அன்பு – 20.3

“இதுவே கடைசியா இருக்கட்டும் குட்டி. இனிமே வாங்க கூடாது. விலை அதிகமா?” எனக் கேட்டார்.

“இல்ல மா… எங்க ஸ்கூல் பக்கத்துல இருக்க கடைலதான் வாங்குனா. இருபது ரூபான்னு சொன்னாம்மா!” என்றாள். மனோ சொல்லிக் கொடுத்ததை உருப்போட்டிருந்து அப்படியே கூறினாள். பூரணியும் அதோடு விட்டுவிட்டார்‌.

மறுநாள் அவர் வேலைக்குச் செல்லும் போது ராதிகாவையும் அவளது தாயையும் பூரணி சந்திக்க நேர்ந்தது. ராதிகா அவரிடம் சந்தனாவைப் பற்றி கேட்க, “ஏன் மா, நேத்து தானே அவளைப் பார்த்த. செயின் கூட வாங்கி கொடுத்தேன்னு சொன்னா அவ!” என பூரணி வினவ, ராதிகா மறுத்திருந்தாள்.

மீண்டும் ஒருமுறை ராதிகாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டவர், “சரிமா…” என்றுவிட்டு கோபமாய் வீட்டிற்குச் சென்றார். ஏனோ வயது பிள்ளையை எப்படியாவது படிக்க வைத்து கரை சேர்க்க வேண்டும் என்று பயத்துடன் ஒற்றை ஆளாய் தான் அவளைப் பாதுகாக்க, மகள் என்னவென்றால் தன்னிடமே பொய் கூறுகிறாளே என அவருக்கு ஆற்றாமை பொங்கியது. இந்த வயதில் எங்கேயும் அவள் தடுமாறிவிடுவாளோ எனத் தாயாய் தவித்துப் போனார்.

சந்தனா கணினி வகுப்பிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். வேலைக்குச் செல்லாது திரும்பி வரும் தாயைப் பார்த்தவள், “என்னம்மா… திரும்பி வர்ற?” எனக் கேட்டாள்.

உள்ளே வந்து கதவை தாழ்போட்டவர், “குட்டி… இந்த செயினை யாரு வாங்கிக் கொடுத்தது?” என அழுத்தமாய்க் கேட்டார். அதில் ஒரு நொடி இவளது தொண்டைக் குழி ஏறியிறங்கியது. மனது தடதடவென அடித்துக் கொள்ள, தாயைப் பார்த்தவளுக்கு உள்ளே உதறல் எடுத்தது‌.

“ம்மா… அதான் சொன்னேன்ல மா. ராதிகா வாங்கி கொடுத்தா!” என்றவளின் முதுகில் சுள்ளென அவர் ஒரு அடி அடிக்க, சந்தனா வலியில் துடித்துப் போனாள். பூரணியின் மொத்த கோபமும் அந்த ஒரு அடியில் இறங்கியிருக்க, மகளுக்கு நொடியில் விழிகள் தளும்பின‌.

“பொய் சொல்றீயா டி… ஹம்ம், எப்போல இருந்து நீ என்கிட்ட பொய் சொல்ல பழகுன?” எனக் கேட்டவர் மீண்டும் அடிக்க கை ஓங்க, “ம்மா… வேணாம்மா. ப்ளீஸ் மா, வலிக்குதுமா ம்மா…” என்றவள் தேம்பியழ, “யார் கொடுத்தா இதை? அதை சொல்லு டி.‌..” என்றார் கோபம் குறையாது.

“ம்மா… ஃப்ரெண்ட் வாங்கி கொடுத்தான் மா. நிஜமா ஃப்ரெண்ட்தான் மா!” என அவள் தேம்ப,

“எந்த ஃப்ரெண்ட் வாங்கி கொடுத்தான்னு சொல்லு சந்தனா…” என அவர் சினத்தில் இரைய, இவளிடம் அழுகை மட்டுமே வெளிப்பட்டது.

ஒரு வார்த்தைக் கூறவில்லை சின்னவள். வாயை இறுக மூடிக் கொண்டவளுக்கு மனோவின் பெயரை கூற உத்தமமாய் எண்ணமில்லை. அவன் பெயரைக் கூறினால், அவனுக்கு எதுவும் பிரச்சனையாகி விடக் கூடும். அதுவுமின்றி மனோதான் கொடுத்தான் எனத் தெரிந்தால் பூரணி தன்னை இனிமேல் சதாவீட்டிற்கு அழைத்துச் செல்ல மாட்டார் என மனம் அஞ்சியது.

“வாயைத் தொறந்து சொல்லு டி…” எனக் காயம்பட்ட முதுகிலே அவர் மீண்டும் அடிக்க, சந்தனா வலியில் சுருண்டுப் படுத்துவிட்டாள். திகுதிகுவென எரிந்த முதுகால் அவளுக்கு வலி உயிர் போனது. அந்நிலையிலும் அவள் எதுவும் பேசாதிருந்தது பூரணியின் கோபத்திற்கு தூபமேற்ற, கரண்டியை எடுத்து அடுப்பில் வைத்தார்.

“இப்போ நீ வாயைத் தொறந்து யார் கொடுத்தான்னு சொல்லலை, பழுத்தக் கரண்டியால கைல இழுத்துடுவென் டி!” என்றவரின் விழிகள் லேசாய் கலங்கின. தாயாய் மகள் தடம்மாறி விட்டாளோ என உள்ளம் பதறியது.

“ம்மா… வேணாம்மா. ப்ளீஸ் மா, வலிக்கும் மா…” என சந்தனா அலற, கரண்டியை அவள் கையருகில் கொண்டு வந்தவர்,

“இப்போ யாரு வாங்கிக் குடுத்ததுன்னு சொல்ல போறீயா? இல்லையா குட்டி?” என அவர் அழுத்தமாய்க் கேட்க, சந்தனா கண்களில் வலியும் கண்ணீருடனும் அவரைப் பார்த்தாள். பூரணிக்கு கண்மண் தெரியாத கோபம் வர, அவளது உள்ளங்கையில் கரண்டியை வைத்திருந்தார்.

“ஆ… அம்மா… எரியுதும்மா… விடும்மா. ப்ளீஸ் மா. விடும்மா!” என் அவள் கையை அவரிடமிருந்து உருவ, பூரணியின் கண்களிலிருந்து சரசரவென நீர் வழிந்தது.

சந்தனா கீழே அமர்ந்து கையைப் பிடித்தபடி தேம்ப, அவர் அப்படியே உட்கார்ந்துவிட்டார். நெஞ்சு வரை பயம் பரவ, யாரிடமும் சொல்லி கூட அவரால் அழ முடியவில்லை. மகளை சரியாக தான் வளர்க்கவில்லையோ என அவர் மனம் வருந்த, சிறிது நேரம் அமைதியாய் சென்றது. சந்தனா மட்டும் ஒரு வார்த்தை உதிர்க்காது தேம்பியபடியே அமர்ந்திருந்தாள்.

வேலைக்குச் செல்லும் மனநிலை சுத்தமாய் இல்லையெனினும் போய் ஆக வேண்டிய கட்டாயம் உணர்ந்தவர், “இன்னைக்கு எந்த க்ளாஸூம் போக வேணாம். வீட்லயே இரு…” என மகளிடம் காய்ந்துவிட்டு கிளம்பினார்.

சந்தனா அப்படியே தரையில் படுத்துவிட்டாள். பூரணி சூடு வைத்த கை சிவந்து தோள் கழண்டு வருமளவிற்கு இருந்தது‌. கையை ஊதிக் கொண்டே இருந்தாள். வலிதான் குறையவில்லை. என்ன செய்து வலியைப் போக்குவதெனத் தெரியாது தேம்பியழுதவளுக்கு தேற்றுவார் இன்றி மேலும் மேலும் அழுகை பொங்கியது. தலையணையில் முகம் புதைத்துத் தேம்பியபடியே தூங்கிவிட்டாள்.

மதிய உணவும் உண்ணவில்லை. மாலை மங்கிய நேரம் பூரணி வீட்டிற்கு வந்தார். மகளிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இருந்தும் அவள் அப்படியே படுத்திருப்பதைக் கண்டு தாயாய் உள்ளம் துடிக்க, கையில் எண்ணெய் வைத்துவிட்டார். உணவை தானே ஊட்டிவிட, சந்தனா எதுவும் பேசாது உண்டாள். ஆனாலும் அவளுக்கு வலியில் விழிகள் கலங்கின. தாய் தன்னிடம் பேசவில்லை என்று மேலும் அழுகை பொங்கியது. அவளது முதுகிலும் எண்ணெய் தேய்த்துவிட்ட பூரணி, கலங்கிய கண்களோடு படுத்துவிட, இவளுக்கு குற்றவுணர்வில் கண்கள் கரித்தன.

நேராய் படுக்க முடியவில்லை. முதுகு காந்தியது. ஒருபுறமாய் படுத்தாள். அப்படியே பூரணி அருகே சென்று அவரை அணைத்துக் கொண்டாள். அவர் எதுவும் பேசாது மகளைத் தட்டிக் கொடுக்க, அவளும் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள். ஆனால் பூரணி தூங்கவே இல்லை. மகளைப் பற்றிய கவலை அரித்ததில் அவருக்கு உறக்கம் பறிபோயிருந்தது.

மறுநாள் காலை சந்தனா உறங்கிக் கொண்டிருக்க, பூரணி எழுந்து சமைத்தார். குளித்து வந்தார். மனம் எதிலுமே செல்லவில்லை. மகளிடம் கோபம் கொள்ளாது என்னவென விசாரிக்க வேண்டுமென நிதான மனது கூற, அதை ஏற்றுக் கொண்டார்.

அன்றைக்கு காலையில் சமைக்க வரவேண்டாம் என சதா கூறிவிட்டார். அவரும் உமாநாதனும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதால், மதியம் போல் வந்தால் போதுமென கூறிவிட்டார். மனோவும் நண்பர்களுடன் வெளியே உண்டு கொள்வதாகக் கூறிவிட்டான்.

அவனுக்கு நேற்று சந்தனா கணினி வகுப்பிற்கு வரவில்லை என்பதே மனதில் ஓடியது. அவளுக்கு வயிற்று வலியாக இருக்குமோ என தானே எண்ணிக் கொண்டான்.

தாமதமாய் கண்விழித்த சந்தனா படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து வேலை செய்யும் தாயையே பார்த்திருந்தாள். அவர் தன்னிடம் பேசவில்லை என நினைத்ததும் குபுக்கென நீர் விழிகளில் பொங்கியது.

தன்னையே தொடரும் மகளின் விழிகளைப் பார்த்தவர், “என்னடி பார்க்குற… போ, போய் பல்ல விளக்கி குளிச்சிட்டு வந்து சாப்பிடு…” எனக் கூறவும், எழுந்து படுக்கையை ஒற்றைக் கையிலே எடுத்து வைத்தாள். மற்ற கையில் எரிச்சல் இப்போது பரவாயில்லை. இருந்தும் உள்ளங்கையிலிருந்த காயம் மொத்தக் கையிலும் பரவியது போல வலித்தது.

எழுந்து குளித்து வர, மகளுக்கு ஊட்டியபடி தானும் உண்டார் பூரணி. அவளிடம் என்ன பேசவென அவர் யோசனையில் ஆழ்ந்திருக்க, மரிக்கொழுந்து வந்து சிறிது நேரம் பேச, நேரம் சென்றது. பூரணி வைத்திருந்த கையடக்க கைபேசி இசைத்தது.

புது எண்ணாக இருக்கவும் அவர் யோசனையுடன் எடுத்துப் பேச, “நாங்க சந்தனா படிக்கிற ஸ்கூல்ல இருந்து பேசுறோம்…” என்றார் ஒரு பெண்மணி.

“சொல்லுங்க டீச்சர், என்ன விஷயம்?” என்றவருக்கு மனதில் பயம் துளிர்த்தது.

“இன்னைக்கு டென்த் ரிசல்ட் வந்துடுச்சு மா. உங்கப் பொண்ணுதான் நம்ப மாவட்டத்துலயே ரெண்டாவது மார்க். ஸ்கூல் முதல் மார்க் எடுத்திருக்கா!” என அவர் கூற, பூரணியின் முக்ம் நொடியில் பூவாய் மலர்ந்து போனது.

“டீச்சர் நிஜமாவா?”

“ஆமா சந்தனா மா… ஐநூறுக்கு நானூத்து தொண்ணூறு மார்க் எடுத்திருக்கா உங்கப் பொண்ணு. ஹெச்.எம் உங்கப் பொண்ணை பார்க்கணும்னு சொன்னாரு. அவளைக் கூட்டீட்டு நீங்களும் வர்றீங்களா?” என அவர் கேட்க,

“இதோ வர்றோம் டீச்சர்…” என அலைபேசியை வைத்தார். சந்தனா என்னவெனத் தெரியாது தாய் முகத்தையே பார்த்திருந்தாள்.

“குட்டி… பரிட்சைல நல்ல மார்க் எடுத்து பாஸாகியிருக்க. டீச்சர் ஸ்கூலுக்கு வர சொல்றாங்க. போ, போய் கிளம்பு…” என அவர் முகம் மலர்ந்து கூற, பூரணி சிரித்துப் பேசியதிலே சந்தனாவின் வலி மறந்து போயிருந்தது. நல்ல மதிப்பெண் எடுத்தது வேறு மகிழ்ச்சியைப் படரச் செய்ய, விரைவில் உடைமாற்றி வந்தாள்.

செல்லும் வழியில், “குட்டி… இந்தா ஐம்பது ரூபா. போய் சாக்லேட் வாங்கிக்கோ…” என அவர் கொடுத்ததும், துள்ளி குதித்து இவளும் இன்னட்டுகளை வாங்கி வந்தாள். பள்ளியின் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் இவளுக்கு வாழ்த்தைக் கூற, பாராட்ட என்றிருக்க, சந்தனாவிற்கு பேச்சே வரவில்லை.

தொடரும்

error: Content is protected !!
Scroll to Top