இதயம் 31 – இறுதி
“சாந்தி, எல்லாம் ரெடி ஆயிடுச்சு தானே?” என்று மலர் கேட்க,
“ஹ்ம்ம், அல்மோஸ்ட்முடிஞ்சதுக்கா. இன்னும் பொறியலை மட்டும் நல்லா வதங்குனதும் இறக்கி வைக்கணும்,” என்று சாந்தி பதிலளித்தாள்.
“சரி, சரி. பக்கத்துல இருந்து வதங்குனதும் இறக்கி வை. கவனிக்காம விட்டுறாதகுழஞ்சு போயிரும். தண்ணி இல்லன்னா கொஞ்சம் ஊத்தி விடு, இல்லன்னா அடிபிடிச்சிடும்,” என்று மலர் அறிவுரைகளை கூற,
“சரிங்க கா, நான் பக்கத்திலேயே நின்னு பாத்துக்கிறேன்,” என்று சாந்தி இயம்பினாள்.
சாந்தியிடமிருந்து கவனத்தை தேன்மொழியிடம்திருப்பியவள், “தேனு,” என்று அழைக்க,
“அக்கா, எல்லா வேலையும் நாங்க பார்த்துக்கிறோம் தானே? தங்கச்சி கல்யாணத்துல கூட இப்படி சமயக்கட்டுல வந்து நிற்கிறியே. நீ கட்டி இருக்க பட்டு சேலைக்கும், நகைக்கும், இந்த சமயக்கட்டுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?” என்று தேன்மொழி சலித்துக் கொண்டாள்.
“சம்பந்தம் இல்லைன்னா இங்க வரக்கூடாதா, தேனு? தங்கச்சி கல்யாணத்துல தான் இன்னும் கவனமா இருக்கணும் தேனு. இந்த கல்யாணத்தில் சாப்பிட்டுட்டு நல்லா இருந்தா நாலு பேர் ஆர்டர் குடுப்பாங்க. நல்லா இல்லன்னா தங்கச்சி கல்யாணத்துல கூட இவ நல்லா சமைக்கலன்னுசொல்லிடுவாங்கல்ல,” என்று மலர் தேன்மொழிக்கு விளக்கம் கொடுக்க,
“என்னவோ போக்கா, இதுக்கு தான் மாமா உன்ன சமையல் கட்டு பக்கமே விட மாட்டார். வந்தா வெளியே போக மாட்டேன்ற,” என்று புகார் வாசித்தாள்.
“வேலை முடிஞ்சா கிளம்பிடுவேன் டி. தாலி கட்டுறதுக்கு இன்னும் டைம் இருக்குல்ல,” என்ற மலர் ரசத்தை சுவை பார்த்தாள்.
“தேனு, ரசத்துல உப்பு குறையா இருக்கு பாரு. கொஞ்சம் எடுத்துட்டு வா,” என்று கூற,
“அங்க பக்கத்தில் தான் இருக்கு, பாருக்கா,” என்று தேன்மொழி கை காட்டினாள்.
உப்பை சிறிதளவு எடுத்து ரசத்தில் போட்டு கலக்கி, மீண்டும் சுவை பார்த்து திருப்தியானவள், “கேசரியில் இன்னும் கொஞ்சம் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து போட்டு விடு, தேனு,” என்று தேன்மொழிக்கு கட்டளை பிறப்பித்தாள்.
“ஏற்கனவே போட்டுட்டேன் க்கா,” என்று தேன்மொழி பதில் உரைக்க,
“இருக்கட்டும், இன்னும் கொஞ்சம் போடு. அப்பதான் டேஸ்ட் நல்லா இருக்கும்,” என்ற மலர், பாயாசத்தை ஒரு குவளையில் ஊற்றி சிறிது சுவை பார்த்தாள்.
“ஹ்ம்ம், பாயாசம் நல்லா இருக்கு. ஆனா ஏதோ குறையுதே,” என்று யோசிக்க,
“எல்லாமே கரெக்டா தான் இருக்கு, மலர்,” என்று வந்தார் மஞ்சுளா. அவரும் அங்கே சமையல் வேலை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இல்லையேக்கா,” என்று இழுத்தவள், “கொஞ்சம் ஏலக்கா பொடிய தூவி விடுங்கக்கா. ஃப்ளேவர் தான் கம்மியா இருக்கு,” என்க,
“சரி, மலரே. நீ போயி கல்யாண வேலையை பாரு. உன் வீட்டுக்காரர் தேடி வந்தா திட்டுவாரு,” என்று மஞ்சுளா கூறினார்.
“இதோ போறேன் கா,” என்றவள், “இன்னும் கொஞ்ச நேரத்துல தாலிகட்டி முடிஞ்சதும் பந்தி ஆரம்பிச்சிடுவாங்க. எல்லாத்தையும் கரெக்டா எடுத்து வச்சுருங்க. பரிமாறுறதுக்கு ஆள் கரெக்டா வந்துட்டாங்க தானே?” என்று மலர் வினவ,
“ஹ்ம்ம், வந்துட்டாங்க. நம்ம குமார் சொன்ன பசங்க தான். படிக்கிற பசங்க போல, பார்ட் டைமா வேலை பாக்குறாங்க,” என்று தேன்மொழி பதில் கொடுத்தாள்.
“சரிங்கக்கா, எல்லாத்தையும் பாத்துக்கோங்க. நான் பந்தி ஆரம்பிக்கும்போது வரேன்,” என்று மலர் நகர போக,
“மலர்,” என்று முறைப்புடன் வந்து நின்றான் ரிஷிகேஷவ்.
அவனைக் கண்டதும் அசட்டு சிரிப்பு ஒன்றை உதித்தவள், “என்னங்க?” என்று அழைக்க,
“உன்கிட்ட என்ன சொன்னேன், மலர்?” என்று முறைத்துப் பார்த்தான் ரிஷி.
“இல்லங்க, நான் ஒரு தடவை எல்லாத்தையும் செக் பண்ண வந்தேன்,” என்று மலர் விளக்க,
“போதும், மலர். உன் கடமை உணர்ச்சி. இதுக்கு தான் உன்னை நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு ஆர்டர் எடுக்க வேணாம்னு சொன்னேன்,” என்றவனது குரலில் கோபமிருந்தது.
“சரிங்க, வாங்க போகலாம். தாலி கட்டுற நேரம் வந்துருச்சு,” என்று கணவனது கை பிடித்து வெளியே அழைத்து வர,
“பாப்பா வேற உன்னை கேட்டுட்டு இருந்தா, மலர்,” என்று ரிஷி கூறினான்.
“அச்சச்சோ, அழுதாலாங்க?” என்று மலர் பதறி வினவ,
“இப்ப வந்து பதறு. இவ்வளவு நேரம் பிள்ளையும் என்னையும் யோசிச்சியா? கிச்சனை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துடுறது,” என்று ரிஷி முறைதான்.
“அப்படில்லாம் இல்லைங்க. நம்ம வீட்டு கல்யாணத்துல சாப்பாடு நல்லா இருக்கணும்னுதான் போய் செக் பண்ணிட்டு வந்தேன்,” என்று மீண்டும் தன்னிலை விளக்கியவள், மகளைத் தேட,
“அம்மா,” என்று மாதவிடமிருந்து மலரிடம் தாவினாள் தான்விகா.
ரிஷிகேஷ் மற்றும் மலரின் புதல்வி தான்வி. நான்கு வயது ஆகிறது தான்விக்கு.
தான்வி தாயை கண்டதும், “அம்மா எங்க போன? நான் உன்னை தேடுனேன்,” என்று கேட்க,
“அம்மா கொஞ்சம் வேலையா இருந்தேன் டா செல்லம்,” என்று மகளை சமாதானம் செய்தாள்.
மலர் கருவுற்ற பிறகு அதோ, இதோவென நாட்கள் வேகமாக நகர, அவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இருவரும் தான்விகா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
மலர் குழந்தையை பார்த்துக் கொண்டு தனது படிப்பையும் கவனித்துக் கொண்டாள். ஒரு வருடத்தில் படிப்பை முடித்தவள், மகளை கவனித்தவாறு ரிஷியின் உதவியுடன் சிறிதாக ஒரு உணவகத்தை திறந்து இருந்தாள்.
அண்ணாநகரில் நிறைய தங்கும் விடுதிகள், பணிக்கு செல்பவர்கள் என்று நிறைய பேர் தங்கி இருந்ததால், சிறிது நாட்களிலேயே மலரது உணவகம் பிரபலமானது.
ரிஷியும் தன்னுடைய நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மதிய உணவை மலரின் உணவகத்தில் இருந்தே வாங்கிக் கொள்ள, தான்வி உணவகம் சிறிது சிறிதாக முன்னேற துவங்கியது.
குழந்தையை வைத்துக்கொண்டு உணவகத்தை நடத்துவது மலருக்கு மிகவும் சவாலாக தான் இருந்தது. குழந்தையை பார்த்துக் கொள்ள மாதவி மற்றும் மலரின் உடன்பிறப்புகள் உதவி செய்தனர். விடுமுறை கிடைக்கும் நேரம் ஷாலினியும் வந்து பார்த்துக் கொண்டாள்.
இந்த நான்கு வருடத்தில் தான்விகா உணவகம் அண்ணாநகரில் பெயர் சொல்லும் அளவிற்கு முன்னேறி இருந்தது. அத்துடன் மலர் திருமணம் மற்றும் மற்றைய நிகழ்வுகளுக்கும் சமையல் எடுத்து செய்வதை இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கியிருந்தாள்.
மலரின் கை பக்குவம் மிகவும் நன்றாக இருந்ததால், நிறைய நிகழ்வுகளுக்கு மலரது உணவகத்திலேயே உணவை வாங்கிக் கொண்டனர்.
மலருக்கு ஓர் அளவிற்கு நல்ல வருமானம் வரத்துவங்க, தனது வருமானத்தை பிறந்த வீட்டிற்கு கொடுத்து உதவி செய்தாள். ரிஷி தான், “நம்மிடம் போதுமான அளவு பணம் இருக்கிறது. அதனால் உன்னுடைய குடும்பத்தினருக்கு கொடுத்து விடு,” என்று சொல்ல, மலரும் அதனை மகிழ்ச்சியுடன் செய்தாள்.
தனது வருமானத்தை சேர்த்து வைத்து அண்ணாநகரில் ஒரு வீட்டை தாயின் பெயரில் வாங்கிக் கொடுத்திருந்தாள். அதுபோக, சாகித்யாவின் திருமணத்திற்கும் நகை எடுத்துக் கொடுத்திருந்தாள்.
ரிஷியுடன் மலரின் வாழ்க்கை மிகவும் நன்றாக சென்றது. அதுவும் அவர்களது மகளது வரவு வாழ்வை மிகவும் அழகாக்கியிருந்தது.
மகளை தூக்கிக் கொண்டவள் மேடைக்கு செல்ல முயற்சிக்க,
“மலர், ஒரு நிமிஷம் என் கூட வா,” என்ற ரிஷி, அவளை தங்களது அறைக்கு அழைத்துச் சென்றான்.
“என்னங்க, தாலி கட்டுற நேரம் வந்துருச்சு. எதுக்கு ரூம்க்கு கூட்டிட்டு வந்தீங்க?” என்று மலர் வினவ,
“கிச்சன்ல நின்னு ரொம்ப ஸ்வெட்டாகியிருக்க. போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா,” என்று ரிஷி கூறினான்.
வழக்கம்போல அவளது குறும்பு குணம் தலைதூக்க, “ஏன், வேர்த்திருந்தா நீங்க பாக்க மாட்டீங்களா?” என்று சிரிப்புடன் வினவ,
“வேர்த்திருந்தா என்ன? நீ எப்படி இருந்தாலும் நான் பார்ப்பேன் டி,” என்றவனது இதழ்களிலும் புன்னகை பூத்தது.
அடர் பச்சை நிற பட்டு சேலையில், அதற்கேற்ற நகைகளுடன் அழகாய் நின்று இருந்தவளது முகத்தில் ஆங்காங்கே வேர்வை துளிகள் மின்னிக் கொண்டிருக்க, இவனது விழிகளில் ரசனை பூத்தது.
அதுவும் அவளது நாசியில் அழகாய் வைத்திருந்த வளைய மூக்குத்தி, அவளது மொத்த அழகையும் எடுத்து வைத்துக்கொள்ள, அவனது விரல் மலரின் நாசியில் பதிந்தது.
அந்த மூக்குத்தியை ரிஷிதான் தேடி பிடித்து மலருக்காக வாங்கிக் கொடுத்திருந்தான். இந்த நாலு வருடத்தில் ரிஷி மலருக்கு வாங்கிக் கொடுத்ததில் அதிகமான பரிசு மூக்குத்தியாக தான் இருந்தது.
மலரே, “எவ்வளவுதான் மூக்குத்தி வாங்கி கொடுப்பீங்க?” என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு வாங்கிக் கொடுத்திருந்தான்.
இப்போதும் சாகித்யாவின் திருமணத்திற்கு போடுவதற்காக, அவளது சேலைக்கு தோதாக இந்த வளைய மூக்குத்தியை கடையில் செய்ய கொடுத்து வாங்கி இருந்தான்.
“எப்ப பாத்தாலும் மூக்குத்தி மேல தான் உங்க கண்ணு போகுது. அப்படி என்னதான் அதுல இருக்கோ,” என்று மலர் வழக்கம் போல சலித்துக் கொள்ள,
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடி,” என்றவனது விரல் மூக்குத்தியை வருடியது.
அப்படியே அவனது விரல்கள் அவளது வேர்வைத்துளியில் படிந்து கோடிழுக்க, அதில் கூசி சிலிர்த்தவள், “என்னங்க,” என்று சிணுங்க,
“ஹ்ம்ம்,” என்று பதில் மொழிந்தான்.
“பாப்பா இருக்கும்போது என்ன பண்றீங்க? விடுங்க,” என்று அவனை விலக்கியவள், மகளை அவனது கையில் கொடுத்து விட்டு குளியலறை சென்று முகம் கழுவி வந்தாள்.
ரிஷி சிரிப்புடன் அவளை பார்த்தபடி அமர்ந்திருக்க, முகத்தை துடைத்து ஒரு பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டியவள், “என்ன?” என்று அவனை புருவம் உயர்த்தி பார்த்தாள்.
ஒன்றுமில்லை எனும் விதமாக தலையசைத்தவனது இதழ்களில் விஷம சிரிப்பு பூத்திருக்க, மலர் ஏதோ முறைப்புடன் கூற வருவதற்குள் வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டது.
இருவரும் திரும்பி பார்க்க, ஷாலினி தான் கையில் தனது மகனுடன் நின்றிருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஷாலினிக்கு திருமணம் முடிந்து, ஒரு வயதில் ஒரு மகன் உள்ளது.
கல்லூரியில் உடன் பயிலும் மாணவனையே காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தாள் ஷாலினி.
“அண்ணா, அண்ணி, ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? பொண்ண அழைச்சிட்டு வர சொல்லிட்டாங்க. கொஞ்ச நேரத்துல தாலி கட்டிடுவாங்க. வாங்க,” என்று அழைக்க,