ரிஷிக்கு சத்துமாவு கஞ்சியை செய்யும் பணியை துவங்கினாள். சமையலறையில் அனைத்து பொருள்களும் அதன் பெயரிடப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டு இருக்க மலருக்கு எதையும் தேடி எடுக்க பெரிதாக சிரமமில்லை.
சத்துமாவு கஞ்சி செய்து முடித்தவள் கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வந்து ரிஷியிடம் கொடுக்க அவளது அலைபேசியின் கானா இசைத்தது.
எடுத்துப் பார்க்க ராதா மேடம் என்ற பெயர் திரையில் மின்னியது. “ராதா மேடம் தான் கூப்பிடுறாங்க சார்” என்று ரிஷியிடம் கூறியவள் அழைப்பை ஏற்று காதில் பொருத்தி, “சொல்லுங்க மேடம்” என்றாள்.
“ஆங் வந்துட்டேன் மேடம். சத்துமாவு கஞ்சி செஞ்சு கொடுத்துட்டேன் மேடம். இனிமேல்தான் வாசலை பெருக்கி கோலம் போடணும் மேடம்” என்று அவள் பேசுவது சத்துமாவு கஞ்சியை குடித்தவாரே செய்தித்தாளில் விழிகளில் பதித்திருந்தவனது செவியில் தெளிவாக விழுந்தது.
ராதாவிடம் பேசிய படியே வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டவள் உள்ளே வர ரிஷி கஞ்சியை குடித்துவிட்டு அறைக்கு சென்றிருந்தான்.
அவன் குடித்து வைத்த கிண்ணத்தை எடுத்து கழுவும் தொட்டியில் போட்டவள் விளக்கமாரை எடுத்து கூடத்தை பெருக்கத் துவங்கினாள். பிறகு சாத்தியிருந்த அந்த மற்ற இரு அறைகளையும் பெருக்கி முடித்தவள் பூட்டியிருந்த ரிஷியின் அறை கதவை பார்த்தாள்.
சில நிமிடங்கள் யோசித்தவள், “சார்…” என்று கதவை தட்டி இருந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வெளியே வந்த ரிஷி கதவைத் திறந்து என்ன என்பது போல் பார்க்க, “ரூமை கூட்டணும் சார்” என்று பதில் மொழிந்தாள்.
“டூ மினிட்ஸ்” என்றவன் மீண்டும் அறை கதவை பூட்டிக் கொள்ள, மலர் அறையின் வெளியே காத்திருந்தாள்.
கூறியது போலவே இரண்டு நிமிடத்தில் கதவை திறந்தவன் வெளியேறிவிட, மலர் உள்ளே சென்றாள்.
அவளது மொத்த வீட்டையும் அடக்கியிருந்த அந்த அறையில் வைத்த பொருள் வைத்த இடத்தில் அத்தனை சுத்தமாக இருந்தது. விழிகளால் ஒருமுறை அவ்வறையை வலம் வந்தாள்.
நான்கு பேர் தாராளமாக படுக்கக் கூடிய ஒரு கட்டில் அதற்கு பக்கத்தில் ஒரு நீள்விருக்கை அதனை தொடர்ந்து ஒரு பெரிய வாட்ரோப் மறுபுறத்தில் ஒரு இரவு விளக்கு அதனை ஒட்டி ஒரு நாற்காலியும் மேஜையும் போடப்பட்டிருந்தது. அதன் மேல் சில புத்தகங்களும் மடிக்கணினியும் இருந்தது.
அவளுக்குத் தெரிந்தவரை அங்கே சுத்தம் செய்ய எந்த வேலையும் இல்லை தரையில் கூட தூசி இருப்பது போல் தெரியவில்லை.
“சார் ரொம்ப சுத்தம் பாப்பாரு போலவே…” என்று தனக்குத்தானே பேசியவள், சுத்தமாக இருந்த அந்த அறையை மீண்டும் பெருக்க துவங்கினாள்.
மலர் சுத்தம் செய்துவிட்டு வெளியே வர ரிஷி மீண்டும் அறைக்குள் அடைந்து கதவை சாத்திக் கொண்டான்.
பிறகு சமையல் அறைக்கு சென்று காலை உணவை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள். இட்லி, சாம்பார், சட்னி,தோசை மற்றும் பொங்கல் என்று மூன்று விதமான உணவை சமைத்தவள் அதனை எடுத்து வைத்துவிட்டு அப்படியே சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை கழுவி வைத்தாள்.
ஓரளவு எல்லா வேலையும் முடித்து விட்டவள் சமைத்த உணவை மேஜை மேல் எடுத்து வைத்துவிட்டு ரிஷியின் அறைக் கதவை நோக்கினாள். அது இன்னும் திறக்கப்படவில்லை.
இம்முறை யோசிக்காமல் சென்று, “சார் சாப்பாடு ரெடி பண்ணிட்டேன்” என்று கதவை தட்டினாள். அலைபேசியை காதில் வைத்தவாறு வந்து கதவைத் திறந்த ரிஷி, “என்ன?” என்று விழிகளை உயர்த்தி அவளை காண, “சாப்பாடு ரெடி பண்ணிட்டேன் சார் டைனிங் டேபிள்ள எடுத்து வச்சுட்டேன்” என்று பதில் அளித்தாள்.
“வர்றேன்” என்று பதில் அளித்துவிட்டு அலைபேசியில் இருந்தவனோடு ஆங்கிலத்தில் உரையாடத் துவங்கினான்.
அவனது ஆங்கில புலமையைக் கண்டு வியந்தவள், ‘சார் எப்படி இவ்ளோ நல்லா இங்கிலீஷ் பேசுறாரு நம்மளும்தான் பன்னென்டு வருஷமா ஸ்கூல்ல இங்கிலீஷ் படிச்சு காலேஜ்லையும் படிச்சிட்டு இருக்கோம் நாலு வார்த்தை கூட சேர்ந்தாப்புல பேச வரமாட்டேங்குது’ என்று மனதிற்குள் புலம்பியவள் சமையலறைக்கு சென்று ஏதாவது வேலையை மறந்து விட்டோமா என்று பார்த்தாள்.
பத்து நிமிடங்கள் ஆகியும் ரிஷி வராததில் அவளது விழிகள் சுவர் கடிகாரத்தில் பதிந்தது. இன்றாவது கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
மேலும் ஐந்து நிமிடங்கள் கடக்க இதற்கு மேல் அவன் தாமதமாக வந்தால் எல்லாவற்றையும் ஒதுங்க வைத்து விட்டு கிளம்ப தனக்கு நேரம் ஆகிவிடும் என்று நினைத்தவள் மீண்டும் சென்று அவனது அறைகதவை தட்டினாள்.
இப்போது கதவை திறந்தவனது முகத்தில் சிறிதான எரிச்சல் தோன்றியிருந்தது. “சார் எனக்கு காலேஜுக்கு டைம் ஆச்சு. நீங்க வந்து சாப்பிட்டீங்கன்னா எல்லாத்தையும் ஒதுங்க வச்சுட்டு பாத்திரத்தை விளக்கிட்டு கிளம்பிடுவேன்” என்று தயக்கத்துடன் கூற, ஒரு நொடி நிதானித்தவன், “டூ மினிட்ஸ்ல வரேன்” என்று பதிலளித்தான்.
மலர் மீண்டும் பழையபடி அதே இடத்தில் சென்று நின்று கொள்ள இரண்டு நிமிடத்தில் வெளிய வந்த ரிஷி உணவு மேஜை மேலே அமர்ந்து தானே பரிமாறிக் கொள்ள எண்ணி பாத்திரத்தை திறக்க அங்கே இட்லி தோசை பொங்கல் என்று உணவு அடுக்கப்பட்டிருந்தது.
அதனை கண்டு புருவம் சுருக்கியவன் திரும்பி மலரை காண, சமையலறையில் நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவனது பார்வையில், “சார்…” என்று மேஜை அருகே வர, “உன்னோட நேம் என்ன?” என்று கேள்வியை தொடுத்தான்.
‘என் பேர் தெரியாம எப்படி போன்ல சேவ் பண்ணி இருப்பாரு’ என்று மனதிற்குள் நினைத்தவள், “என் பேர் மலர் சார்” என்று பதில் அளித்தாள்.
“மலர் எனக்கு ஒரு ஆளுக்கு தானே குக் பண்ண சொன்னேன். எதுக்கு இவ்வளவு வெரைட்டி?” என்று வினாவை எழுப்ப, “அது ராதா மேடம் தான் சார் இது மூனையும் செய்ய சொன்னாங்க” என்று பதில் அளித்தாள் மலர்.
தாயின் பெயரை கேட்டதும் ஒரு நொடி சிந்தித்தவன், “இனிமே ஏதாவது ஒன்னு செஞ்சா போதும். இவ்வளவையும் என்னால சாப்பிட முடியாது. ஃபுட் வேஸ்ட் பண்ண கூடாது” என்று கூற, “ஆனால் சார் ராதா மேடம் கால் பண்ணி என்கிட்ட கேட்பாங்களே” என்று தயக்கத்துடன் அவனது முகம் கண்டாள்.
“அம்மா கிட்ட நான் சொல்லிடுறேன் இனிமே இவ்ளோ ஐட்டம் செய்யக்கூடாது” என்று கண்டிப்புடன் கூற, “சரிங்க சார்” என்று தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.
பிறகு ரிஷி இரண்டு இட்லியை தட்டில் வைத்து உண்ண துவங்க மலர் சற்று தள்ளி சமையலறை வாயில் நின்று கொண்டாள். இட்லியை உண்டதும் ஒரு தோசையை எடுத்து வைத்து உண்டவன் பொங்கலை சிறிதளவு வைத்து சாப்பிட்டான்.
உண்டு முடித்ததும் அவனருகே வந்தவள், “சாப்பாடு நல்லா இருக்கா சார்?” என்று விழிகளில் ஆர்வத்தை தேக்கி வினவ, நிமிர்ந்து அவளை கண்டவன் “ஹ்ம்ம் நல்லாருக்கு” என்று பதில் அளித்தான்.
அவனது பதிலில் அகமகிழ்ந்து போனவள், “தேங்க்ஸ் சார்” என்று கூறிவிட்டு, “சாப்பாட்ல ஏதாவது குறை இருந்தா இல்ல பிடிக்கலன்னா என்கிட்ட சொல்லுங்க சார் நான் திருத்திக்கிறேன்” என்று கூறினாள்.
அவளுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவன் எழுந்து சென்று கை கழுவி விட்டு திரும்ப குளிர்சாதன பெட்டியின் கதவில் ஒட்டப்பட்டு இருந்த துண்டு சீட்டில் கவனத்தில் பதிந்தது.
அருகில் சென்று அதனை உற்று நோக்க, ‘சாருக்கு பிடிக்காதது’ இந்த தலைப்பின் கீழ் அவனுக்கு பிடிக்காத உணவை எல்லாம் எழுதி வைத்திருந்தாள் மலர்.
அவன் பார்ப்பதை கண்டவள், “ராதா மேடம் உங்களுக்கு பிடிக்காது எல்லாம் செய்யக்கூடாதுன்னு நேத்து சொன்னாங்க சார். அதான் மறந்து போயிடக் கூடாதுன்னு எழுதி ஒட்டி வச்சிருக்கேன் சார். டெய்லி செக் பண்ணிட்டு சமைக்க” என்று பின்னிருந்து குரல் கொடுத்தாள்.
அதனை வாசித்து விட்டு குளிர்சாதன பெட்டியில் இருந்து தண்ணீர் போத்தலை எடுத்து நீரை அருந்தியவன் அவளிடம் திரும்பி, “பேலன்ஸ் இருக்க சாப்பாட்ட நீ எடுத்துட்டு போயிடு” என்று கூறினான்.
சுதாகர் வீட்டிலேயே இது போல உணவு அதிகமாக செய்துவிட்டால் கொடுத்து விடுவது வழக்கம்தான் என்பதால், “சரிங்க சார்” என்றுவிட்டு பிறகு, “இதை எடுத்துட்டு போக நான் எந்த டப்பாவையும் கொண்டு வரலையே சார்” என்றாள்.
அவன் பதில் அளிக்கும் முன், “உங்க வீட்ல இருந்து பாத்திரத்தை எடுத்துட்டு போகவா சார்?” என்று கேட்டுவிட்டு, “நான் பத்திரமா எல்லாத்தையும் கொண்டு வந்து கொடுத்துடுவேன் சார்” என்று உறுதி மொழி வேறு கொடுக்க எதிரில் இருந்தவன் தான் சிறு திகைப்புடன் அவளை நோக்கினான். காரணம் அவனிடம் யாரும் இது போல கேட்டதில்லை.
“நிறைய இல்ல ரெண்டே ரெண்டு டிபன் கொடுத்தா போதும் சார் கொடுக்குறீங்களா?” விழி உயர்த்தி அவனை காண, ஏதும் பேசாமல் அருகில் இருந்த கபோர்டை திறந்தவன் புதிதாக இரண்டு டிபன் பாக்ஸை எடுத்து அவளிடம் நீட்ட அதைப் பெற்றுக் கொண்டவள், “தேங்க்ஸ் சார் நாளைக்கு கொண்டு வந்து கொடுத்துடறேன்” என்று மொழிந்தாள்.
“நோ நீட் நீயே வச்சுக்கோ” என்று ரிஷி கூறிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காது நகர்ந்துவிட்டான்.