இதயம் 30.1

இதயம் – 30

“மே ஐ கம் இன், சார்?” என்ற குரலில் ஒரு கோப்பில் விழியைப் பதித்திருந்த ரிஷி நிமிர்ந்து, “எஸ், கம் இன்,” என்று அனுமதி கொடுத்தான்.

உள்ளே நுழைந்த அவனது அலுவலக உதவியாளர், “சார், இந்த பைல்ஸ் எல்லாம் நீங்க பார்த்து ஃபைனலைஸ் பண்ணிட்டா நெக்ஸ்ட் ஆர்டர் கொடுத்திடலாம்,” என்று மொழிய, “வச்சுட்டு போங்க கணேஷ், நான் பாத்துட்டு கூப்பிடுறேன்,” என்று அவரை அனுப்பி வைத்தவன் மீண்டும் கையில் இருந்த கோப்பில் பார்வையைப் பதிக்க, அவனது அலைபேசி அழைத்தது.

திரையில் அழகாகச் சிரிப்புடன் மலரின் புகைப்படம் மின்னிக் கொண்டிருக்க, அதனைக் கண்டதும் ரிஷிக்கு புன்னகை எழுந்தது.

கல்லூரிக்குச் சென்றாலும் ஒரு நாளுக்கு மூன்று நான்கு முறையாவது மலர் ரிஷிக்கு அலைபேசியில் அழைத்திடுவாள். பேச எதுவும் இல்லை என்றாலும் ஏதாவது பேசியதையே பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க மனமின்றித் துண்டிப்பாள்.

தான் மட்டும் அவள் மேல் நேசம் கொண்டிருந்தது போய், இப்போது மலருக்கும் ரிஷியின் மீது இந்தக் காதல் பித்து முழுதாய் பிடித்திருந்தது.

அது அவ்வப்போது அவளையும் மீறி வெளிப்பட்டு விட, அந்தக் கணங்கள் எல்லாம் ரிஷிக்கு மிகவும் பிடித்தமானவை.

காதலிப்பது ஒரு சுகம் என்றால், காதலிக்கப்படுவது அதைவிட அலாதியான சுகம். அதைத்தான் இப்போது ரிஷி அனுபவித்துக் கொண்டிருந்தான்.

வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவனுடன் தான் சுற்றிக் கொண்டிருப்பாள். இல்லையேல் அவன் அருகில் அமர்ந்திருப்பாள்.

தனக்குப் பிடித்த பெண், தன்னுடைய காதலி, மனைவி நேசம் கொண்டு தன்னையே சுற்றி வருவது ரிஷிக்கு அவ்வளவு சுகமாய் இருந்தது.

ஆனால், அதனைச் சுலபத்தில் ரிஷி அவளிடத்தில் வெளிப்படுத்த மாட்டான். எந்நேரமும் தன்னையே நினைத்துக் கொண்டு தன்னைத் தேடும் ஒரு ஜீவன் அருகிலேயே இருப்பது மிகவும் அலாதியானது.

திருமணமான இந்த நான்கு மாதத்தில் ரிஷி அதைத்தான் பூரணமாய் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

மனைவியின் அழைப்பில் மென்புன்னகை பூக்க, அழைப்பை ஏற்று காதில் பொருத்தினான்.

வழக்கமாய் அழைப்பை ஏற்ற அடுத்த கணம் பட்டாசு போல படபடவென எதையாவது பேசத் துவங்கி விடுவாள். இப்போது மறுமுனை அமைதியாக இருக்க, “மலர்?” என்ற ரிஷியே அழைத்தான்.

மறுமுனையில், “ஹலோ மிஸ்டர் ரிஷி, நான் மலரோட ஸ்டாப் இன்சார்ஜ் பேசுறேன்,” என்று கூறப்பட, “சொல்லுங்க மேம்,” என்றவனுக்கு மலரின் அலைபேசியில் ஏன் இவர் பேசுகிறார் என்று கேள்வி எழுந்தது.

“மிஸ்டர் ரிஷி, கருணைமலருக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸூஸ்…”

என்ற நொடி பதறிய ரிஷி, “என்னாச்சு மேம்?” என்று வினவினான்.

அவனது குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்த ஆசிரியர், “பேனிக் ஆகாதீங்க ரிஷி. அவங்க சரியா சாப்பிடலைன்னு நினைக்கிறேன், மயங்கி விழுந்துட்டாங்க. சாப்பிடக் கொடுத்து ரெஸ்ட் எடுக்க வச்சிருக்கோம். நீங்க வந்து அழைச்சிட்டு போங்க,” என்று சூழ்நிலையை விளக்க, “பிப்டீன் மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன். என் வைஃப்பை கொஞ்சம் பாத்துக்கோங்க,” என்று அழைப்பைத் துண்டித்தவன் அடுத்த வினாடி தனது அறையில் இருந்து விறுவிறுவென வெளியேறினான்.

அடுத்த நிமிடம் மகிழுந்தை இயக்கியவன் மலர் பயிலும் கல்லூரியை நோக்கிச் சென்றான்.

மனதிற்குள், திடீரென இவளுக்கு என்ன ஆயிற்று? காலையில் நன்றாகத் தானே இருந்தாள்? உடல்நிலை சரியில்லை என்றால் என்னிடம் கூறியிருப்பாளே என்று பலவாறாக எண்ணம் அவனைச் சுழற்றியடித்தது.

சரியாகப் பதினைந்து நிமிடத்தில் கல்லூரியை அடைந்தவன் வேக நடையில் அவளுடைய வகுப்பை நோக்கிச் சென்றான்.

இவனைக் கண்டதும் வகுப்பில் இருந்து வெளியே வந்த ஆசிரியர், “நீங்கதான் கருணைமலரோட ஹஸ்பண்டா?” என்று வினவிட, “ஆமாம் மேம், என்னோட வைஃப் எங்க இருக்காங்க?” என்று குரலில் பதட்டத்தைத் தேக்கி வினா கொடுத்தான் ரிஷி.

“பக்கத்து ரூம்ல தான் ரெஸ்ட் எடுக்க வச்சிருக்கோம், வாங்க,” என்று ஆசிரியர் அழைத்துப் போக, ரிஷியும் அவர் பின்னோடு சென்றான்.

அந்த அறையில் மலர் மேஜையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள். அவளது சோர்ந்த முகத்தைக் கண்ட ரிஷி, “திடீர்னு என்ன ஆச்சு மலர்? காலையில் நல்லாதானே இருந்த?” என்று வினவியபடி அவள் அருகே சென்றான்.

“இப்பவும் நான் நல்லாதான் இருக்கேன்,” என்றவள் ஆசிரியரிடம் கூறிவிட்டு அவனுடன் வெளியே நடந்தாள்.

“அப்புறம் ஏன் உனக்கு உடம்பு சரியில்லைன்னு எனக்கு கால் பண்ணி வரச் சொன்னாங்க?” என்று ரிஷி இன்னும் சற்று பதட்டமாகவே கேட்க, மகிழுந்தில் ஏறி அமர்ந்தவள், “எனக்கு ஒண்ணுமே இல்ல, நீங்க பயப்படாதீங்க. லேசா தலை சுத்திடுச்சு. அதுக்குப் போய் உங்கள வேற கூப்பிட்டு பெரிய விஷயமாக்கிட்டாங்க,” என்று லேசான சலிப்புடன் மலர் கூறினாள்.

“தலை சுத்திடுச்சா? என்ன ஆச்சு? வேற எதுவும் பண்ணுதா?” என்ற ரிஷி அவளது கன்னத்தில், நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

“எதுவுமே பண்ணலங்க,” என்று மலர் மொழிய, “அப்புறம் ஏன் தலை சுத்துது? பிபி ஏதும் லோ ஆயிருச்சா? ஹாஸ்பிடல் போயிட்டு டாக்டரைப் பாத்துட்டு வீட்டுக்குப் போவோம்,” என்றான்.

“ஐயோ, இதுக்கெல்லாம் எதுக்கு ஹாஸ்பிடல்? வேணாம்,” என்று மலர் மறுக்க, “நீ பேசாம இருடி. டாக்டரைப் பார்த்து அவங்க ஒண்ணும் இல்லன்னு சொன்னாதான் நம்ம வீட்டுக்குப் போறோம்,” என்று ரிஷி முடித்துவிட்டான்.

“என்னங்க…” என்று மலர் ஏதோ துவங்க, இடையில் நுழைந்தவன், “நீ ஒழுங்காவே சாப்பிடுறது இல்லையா மலர்? வெயிட் கூட குறைஞ்ச மாதிரி தெரியுது,” என்று கவலையுடன் வினவினான்.

“அதெல்லாம் எதுவும் இல்ல, நல்லாதானே சாப்பிட்டுட்டு இருக்கேன். முன்னாடியாவது வேலை இருக்கும், இப்போ சும்மாதான் காலேஜ் போயிட்டு வந்து சாப்பிட்டு இருக்கேன்,” என்றவள், “என்னங்க…” என்று சற்றுக் குரலுயர்த்தி அழைத்திட, அதில் திடுக்கிட்டு வாகனத்தை நிறுத்தியவன், “என்னாச்சு மலர்? எதுவும் பண்ணுதா?” என்று அச்சம் மேலிடக் கேட்டான்.

“எனக்கு எதுவும் பண்ணல,” என்றவள் பின் மெதுவான குரலில், “எல்லாம் நீங்க பண்ணதுதான்,” என்க, “நானா? நான் என்ன பண்ணேன்?” என்று ரிஷி புரியாது விழித்தான்.

நடு ரோட்டில் அவன் வாகனத்தை நிறுத்தி இருப்பதைக் கண்டவள், “ஃபர்ஸ்ட் வண்டியை எடுங்க, சொல்றேன்,” என்க, வாகனத்தை இயக்கிய ரிஷி, “சொல்லுடி, நான் என்ன பண்ணேன்?” என்று மீண்டும் வினவினான்.

“நீங்கதான்… நீங்க மட்டும் தான் பண்ணீங்க. உங்களால தான் எனக்கு தலை சுத்துது,” என்றவள் சிரிப்புடன் மொழிய, “என்ன?” என்று இப்போதும் புரியாது அவளைக் கண்டான்.

“என்னங்க, இவ்வளவு டியூப்லைட்டா இருக்கீங்க?” என்று தலையில் சிரிப்புடன் அடித்துக் கொண்டவள், “எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு,” என்றாள்.

ஒரு கணம் அதன் அர்த்தம் புரியாது புருவம் சுருக்கியவன், அடுத்த கணம், “ஹேய்…” என்று ஆர்ப்பரிப்புடன் அவளை நோக்கினான்.

“ஆமா, லாஸ்ட் மந்த் பீரியட்ஸ் மிஸ் ஆயிருக்கு. நான் கவனிக்கவே இல்ல, அம்பது நாள் ஆயிடுச்சு,” என்று மலர் சிறிதான வெட்கத்துடன் கூற, “நிஜமாவா?” என்று மொத்த மகிழ்ச்சியையும் குரலில் தேக்கி வினவியவன் வாகனத்தை ஓரத்தில் நிறுத்திவிட்டு மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“இப்படித்தான் நினைக்கிறேன். இருக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் டாக்டரை ஒரு டைம் போய் பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்,” என்று மலர் தானும் அவனை அணைத்தபடி இயம்ப, அவளை இறுக்கமாக அணைத்தவன் உச்சியில் இதழ் பதித்தான்.

தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தவன், “இப்பவே சந்தோஷப்பட்டுக்க வேண்டாம். போய் டாக்டர் கிட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்,” என்று கூற, “ஹ்ம்ம்… கண்டிப்பா பாசிட்டிவாதான் இருக்கும்,” என்றவனது இதழ்களில் புன்னகை இமை நீண்டது.

“நம்ம வீட்டு பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல் இருக்கு இல்ல, அங்க போங்க. போய் செக் பண்ணலாம்,” என்று மலர் மொழிய, “ஹ்ம்ம், போகலாம்,” என்று தலையை அசைத்தவன் மனைவியிடமிருந்து பிரிந்து வாகனத்தை மெதுவாக இயக்கத் துவங்கினான்.

அவனது வேகத்தைக் கண்ட மலர், “எதுக்கு இவ்வளவு ஸ்லோவா போறீங்க?” என்று பொறுமையின்றிக் கேட்டுவிட, “இந்த மாதிரி டைம்ல ஃபாஸ்ட்டா ட்ராவல் பண்ணக் கூடாது,” என்று ரிஷி மொழிந்தான்.

“பார்ரா, உங்களுக்கு இதெல்லாம் கூட தெரியுமா?” என்று மலர் சிரிப்புடன் கேட்க, “ஹ்ம்ம், இன்னும் நிறைய தெரியுமே,” என்று சிரித்தவனது முகத்தில் கள்ளம் புகுந்திருந்தது.

“ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று போலியாய் அழுத்துக் கொண்டவள், “பிரக்னன்சி கன்ஃபார்ம் ஆயிடுச்சுன்னா அஞ்சு மாசத்துக்கு ஒண்ணுமே கிடையாது உங்களுக்கு,” என்று மொழிய, “ஐ நோ தட்,” என்று தோளைக் குலுக்கினான் சிரிப்புடன்.

“எல்லாமே தெரிஞ்சி வச்சிருக்கீங்களே,” என்று மலர் போலியான ஆச்சரியம் காண்பிக்க, “என்ன பண்றது, என் பொண்டாட்டி சரியான மக்கு. அதுதான் நான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கிறேன்,” என்று அவளை வம்பிழுத்தான்.

“எதே, நான் மக்கா?” என்று மலர் அவனை முறைக்க, “இல்லையா பின்ன?” என்று ரிஷி பதிலுக்குச் சிரித்தான்.

மலர் பதிலுக்கு ஏதோ கூற வர, இருவரும் மருத்துவமனையை அடைந்திருந்தனர்.

“வந்து நம்ம சண்டைய கண்டினியூ பண்ணிக்கலாம்,” எனச் சிரித்தவன் மனைவியைக் கைப்பிடித்து தானே மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றான்.

உள்ளே அவர்களுக்கு முன் இருவர் அமர்ந்திருக்க, இருவரும் காத்திருக்கத் துவங்கினர். பத்து நிமிடங்களுக்குப் பிறகு மலரின் பெயர் அழைக்கப்பட, இருவரும் எழுந்து மருத்துவரைக் காணச் சென்றனர்.

மருத்துவர், “சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று வினவிட, மலர் தனது சந்தேகத்தை அவரிடம் கூறினாள்.

“ஒரு டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் பண்ணிக்கலாம். டெஸ்ட் எடுத்துட்டு வாங்க ஃபர்ஸ்ட்,” என்றவர் பரிசோதனைக்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தார்.

அந்த மருத்துவமனையிலேயே ஆய்வகம் இருக்க, ரத்த மாதிரியைக் கொடுத்துவிட்டு இருவரும் முடிவுக்காகக் காத்திருக்கத் துவங்கினர்.

அரை மணி நேரத்தில் முடிவு கொடுக்கப்பட, அதனை வாங்கிவிட்டு மருத்துவரைக் காணச் சென்றனர்.

பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர், “கங்கிராஜுலேஷன்ஸ், டெஸ்ட் பாஸிட்டீவ்,” என்க, இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி அலையலையாய் பரவியது.

“தேங்க்ஸ் டாக்டர்,” என்ற ரிஷியின் இதழில் புன்னகை தவழ்ந்திட, மருத்துவர், “இனிமே பைவ் மந்த்ஸ்க்கு கவனமா இருக்கணும். லாங் டிராவல் பண்ணக்கூடாது. நான் எழுதிக் கொடுக்கிற டேப்லெட்டை கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க. ஹெல்தி புட் ஃபாலோ பண்ணுங்க. முடிஞ்சா டெய்லி ஒரு ஒன் ஹவர் வாக்கிங் போங்க,” என்று அறிவுரை வழங்க, இருவரும் கேட்டுக்கொண்டனர்.

மலர், “டாக்டர், நான் காலேஜ் படிக்கிறேன். காலேஜுக்கு டெய்லி ட்வென்டி மினிட்ஸ் ட்ராவல் பண்ணனும். அது பண்ணலாமா?” என்று பயத்துடன் கேட்க, “தாராளமா பண்ணலாம். நான் லாங் டிராவல், போர் டு பைவ் ஹவர்ஸ் அந்த மாதிரிதான் பண்ணக் கூடாதுனு சொன்னேன். காலேஜுக்கு போங்க, நார்மலா இருங்க. கவனமா இருக்கணும்னா பயந்துட்டே இருக்கணும்னு அர்த்தம் கிடையாது. எப்பவும் இருக்கிறதை விட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும், அவ்வளவுதான்,” என்று பதில் அளித்தார்.

error: Content is protected !!
Scroll to Top