இதயம் 30.3

அவனது விரல் வழக்கம் போல மலரின் நாசியில் பதிய, அவளது ஒற்றைக் கல் மூக்குத்தியை விரலால் வருடியவன் நெற்றியில் இதழ் பதித்தான்.

மலர் இன்னும் வாகாக அவன் மேல் சாய்ந்து உறங்க, மனைவியைப் பூ போல கையில் ஏந்தியவன் அறைக்குள் சென்று மெத்தையில் படுக்க வைத்து, தானும் அவளருகே படுத்து விழிகளை மூடிக்கொண்டான்.

என்னவோ சொல்ல முடியாத மனநிறைவு. மனது அவ்வளவு அமைதியாக இருந்தது.

இதுபோல அலாதியான மகிழ்ச்சியை உணர்ந்த தருணங்கள் வெகு சொற்பமே. அதில் இன்றைய நிகழ்வும் சேர்ந்து கொண்டது.

மனது மலரை முதலில் சந்தித்ததில் இருந்து இன்று வரை நடந்த நிகழ்வுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, விழிகளுக்குள் மனைவியின் பல்வேறு பரிணாமங்களை நினைவில் தழுவிக் கொண்டிருந்தான்.

அவனது சிந்தையைக் கலைக்கும் விதமாக ஒலித்தது அழைப்பு மணி.

எழுந்து சென்று கதவைத் திறக்க, “கங்கிராட்ஸ் ண்ணா!” என்று ஷாலினி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

“தேங்க்ஸ் ஷாலினி,” என்று தங்கையை அணைத்தபடி கூற, “அம்மா கிட்ட நீயே கால் பண்ணி சொல்லி இருக்கலாம்ல கண்ணா,” என்ற ராதா மறுபடியும் மகனை அணைத்துக் கொண்டார்.

“உங்களுக்கு இன்னும் என் மேல கோபம் போகல, அதனாலதான் மா ஷாலினி கிட்ட சொல்லச் சொன்னேன்,” என்று ரிஷி இயம்ப, “கோவம்லாம் இல்ல கண்ணா. வருத்தம்தான், அதுவும் இப்ப காணாம போயிடுச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்ணா. உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு வருஷம் ஆகியும் குழந்தை இல்லன்னு எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு. உன்னால அந்தக் கவலை தீர்ந்துருச்சு. நம்ம வீட்டுக்கு வாரிசு வரப் போகுது,” என்றவரது குரலில் உண்மையான மகிழ்ச்சி இருந்தது.

அதனை உணர்ந்த ரிஷி தானும் தாயை அணைத்துக் கொண்டவன், “நானும் உங்க கிட்ட சொல்லி இருக்கணும்மா,” என்று விழியால் மன்னிப்பை வேண்டினான்.

“போதும் உங்க அம்மா பிள்ளை பாசம்,” என்ற ஷாலினி, “அண்ணி எங்க அண்ணா?” என்று கேட்க, “அவ ரூம்ல தூங்கிட்டு இருக்கா,” என்று பதிலளித்தான்.

ஷாலினி பதில் அளிக்கும் முன் ராதா, “மாசமா இருக்குறவளை தூங்கும்போது எழுப்பக் கூடாது ஷாலினி. அவளே தூங்கி எழுந்து வரட்டும்,” என்று கூற, “பார்ரா, பேரப்புள்ள வரப் போகுதுன்னு தெரிஞ்சதும் மருமகளுக்கு சப்போர்ட்டா?” என்று தாயை வம்பிழுத்தாள் ஷாலினி.

அண்ணாமலை மகிழ்ச்சியுடன் மகனின் தோளைத் தட்ட, தானும் சிரிப்புடன் தந்தையைக் கட்டிக் கொண்டான்.

“இப்பதான் உன்னை கையில வாங்கின மாதிரி இருக்கு. அதுக்குள்ளயும் நாள் ஓடிருச்சு, உன்னோட குழந்தையை கையில் வாங்கப் போறோம்,” என்று அண்ணாமலை நினைவுகள் தந்த மகிழ்ச்சியுடன் கூற, ரிஷியும் சிரிப்புடன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஷாலினி எல்லோருக்கும் குடிக்க தேநீர், சிற்றுண்டி எடுத்து வர, மலர் ஒரு மணி நேரம் சென்றே எழுந்தாள்.

தான் மெத்தையில் படுத்திருப்பதை உணர்ந்தவள் கணவன்தான் தூக்கி வந்திருப்பான் என்று அறிந்து சிரிப்புடன் எழுந்து முகம் கழுவி வெளியே வர, “அண்ணி எழுந்துட்டீங்களா?” என்று சிரிப்புடன் அவளருகே வந்தாள் ஷாலினி.

அவர்களை இவ்வளவு சீக்கிரம் எதிர்பாராதவள் சிறிது திகைத்துப் பின், “சாப்பிட்டதும் கொஞ்சம் டயர்டா இருந்துச்சு, அதான் தூங்கிட்டேன்,” என்று கூற, “இந்த மாதிரி டைம்லடயர்ட்னெஸ் எல்லாம் இருக்கத்தான் செய்யும். நல்ல ரெஸ்ட் எடுங்க,” என்றவள் மலரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அண்ணாமலை மலருக்கு வாழ்த்துக்களைக் கூற, மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டவள் ராதாவின் முகம் பார்த்தாள்.

ராதா தங்களைக் காண வருவார் என்று மலர் சிறிதும் எண்ணவில்லை. அவரது வரவில் ஆச்சரியம் கொண்டவள் முகத்தைச் சாதாரணமாக வைத்து அவரைக் கண்டாள்.

ராதாவிற்குப்பேரப்பிள்ளை வருவதில் மகிழ்ச்சி இருந்தாலும் மலரை முழுமையாக ஏற்றுக்கொள்ள மனது வரவில்லை. இப்போதுதான் மகனிடமே பேசுவதற்கு அவருக்கு முழுமனதாய் எண்ணம் பிறந்தது.

அதனால் அவளது முகம் பார்த்து ஏதும் கூறாதவர் மகளிடம், “ஷாலினி, நம்ம வாங்கிட்டு வந்ததெல்லாம் எடுத்துட்டு வந்து உங்க அண்ணிகிட்ட கொடு. நான் சொன்னதெல்லாம் கரெக்டா சொல்லிடு,” என்க, மலரின் விழிகள் வியப்பில் விரிந்தது.

நம்ப இயலாது கணவனைக் காண, அவனும் சிரிப்புடன் மனைவியைத்தான்பார்த்திருந்தான்.

“என்னம்மா, பேரன் குழந்தை மேல ஓவர் அக்கறையா இருக்கு?” என்று ஷாலினி வம்பிழுக்க, “பேசாம நான் சொன்னதைச் செய் ஷாலு,” என்று மகளை முறைத்தார்.

“சரி சரி, முறைக்காதம்மா,” என்ற ஷாலினி தாய் பார்த்துப் பார்த்து வாங்கி வந்த உணவு பண்டங்கள், இதர பொருட்கள் என அனைத்தையும் எடுத்து வந்தவள் தன் தாய் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் தெளிவாக எடுத்துரைத்தாள்.

மலர் அமைதியாகத் தலையசைத்து கேட்டுக்கொள்ள, “அம்மாவோட கோபம் இன்னும் கொஞ்ச நாள்தான் ண்ணி. பாப்பா பிறந்ததும் கண்டிப்பா உங்ககிட்ட நல்லா பேசிடுவாங்க,” என்று ஷாலினி கூற, “தெரியுது ஷாலினி,” என்ற சிரிப்புடன் மலரும் இயம்பினாள்.

பிறகு நேரம் அழகாய் கழிய, இரவு உணவை ராதாவும் ஷாலினியும் சேர்ந்து சமைத்தனர். நாளை அண்ணாமலைக்கு ஒரு முக்கியமான தொழில்முறை சந்திப்பு இருப்பதால் இரவு உணவை உண்டுவிட்டு இருவரிடமும் கூறிவிட்டு விடைபெற்றனர்.

“ஷாலினி தான் அண்ணி, அடிக்கடி வருவேன் உங்களை, குட்டி பாப்பாவையும் பாக்குறதுக்கு. இன்னும் ஒன்பது மாசம் பாப்பாவ கையில வாங்க நான் வெயிட் பண்ணனும்,” என்று மகிழ்ச்சியில் கூறிவிட்டு பெற்றோருடன் கிளம்பினாள்.

அவர்கள் கிளம்பியதும் கணவனோடு உள்ளே நுழைந்தவள், “என்னால நம்பவே முடியல. உங்க அம்மா நம்மள பாக்க வந்திருக்காங்க. கல்யாணமாகி இத்தனை மாசம் எட்டி கூட பாக்கல,” என்று ஆச்சரியமாகக் கேட்க, “எல்லாம் பேரன் குழந்தைக்காகத்தான். என்கிட்ட கூட கோபம் இல்லாம நார்மலா பேசுனாங்க,” என்று ரிஷி மொழிந்தான்.

“ஹ்ம்ம், இருந்தாலும் உங்க அம்மாவுக்கு இவ்வளவு ஓரவஞ்சனை ஆகாதுப்பா,” என்று மலர் உதட்டைச் சுழிக்க, “ஏய், என்னடி அதுதான் எங்கம்மாவே கொஞ்சம் கொஞ்சமா சமாதானமாகி வராங்கல்ல? நீ இப்ப வந்து முனைச்சிக்கிற,” என்று ரிஷி வினவினான்.

“உங்க அம்மா இறங்கி வந்தா நான் பேசணுமா? அவங்க ஒன்னும் எனக்காக வரல. அவங்க வீட்டு வாரிசுக்காக வந்திருக்காங்க,” என்று மலர் முகத்தைத் திருப்ப, “நம்ம பிள்ளைக்காக வந்தா என்ன, நமக்காக வந்தா என்ன? எல்லாம் ஒன்னுதானே மலர்,” என்று மனைவியை சமாதானம் செய்ய விழைந்தான்.

“அதெல்லாம் ஒன்னும் கிடையாது. எப்ப எனக்காக இறங்கி வந்து பேசுறாங்களோ அன்னைக்குத்தான் உங்க அம்மா கிட்ட நான் நார்மலா பேசுவேன்,” என்று மலர் தலையைச் சிலுப்ப, “அது சரி, எந்த ஊர்ல மாமியார் மருமகளும் சண்டை போடாம இருந்திருக்காங்க?” என்று ரிஷி போலியாய் அலுத்துக் கொண்டான்“இதோ இந்த திங்ஸ் எல்லாம் பாத்தீங்களா? இவ்வளவு நாள் என்ன ஏதுன்னு கூட கேட்காம இருந்துட்டு, இப்ப இவ்வளவு வாங்கிட்டு வர்றாங்க. இதெல்லாம் நான் ஏத்துக்கணுமா?” என்று மலர் சிரிப்புடன் ஒரு சண்டைக்குத் தயாராக, “ஹேய், இதெல்லாம் ஓவர் டி,” என்ற ரிஷியும் மலர் விளையாடுவது புரிந்து அவளை சமாதானம் செய்யத் துவங்கினான்.

error: Content is protected !!
Scroll to Top