இதயம் 30.2

அவரது பதிலில் மலருக்கு நிம்மதி அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்து கொண்டது.

மேலும் சில அறிவுரைகளை மருத்துவர் கூற, அதனைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட இருவரும் வெளியே வந்தனர்.

கங்கிராஜுலேஷன்ஸ், அப்பா ஆகிட்டீங்க,” என்று மலர் சிரிப்புடன் அவனிடம் வாழ்த்துக்களைக் கூற, “உனக்கும் கங்கிராஜுலேஷன்ஸ், அம்மா ஆகிட்டீங்க மிஸஸ் ரிஷிகேஷவ்,” என்று மொழிய, இருவரது முகத்திலும் புன்னகை மின்னி மலர்ந்தது.

பின் ஒருவித மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருவரும் பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்தனர்.

உள்ளே நுழைந்து கதவை அடைத்தவன் மனைவியை மென்மையாக அணைத்துக் கொண்டான். தானும் அவனைக் கரம் கொண்டு அணைத்தவள், “நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

எனக்குமேசந்தோஷத்துல என்ன சொல்றதுன்னு தெரியல. ஐ அம் ஃபீல் ஃபுல்ஃபீல்டு,” என்றவனது குரல் அவனுடைய மனநிலையை அப்பட்டமாக எடுத்துக் காண்பித்தது.

பிறகு நிமிடங்கள் முடிகளாகக் கரைய, மனைவியிடம் இருந்து பிரிந்தவன், “ரொம்ப நேரம் நிக்காத, உட்காரு,” என்று அமர வைக்க, “நீங்க உட்காருங்க,” என்றவள் அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.

“அம்மாக்கு சொல்லணும். விஷயம் தெரிஞ்சா சாகித்யா, வித்யா, முரளி எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அப்புறம் அத்தை மாமாவுக்கு சொல்லணும்,” என்று மலர் கூற, “சொல்லுவோம். கண்டிப்பா வீட்ல சந்தோஷப்படுவாங்க. அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு வருஷம் ஆகியும் குழந்தை இல்லன்னு அம்மா அப்பாக்கு ரொம்ப கவலை. ஆனால் அதை வெளியே காட்டினது இல்ல. இப்ப நம்ம விஷயத்தை சொன்னா கண்டிப்பா ரொம்ப சந்தோஷப்படுவாங்க,” என்று ரிஷி மொழிந்தான்.

“ஃபர்ஸ்ட் அத்தைக்கு சொல்லலாம், கால் பண்ணு,” என்று ரிஷி கூற, மலர் தனது அலைபேசியை எடுத்து மாதவிக்கு அழைத்தாள்.

அழைப்பை ஏற்ற மாதவி, “சொல்லு மலரே, என்ன பண்ற? இன்னைக்கு உனக்கு காலேஜ் இல்லையா?” என்று கேட்டிட, “காலேஜ் இருக்குமா? நான் தான் லீவ் போட்டு வந்துட்டேன்,” என்று மலர் பதிலளித்தாள்.

“ஏன் மலரு, எங்கேயாவது வெளியே போறீங்களா?” என்று மாதவி கேள்வி தொடுக்க, “இல்லம்மா,” என்றவள் பின் மெதுவான குரலில், “எனக்கு நாள் தள்ளி போயிருக்கு. இப்பதான் ஹாஸ்பிடல் போய் டாக்டரை பார்த்துட்டு வந்தோம். ரிசல்ட் பாஸிட்டீவா வந்திருக்கு,” என்று கூறினாள்.

“மலரு…” என்று ஆர்ப்பரித்த மாதவி, “நெஜமாவா டி? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நானே உன்கிட்ட கேட்கலாம்னு இருந்தேன் டி. முந்தாநேத்துவந்தப்பவே உன் முகம் பளபளன்னு இருந்துச்சு. நான் கேட்டு அது இல்லாம போச்சுன்னா சங்கடம்னுதான் கேட்காம விட்டுட்டேன்,” என்றவரது குரலில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

தாயின் முகத்தைக் கண்ட சாகித்யா, “என்னம்மா, முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது? என்ன விஷயம்?” என்று வினா எழுப்ப, “உன் அக்கா உண்டாகியிருக்காடி,” என்று மாதவி பதில் கொடுத்தார்.

“ஹேய், நான் சித்தி ஆகிட்டேனா?” என்று சாகித்யா ஆர்ப்பரிக்க, விஷயம் தெரிந்த முரளியும் வித்யாவும் சந்தோஷத்தில் குதிக்கத் தொடங்கினர். அன்று சனிக்கிழமை, அதனால் மூவரும் வீட்டில்தான் இருந்தனர்.

“உன் மாமியார் வீட்டுக்கு சொல்லிட்டியா டி?” என்று மாதவி கேட்க, “இல்லம்மா, ஃபர்ஸ்ட் உனக்குத்தான் கால் பண்றேன்,” என்று பதில் கொடுத்தாள்.

“சரி மலரு, நான் இப்பவே கிளம்பி வரேன். உன் மாமியார் வீட்டுக்கு கூப்பிட்டு விஷயத்தை சொல்லு,” என்ற மாதவி சாமி படத்தின் முன்பு நின்று கைகூப்பி வணங்கினார்.

மலர் பின் ஷாலினிக்கு அழைப்பை விடுத்தாள். மாமியார் வீட்டில் ஷாலினிதான் மலருக்கு மிகவும் நெருக்கம் என்பதால் அவளிடமே விஷயத்தைக் கூறலாம். இன்னுமே ராதா மலரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.

அழைப்பு போய்க்கொண்டிருக்க, “நீங்க பேசுறீங்களா?” என்று ரிஷியிடம் மலர் கேட்டாள்.

“நான் எப்படி? நீயே சொல்லு,” என்று ரிஷி சிறிது தயக்கத்துடன் கூற, “ஆஹா, ராத்திரியும் பகலுமா வேலை பார்க்கும் போது இந்தக் கூச்சம் எங்க போச்சு?” என்று மலர் கண்ணடித்துச் சிரித்தாள்.

“அதெல்லாம் உன்கிட்ட எனக்கு எதுவுமே கிடையாது,” என்றவனது இதழில் மந்தகாசப் புன்னகை மின்ன, “அது சரி,” என்று உதட்டைச் சுழித்தாள் மலர்.

அழைப்பு துண்டாகும் இறுதி கணத்தில் ஏற்ற ஷாலினி, “சொல்லுங்க அண்ணி, என்ன பண்றீங்க? ஏன் நேத்து எனக்கு கால் பண்ணல?” என்று உரிமையாகக் கேட்க, “நேத்து எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு ஷாலினி, அதுதான்,” என்று மலர் பதிலளித்தாள்.

“எவ்வளவு ஒர்க் இருந்தாலும் எனக்கு கால் பண்ணாம இருக்கக் கூடாது,” என்று ஷாலினி சிரிப்புடன் கூற, “இனிமே கூப்பிடுறேன்,” என்று தானும் சிரித்தபடி பதில் அளித்தவள், “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கால் பண்ணேன்,” என்று மெலிதான தயக்கத்துடன் மொழிந்தாள்.

“என்ன விஷயம் அண்ணி? நீங்க சொல்றதைப் பாத்தா ஏதோ பெரிய விஷயமா இருக்கும் போலயே?” என்று ஷாலினி இழுக்க, “அது ஷாலினி…” என்றவளுக்குக் கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது.

தாயிடம் திடமாகக்கூறிவிட்டவளுக்கு ஷாலினியிடம் கூறக் கூச்சம் தடுத்தது.

“என்ன அண்ணி, இவ்ளோ தயங்குறீங்க?” என ஷாலினி வினா தொடுக்க, “அது ஷாலினி… நீ அத்தையாகப் போற,” என்று மலர் ஒருவழியாக வார்த்தையைக் கோர்த்து கூறிவிட்டாள்.

விஷயத்தைக் கேட்ட ஷாலினிதான் மறுமுனையில், “வாவ் அண்ணி, வாழ்த்துக்கள்!” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, “தேங்க்ஸ் ஷாலினி,” என்று மலரும் அதே ஆர்ப்பரிப்புடன் பதில் அளித்தாள்.

“எனக்குச் சந்தோஷத்துல வார்த்தையே வர மாட்டேங்குது அண்ணி. நேர்ல மட்டும் இருந்தா உங்களை இருக்கமா கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்து இருப்பேன்,” என்று படபடவென பட்டாசாய்பொறிந்தவள், “இப்பவே போய் எல்லார்கிட்டயும் சொல்றேன். கொஞ்ச நேரத்துல நாங்க கிளம்பி வர்றோம். எனக்கு இப்பவே உங்களை நேர்ல பாக்கணும்,” என்று அழைப்பைத் துண்டித்தவள் மற்றவர்களிடம் கூற விழைந்தாள்.

“அம்மா!” என்று கத்தியபடி தனது அறையில் இருந்து ஷாலினி இறங்கி வர, “எதுக்கு இப்படி கத்திட்டு வர்ற? மெதுவா கூப்பிட வேண்டியதுதானே,” என்று ராதா அதட்டினார்.

“கத்திச் சொல்ற அளவுக்கு இது பெரிய விஷயம்தான் மா,” என்று குறித்தவள், “அப்பா எங்க?” என்று கேட்க, “ஆபீஸ் ரூம்ல இருக்காரு, பாரு,” என்ற ராதா பதிலளித்தார்.

“அப்பா, வெளிய வாங்க,” என்று அவரது கையைப் பிடித்து வெளியே அழைத்து வர, “என்ன விஷயம் ஷாலு?” என்று ராதாவே அவளது அலப்பறையில் கேட்டார்.

“சொல்றேன் மா,” என்றவள், “நீங்க ரெண்டு பேரும் தாத்தா பாட்டி ஆகப் போறீங்க,” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கூற, என்னவென்று திகைத்த இருவரது முகத்திலும் சந்தோஷம் வந்தமர்ந்தது.

“அண்ணாமலை, ரிஷி கால் பண்ணினானா ஷாலு?” என்று மகிழ்ச்சியில் வினவ, “இப்பதான் அண்ணி கிட்ட பேசினேன்பா. அவங்கதான் சொன்னாங்க. கொஞ்சம் முன்னதான் ஹாஸ்பிடல் போய் கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்தாங்களாம். வாங்க, நம்ம கிளம்புவோம் இப்பவே,” என்று ஆர்ப்பரித்தாள்.

“ராதா, நிஜமாவாடி?” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் கேட்க, “ஆமாம்மா, நான் அத்தையாகப் போறேன். நீ பாட்டி ஆகப் போற,” என்று குதித்தாள்.

“ஏன் இதை என்கிட்ட சொல்ல மாட்டாங்களா அவங்க ரெண்டு பேரும்?” என்று ராதா முனைத்துக் கொள்ள, “நீதான் அண்ணா அண்ணிகிட்ட சரியா பேசறது இல்லையேமா, அப்புறம் எப்படி சொல்லுவாங்க?” என்ற ஷாலினி, “சரி, இதெல்லாம் அப்பறம் பேசிக்குவோம். கிளம்புங்க, போய் அண்ணாவையும்அண்ணியையும் பாத்திட்டு வருவோம்,” என்றாள்.

ஷாலினியின் அலப்பறையில் அறைக்குள் இருந்த தூரிகா வெளியே வந்து, “என்ன ஷாலினி, எதுக்கு கத்திட்டு இருக்க?” என்று கேட்க, “அண்ணி, நீங்க பெரியம்மா ஆகப் போறீங்க,” என்று அவளிடமும் சிரிப்புடன் கூறினாள்.

“என்ன சொல்ற?” என்ற தூரிகா புரியாது விழிக்க, “மலரண்ணிகன்சீவ்வா இருக்காங்க,” என்று ஷாலினி விளக்கினாள்.

அதைக் கேட்ட அடுத்த நொடி ஷாலினியின் முகம் அதிர்ந்து இருண்டு போக, மாமியாரைப் பார்த்தாள்.

ராதாவும் தனக்குப் பேரப்பிள்ளை வரப்போகும் மகிழ்ச்சியில் நின்றிருந்தார்.

அவரது முகத்தை வைத்து அகத்தை உணர்ந்தவளுக்கு மேலும் திடுக்கிட்டது. காரணம் தனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையே. தனக்கு முன் இந்த மலர் பிள்ளை பெற்றுக் கொண்டால் இவர் அவளது கட்சிக்குத் தாவி விடுவாரோ என்று உள்ளம் பயந்தது.

இத்தனை நாள் பிடிக்காத மருமகள், வேலைக்காரி என்று வெறுப்புடன் இருந்தவர் இன்று வாரிசு வரப்போவது தெரிந்ததும் சிரிப்புடன் நிற்கிறாரே என்று உள்ளம் குமைந்தது.

ராதா அவளது முக மாற்றத்தைக் கவனிக்காமல், “என்ன அமைதியா நிக்கிற? போய் சீக்கிரம் கிளம்பி வா. போய் அவங்க ரெண்டு பேரையும் பார்த்துவிட்டு வருவோம். இவ்வளவு நல்ல செய்தி சொல்லி இருக்காங்க,” என்று மருமகளை விரட்டினார்.

“நீங்க போயிட்டு வாங்க அத்தை. நான் அவர் வந்ததும் அவர் கூட சேர்ந்து போய் பார்த்துட்டு வரேன்,” என்ற தூரிகா முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு கூற, ஷாலினிக்கு அவளது எண்ணம் புரிந்தது.

ஆனால் ராதாவும் அதனைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை. இத்தனை நாள் பார்க்கும் அனைவரும், மகனுக்கு திருமணம் ஆயிற்றே, பிள்ளை இல்லையா என்று கேட்டு ராதாவை வேதனைப்பட வைத்திருந்தனர். போன வாரம் கூட இரண்டாவது மகனுக்கு திருமணம் ஆகியும் நான்கு மாதங்கள் ஆகிவிட்டது, இன்னும் ஒரு நல்ல செய்தியும் வரவில்லையா, இரண்டு பேருக்கும் குழந்தை இல்லையா என்று அவரை மன உளைச்சலுக்கு ஆக்கியிருந்தனர்.

இப்போது மலர் கருத்தரித்திருப்பது ராதாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னைப் பேசியவர்களது முகத்தில் கரியைப் பூசி, தனக்குப் பேரப்பிள்ளை வரப்போவதை கூற வேண்டும் என்று உள்ளுக்குள் சூளுரைத்தார்.

தூரிகா வரவில்லை என்றதும் அண்ணாமலை, ராதா மற்றும் ஷாலினி மூவரும் ரிஷி மற்றும் மலரைக் காண விரைந்தனர்.

இங்கு மலர் அலைபேசியைத் துண்டித்ததும் அழைப்பு மணி ஓசை கேட்டது. “ரிஷி, அத்தைதான் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்,” என்று கூற, “அதுக்குள்ளே வந்துட்டாங்களா?” என்று ஆச்சரியப்பட்ட மலர் தானே எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

திறந்ததும், “அக்கா!” என்று ஓடிவந்து அணைத்துக் கொண்ட சாகித்யா, “கங்கிராஜுலேஷன்ஸ் க்கா! நான் சித்தி ஆகிட்டேன்,” என்று குஷியில் ஆர்ப்பரித்தாள்.

வித்யாவும் முரளியும் கூட மலரை அணைத்துக் கொள்ள, ரிஷி சிரிப்புடன் அவர்களைப் பார்த்து இருந்தான்.

“பிள்ளையைப் போட்டு நசுக்காதீங்க,” என்று அவர்களைப் பிரித்து விட்ட மாதவி, “ரொம்ப சந்தோஷமா இருக்கு மலரு. உங்க அப்பாவே வந்து உனக்குப் பிள்ளையா பிறக்கப் போறாரு,” என்று மகளை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

“எனக்கும் அதான் ஆசைமா,” என்றவள் தாயை அணைத்துக்கொள்ள, “கங்கிராட்ஸ் மாம்ஸ்,” என்று சாகித்யா ரிஷியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“தேங்க்ஸ் சாகித்யா,” என்று ரிஷி மென்மையாகப் புன்னகைக்க, “இனிமே அக்காவைக் கவனமா பார்த்துக்கோங்க மாம்ஸ்,” என்று அறிவுரை வழங்கினாள்.

“கண்டிப்பா,” என்று ரிஷி மொழிய, “டாக்டர் டேப்லட்ஸ் கொடுத்தாங்களா? என்கிட்ட காட்டுங்க,” என்று சாகித்யா மாத்திரையை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் மாதவி தான் செய்து கொண்டு வந்திருந்த இனிப்பை மகளுக்கு ஊட்டி விட்டு மருமகனுக்கும் எடுத்து வந்து கொடுத்தார்.

“சத்து மாத்திரைதான் கொடுத்திருக்காங்க க்கா. கரெக்டா சாப்பிடு. நேரத்துக்கு தூங்கி எழு,” என்று தன் பங்கிற்கு அறிவுரை வழங்க, மலர் சிரிப்புடன் கேட்டுக் கொண்டாள்.

மகள் வேலை செய்ய வேண்டாம் என்று எண்ணி மாதவியே அனைவருக்கும் மதிய உணவை சமைக்க, எல்லோரும் மகிழ்ச்சியுடன் உண்டனர்.

பிறகு மாதவி மலரிடம் நிறைய அறிவுரைகளைக் கூறி, ஆயிரம் பத்திரங்களை மொழிந்துவிட்டு பிள்ளைகளுடன் விடைபெற்றுச் சென்றார்.

“ரிஷி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிறியா மலர்?” என்று கேட்க, “ரெஸ்ட்லாம் வேணாம். ஹால்லயே உட்கார்ந்துக்கலாம். நீங்க என் பக்கத்திலே இருங்க,” என்றவள் தொலைக்காட்சியில் பாடலை ஒலிக்கவிட்டு அதனை ரசித்தபடி கணவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

பாடலை ரசித்தபடி இருந்தவள் சிறிது நேரத்திலேயே கணவனது மார்பில் சாய்ந்து உறங்கிவிட, சயனத்தில் இருக்கும் மனைவியை ரசனையுடன் பார்த்தவனது இதழ்களில் புன்னகை பூத்தது.

error: Content is protected !!
Scroll to Top