இதயம் 4.1

இதயம் 4

“என்ன மலர், ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியல?” என்று அந்த பல்பொருள் அங்காடியின் பணியாளர் கேட்க,

“முன்னாடி வேலை பார்த்துட்டு இருந்த வீட்டுல குடும்பத்தோட வெளிநாட்டுக்கு போய்ட்டாங்கக்கா. அதான் வரல. இப்ப புதுசா ஒரு வீட்ல வேலைக்கு சேர்ந்திருக்கேன். அவங்களுக்குத்தான் காய்கறி வாங்கிட்டு போக வந்தேன், க்கா,” என்று பதிலளித்தவள், தேவையான காய்கறிகளை எடுத்து கூடையில் போடத் தொடங்கினாள்.

“ஓ… அதே ஏரியாதானா, மலரு?” என்று எதிரில் இருந்தவள் கேட்க,

“அதே வீடுதான், க்கா. புதுசா ஒரு சாரு அந்த வீட்டை வாங்கிட்டு வந்திருக்காரு. அவருக்கு சமைச்சு, வீட்டை சுத்தம் பண்ற வேலைக்கு சேர்ந்திருக்கேன், க்கா,” என்று பதில்மொழிந்தவள் நகர எத்தனித்தாள்.

“எனக்குத் தெரிஞ்ச ஒரு அக்காவுக்கு வேலை வேணும், மலர். பெருசா படிக்கல. அவங்க வீட்டு வேலை பார்ப்பாங்க. ஏதாவது வீட்ல ஆள் வேணும்னு கேட்டா சொல்றியா?” என்று வினவ,

சொல்றேன்க்கா. தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி வைக்கிறேன்,” என்று கூறியவள், அவரிடமிருந்து விடைபெற்று வந்து பணம் செலுத்த நின்றாள்.

ஏற்கனவே ஐந்து பேர் வரிசையில் நின்றிருக்க, வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், தனது முறை வந்ததும் பணத்தைக் கொடுத்து பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தாள்.

இன்று சனிக்கிழமை. மலருக்கு கல்லூரி விடுமுறை ஆதலால், பொறுமையாக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

மலர் ரிஷியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஒரு வாரம் ஆகியிருந்தது. கூடையில் இருந்த பால் பாக்கெட்டையும்செய்தித்தாளையும் எடுத்துக்கொண்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.

ரிஷி வந்து கதவைத் திறந்ததும், வழக்கம் போல, “குட் மார்னிங், சார்,” என்று புன்னகை தவழும் முகத்துடன் கூறியவள், செய்தித்தாளை அவனிடம் நீட்டினாள். அதைப் பெற்றுக்கொண்டவன் நீள்விருக்கையில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினான்.

விழிகள் செய்தித்தாளில் இருந்தாலும், சிந்தனை வேறு எங்கோ இருந்தது. காரணம், அவனது கடந்த பிறந்தநாளன்று தாய் பரிசளித்த மோதிரத்தை எங்கோ தவறவிட்டிருந்தான்.

நேற்று அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது கையில் பார்த்த ஞாபகம் இருந்தது. ஆனால், இரவு உறங்கச் செல்லும்போது காணவில்லை.

வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இரவு காணொளி அழைப்பில் பேசிய ராதா, மோதிரம் இல்லாததைக் கண்டு கேட்க, கழற்றி வைத்துள்ளதாகக் கூறிவிட்டான்.

‘தொலைந்து விட்டது’ என்று தெரிந்தால் தாய் மிகவும் வருந்துவார் என்று எண்ணியே அவ்வாறு கூறினான்.

மகனது பிறந்தநாளுக்கு ராதா பார்த்துப் பார்த்து வாங்கிய மோதிரம் அது. அதுவும் வெள்ளை தங்கம். விலை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரும். எங்கு தவறவிட்டோம் என்று நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டான். நினைவிற்கு வரவில்லை.

மலரிடம் கேட்கலாமா என்று யோசனை தோன்றியது. ஆனால், அவளை சந்தேகப்பட்ட மாதிரி ஆகிவிடுமோ என்றும் சிந்தனை எழுந்தது.

தான் அவளிடம் கேட்டால், அவள் வருந்துவாளோ என்றும் யோசனை பிறந்தது. காரணம், அவள் வேலைக்கு சேரும் நாள் தாயிடம் பேசியதை அவனும் அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

அதைக் கேட்டதில், மலருக்கு தன்மானம் அதிகம் என்று அவனுக்குத் தோன்றியது. சுதாகர் வேறு மலரைப் பற்றி மிகவும் நல்ல விதமாகக் கூறியிருக்க, கேட்கலாமா, வேண்டாமா என்று இரு மனதாக யோசித்துக் கொண்டிருந்தான்.

அம்மாவுக்குத் தெரிந்தால், நிச்சயமாக மலரைத்தான் அழைத்து விசாரிப்பார். அதற்குள் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று எண்ணித்தான் தேடினான். இருந்தும் மோதிரம் கையில் அகப்படவில்லை.

ஏற்கனவே அவனது வீட்டில் இதுபோல ஒரு நிகழ்வு நடந்தது. தங்கையின் தங்கக் கழுத்தணி தொலைந்து போயிருக்க, ராதா பணியாளர்களை அழைத்துத்தான் விசாரித்தார். அதுவும் மிகவும் கண்டிப்பான முறையில் விசாரித்தார்.

ஏன், காவல்துறையில் தெரிவிப்பதாகக்கூடமிரட்டியிருந்தார். ஆனால், அந்தக் கழுத்தணி தங்கையின் அறையில்தான் விழுந்து கிடந்தது.

தாய் விசாரித்த முறையில் பணிபுரிபவர்கள் மிகவும் வருந்தியதை நேரில் கண்டிருந்தவன், இப்போது மலரிடம் கேட்க மிகவும் சிந்தித்தான்.

அவளிடம் கேட்ட பிறகு, எங்காவது மோதிரம் கிடைத்துவிட்டால், தவறு செய்யாதவரை சந்தேகப்பட்டது போல் ஆகிவிடுமே என்று எண்ணி செய்தித்தாளைப் பார்த்துக் கொண்டிருக்க, “சார்…” என்று அழைத்தபடி வந்து சத்துமாவு கஞ்சியை அவன் முன் வைத்தாள் மலர்.

பிறகு நகராமல், அவனது மேஜையின் மேல் ஒரு பத்து ரூபாய் தாளும், ஒரு ஐந்து ரூபாய் நாணயமும் வைக்க, ரிஷி நிமிர்ந்து அவற்றை நோக்கினான்.

“காய்கறி வாங்க நீங்க கொடுத்த காசுல மீதி காசு, சார். ஐநூறு கொடுத்தீங்க. நானூத்தி எண்பத்தி அஞ்சு ஆயிடுச்சு. மீதி பதினைஞ்சு ரூபா, சார். பில்லும் இதுல இருக்கு. செக் பண்ணிக்கோங்க,” என்றவள் பில்லையும் அவனது மேஜை மீது வைக்க, அந்தச் சில்லறையையும் அவளையும் ஒரு முறை மாறி மாறிப் பார்த்தவன் அமைதியாகத் தலையசைத்தான்.

மலர் அகன்ற கணம், அவளிடம் மோதிரத்தைப் பற்றி கேட்கும் முடிவைக் கைவிட்டிருந்தவன் எழுந்து குளிக்கச் செல்ல, “சார்…” என்ற மலரது அழைப்பு அவனை நிறுத்தியது.

அறையின் வாயிலிலேயே திரும்பி, “என்ன?” என்பதாய் அவளை காண,

“நான் எப்பவும் பாட்டு கேட்டுக்கிட்டு வேலை செஞ்சா சீக்கிரம் செஞ்சு முடிச்சிடுவேன். என் போன்ல பாட்டு போட்டுக்கலாமா, சார்?” என்று அவனது முகத்தைக் கண்டாள்.

வால்யூம் கொஞ்சமா வச்சு போட்டுக்கோ,” என்றவன் மொழிய,

“தேங்க்ஸ், சார்,” என்று மலரின் முகம் எங்கும் புன்னகை பளிச்சிட்டது.

சமையலறைக்குள் வந்து தனது அலைபேசியில் விருப்பப் பாடல் ஒன்றை குறைந்த சத்தத்தில் ஓடவிட்டவள், அதனோடு தானும் மெல்லிய குரலில் பாடியபடி சமைக்கத் தொடங்கினாள்.

ரிஷி ராதாவிடம் உணவைப் பற்றித் தான் பேசிக்கொள்வதாகக்கூறிவிட்ட பிறகு, மறுநாள் காலை உணவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ரிஷியிடம்தான் வந்து நின்றாள்.

“நீயே ஏதாவது செய்து கொள். தினமும் என்னிடம் கேட்காதே,” என்று ரிஷி கூறிவிட, அவனுக்குப் பிடித்த உணவுகளில் ஒன்றைச் செய்து வைக்கத் தொடங்கினாள்.

பாடலைப் பாடிக்கொண்டே காலைச் சமையலை முடித்தவள், வீட்டைச் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினாள். பேண்ட் பாக்கெட்டில் அலைபேசியை வைத்துக்கொண்டு, பாடலுக்கு ஹம் செய்தபடி பெருக்கிவிட்டு, மாப்பை எடுத்து துடைத்தபடி இருந்தாள்.

ரிஷி குளித்துவிட்டு வெளியே வர, துடைக்கும் வேலையை நிறுத்திவிட்டு, “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா, சார்?” என்று வினா தொடுத்தாள்.

அவன் அனுமதித்ததும், சமைத்த உணவுகளை மேஜையின் மீது எடுத்து வைத்தவள், மீண்டும் வந்து விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.

அனைத்து வேலையும் முடித்துவிட்டவள், ரிஷி உண்டு முடித்ததும் மீதி இருந்த உணவை, அவன் தனக்குக் கொடுத்த டிபனில் எடுத்துக் கொண்டாள்.

எப்போதும் உணவு உண்ணும் நேரத்தைவிட சற்று தாமதமாகி இருக்க, அவளுக்குப் பசித்தது. மீதம் இருந்த உணவை இங்கே உண்டுவிட்டு வேலையைப் பார்க்கலாமா என்று சிந்தித்தவள், அந்த எண்ணத்தைக் கைவிட்டு வெளியே வந்தாள்.

சுதாகர் வீட்டில் வேலை செய்யும்போது, அவனுடைய மனைவியுடன் சேர்ந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. அவர்களுடன் மலரின் பழக்கம் அத்தகைய நெருக்கமானது. ஆனால், ரிஷியிடம் அவ்வாறு இல்லையே.

ரிஷி கூடத்தில் அமர்ந்து தனது மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருக்க, “சார், டைம் ஆச்சு. நான் போய் சாப்பிட்டு வந்து மதிய சமையலைப் பார்க்கவா, சார்?” என்று வினா எழுப்ப,

ரிஷி தலையசைத்து அனுமதி கொடுத்தான்.

வாசல் வரை சென்றவள் திரும்பி வந்து, “சார், நீங்க வாரத்துல ரெண்டு, மூணு நாள் நான்வெஜ்சாப்பிடுவீங்கன்னு ராதா மேடம் சொன்னாங்க. நான் வரும்போது சிக்கன், மட்டன் ஏதாவது எடுத்துட்டு வரவா, சார்?” என்று கேட்க,

“சரி,” என்றவன் தனது பர்ஸிலிருந்து இரண்டு ஆயிரம் ரூபாய் தாளை எடுத்து மேஜை மீது வைத்தான்.

“ஆயிரம் ரூபாய் போதும், சார்,” என்று ஒரு தாளை மட்டும் எடுத்துக்கொண்டவள் வீட்டிற்குச் சென்று உண்டுவிட்டு சிறிது ஓய்வெடுத்தாள்.

இன்று விடுமுறை என்பதால், ரிஷியின் வீட்டில் இருந்த அனைவரும் காணொளி அழைப்பில் வர, அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான்.

“ராதா, வெளிநாட்டில் இருக்கும் போதுதான் வீடியோ காலில் பேசிட்டு இருந்தேன். இப்ப இந்தியாவுக்கு வந்தும் வீட்டுல இருக்காம மதுரையில போய் உட்கார்ந்து இருக்க,” என்று சலித்துக்கொள்ள,

“நம்ம பிசினஸ் பார்க்கத்தான், ராதா, போயிருக்கான். அங்க எல்லாம் ஓரளவுக்கு சரியானதும் திரும்பி வந்துடுவான்,” என்று அண்ணாமலை மனைவிக்குச் சமாதானம் கூறினார்.

ரிஷியும் தன் பங்கிற்குத் தாய்க்குச் சமாதானம் கூற, அப்போதும் அவனது கையில் மோதிரம் இல்லாததைக் கண்ட ராதா,

“என்ன கண்ணா, இன்னும் ரிங் போடாம இருக்க? எப்பயும் கழட்டி வைக்க மாட்டியே?” என்று வினவினார்.

மீண்டும் தாயிடம் பொய் கூற மனம் இல்லாதவன், என்றாவது கூறித்தான் ஆக வேண்டும் என்று எண்ணி,

“மாம்… அந்த ரிங் எங்கேயோ மிஸ் ஆயிடுச்சு,” என்று மொழிய,

“என்ன? மிஸ் ஆயிடுச்சா?” என்று அதிர்ந்தார் ராதா.

“ஆமா, மாம்,” என்று ரிஷி மீண்டும் கூற,


error: Content is protected !!
Scroll to Top