்களை கழுவி வைத்தவள் வெளியே வந்து, “சார், நான் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு வந்து சமைக்கவா?” என்று வினவினாள்.

காபியை அருந்திக் கொண்டிருந்தவன் சம்மதமாய் தலையசைக்க, உறங்கிக் கொண்டிருந்த முரளியின் அருகே சென்றவள், “முரளி… முரளி… எந்திரிடா,” என்று தம்பியைத் தட்டி எழுப்ப முயற்சித்தாள்.

“ப்ச்…” என்ற மெல்லிய சிணுங்கலுடன் திரும்பிப் படுத்தான் முரளி.

“என் தங்கப்புள்ளைல, எந்திரிடா,” என்று மலர் தம்பியைக் கொஞ்சி, கெஞ்சி எழுப்ப முயல, “என்னக்கா, காலங்காத்தால வந்து தொல்லை பண்ற?” என்று மீண்டும் புரண்டு படுத்தான்.

“முரளி, இது நம்ம வீடு இல்லடா. சாரோட வீடு. நம்ம வீட்ல போய் தூங்குடா,” என்று கூறியதும்தான் தாமதம். அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தவன், “முன்னாடியே சொல்லி இருக்கலாம்லக்கா!” என்று அவளிடம் மென்குரலில் கடிந்துகொண்டு, தான் படுத்திருந்த போர்வையை எடுத்து மடித்து வைக்கத் தொடங்கினான்.

இருவரது உரையாடலையும் கவனித்தும், கவனிக்காதவாறு காபியை அருந்திக் கொண்டு, செய்தித்தாளில் விழிகளைப் பதித்தபடி இருந்தான் ரிஷி.

அமர்ந்திருந்த ரிஷியை கவனிக்காத முரளி, “அக்கா, சார் எழுந்துட்டாரா? காய்ச்சல் குறைஞ்சிருச்சா?” என்று வினவ,

“ஹ்ம்ம்… சரியாயிடுச்சு,” என்று பதில் அளித்தவளின் பார்வை ரிஷியின் மீது படிய, மேலே முரளியின் விழிகளும் அத்திசையில் பயணித்தன.

அமர்ந்திருந்த ரிஷியை கண்டவன் படக்கென்று எழுந்துகொண்டு, தமக்கையைப் பார்த்து முறைத்தான். அவனது முறைப்பில் மலருக்கு மெலிதான புன்னகை எழ, அதனை மறைத்துவிட்டாள்.

அவன் கையில் இருந்த போர்வையை வாங்கி தனது பையில் வைத்தவள், “வா, போகலாம்,” என்று முரளியிடம் கூற, அவன் ரிஷியிடம் பேசுவதா, இல்லையா என்று தெரியாமல் விழித்தபடி அவனைக் கண்டான்.

அதில் ரிஷி ஒற்றைப் புருவத்தை ஏற்றி, “என்ன?” என்பதாய் அவனைக் காண, “ம்ஹூம்,” என்று தலையசைத்தவன் வேகமாய் வெளியே ஓடிப்போனான்.

முரளிக்கு ரிஷியின் மீது ஏகப்பட்ட அன்பும் மரியாதையும் இருந்தது. அதைவிட, அவனுடைய செல்வநிலையைக் கண்டு ஒரு வித பயமிருந்தது. அதனால்தான் பேசுவதற்கு அஞ்சி வெளியே ஓடிவிட்டான்.

தம்பியைப் பின்பற்றி தானும் வெளியே சென்றவள், மீண்டும் உள்ளே வந்து ரிஷியிடம், “காய்ச்சல் வந்த வாய்க்கு நாட்டுக்கோழி வாங்கி குழம்பு வச்சா நல்லா இருக்கும். வாங்கிட்டு வந்து வைக்கவா, சார்?” என்று வினவ,

ரிஷி பதில் ஏதும் கூறாமல் அறைக்குச் சென்று பணத்தை எடுத்து வந்து அவள் முன் வைத்தான்.

அதனை எடுத்துக்கொண்டு வெளியேறியவளுக்கு மீண்டும் தன்னை அர்ச்சிக்கத் தோன்றியது. காரணம், அவள் கன்னத்தில் கை வைத்ததிலிருந்து ரிஷி அவளது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

“அவர் இப்படி சங்கடப்படுத்திட்டியே மலரு! உன் முகத்தைப் பார்க்கவே யோசிக்கிறாரு. வளர வளர உனக்கு அறிவு மங்கிக்கிட்டே போகுது. தம்பி, தங்கச்சிக்கு கைய வச்சு பார்த்தா, அவருக்கும் வச்சு பாத்துடுவியா? அவரும் உன் தம்பி தங்கச்சியும் ஒண்ணா?” என்று வீடு போகும் வரையிலுமே மனதிற்குள் தன்னை நிந்தித்தவாறுதான் சென்றாள்.

வீட்டுக்கு வந்து குளித்து தயாராகியவள், கறிக்கடைக்குச் சென்று கறியை வாங்கிவிட்டு ரிஷியின் வீட்டிற்குச் சென்றாள். அப்போதும் கதவைத் திறந்தவன் அவளது முகம் பாராது நகர்ந்திட, இவளுக்கு ஒரு மாதிரி கஷ்டமாய் போனது.

எல்லாம் தன்னால்தான் என்று வருந்தியவள், அமைதியாய் சமையலறை சென்று தனது பணியைக் கவனிக்கத் தொடங்கினாள்.

மலர் வந்ததும் கூடத்தில் இருந்த ரிஷி எழுந்து அறைக்குச் செல்ல, ராதாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்கம்மா,” என்று கூற, அவனது குரலில் இருந்த சோர்வை உணர்ந்த ராதா, “என்ன கண்ணா? வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு. என்ன ஆச்சு?” என்று வினவினார்.

“லைட்டா பீவர்மா,” என்று ரிஷி பதில்மொழிய,

error: Content is protected !!
Scroll to Top