இதயம் 6.2

மலர் மெதுவாய் தலையசைக்க,
“நான் யாருன்னு தெரியுமா உங்களுக்கு?” என்று ஷாலினி கேள்வி கேட்க, “ம்ஹூம்… தெரியாது. சாரோட தங்கச்சியா?” என்று வினவினாள்.

“ஆமா. பேஸ்கட்டே தெரியுதா?” என்று ஷாலினி கேள்வி எழுப்ப,
“ஆமாங்க, மேடம். உங்களுக்கும் ரிஷி சாருக்கும் முக ஜாடை ஒரே மாதிரி இருக்கு,” என்று மலர் பதில் கொடுத்தாள்.

“இந்த மேடம் வேண்டாமே. ஷாலினின்னு கூப்பிடுங்க. மேடம்னு கூப்பிடுறது ஒரு மாதிரி டிஃபரண்டா இருக்கு,” என்று ஷாலினி கூற, “எனக்கு அப்படித்தான் கூப்பிட வருது. இருக்கட்டுமே,” என்று மலர் விழிகளைச் சுருக்கி அவளைக் கண்டாள்.

“உங்களைப் பாத்தா என்னைவிட சின்ன பொண்ணாத்தான் தெரியுது. அக்கான்னு கூப்பிடுங்களேன்,” என்று ஷாலினி கூற, “இல்ல…” என்றவள் தயங்கி அவளது முகம் பார்த்தாள்.

“என்ன, அக்கான்னு கூப்பிட பிடிக்கலையா?” என்று ஷாலினி கேள்வி தொடுக்க, “அப்படியெல்லாம் இல்லைங்க. ராதா மேடம் அப்படித்தான் கூப்பிடச் சொல்லி இருக்காங்க,” என்றாள் மலர்.

“ஓ…” என்று இழுத்த ஷாலினி, “அம்மா சொன்னாங்க, நீங்க ஃபிஷ் சேல் பண்ணிட்டு வந்து இங்க ஒர்க் பண்றீங்கன்னு. அப்புறம் காலேஜ் கூட படிக்கிறீங்கன்னு சொன்னாங்க,” என்று கூற, “ஆமாங்க, மேடம். காலையில் மீன் வியாபாரம் பார்த்துட்டு, இங்க வந்து ரிஷி சாருக்கு சமைச்சு வச்சுட்டு காலேஜுக்குப் போயிடுவேன்,” என்று மலர் பதில்மொழிந்தாள்.

“எப்படி இவ்வளத்தையும் மேனேஜ் பண்றீங்க? நான் பிஎச்.டி. பண்ணிட்டு இருக்கேன். எனக்கு அது ஒண்ணை மேனேஜ் பண்ணவே கஷ்டமா இருக்கு,” என்று ஆச்சரியமாய் ஷாலினி வினவ, “அது முதல்லதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் பழகிடுச்சு,” என்று சின்னதாய் புன்னகைத்தாள் மலர்.

பின்னர் சில கணம் அமைதியாய் கழிய, “அது… எங்க அண்ணி கொஞ்சம் அப்படித்தான். எப்போவாவது கோவமா பேசுவாங்க. நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க,” என்று தயக்கத்துடன் கூற,
மலருக்கு எதிரில் இருந்தவளைப் பிடித்துவிட்டது.

பெரியவள் பேசியதற்கு வயதில் சிறியவள் வந்து மன்னிப்பு கேட்பதில் இவளுடைய பக்குவம் தெரிந்தது.

கீற்றாய் முளைத்த புன்னகையுடன், “நான் எதுவும் நினைக்கலைங்க. பத்து மணிக்கு வந்துருவேன்னு மேடம் சொல்லியும் இங்கே இருக்காதது என்னோட தப்புதானே,” என்று கூற, “வி ஆர் ஜஸ்ட் ஹியூமன் பீயிங்ஸ். ரோபோட் இல்லையே. எல்லாமே சரியான நேரத்தில் எப்பவுமே இருக்கணும்னு முடியாது,” என்று ஷாலினி கூற,
மலரும் அதனை அமோதித்தாள்.

“உங்க வீடு எங்க இருக்கு? நீங்க இந்த ஏரியாதானா?” என்று ஷாலினி வினவ, “ஆமாங்க, மேடம். இங்கதான் பக்கத்துல. நடந்து போனா ஒரு பத்து, பதினைஞ்சு நிமிஷத்துல போயிடலாம்,” என்று மலர் பதில் இயம்பினாள்.

“உங்க அம்மா, அப்பா என்ன பண்றாங்க?” என்று ஷாலினி கேள்வி எழுப்ப, “எனக்கு அப்பா இல்ல. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க,” என்று தனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களைப் பற்றி கூற, ஒற்றை ஆளாய் குடும்பப் பாரத்தைத் தூக்கிச் சுமக்கிறாள் என்று மலரின் மீது ஷாலினிக்கு மதிப்பு கூடியது.

“உங்களைப் பாத்தா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. பார்க்க ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கீங்க. ஆனா மொத்த குடும்பத்தையும் ஒரே ஆளா பார்த்துக்கிறீங்க,” என்று வியப்பு நீங்காமல் கேட்க,
மலரிடம் மிதமான புன்னகையே பதிலாக வந்தது.

ஷாலினியுடன் பேசியபடியே தேநீரை தயாரித்து முடித்தவள், “டீ எடுத்துக்கோங்க,” என்று ஒரு குவளையை எடுத்து அவளிடம் நீட்ட, “தேங்க்யூ. உங்களுக்கு?” என்று பதில் வினவினாள்.

“இல்ல. காலையில சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்கு,” என்று மென்மையாய் மறுத்துவிட்டவள், வெளியில் இருந்தவர்களிடம் சென்று தேநீரைக் கொடுத்தாள்.

குவளையை எடுத்துக்கொண்ட ராதா, மருமகளிடம், “தூரிகா, மதியத்துக்கு என்ன சமைக்க சொல்லலாம்?” என்று வினவினார்.

“எனக்கு வெஜிடபிள் புலாவ் வேணும்,” என்று தூரிகா கூற,
“எனக்கு வத்தக் குழம்பும் சாதமும் சாப்பிடணும் போல இருக்கு,” என்று தூரிகாவின் தாய் கல்யாணி கூறினார்.

“எனக்கு சாம்பார் வச்சு உருளைக்கிழங்கு பொரிச்சிடு. என் மருமகளுக்கு வெஜிடபிள் புலாவும், கோபி மஞ்சூரியனும் செஞ்சிடு. அப்புறம் அன்னிக்கு வத்தக் குழம்பு வச்சு, அப்பளம் பொரிச்சிரு. மறக்காம ரசமும் வச்சிரு,” என்று ராதா கூற,
சம்மதமாய் தலையசைத்தவள் சமையலறை சென்று வேலை பார்க்கத் தொடங்கினாள்.

“நான் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணவா?” என்ற ஷாலினியின் குரல் மலரின் செவியை அடைய, “இல்ல, வேண்டாம். உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே செஞ்சுருவேன்,” என்று மலர் பதிலளித்தாள்.

“இதுல என்ன சிரமம் இருக்கு? நான் சும்மாதான் இருக்கேன். அதான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன். குடுங்க, அந்த வெஜிடபிள்ஸ் நான் கட் பண்றேன்,” என்றவள் மலரின் கையில் இருந்த கத்தியை வாங்கி காய்கறிகளை நறுக்கத் தொடங்கினாள்.

“எல்லாரும் அவங்களுக்கு பிடிச்சதை சொன்னாங்க. உங்களுக்கு என்ன வேணும்?” என்று மலர் கேட்க, “அதான் இவ்வளவு செய்றீங்களே. அதுல ஏதாவது ஒண்ணு சாப்பிடுகிறேன்,” என்று ஷாலினி புன்னகையுடன் பதிலளித்தாள்.

“உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. நான் செய்றேன்,” என்று மலர் மீண்டும் வினவ,
“நீங்க செய்றது எல்லாமே எனக்கு புடிச்சதுதான். எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக்கிறேன்,” என்று மாறாத புன்னகையுடன் ஷாலினி கூற, மலரின் கண்களுக்கு அந்தப் புன்னகை அவ்வளவு அழகாய்த் தோன்றியது.

“நீங்க சிரிக்கும்போது அழகா இருக்கீங்க,” என்று மனதில் தோன்றியதை மறைக்காமல் மலர் கூறிவிட,‌ “தேங்க்ஸ்,” என்று இமை நீண்ட புன்னகையைச் சிந்தினாள்.

மலருக்கு, ‘இவ இந்த வீட்டில் தப்பிப் பிறந்துட்டாளோ?’ என்று எண்ணம் வந்தது. இருவரும் பேசியபடியே சமையலைத் தொடர, ஷாலினியின் அலைபேசி இசைத்தது.

“மலர், நீங்க பாத்துட்டு இருங்க. நான் கால் பேசிட்டு வரேன்,” என்றவள் கூற, “அதான் ஓரளவுக்கு எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சே. இனிமே நான் பாத்துக்குறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க,” என்ற மலர் கடாயை அடுப்பில் ஏற்றினாள்.

சாம்பாரை தாளித்து இறக்கி வைக்க, பின்புறம் யாரோ வரும் அரவம் கேட்டது. திரும்பிப் பார்க்க, தூரிகா நின்றிருந்தாள்.

‘இந்த வில்லி எதுக்கு வந்து இருக்கா?’ என்று எண்ணிய மலர்,
“எதும் வேணுமா, மேடம்?” என்று வினவினாள்.

“எங்க வீட்ல இருந்துட்டு நீ என்கிட்டயே என்ன வேணும்னு கேக்குற?” என்று நக்கலாக தூரிகா கேட்க, சாதாரணமாக கேட்டதை இப்படி குதர்க்கமாக எடுத்துக்கொள்கிறாளே என்று எண்ணிய மலர், பதிலற்று அவளை நோக்கினாள்.

“என்ன, பதிலையே காணோம்?” என்று கேட்ட தூரிகா, “உன்னோட சேலரி எவ்வளவு?” என்று வினவினாள்.

“பன்னெண்டாயிரம், மேடம்,” என்று மலர் பதில்மொழிய,
“ஒரு ஆளுக்கு சமைச்சு, வீடு கிளீன் பண்ண உனக்கு பன்னெண்டாயிரமா?” என்று போலியாக ஆச்சரியப்பட்டவள்,
“ரிஷிக்கு ஃபிஷ் ஸ்மெல்லே ஆகாது. ஆனால் எப்படி உன்னை வேலைக்கு வச்சுக்கிட்டான்?” என்று யோசிப்பது போல பாவனை செய்தாள்.

‘மலர், இது என்னடா புது தலைவலி?’ என்று எண்ணியவாறு அவளைக் காண,
“இந்த வேலைக்காகத்தான் சென்ட் போட்டு குளிச்சிட்டு வரியா நீ?” என்று தூரிகா வினவினாள்.

மலரின் தலை ஆம் எனும் விதமாக மேலும் கீழும் அசைய,
“இது ஃபாரின் சென்ட்தானே? ரொம்ப காஸ்ட்லி ஆச்சே. உன்கிட்ட எப்படி இருக்கு?” என்று தூரிகா சந்தேகமாக வினவ,
“இந்த வீட்டுல முன்னாடி இருந்த சுதாகர் அண்ணா வெளிநாடு போகும்போது வாங்கிட்டு வந்து குடுத்தாங்க,” என்று மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

“ஓ…” என்று இழுத்தவள், மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்துவிட்டு,
“உனக்கு எதுக்கு கிச்சன்ல ஃபேன்? கரண்ட் பில் நீயா கட்ற?” என்று கூறியவாறு மின்விசிறியை பட்டென்று அணைத்திருந்தாள்.

மலர் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் எதிரில் இருந்தவளைக் காண,
“அத்தை சொன்ன எல்லாத்தையும் சமைச்சிட்டியா?” என்று வினா தொடுத்தாள் தூரிகா.

“ஓரளவுக்கு எல்லாத்தையும் முடிச்சுட்டேன், மேடம். இன்னும் வத்தக் குழம்பும் அப்பளமும் மட்டும்தான் இருக்கு,” என்று மலர் பதில் இயம்ப, “ஹ்ம்ம்… சீக்கிரம் முடி,” என்றவள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

‘என்னடா இது? இந்த வில்லிக்கு உடம்பு முழுக்க திமிரா இருக்கு. மாமியாரை விட மருமகளை சமாளிக்கிறதுதான் பெரிய விஷயம் போலயே,’ என்று மனதிற்குள் நொந்தவள், பாதியில் விட்ட வேலையைத் தொடர, மின்விசிறி சுழலாததால் வேர்த்து வடிந்தது.

சரியாக ஒரு மணிக்கு அனைவரும் உண்ண வர, அவர்களுக்குப் பரிமாறி முடித்து, பாத்திரங்களை கழுவி வைத்தவளுக்கு களைப்பில் பசித்தது.

ராதாவிடம் கேட்டுவிட்டு செல்லலாமா என்று எண்ணிக்கொண்டிருக்க,
“நீங்க சாப்பிடலையா, மலர்?” என்று வினவினாள் ஷாலினி.

“இதோ வீட்டுக்குச் சாப்பிடப் போகணும்,” என பதில்மொழிய,
“இங்கேயே சாப்பிட வேண்டியதுதானே, மலர்? சாப்பாடு நிறையதானே இருக்கு,” என்று ஷாலினி பதில் வினவினாள்.

“இல்ல, நான் என் வீட்டுக்குப் போய் சாப்பிடுகிறேன்,” என்று பதில்மொழிந்தவள், ராதாவிடம் சென்று உண்டு விட்டு வருவதற்கு அனுமதி கேட்க,
ராதா பதில் கூறும் முன், “ரிஷி கொஞ்ச நேரத்துல வந்துருவான். அவன் வந்து சாப்பிட்டதும் எல்லாத்தையும் கழுவி ஒதுங்க வச்சுட்டு நீ கிளம்பு,” என்று தூரிகா பதிலளித்தாள்.

“அண்ணி, அண்ணா வர எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. அவங்க எப்படி பசியோட காத்திருப்பாங்க? ஈவினிங் வந்து கிளீனிங் ஒர்க் பார்த்துக்கட்டும்,” என்று ஷாலினி மலருக்கு ஆதரவாகப் பேச, “அதுவரைக்கும் கிச்சன் அப்படியே இருக்குமா? நீ பேசாம இரு. சும்மாவா இவளை வேலை வாங்குறோம்? சம்பளம் கொடுக்கறோம் தானே! ஒரு நாள் லேட்டா சாப்பிட்டா ஒன்னும் ஆகாது. நீ பேசாம இரு,” என்று அவளது வாயை மூடிவிட்டாள் தூரிகா.

மலரும் வேறு வழியின்றி தலையசைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றவள்,

‘இந்த வில்லிக்கு நம்ம மேல அப்படி என்ன கடுப்பு? வந்ததுல இருந்து எரிஞ்சு விழுந்துகிட்டே இருக்கு,’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

வெளியே சென்று இருந்த ரிஷி இரண்டு மணிக்குத்தான் வீட்டிற்கு வந்தான்.

மகனைக் கண்டதும், “கண்ணா, சாப்பிட வாப்பா,” என்று ராதா அழைக்க, “நான் வெளியவே சாப்பிட்டு வந்துட்டேன், ம்மா,” என்று பதிலளித்தவன் அறைக்கு உடை மாற்றச் சென்றான்.

இதனைக் கேட்ட மலர், ‘கொடுமைக்காரங்களா! அவர் சாப்பிட்டு வந்துட்டாராம். இவ்வளவு நேரம் என்னைப் பசியோட இருக்க வச்சிட்டீங்களே!’ என்று புலம்பியபடி ராதாவைக் கண்டாள்.

“அவன் சாப்பிட்டு வந்துட்டானாம். போய் எல்லாத்தையும் எடுத்து ஒதுங்க வச்சுட்டு, பாத்திரத்தை விளக்கிட்டு கிளம்பு,” என்க,
மலர் சிறிய தலையசைப்புடன் பாத்திரங்களை எடுத்து ஒதுங்க வைக்கத் தொடங்கினாள்.

இதனைக் கண்ட ஷாலினி அண்ணனின் அறைக்குச் சென்றாள். மாற்றுடை எடுத்துக்கொண்டிருந்த ரிஷி, ஷாலினியைக் கண்டதும்,
“என்னடாம்மா?” என்று கேட்க,
“அண்ணா, மலர் பாவம் ண்ணா. அம்மாவும் அண்ணியும் அவங்கள சாப்பிடப் போக விடாம கொடுமை படுத்திட்டு இருக்காங்க,” என்று நடந்ததைக் கூற, ரிஷி முகத்தில் திகைப்பு.

“அவங்கள போய் சாப்பிட்டு வர சொல்லுங்க, அண்ணா,” என்று ஷாலினி கூற, கையில் இருந்த உடையை வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றான் ரிஷி.

பாத்திரத்தை எடுத்து போட்டு விளக்கிக்கொண்டிருந்தவள்,
“மலர்…” என்ற ரிஷியின் குரலில் திரும்பி, “சொல்லுங்க, ரிஷி சார். ஏதாவது வேணுமா?” என்று கேட்டாள்.

பசியின் காரணத்தால் களைத்து முகம் வாடிப்போயிருந்தவளது நெற்றியில் இருந்து வியர்வை பூத்து வடிந்தது. அதனைப் புறங்கையால் துடைத்தவள் அவனை மௌனமாய் பார்த்தாள்.

எப்போதும் புன்னகையுடன் வலம் வருபவளை இந்நிலையில் கண்டதும், அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

error: Content is protected !!
Scroll to Top