இதயம் 7
“மலர், நீ வீட்டுக்கு கிளம்பு,” என்று ரிஷி அழுத்தமாகக் கூறினான்.
“இல்லை சார்… ராதா மேடம் இந்த வேலையை முடிச்சுட்டுப் போகச் சொன்னாங்க,” என்று தயக்கத்துடன் அவனது முகத்தைக் கண்டாள்.
“உன்னைப் போகச் சொன்னேன் நான்!” என்றவனது குரலில் கோபம் அப்பட்டமாகத் தெரிய, முகம் நன்றாகச் சிவந்துவிட்டது.
“சரிங்க சார்…” என்றவள் மறுபேச்சின்றி அங்கிருந்து வெளியேறினாள்.
மலர் அகன்றதும், ரிஷி கோபமாக தூரிகாவைக் காணச் செல்ல,
“அண்ணா, வேண்டாம்… இங்க வச்சு எந்தப் பிரச்சனையும் வேண்டாம்,” என்று ஷாலினி தடுத்தாள்.
“நான் அமைதியா இருந்தா இவங்க இன்னும் பண்ணுவாங்க, ஷாலினி,” என்று ரிஷி தூரிகாவின் அறை வாயிலை அடைந்துவிட,
“அவங்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே அண்ணா. அவங்க எப்பவுமே அப்படித்தானே! இப்ப நீங்க போய் ஏதாவது சொன்னா, கண்டிப்பா அந்தக் கோபம் மலர் மேலதான் திரும்பும். நாங்க நாளைக்கு நைட்டு நாங்க இங்கிருந்து கிளம்பிடுவோம். கொஞ்சம் யோசிங்க அண்ணா,” என்று ஷாலினி எடுத்துக் கூற, ரிஷி சற்று நிதானித்தான்.
ஷாலினி கூறுவதும் சரிதான். நான் ஏதாவது பேசினால், கண்டிப்பாக தூரிகாவின் வன்மம் மலர் மேல் திரும்பும். இப்போது இல்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயமாக மலரைக் காயப்படுத்துவாள் என்று அறிந்திருந்தவன், விழிகளை மூடித் திறந்து தனது கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.
“நாளைக்கு ஒரு நாள் தானே அண்ணா! இன்னைக்கு டே முடிஞ்சிருச்சு. நைட் டின்னருக்கு மட்டும் தான் அவங்க வருவாங்க. நாளைக்கு பூஜையிலேயே டைம் போயிடும். நீயும் நாளைக்கு இருப்ப. அதனால அவங்க எதுவும் பண்ண மாட்டாங்க. போகலாம்,” என்று ஷாலினி அவனது கையைப் பிடிக்க,
உள்ளே கேட்ட பேச்சுக்குரல் இருவரது கவனத்தையும் ஈர்த்தது.
காரணம், அவர்களது பேச்சில் மலரின் பெயர் அடிபட்டது.
கல்யாணி, “ஏன் தூரி… இந்த வேலைக்காரப் பொண்ணு மலரைப் பற்றி என்ன நினைக்கிற நீ?” என்று மகளிடம் வினவ,
“அவ ஒரு ஆளு… அவளைப் பத்தி நினைக்க வேற செய்றேனா? எதுக்கு அவளைப் பத்திப் பேசிட்டு இருக்க?” என்று தாயை முறைத்தாள்.
“இல்லடி… என்ன இருந்தாலும் ரிஷி ஒரு கல்யாணம் ஆகாத பையன். அப்படி இருக்கும்போது, அவன் தனியா இருக்க வீட்டுல வயசுப் பொண்ணை வேலைக்கு வச்சு, ஏதாவது ஏடாகூடமா ஆயிருச்சுன்னா…” என்று கல்யாணி நிறுத்திவிட்டு மகளைக் காண,
“ஏடாகூடம்னா எனக்குப் புரியல,” என்று தூரிகா தாயைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“அதான் டி… இந்த லவ், கிவ் ஏதாவது வந்துடுச்சுன்னா…” என்று கல்யாணி இழுக்க,
ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் தூரிகா விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.
“என்னடி! நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ என்னமோ காமெடி கேட்ட மாதிரி இப்படி சிரிச்சிட்டு இருக்க?” என்று கல்யாணி மகளை கோபத்துடன் முறைக்க,
“சிரிப்பு வர மாதிரி பேசினா, சிரிக்கத்தான் செய்வேன். ஏம்மா, கற்பனையா இருந்தாலும் அதுல ஒரு நியாயம் வேணாமா? அந்த சமையல்காரி முகத்தைப் பாத்தியா? அவ மூஞ்சியும் ஆளும்… இருட்டுல நிறுத்தினா அவளைக் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு கருப்பா இருக்கா. அவளைப் போய் ரிஷி பாப்பானா? சரி, அழகுதான் இல்லைன்னா படிப்பு இருக்கா? அதுவும் கிடையாது. நம்ம அளவுக்கு வசதியும் கிடையாது. எதுவுமே இல்லாத அவளை எப்படி ரிஷி பாப்பான்?” என்று தாயை நோக்கினாள்.
“எல்லாம் சரிதான்… இருந்தாலும்…” என்று கல்யாணி யோசனையாக இழுக்க,
“இன்னும் என்னம்மா உனக்கு? போன வாரம் கூட ஒரு இன்டஸ்ட்ரியலிஸ்ட் பொண்ணு அலையன்ஸ் வந்துச்சு. அந்தப் பொண்ணு பார்க்க எப்படி இருந்துச்சு தெரியுமா? ஆக்டிங் பீல்ட்க்கு போயிருந்தா, இப்ப இருக்க லீடிங் ஆக்டர்ஸ்க்கு எல்லாம் செம்ம டஃப் கொடுத்து இருப்பா. அவளையே ரிஷி ஒரே வார்த்தையில வேணான்னு முடிச்சிட்டான். அப்படி இருக்கவன் இவளை பார்ப்பானா?” என்று வினாவுடன் தாயைப் பார்த்தாள்.
“ரிஷி பாக்க மாட்டான் சரி… ஆனா அந்தப் பொண்ணு இவனை மடக்க ஏதாவது ட்ரை பண்ணுச்சுன்னா?” என்று கல்யாணி நிறுத்த,
“மா, அவளுக்கெல்லாம் அவ்வளவு சீனே இல்ல. இப்ப சாப்பிடப் போகவிடாம பிடிச்சு நிறுத்தினோமே… என்ன பண்ணா? அமைதியாத்தான் நின்னுட்டு இருந்தா. அவ்வளவுதான் அவளோட லெவல். அது அவளுக்குத் தெரியணும்னுதான் அப்படி நிறுத்துனேன். அப்படியே அவளுக்கு நீ சொல்ற மாதிரி ஏதாவது எண்ணம் வந்தாலும், நான் அடிச்சு சொல்றேன்… ரிஷி அவளைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டான்,” என்று உறுதியாகக் கூறினாள்.
மேலும் கல்யாணி ஏதோ கூற வர,
“அம்மா, போதும்… நிறுத்து. எனக்கு அவ மூஞ்சியப் பாத்தாலே இரிடேட்டா இருக்கு. இதுல அவ போன பின்னாடியும் அவளைப் பத்தியே பேசிட்டு இருக்க. போ… போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாரு. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்,” என்றவள் மெத்தையில் படுத்துவிட,
அவர்கள் இருவரது உரையாடலையும் கேட்ட ரிஷிக்கும் ஷாலினிக்கும் தான் கோபத்தில் முகம் ஜிவுஜிவுத்தது.
“ச்சீ… இவங்க எல்லாம் என்ன ஜென்மம்ண்ணா! வாய் இருக்கிறதுன்றதுக்காக என்ன வேணா பேசுவாங்க போல. அந்தப் பொண்ணு மலர் பாவம். இதெல்லாம் கேட்டா எவ்வளவு கஷ்டப்படும்! இவ்வளவு படிச்சிருந்தும் புத்தியில்லாம பாடி ஷேமிங் பண்றாங்க. நம்ம யாமினி ஏஜ்தானே அவளுக்கும் இருக்கும். எப்படி தான் இப்படி பேச மனசு வருதோ!” என்ற ஷாலினியின் குரலில் கோபமும் வருத்தமும் போட்டி போட்டது.
“இந்த மாதிரி எதையும் பார்க்கப் பிடிக்காம தான் அங்கிருந்து இங்க வந்து தனியா இருக்கேன். இங்கேயும் வந்து இப்படி பண்ணிட்டு இருக்காங்க,” என்று அண்ணியின் மீது ரிஷிக்கு கோபம் பெருகியது.
“ஹரி வந்ததும் கண்டிப்பா இங்க நடந்ததைச் சொல்லி இவங்களை கண்டிக்கச் சொல்லணும். இப்ப நாம பேசினா, நாங்க பேசுறதை ஒட்டுக் கேட்டுட்டு வந்து சண்டை போடுறாங்கன்னு அம்மாவைக் கூப்பிட்டு ஒரு பெரிய இஷ்யூ ஆக்கிருவாங்க,” என்ற ரிஷி கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு கூற,
“ஆமாண்ணா, நிச்சயமா சொல்லணும். வா, நம்ம போவோம். இங்கிருந்து இவங்க பேசுறதைக் கேட்டா இன்னும் நமக்கு டென்ஷன் தான் ஆகும்,” என்றவள் ரிஷியைக் கையோடு மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அறைக்குச் சென்றதும் உடை மாற்றி வந்த ரிஷி, அமைதியாக சாய்ந்தமர்ந்தவன் விழிகளை மூடிக்கொண்டான்.
இங்கு வீட்டிற்கு வந்து உண்டு விட்டு படுக்கையில் விழுந்தவளுக்கு, கோபத்தில் முகம் முழுவதும் சிவந்து நின்ற ரிஷியின் நினைவு வந்தது.
‘ப்பா… சார் எவ்வளவு கோபப்படுறாரு! இவரைப் போய் அமைதியான, சாந்தமான மனுஷன்னு நினைச்சிட்டு இருந்தேனே!’ என்று எண்ணியவள், மனதிற்குள் தூரிகாவையும் ராதாவையும் திட்டினாள்.
“பணமிருந்தா பெரிய இதுன்னு நினைப்பு. ரிஷி சாரும் ஷாலினி மேடமும் எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க! அவங்க இருக்க வீட்டுல தான் இவங்களும் இருக்காங்க. அதுவும் அந்த வில்லி தூரிகாவுக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுதுனு தெரியல…” என்று பலவாறு புலம்பியவள், வேலை செய்த அசதியில் உறங்கிப் போனாள்.
அலாரம் வைத்து விட்டு உறங்கியதால், சரியாக ஐந்து மணிக்குத் தயாராகி ரிஷியின் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினாள்.
ரிஷி வந்து கதவைத் திறக்க,
“குட் ஈவினிங், ரிஷி சார்,” என்று வழக்கம் போல மலர் புன்னகைக்க,
ரிஷிக்கு அவளது முகத்தைக் கண்டதும், “இருட்டுல நிறுத்தினா அவளைக் கண்டுபிடிக்கவே முடியாது…” என்ற தூரிகாவின் குரல் காதுக்குள் ஒலிக்க, வழக்கத்தை விட சில நொடிகள் அதிகமாய் அவளைப் பார்த்தவன் தலையசைத்து வழிவிட்டான்.
“வந்துட்டீங்களா மலர்?” என்றபடி உள்ளே வந்தாள் ஷாலினி.
“இப்பதான் வந்தேன்,” என்று புன்னகைத்த மலர் தனது பணியைக் கவனிக்க,
குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஒரு பெரிய கேக்கை வெளியே எடுத்தாள் ஷாலினி.
மலர் திரும்பி அதனைப் பார்க்க,
“என்ன பாக்குறீங்க? வாங்க மலர். அண்ணா பர்த்டேக்கு கேக் கட் பண்ணப் போறோம். நேத்து வர வேண்டியது, வர முடியல. வாங்க,” என்று ஷாலினி அவளை அழைத்தாள்.
“இல்ல… நான் எதுக்கு? வேணாம்,” என்று மலர் நாகரீகமாய் மறுக்க,
“அட வாங்க மலர்,” என்று அவளது கையைப் பிடித்து கூடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
டீப்பாயின் மீது கேக்கை அதன் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வைத்தவள்,
“ரிஷி அண்ணா… ஹரி அண்ணா… அண்ணி… அம்மா… அத்தை… எல்லாரும் வாங்க!” என்று குரல் கொடுத்தாள்.
அவளது அழைப்பைக் கேட்ட அனைவரும் வெளியே வர,
“சர்ப்ரைஸ்!” என்றபடி ரிஷியைப் பார்த்து கண்ணடித்து புன்னகைத்தாள்.
தங்கையின் செயலில் தானும் கீற்றாய்ப் புன்னகை சிந்தியவன்,
“எதுக்குடா இதெல்லாம்? நான் என்ன குழந்தையா?” என்று வினவியபடி வர,
“குழந்தை தான் கேக் வெட்டணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன? வாங்கண்ணா… செலிப்ரேட் பண்ணலாம்,” என்று அவனது கையைப் பிடித்து அழைத்து வந்தாள்.