“எங்க மிஸ் ஆச்சு, கண்ணா? ஆபீஸ்லயா? அங்க சிசிடிவி இருக்குமே! செக் பண்ண வேண்டியதுதானே?” என்று கேள்வி கேட்டார்.
“ஆபீஸ்ல மிஸ் ஆகி இருக்க சான்ஸ் இல்லம்மா. நேத்து ஈவினிங் ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போது கையில இருந்துச்சு, மாம்,” என்று ரிஷி கூற,
“அப்போ வீட்ல தொலைஞ்சிடுச்சா, கண்ணா?” என்று பதில் வினவினார்.
“ஐ திங்க் சோ,” என்று ரிஷி கூற,
“தேடிப் பார்த்தியா?” என்று ராதா வினா எழுப்பினார்.
“எஸ், மாம். பட் கிடைக்கல,” என்று ரிஷி இயம்ப,
“அது எப்படி கிடைக்காம போகும்? வீட்டுல மிஸ் ஆகி இருந்தா அங்கதானே எங்கேயோ இருக்கணும்,” என்று ராதா சிந்தித்தார்.
“நானும் அப்படி நினைச்சுத்தான் தேடினேன், மாம். பட் எங்கயுமே இல்ல,” என்ற ரிஷி சொல்ல,
“மலர்கிட்ட கேட்டியா நீ?” என்று ராதா கேட்டார்.
தாய் இதுபோல கேட்கக்கூடும் என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவன்,
“இல்லை, மாம்,” என்று பதிலளித்தான்.
“ஏன் கேட்கல? எங்க தேடியும் கிடைக்கலைன்னா, நீ அவகிட்டதானே கேட்டிருக்கணும்? நேத்து ஈவினிங் அவ வேலைக்கு வந்தாளா?” என்று ராதா வினவ,
“வந்தா, மாம்,” என்று பதில் இயம்பினான்.
“அப்போ அவதான் எடுத்து இருக்கணும், கண்ணா,” என்று உறுதியாக ராதா கூற,
“மாம்…” என்றவன் தாயை அதிர்ந்து பார்த்தான்.
“என்ன கண்ணா, ஷாக் ஆகுற? எங்கயும் கிடைக்கலன்னா கண்டிப்பா அவதான் எடுத்து இருக்கணும். இதுல என்ன சந்தேகம்? தினமும் எவ்வளவு நியூஸ் பார்க்கிறோம்!” என்று ராதா மகனிடம் கூற,
“மாம், அவ எடுத்திருக்க வாய்ப்பு இல்ல. அவளைப் பார்த்தா அப்படி தெரியல,” என்று தாய்க்கு விளக்கம் அளித்தான்.
“ஆள பார்த்தா இப்படித்தான் அப்பாவியா தெரிவாங்க, கண்ணா. ஆனா செய்ற வேலை அப்படி இருக்காது. அந்த ரிங்கோட விலை என்ன? அஞ்சு, பத்தா? அதோட ரேட் கிட்டத்தட்ட ஒரு லட்சம், கண்ணா. அவ எடுத்து இருந்தா சும்மா விடக்கூடாது. கம்ப்ளைன்ட் பண்ணணும்,” என்று ராதா பொரிய,
“அம்மா, எதுவும் தெரியாம ஏன் இப்படி பேசுறீங்க?” என்று மறுத்தான் ரிஷி.
“பத்தாயிரம் சம்பளம் வாங்குறவளுக்கு ஒரு லட்சம் மோதிரத்தை பார்த்தா ஆசை வரத்தான் செய்யும், கண்ணா. அது வீட்ல எங்க கிடந்திருந்தாலும் அவளுக்கு எடுத்துக் கொடுக்க மனசு வந்து இருக்காது. எல்லாம் இந்த சுதாகரைச் சொல்லணும். நல்ல பொண்ணு, என் தங்கச்சி மாதிரின்னு ரெக்கமண்டேஷன் பண்ணான். வந்து ஒரு வாரத்திலேயே மோதிரத்தை எடுத்து இருக்கா,” என்று ராதா தன் இஷ்டத்திற்குப் பேச,
“ம்மா, போதும்… ஸ்டாப் இட்!” என்று மகன் நிறுத்தியிருந்தான்.
“அதான் ரிஷி அவ்வளவு தூரம் சொல்றான்ல, அந்தப் பொண்ணு எடுத்து இருக்காதுன்னு. நீ ஏன், ராதா, அப்படி பேசுற?” என்று அருகில் இருந்த அண்ணாமலை மகனுக்கு ஆதரவாகப் பேச,
“நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. அன்னைக்கு ஏதோ ‘பிழைச்சு சம்பாதிச்ச காசுதான் உடம்பில் ஒட்டும்’ன்னு கதை விட்டா. அந்தப் பொண்ணு இப்ப அவளோட லட்சணத்தை பார்த்தீங்களா? நான் கால் பண்ணி கொடுக்கிற டோஸ்ல அவளே உன்னைத் தேடி வந்து மோதிரத்தை கொடுத்துருவா பாரு,” என்று ராதா திட்டவட்டமாக பேசினார்.
“அம்மா, அந்த மாதிரிலாம் எதுவும் பண்ணிடாதீங்கம்மா, ப்ளீஸ். நான் இன்னொரு தடவை வீட்டில தேடிப் பார்க்கிறேன். கிடைக்கலன்னா அவகிட்ட நானே கேட்கிறேன். கேட்ட பிறகு கிடைச்சுதுனா அது நல்லா இருக்காது,” என்று ரிஷி உடனடியாக மறுத்தான்.
ராதா, ரிஷியின் பேச்சைக் கேட்காது ஏதோ கூற வர,
“அதான் இன்னொரு தடவை தேடுறேன்னு சொல்றான்ல. கொஞ்சம் வெயிட் பண்ணு, ராதா. எடுத்தோம்னு, கவிழ்த்தோம்னு எதையும் பண்ணக் கூடாது,” என்று அண்ணாமலை மனைவியை அதட்டினார்.
கணவனின் அதட்டல் வேலை செய்ய,
“சரி, தேடிப் பார்த்துட்டு சொல்லு. நானே அவகிட்ட கேட்கிறேன்,” என்று ஒப்புக்கொண்டார் ராதா.
மேலும் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினான். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.
என்ன செய்வது என்று ரிஷி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அழைப்பு மணி அடித்தது. ரிஷி சென்று கதவைத் திறக்க, மலர் கறியை வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.
“கறிக்கடையில கூட்டமா இருந்துச்சு. அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, சார். ஒரு மணிக்குள்ள லஞ்ச் ரெடி பண்ணிடுவேன், சார்,” என்றபடி சமையலறைக்குள் நுழைந்திட, ரிஷி தான் அவளிடம் எப்படி கேட்பது என்று யோசனையுடன் நின்றிருந்தான்.
ஒன்றுக்கு பத்து முறை யோசித்த பின், ‘சரி, மோதிரத்தை பார்த்தாயா?’ என்றுதானே கேட்கப் போகிறோம். இதில் என்ன இருக்கிறது? என்று எண்ணியவாறு சமையலறைக்குச் செல்ல, அங்கே மலர் அவள் எழுதி ஒட்டி வைத்திருந்த துண்டுச் சீட்டை வாசித்துக் கொண்டிருந்தாள்.
ரிஷி அமைதியாக அவளைப் பார்த்தபடி நிற்க, தன்னருகே நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து அவனைக் கண்டவள்,
“ஏதாவது வேணுமா, சார்?” என்று வினவிட,
“காபி வேணும்,” என்று அமைதியாக பதில் கொடுத்தான்.
“இதோ, அஞ்சு நிமிஷத்துல கொண்டு வரேன், சார்,” என்றவள் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்து காபியைத் தயாரிக்கத் தொடங்கினாள்.
ரிஷி வந்து நீள்விருக்கையில் அமர்ந்து என்ன செய்வது என்று நெற்றியை நீவியபடி இருக்க, ஐந்து நிமிடத்தில் காபியுடன் வந்தவள் அவனைக் கண்டுவிட்டு,
“தலைவலியா, சார்? உங்களுக்கு மாத்திரை வாங்கிட்டு வந்து தரவா? பக்கத்துல ஒரு மெடிக்கல் இருக்கு,” என்று வினவிட,
“நோ நீட்,” என்றவன் அவளைப் பார்க்காமலே காபியை எடுத்துக் கொண்டான்.
வெகுநேரம் சிந்தையில் வயப்பட்டிருந்தவன், அதேபோல புதிதாக ஒரு மோதிரத்தை வாங்கிவிடலாம் என்று அலைபேசியை எடுத்து அந்த டிசைனைத் தேடத் தொடங்கினான்.
அரை மணி நேரமாக தேடியவன், ஒருவழியாக அந்த மோதிரத்தை கண்டுபிடித்து ஆர்டர் செய்ய பணம் செலுத்தவிருந்த நேரம்,
“சார், இந்த மோதிரம் பிரிட்ஜ்க்கு கீழ கிடந்துச்சு. உங்களோடதா?” என்றபடி வந்து அவனது மேஜை மீது மோதிரத்தை வைத்தாள்.
ரிஷி அதனைக் கண்டுவிட்டு,
“ஆமா, என்னோடதுதான்,” என்று பதிலளிக்க,
“பார்த்து வச்சுக்க மாட்டீங்களா, சார்? பார்க்க வெள்ளி மோதிரம் மாதிரி இருக்கு. வெள்ளி விக்கிற விலைக்கு இது எப்படியும் பத்தாயிரம் போகும் இல்ல? வீட்டுக்குள்ள தொலைஞ்சதுனால கிடைச்சது. வெளிய தொலைஞ்சிருந்தா கிடைக்கிறது கஷ்டம். ஒரு ரூபானாலும் நீங்க உழைச்சு சம்பாதிச்சதுதான்,” என்று அவனுக்கு பெரிய அறிவுரை வழங்க,
‘என்னது… வெள்ளி மோதிரமா?’ என்று மனதிற்குள் அதிர்ந்தவன் அவளை திகைப்புடன் பார்த்தான்.
“இனி கவனமா வச்சுக்கோங்க, சார். தங்கம் மாதிரியே வெள்ளியும் விலை கூடிக்கிட்டே இருக்கு,” என்றவள் அவனது பதிலை எதிர்பாராது சமையலறைக்குள் நுழைந்திட, ரிஷியின் பார்வை தனது மோதிரத்தின் மீது படிந்தது.