“கமின்”என்று உள்ளேயிருந்து அனுமதி கிடைத்தவுடனேயே அறைக் கதவைத் திறந்து கொண்டு மதுபாலாவுடன் உள்ளே நுழைந்தான் வெற்றிச் செல்வன்.
அவனை முறைத்து விட்டு,”ரெண்டு பேரும் உட்காருங்க”என்றுரைக்க, அவர்கள் அமர்ந்ததும்,
“உங்கப் பேர் என்ன?”என்றான் புகழேந்தி.
“மதுபாலா சார்”என்றிருந்தாள் பெண்ணவள்.
“உங்களோட சர்டிஃபிகேட்ஸ் எல்லாத்தையும் கொடுங்க”என்கவும்,
உடனே தன்னிடம் இருந்த கோப்புக்களை அவனிடம் தந்தாள் மதுபாலா.
அதில் அவளது படிப்பைப் பற்றிய தகவல்களைப் பார்த்து விட்டு அதை அப்படியே அவளிடம் கொடுத்தவனோ,
“ம்ஹ்ம். சோ நீங்க உங்களோட பி. எஸ்சிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திட்டீங்க! அப்படித் தானே?”எனக் கேட்டிருந்தான் புகழேந்தி.
அதில் கண்களில் வலியுடன்,”ஆமாம் சார்”எனப் பதிலளித்தாள் மதுபாலா.
அதை அவளது கண்களைப் பார்த்துப் புகழேந்தி தெரிந்து கொண்டால் என்றால் அதைக் கூறும் போது அவளது குரல் உடைந்திருந்ததை வைத்து அவளது நிலையைத் தானும் அறிந்து கொண்டான் வெற்றிச்செல்வன்.
“ம்ஹ்ம். எனக்கு உங்களோட பர்சனல் விஷயம் வேண்டாம். ஏன்னா, இங்கே படிப்புக்கு மதிப்பு இருக்கிற மாதிரி, திறமைக்கும் அதுக்குத் தகுந்த மதிப்புத் தரப்படும். அதனால் நான் எப்போ உங்களோட வேலையோட செயல் விளக்கத்தைப் பார்க்கலாம்?”என்று அவளிடம் வினவ,
உடனே தனது வலியை மறைத்துக் கொண்டுத் தலை நிமிர்ந்து உட்கார்ந்து,”நான் எப்போ வேணும்னாலும் தயாராக இருக்கேன் சார்”எனத் திடமாகக் கூறினாள் மதுபாலா.
அதில் அவள் மீது மற்ற இருவருக்கும் நம்பிக்கைத் துளிர்த்தது.
ஆகவே,”நீங்க இப்போ ஏதாவது உங்களோட டிசைன்ஸ், ஸ்டிச்சிங்ஸ்ஸோட ஃபோட்டோஸ் ஏதாவது கொண்டு வந்து இருக்கீங்களா?”என்று அவளிடம் விசாரித்தான் புகழேந்தி.
“இருக்கு சார்”எனத் தன்னிடமிருந்து மற்றொரு கோப்பை அவனிடம் தர,
அதை வாங்கிப் பொறுமையாகப் பார்வையிட்டு விட்டு,”நைஸ்!”என்றவனோ,
“லன்ச் முடிச்சிட்டு நீங்கத் தயாராக இருங்க. எப்போ வேணும்னாலும் உங்களை டெமோவுக்குக் கூப்பிடுவோம்”என்று அவளிடம் கூறி விட்டு,
“நீங்க இவங்களுக்கு வழிகாட்டுங்க”என வெற்றிச்செல்வனிடம் கூறி அவனுடன் மதுபாலாவை அனுப்பி வைத்து விட்டு,
“அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய கண்ணு! அவளை விட்டால் என்னையே முழுங்கிடுவா போலவே! அவ பேசும் போதெல்லாம் அவளோட குண்டுக் கன்னங்கள் ரெண்டும் பிங்க் கலரில் தெரியுது! அதைப் பார்த்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கே!”என்று அவளைப் பற்றிய ரசனையில் ஆழ்ந்தவனோ,
உடனே தனது தலையில் தட்டிக் கொண்டு,”அவ உன் ஆஃபீஸில் வேலை பார்க்க வந்திருக்கிறாடா! அவளைப் போய் இப்படியெல்லாம் நினைச்சுப் பார்க்கலாமா? இது தப்புப் புகழ்! அக்கா சொல்றா மாதிரி சீக்கிரம் கல்யாணம் பண்ணித் தான் ஆகனும் போலயே!”என்று தனக்குள் முனகிக் கொண்டு அன்றைய வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டான் புகழேந்தி.
அதே வேளையில், தன்னைப் பின் தொடர்ந்து வந்த மதுபாலாவிடம்,”நீங்கச் சாப்பிட்டுட்டு அந்த ரூமுக்கு வந்திருங்க. அங்கே நானும், சாரும் மட்டுமில்லாமல் இன்னும் நிறையப் பேரும் இருப்பாங்க! அங்கே உங்க டெமோவுக்கான எல்லா பொருட்களும் இருக்கும்! நீங்க டிசைனும் வரைஞ்சிக் காட்டலாம்! இல்லைன்னா தையல் வேலையும் செஞ்சிக் காட்டலாம்”என்று அவளுக்குப் பொறுமையாக விளக்கினான் வெற்றிச்செல்வன்.
அதையெல்லாம் நன்றாக கேட்டுப் புரிந்து கொண்டவளோ சிறு தயக்கத்துடன் அவனைப் பார்க்கவும்,
“என்னம்மா?”என்றவனின் கனிவு நிறைந்த குரலில் நெகிழ்ந்து போய்,
“எனக்கு இங்கே வேலைக் கிடைக்குமோ, கிடைக்காதோன்னு நினைச்சு சாப்பாடு எடுத்துட்டு வராமல் இருந்துட்டேன்ண்ணா. அதனால் வீட்டுக்குப் போய்த் தான் சாப்பிட்டுட்டு வரனும். அதுக்குப் பர்மிஷன் கிடைக்குமா?”என்று அவனிடம் தொண்டை கமறக் கேட்டிருந்தாள் மதுபாலா.
அதைக் கேட்டதுமே அவள் மீது இரக்கம் சுரக்க,”நீங்க வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு வரனும்னு எல்லாம் இல்லம்மா. இங்கேயே கேன்டீனில் சாப்பிடலாம். பணம் கொடுக்கத் தேவையில்லை. உங்களுக்கு வேலை கன்ஃபார்ம் ஆனதும் உங்களுக்குப் பிடிச்சா இங்கே பணம் கொடுத்துச் சாப்பிட்டுக்கலாம்”என்று அவளுக்குப் புரிய வைத்தான் வெற்றிச்செல்வன்.
அதில் நிம்மதியுற்று,”தாங்க்ஸ்ண்ணா”என்றவளிடம்,
“நான் உங்களைக் கேன்டீனுக்குக் கூட்டிட்டுப் போறேன். வாங்க”என்று அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றுச் சிற்றுண்டிச் சாலையில் விட்டு, விட்டு அங்கே பணிபுரிந்தவர்களிடம் மதுபாலாவைப் பற்றிய விவரத்தை உரைத்து விட்டு மீண்டும் அவளிடம் வந்து,”நான் அவங்க கிட்ட உங்களைப் பத்திச் சொல்லிட்டேன். உங்களுக்குப் பிடிச்ச சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுட்டு இரண்டு மணிக்கு டெமோவுக்கு வந்தால் போதும்”என்று கூறி விட்டு அகன்றான் வெற்றிச்செல்வன்.
அவன் கூறியதைப் போலவே, தன்னிடம் வந்தப் பணியாளர்களிடம் தனக்குத் தக்காளி சாதம் மட்டும் போதும் என்றுரைத்து விடவும், உடனே சுடச்சுட அந்த உணவு அவளுக்குத் தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.
அந்த அலுவலகத்தின் முதலாளியான புகழேந்திக்கு மனதில் நன்றி தெரிவித்துக் கொண்டுத் தக்காளி சாதத்தை வயிறார உண்ணத் தொடங்கி விட,
“என்ன மேடம் தக்காளி சாதத்துக்கு சைட் டிஷ் எதுவும் இல்லாமல் சாப்பிட்டுட்டு இருக்கீங்களே?”என்று கேட்டபடியே அவளருகில் வந்து அமர்ந்த தோழியின் குரலைக் கேட்டதுமே பரவசத்துடன் அவளை நோக்கிப்,”பிரேமா! ரொம்பத் தாங்க்ஸ்டி!”என்றிருந்தாள் மதுபாலா.
“எதுக்கு?”
“நீ எனக்கு இந்த ஆஃபீஸில் வேலைக்கு டிரை பண்ணச் சொல்லி மோட்டிவேட் செஞ்சதுக்குத் தான்!”எனப் புன்னகையுடன் கூறியவளிடம்,
“ம்ஹ்ம். இப்போ சொல்லு! நான் உன்னை இங்கே எப்போதிலிருந்து வரச் சொல்லிட்டு இருந்தேன்? உனக்கு ரொம்பவே லேட் ஆக ஞானோதயம் வந்திருக்கு”என்று அவளைப் பொய்யாக கடிந்து கொண்டாள் பிரேமா.
தொடரும்