“எங்ககிட்ட கூட சொல்லலையே, ஷாலினி?” என்று ராதா ஆச்சரியமாகக் கேட்க,
“நீங்க பேச்சுவாக்குல அண்ணாகிட்ட சொல்லிருவீங்களே… அதான் சொல்லல,” என்று மெலிதாய்ச் சிரித்தவள், மெழுகுவர்த்தியை கேக்கில் சொருகி ஏற்றிவிட்டு, கத்தியை ரிஷியிடம் நீட்டினாள்.
தூரிகாவின் பார்வை ஷாலினியின் அருகே நின்றிருந்த மலரின் மீது முறைப்புடன் படிந்து மீண்டது. ரிஷி, ஹரி வந்தவுடன் தூரிகாவின் செய்கைகளைப் பற்றி கூறியிருக்க, அவன் தனது மனைவியைக் கண்டித்திருந்தான்.
ஹரிக்குமே இதுபோல செய்கைகள் பிடிப்பதில்லை. தங்கள் வீட்டிலேயே அவ்வப்போது மனைவியைக் கண்டிப்பதுண்டு. ஆனால் தூரிகா அதை எல்லாம் தூசியாய்த் தட்டிவிட்டு மீண்டும் அதே வேலையைப் பார்ப்பாள்.
ஆனால், ஹரி தம்பியின் கோபத்தை அறிந்து, மனைவியிடம், ‘இங்கிருந்து செல்லும் வரை வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்,’ என்று வற்புறுத்திக் கூறியிருக்க, தூரிகாவால் மலரை எதுவும் சொல்ல இயலவில்லை.
இல்லையென்றால், ‘நாங்க பிறந்த நாளைக் கொண்டாடும்போது சமையல் செய்பவள் உனக்கென்ன வேலை?’ என்று அப்போதே திட்டியிருப்பாள்.
“ஹாப்பி பர்த்டே, ரிஷி!” என்று எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து பாட, ரிஷி சிறு சங்கடத்துடன் கேக் வெட்டி தமக்கைக்கு ஊட்டிவிட்டான். பிறகு அண்ணனுக்கு, அம்மாவிற்கு என்று ஊட்டியவன், அண்ணிக்கும் அத்தைக்கும் கையில் கொடுத்துவிட்டு, மலருக்கும் ஒரு துண்டை வெட்டிக் கொடுக்க,
“இல்ல… இருக்கட்டும் சார்,” என்று மெதுவாய் மறுத்தாள் மலர்.
“வாங்கிக்கோ! ஏன் வேணாம்னு சீன் போடுற? உன் வாழ்க்கையில இதுமாதிரி கேக்கெல்லாம் நீ சாப்பிட்டு இருக்க மாட்ட,” என்று தூரிகா வாய் நில்லாது கூறிவிட, சடுதியில் மலரின் முகம் மாறிப்போனது.
இவ்வளவு நேரம் இருந்த இலகு மனநிலை சட்டென்று மாறிட, ரிஷியின் பார்வை மலரின் முகத்தில் சில நொடிகள் நீடித்து, பிறகு கோபத்துடன் தமையனை வெறித்தது.
“தூரி! இப்பதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்கிட்ட வாய மூடிக்கிட்டு இருக்கணும்னு சொன்னேன்!” என்று ஹரி மனைவியை அதட்ட,
“நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? அவ இதுக்கு முன்னாடி இந்த மாதிரி காஸ்ட்லி கேக்லாம் சாப்பிட்டு இருக்க மாட்ட தானே? அதைத்தானே சொன்னேன்,” என்று அலட்டாமல் பதிலளித்தவள் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
“ஹரி! இது என்ன பழக்கம்? வேலைக்காரங்க முன்னாடி மருமகள அதட்டுறது?” என்று ராதா மகனைக் கடிய,
“ஆமா ஹரி! என் பொண்ணு வருத்தப்பட்டு உள்ள போய்ட்டா,” என்ற கல்யாணியும் மகளின் பின்னோடு சென்றுவிட்டார்.
“உனக்கு எந்த இடத்துல எப்படி பேசணும்னு தெரிய மாட்டேங்குது, ஹரி. தூரிகா சொன்னதுல என்ன தப்பு இருக்குன்னு அவள இப்படி அதட்டுற? நீ கேக் கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதானே! எதுக்கு வேணாம்னு அவ சொன்னா? எப்படியும் மீதம் இருக்கிறத அவதான் எடுத்துட்டு போகப்போறா. அப்புறம் எதுக்கு கேக்கை வாங்காம சீன் போட்டா?” என்று மகனைத் திட்டிய ராதாவும் மருமகளைக் காண அறைக்குள் நுழைந்துவிட்டார்.
ஹரி முகத்தில் வருத்தத்துடன் ரிஷியைக் காண, அவனது விழிகள் கோபத்தில் செக்கச் செவேலென சிவந்திருந்தது. தன்னைக் கட்டுப்படுத்தியபடி நின்றிருந்தான்.
மெதுவாய் அவனை நெருங்கி கையைப் பிடித்துக் கொண்டவன்,
“சாரி ரிஷி… அவ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அவகிட்ட அந்தப் பொண்ணை எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லித்தான் அழைச்சிட்டு வந்தேன். ஆனாலும் இப்படி பேசிட்டா. அம்மாவும் அத்தையும் வேற அவளுக்கு சப்போர்ட்டா இருக்காங்க,” என்று வருத்தம் இழையோடிய குரலில் கூற,
ரிஷியிடம் பதிலில்லை.
“ண்ணா… அந்தப் பொண்ணு ரொம்ப பாவம். அப்பா இறந்த பின்னாடி பிஷ் மார்க்கெட்ல வேலை பார்த்துட்டு, மார்னிங் இங்க வந்து நம்ம வீட்லயும் வேலை பார்த்துட்டு, காலேஜ் போய் படிக்குது. நம்மளால எல்லாம் அப்படி ஒரு சுச்சுவேஷன்ல வாழ முடியுமா? எந்தக் காலத்திலயும் முடியாது. நம்ம அவளுக்கு உதவி செய்யலைன்னாலும் இந்த மாதிரி காயப்படுத்தக் கூடாது. இது ஏன் அண்ணிக்கு புரியவே மாட்டேங்குது?” என்று ஷாலினி வேதனையுடன் மொழிய, “அப்பா, அம்மா காசுல சொகுசா வாழ்றதுனால தான்,” என்று பதில் மொழிந்தான் ஹரிஹரன்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ரிஷி, “ஹரி! நாளைக்கு பூஜை முடிஞ்சதும், ஆப்டர்நூனா இருந்தாலும், ஈவினிங்கா இருந்தாலும், உடனே உன் வொய்ஃபை கூட்டிட்டு நீ கிளம்பணும்,” என்று அழுத்தமாக தமையனிடம் கூற, “நானே இந்த முடிவில தான்டா இருக்கேன். ஒன்ஸ் அகைன் சாரி ரிஷி. இவளால எல்லாரோட மூடும் அப்செட் ஆயிருச்சு,” என்று மீண்டும் வருந்தினான்.
“அண்ணா… நான் போய் மலர்கிட்ட பேசுறேன். பாவம், அவங்க முகமே ஒரு மாதிரியா ஆயிடுச்சு,” என்று வருந்திய குரலில் இயம்ப, “ஷாலினி, ரூம்க்கு போ. நான் மலர்கிட்ட பேசிக்கிறேன்,” என்றிருந்தான் ரிஷி.
“இல்லண்ணா, நானே பேசுறேன்,” என்று ஷாலினி மறுத்துக் கூற, “வேணாம் டா. நான் பாத்துக்குறேன். நீங்க ரூமுக்குப் போங்க,” என்று இருவரையும் அறைக்கு அனுப்பியவன், தன் முன்னே இருந்த கேக்கை எடுத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, தனது அலைபேசியை எடுத்து புதிதாக கேக் மற்றும் இனிப்பு வகைகளை ஆர்டர் செய்தான்.
மலர் காபி மற்றும் சிற்றுண்டியைத் தயாரித்து எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வந்து இரவு உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்க, யாரோ வரும் அரவம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.
ரிஷி, கையில் புதிதாக வாங்கிய கேக் மற்றும் இனிப்பு வகைகளுடன் நின்றிருந்தான்.
அவனையும் அவனது கையில் இருந்தவற்றையும் சலனமின்றி நோக்கியவள், “காபி போட்டுத் தரவா சார்?” என்று வினவினாள்.
வேண்டாம் என்பதாய்த் தலையசைத்தவன், தன் கையில் இருந்தவற்றை அவளிடம் நீட்டி,
“இது உனக்குத்தான் மலர்,” என்றிட, சில நொடிகள் அவனை வெறித்தவள், ‘வேண்டாம்’ என்பதாய்த் தலையசைத்தாள்.
“நீ எனக்கு நேத்து ஸ்வீட் செஞ்சு கொடுத்த. அதுக்கு தாங்க்ஸ் பண்ணத்தான் இதை வாங்கிக் கொடுக்கிறேன். நான் என்னோட பர்த்டேக்கு வாங்கிக் கொடுத்தேன்னு நீ உன்னோட தம்பி, தங்கச்சிகளுக்குக் கொடு. அவங்க பேசுனதுக்காக நான் வாங்கிட்டு வரலை. நீ என்னை மதிக்கிறதா இருந்தா இதை எடுத்துட்டு போ. இல்லைன்னா உன்னோட விருப்பம்,” என்றவன் தன் கையில் இருந்த பையை சமையல் மேடை மேல் வைத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.
அனைத்து வேலையையும் முடித்துவிட்டு வெளியேற முயன்றவளது விழிகளில், ரிஷி விட்டுச் சென்ற பை விழுந்தது. ஒரு முறை விழிகளை மூடித் திறந்தவள், அந்தப் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அதனை மலர் எடுத்துக் கொண்டதன் முழுமுதற் காரணம் ரிஷி மட்டுமே. அவன் கூறிய “மதிப்பு” என்ற வார்த்தையால் தான். ரிஷி என்ற தனிமனிதனின் மீது அளவுகடந்த மதிப்பு, மரியாதை வைத்திருந்தாள்.
காரணம், அவள் பணிக்குச் சேர்ந்த இந்த ஆறு மாதத்தில் ஒரு முறை கூட அவளைத் தவறாகப் பார்த்திராதவன். அவள் கூடத்தில் இருந்தால் அறையில் இருந்து கொள்பவன். எப்போது பண உதவி கேட்டாலும் எந்தக் கேள்வியுமின்றி உதவி செய்பவன். ஏன், இப்போதுதான் முதல் முறையாக அவளிடம் இவ்வளவு நீளமாகப் பேசியிருக்கிறான்.
அதுவும், அவன் மீது தவறில்லாத போதும், அவனைச் சார்ந்தவர்களால் ஏற்பட்ட தவறை அவனளவில் சரிசெய்ய முயல்கிறான். அதன் பொருட்டே அவன் வாங்கி வந்ததை எடுத்துக் கொண்டாள்.
மலர் இனிப்பை எடுத்துக் கொண்டு வெளியேறியதைக் கண்டதும், ரிஷிக்கு ஒருவித ஆசுவாசம் தோன்றியது. தன்னாலோ, தன்னை காரணமாக வைத்தோ யாரும் காயப்படுவதை அவன் எப்போதும் விரும்பமாட்டான்.
இப்போது தன்னைச் சார்ந்தவர்களால் இந்தச் சிறு பெண் காயப்பட்டுவிட்டாளே என்று உள்ளுக்குள் ஒன்று குடைந்தது. அதுவும் மதியம் வியர்த்து விறுவிறுத்து, பசியோடு அவள் நின்றிருந்த தோற்றம் அவனை வெகுவாய் தாக்கியது.
அவளிடம் பெரிதாகப் பேசியிராதவனுக்கு, சடுதியில் “மன்னிப்பு” என்ற வார்த்தையைக் கேட்க வரவில்லை. அதனாலே சிந்தித்து அவளுக்கு இனிப்புகளை வாங்கிக் கொடுத்திருந்தான்.
மலர் அதனை எடுத்துக் கொண்டதில், இத்தனை நேரம் இருந்த அலைப்புறுதல் நீங்கியதை உணர்ந்தவன், நிம்மதியுடன் எழுந்து உறங்கச் சென்றான்.
இங்கு மலர் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளுடைய கையில் இருந்த பையைக் கண்ட வித்யா, “என்னதுக்கா அது?” என்று வினவிட, “இதுல கேக்கும் சாக்லேட்டும் இருக்கு. ரிஷி சார் பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்தாரு,” என்று பதிலளித்தாள்.
“ஹை… கேக்கு!” என்று ஓடி வந்த வித்யா அதனை எடுத்து உண்ண, மற்றவர்களும் வந்துவிட, மலர் தனித்தனியாக எடுத்து கொடுத்தாள்.
“அக்கா, இந்த கேக் சூப்பரா இருக்குக்கா…” என்ற வித்யா குதூகலத்துடன் சாப்பிட, “ஆமக்கா… நல்லா இருக்கு…” என்ற மற்ற இருவரும் கூற,
உடன்பிறந்தவர்களின் மகிழ்ச்சியில் இவளுக்கும் கண்ட காயம் மறைந்து போனது. மனதிற்குள் ரிஷிக்கு நன்றியைத் தெரிவித்தாள்.