இதயம் 6.1

இதயம் – 6

“பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகத் தொல்லையோ…?” என்று அலைபேசியில் பாடல் இசைத்துக்கொண்டிருக்க, அதனோடு தானும் மெல்லிய குரலில் பாடியபடி இருந்த மலர், கடாயில் நெய்யை ஊற்றி, தேங்காயை சின்னதாக நறுக்கிப் போட்டு வதக்கினாள்.

பிறகு, தான் அரைத்து வைத்திருந்த கலவையை அதில் கொட்டி, இரண்டு நிமிடங்கள் கிளறி முடித்தவள், கரண்டியில் இருந்ததை எடுத்து ஊதி தன் வாயிலிட, அது பாகாய் கரைந்து போனது.

“சூப்பரா வந்திருக்கு இந்த திரட்டி பால்! மலரு, நீ ஒரு பெரிய செஃப் டி,” என்று வழக்கம் போல தன்னைத்தானே பாராட்டிக்கொண்டவள், தான் செய்த இனிப்பை கிண்ணத்திற்கு மாற்றி, ஒரு கரண்டியையும் அதில் வைத்தாள்.

ரிஷி குளித்து தயாராகி வெளியே வர, “சார், சாப்பாடு ரெடி,” என்று சமையலறை வாயிலிருந்து குரல் கொடுத்தாள்.

அலைபேசியை மின்னூக்கியில் இணைத்தவன், உணவுண்ண வந்து அமர்ந்தான்.

அவன் முன்பு தான் செய்த இனிப்பை எடுத்து வந்து வைத்தவள், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரிஷி சார்,” என்று புன்னகையுடன் வாழ்த்தைக் கூற, அதனை ஒரு கணம் எதிர்பாராது திகைத்தவன், பின் சுதாரித்து, “தேங்க்ஸ், மலர்,” என்று மெலிதாகப் புன்னகைத்தான்.

“உங்க பிறந்தநாளுக்கு ஸ்பெஷலா செய்யணும்னுதான் ஸ்வீட் செஞ்சிருக்கேன், ரிஷி சார். சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க,” என்றவள் கிண்ணத்தை அவன் புறம் தள்ளினாள்.

பார்ப்பதற்கு அல்வா போல இருந்த அந்த இனிப்பைக் கண்டவன், “இது என்ன டிஷ்?” என்று வினவ, “இது தேங்காய் திரட்டி பால், ரிஷி சார். கோயம்புத்தூர் சைடுல பேமஸான ஸ்வீட்,” என்று மலர் பதில்மொழிந்தாள்.

ரிஷி அதனை சிறிதளவு கரண்டியில் எடுத்து வாயில் வைத்து சுவைத்தான். சுவை மிகவும் நன்றாக இருந்தது. அவன் இதற்கு முன்பு இந்த இனிப்பை உண்டதில்லை.

அவன் முகத்தையே ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தவள், “நல்லா இருக்கா, ரிஷி சார்? இன்னைக்குத்தான் முதல் தடவையா இந்த ஸ்வீட்டை நான் ட்ரை பண்றேன்,” என்று வினா எழுப்ப, “ஹ்ம்ம்… நல்லா இருக்கு,” என்று ரிஷி பதில்மொழிந்தான்.

அவனது பதிலில் வெகுவாய் மகிழ்ந்து போனவள், “தேங்க்ஸ், ரிஷி சார். ராதா மேடம் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வச்சிருந்தாங்க. அதைப் பாத்துத்தான் உங்களுக்கு பிறந்தநாள்னு தெரிஞ்சுகிட்டேன்,” என்றவள் சமையலறைக்குச் சென்று சமைத்த உணவுகளை எடுத்து வந்தாள்.

“இன்னைக்கு உங்களுக்கு பிடிச்சதா சமைச்சிருக்கேன், சார்,” என்றவள் பன்னீர் புலாவ், வெஜிடபிள் கிரேவி, கோபி மஞ்சூரியன் என அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அங்கிருந்து நகர, ரிஷி உணவை எடுத்து வைத்து உண்ணத் தொடங்கினான்.

மலர், அவனது பிறந்த நாளுக்காக பார்த்துப் பார்த்து சமைத்திருந்ததால், உணவு வழக்கத்தை விட நன்றாக இருந்தது.

மலர் சமைத்த பாத்திரங்களை ஒதுங்க வைத்துக்கொண்டிருக்க, சாப்பிட்டு முடித்து வந்தவன் கையைக் கழுவிவிட்டு, “மலர், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு,” என்று பாராட்ட,
“ரொம்ப நன்றி, ரிஷி சார். உங்களுக்காக பார்த்துப் பார்த்து சமைச்சேன்,” என்றவளது முகம் புன்னகையில் மிளிர்ந்தது.

சுதாகரது பிறந்தநாளுக்கு தனது வீட்டில் இனிப்பை செய்து எடுத்து வந்து கொடுப்பாள். ஆனால், ரிஷிக்கு அவ்வாறு செய்யவில்லை. காரணம், தன் கைப்பட்ட உடையையே உடுத்த விருப்பமில்லாது மற்றொருவரிடம் கொடுத்தவன், தான் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்ததை உண்பானா என்ற சந்தேகம்தான்.

அவன் தானாகவே வந்து பாராட்டியதில் உச்சி குளிர்ந்து போனவள், இதழில் உறைந்த சிரிப்புடன் பணியை முடித்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்.

வெளியேறும் சமயம், “மலர், நாளைக்கு என்னோட வீட்ல இருந்து எல்லாரும் வராங்க. ரெண்டு நாள் இங்கேதான் ஸ்டே. அவங்க எல்லாருக்கும் சேர்த்து குக்கிங், மத்த வொர்க்ஸும் பாக்கணும்,” என்று ரிஷி கூற,
“சரிங்க, சார்,” என்றவளது முகத்திலிருந்த ஒளி மங்கியது.

காரணம், நிறைய ஆட்களுக்கு வேலை செய்வது அல்ல. ராதா ஒருவரை சமாளிப்பதுதான். என்ன வேலை செய்தாலும் ஏதாவது குற்றம், குறை கூறுவாரே என்று மனதிற்குள் அலறியவள், “காய்கறி எல்லாம் கொஞ்சம் வாங்கணும், சார். உங்களுக்கு மட்டும் இருக்குது,” என்று மொழிய,

ரிஷி அறைக்குச் சென்று பணத்தை எடுத்து வந்து மேஜை மீது வைத்தான்.

“சிக்கன், மட்டன் எதுவும் வாங்கிட்டு வரவா, சார்?” என்று பணத்தை எடுத்துக் கொண்டவள் வினா தொடுக்க, “நோ. அவங்க ஏதோ பூஜை பண்றதுக்காக வராங்க. ரெண்டு நாளைக்கு நான்-வெஜ் கிடையாது. பூஜை முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்,” என்று பதிலளித்தான்.

“சரிங்க, சார். நான் கிளம்புறேன்,” என்று வெளியே வந்தவள், ‘ரெண்டு நாளைக்கு உனக்கு சங்கு தான், மலரே!’ என்று நினைத்தபடி கல்லூரி சென்றாள்.

மாலை கல்லூரி முடிந்து வழக்கம் போல பணிக்கு வந்தவள், ரிஷிக்கு காபியைப் போட்டுக் கொடுத்துவிட்டு, வீட்டைப் பெருக்கித் துடைக்கத் தொடங்கினாள்.

கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தவன், புருவம் சுருக்கி அவளைக் கண்டான். காரணம், காலையில்தான் வீட்டைப் பெருக்கித் துடைத்தாள். இப்போது மீண்டும் செய்கிறாளே என்றுதான்.

அவனது பார்வையை கவனிக்காதவள், வெகுசிரத்தையாக, சிறு தூசி கூட தப்பிவிடக்கூடாது என்று மாப்பை போட்டுக்கொண்டிருந்தாள்.

சில நொடிகள் அவளைக் கண்டவன், கேட்டுவிடலாம் என நினைத்து, “மலர்…” என்று அழைத்திட, அவள் கவனிக்கவில்லை. கவனம் முழுவதும் துடைப்பதிலேயே இருந்தது.

மீண்டும், “மலர்…” என்று உரத்த குரலில் அழைக்க, “ஆங்… சொல்லுங்க, சார்,” என்று நிமிர்ந்து அவனது முகம் கண்டாள்.

“மார்னிங்தானே வீட்டை கிளீன் பண்ணுன? இப்போ எதுக்கு அகைன் செய்ற?” என்று ரிஷி அவளை கேள்வியாகப் பார்க்க,
“அது உங்க வீட்ல இருந்து எல்லாரும் வராங்கல, சார். வீடு சுத்தமா இருக்கணும்ல, அதான்,” என்று பதில் அளித்தாள்.

“ஏற்கனவே சுத்தமாத்தானே இருக்கு?” என்று ரிஷி விடாது கேள்வி கேட்க, “அது ராதா மேடம் ரொம்ப சுத்தம் பாப்பாங்களே, சார். அன்னைக்கு முதல் நாள் நான் வேலை பார்க்கும்போதே, ‘நான் வரும்போது வீடு கண்ணாடி மாதிரி பளபளன்னு இருக்கணும்’னு சொல்லி இருந்தாங்க, சார். அதான்,” என்றவள் மீண்டும் துடைக்கும் பணியைப் பார்த்தாள்.

ரிஷி மெல்லிய தலையசைப்புடன் தொலைக்காட்சியில் விழிகளைப் பதிக்க, மலரோ மனதிற்குள், ‘உங்க அம்மா சரியான நொச்சு. உங்ககிட்ட சொல்லவா முடியும், சார்? அதான் ஒண்ணுக்கு ரெண்டு தடவை தொடச்சிட்டு இருக்கேன்,’ என்று புலம்பியவாறு அறையைத் துடைக்கச் சென்றாள்.

முதுகு வலிக்க, முழு வீட்டையும் துடைத்து, பெருக்கி, ஒட்டடை அடித்தவள் நிமிர்ந்து விழிகளால் நோட்டமிட்டாள். வைத்த பொருள் வைத்தபடியே பளபளவென்று மின்னியது ஒவ்வொரு அறையும்.

‘அப்பாடா… இனிமே அந்த அம்மா எந்தக் குறையும் சொல்ல முடியாது. எல்லாத்தையும் பக்காவா முடிச்சுட்டேன்,’ என்று மனதிற்குள் நிம்மதி அடைந்தவள், இரவு உணவை முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.

மறுநாள் காலை, மலர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு ரிஷியின் வீட்டிற்குள் நுழையும் போதே, ராதா மலருக்கு அழைத்துவிட்டாள்.

அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க, மேடம்,” என்று தொடங்க, “பத்து மணிக்கு நாங்க எல்லாரும் அங்க இருப்போம். மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் அங்கதான். நாலு பேருக்கு சேர்த்து குக் பண்ணு,” என்று ராதா கூறினார்.

“சரிங்க, மேடம். என்ன சமைக்கணும்?” என்று மலர் கேள்வி கேட்க, “தோசையும், சாம்பார், சட்னியும் செஞ்சுரு. அப்புறம் ஷாலினிக்கு தோசை பிடிக்காது. அவளுக்கு சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும் வைச்சிடு. என் மருமகளுக்கு கீ ரைஸும், பன்னீர் பட்டர் மசாலாவும் செஞ்சிரு. இப்போதைக்கு இது போதும். லஞ்சுக்கு என்ன பண்ணனும்னு நான் வந்து சொல்றேன்,” என்று பெரிதாகப் பட்டியலிட்டார்.

“சரிங்க, மேடம்,” என்று அழைப்பைத் துண்டித்தவள்,
‘ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சாப்பாடு சாப்பிடுவாங்க போல. இந்தப் பணக்காரங்க வீட்ல… நம்ம வீட்டுல எல்லாம் காலையில செஞ்சதைதான் நைட் வரைக்கும் சாப்பிடுறோம்,’ என்று எண்ணியவள் கடகடவென சமையல் வேலையைத் தொடங்கினாள்.

அன்று சனிக்கிழமை என்பதால் மலருக்கு கல்லூரி விடுமுறையாக இருந்தது. இல்லை என்றால், இவ்வளவும் சமைத்து முடித்துவிட்டு செல்ல நிச்சயம் நேரமாகி இருக்கும்.

நேற்றே வீட்டை சுத்தம் செய்யும் வேலை முடிந்து இருந்ததால், சமையல் வேலை மட்டும்தான் இருந்தது. கடகடவென இரண்டு அடுப்பிலும் ஒவ்வொன்றாக ஏற்றி இறக்கியவள், ஒன்பதரைக்கே சமையல் வேலையை முடித்திருந்தாள்.

காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரே ஒரு டீ குடித்தது. வயிறு கபகபவென்று பசியில் எரிந்தது.
இன்னும் அவர்கள் வருவதற்கு அரை மணி நேரம் இருப்பதால், வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு வந்துவிடலாம். அவர்கள் வந்த பிறகு சாப்பிட நேரம் இருக்குமோ, இல்லையோ என்று எண்ணியவள், ரிஷியிடம் கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றாள்.

கடகடவென்று உண்டு முடித்தவள், மணியிடம் இருசக்கர வாகனத்தை கடன் வாங்கிக்கொண்டு வந்திருந்தாள். மலர் வீட்டினுள் நுழைய, ரிஷியின் குடும்பத்து பெண்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

ராதா இவளைக் கண்டதும், “எங்க போயிட்டு வர? நீ பத்து மணிக்கு நாங்க வந்துருவோம்னு சொன்னேன் தானே?” என்று அதட்டலாகக் கேட்க, “சாப்பிடப் போயிருந்தேன், மேடம்,” என்று தன்மையாகவே மலர் பதிலளித்தாள்.

“சாப்பிடப் போயிருந்தா சீக்கிரம் வரமாட்டியா? சமைச்சு வச்சா போதுமா? எங்களுக்கு யாரு சர்வ் பண்ணுவா? நாங்களே எடுத்து வச்சா சாப்பிட முடியும். அப்படி சாப்பிடுறதுக்கு எதுக்கு உனக்கு சம்பளம் தர்றோம்?” என்றொரு குரல் அதிகாரத்தைத் தாங்கி வர, மலரது பார்வை அத்திசையில் திரும்பியது.

இருபதுகளின் இறுதியில் இருந்த பெண்ணொருத்தி, கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தாள். அவள் தூரிகா, ரிஷியின் அண்ணன் மனைவி. அவளது விழிகள் மலரை முறைத்துக்கொண்டிருந்தது.

‘யார்ரா இது? சீரியல் வில்லி மாதிரியே இருக்கா பார்க்க…’ என்று மனதிற்குள் எண்ணிய மலர், “சீக்கிரம் வந்துரலாம்னுதான் போனேன், மேடம்,” என்று தணிந்த குரலில் பதில்மொழிந்தாள்.

மீண்டும் தூரிகா கோபமாக ஏதோ சொல்ல வர, “எனக்கு பசிக்குது. வாங்க, சாப்பிடப் போலாம்,” என்றவாறு எழுந்துகொண்ட ஷாலினி, அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

மலர், அவர்கள் வந்ததும் அமைதியாகப் பரிமாறத் தொடங்கினாள். “ஏய், உன் பேர் என்ன?” என்று தூரிகாவிடமிருந்து கேள்வி வர,
“மலர், மேடம்,” என்று பதில் அளித்தாள்.

“மலர்…” என்று நிறுத்திவிட்டு அவளை ஒரு கணம் பார்த்தவள், “போய் அப்பளம் பொரிச்சு எடுத்துட்டு வா. ஆயில் இல்லாம ஏர் ப்ரையர்ல பண்ணனும். பண்ணத் தெரியும்தானே?” என்று வினா எழுப்ப, “தெரியும், மேடம்,” என்றவள் அப்பளத்தைப் பொரித்து எடுத்து வரச் சென்றாள்.

‘இவங்க என்ன இந்த அம்மாவுக்கு மேல இருக்காங்க? மாமியாருக்கேத்த மருமகதான். யப்பா… பணத்திமிரு!’ என்று மனதிற்குள் திட்டியவள் அப்பளத்தைப் பொரித்து எடுத்து வந்தாள்.

சாப்பிட்டவுடன், ராதா, “மலர், எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வா,” என்று இயம்ப, தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றாள்.

பாலை அடுப்பில் வைத்தவள், டீத்தூளை எடுத்து போட, பின்னால் நிழலாடியது. திரும்பிப் பார்க்க, ரிஷியின் தங்கை ஷாலினி நின்றிருந்தாள்.

“ஏதாவது வேணுமா, மேடம்?” என்று மலர் அவளைப் பார்த்து வினவ, “ம்ஹூம்… எதுவும் வேணாம்,” என்றவாறு அவள் அருகே வந்து திண்டில் சாய்ந்தவாறு நின்றவள், “ஐ அம் ஷாலினி,” என்று கையை நீட்டினாள்.

அவளிடம் இருந்து சினேக பாவத்தைக் கண்டவள், சிறு புன்னகையுடன், “நான் கருணை மலர்,” என்று பதில் கூற,
“கருணை மலர்… பேர் ரொம்ப டிஃபரண்டா இருக்கே,” என்று ஷாலினி வினவினாள்.

“அது ஒரு படத்துல வந்த ஹீரோயின் பேரு. அம்மாக்கு புடிச்சிருந்ததுன்னு வச்சாங்க,” என்று மலர் விளக்கம் கூற,
“ஓ… என்ன மூவி?” என்று வினா தொடுத்தாள்.

“லீலை… அந்தப் படத்தோட பேரு,” என்று மலர் கூற, “கேள்விப்பட்டதில்ல. தேடிப் பார்க்கிறேன்,” என்று புன்னகையுடன் கூறினாள் ஷாலினி.

error: Content is protected !!
Scroll to Top