இதயம் 3:
பேசமொழி தேவையில்லை பார்த்துக் கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமே மணிக்குயில் நானுமே…
“மலரு எந்திருச்சு சாப்பிட வா” என்று மாதவி அழைக்க, “ப்ச்…” என்று சிணுங்களுடன் திரும்பி படுத்தவள், “அதுக்குள்ள நைட் சாப்பாடு டைம் வந்துருச்சா?” என்று வினவினாள்.
“மணி எட்டரை ஆயிருச்சு டி சாப்பிட்டு படு” என்று மாதவி மொழிய, “வரேன்ம்மா…” என்றவள் எழுந்து கூந்தலை கொண்டையிட்டாள்.
பிறகு கழிவறை சென்று முகம் கழுவி வர அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த சாகித்தியா நிமிர்ந்து, “என்னக்கா தலைவலியா?” என்று வினா தொடுக்க, “ஆமாடி இந்த சென்ட்ட போட்டது தலைவலியா இருக்கு” என்றவாறு முகத்தை துடைத்தாள்.
“வித்யா சொன்னா உனக்கு தான் சென்ட் போட்டா ஒத்துக்காதுல. இந்த வேலை வேணாக்கா வரலன்னு சொல்லிரு. நான் என் பிரண்டு கிட்ட சொல்லி வச்சிருக்கேன். பார்ட் டைம் ஜாப் அரேஞ்ச் பண்ணி தரேன்னு சொல்லி இருக்கா. எப்படியும் பத்தாயிரம் சம்பளம் கிடைக்கும் அத வச்சு வீட்ட பாத்துக்கலாம்” என்று சாகித்யா அக்கறையுடன் கூற,
“படிக்கிற வயசுல வேலைக்கு போனா படிப்புல கவனம் சிதறிடும் டி. நீ ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு. வீட்டு செலவை எப்படி பாக்கணும்னு எனக்கு தெரியும்” என்று தங்கைக்கு அறிவுரை கூறினாள்.
“நீயும் படிச்சிட்டு தான கா இருக்க. எத்தனை வேலை பாக்குற” என்று சாகித்யா அவளை எடுத்துக்காட்டாய் கூற, “எது நான் படிக்கிறதும் நீ படிக்கிறதும் ஒன்னா? நான் சும்மா பேருக்கு ஒரு டிகிரி படிச்சிட்டு இருக்கேன். ஆனா நீ டாக்டருக்கு படிக்கிற டி. உயிரை காப்பாத்த போற படிப்பு. ஒழுங்கா படி. அப்பதான் நாள பின்ன சரியா ட்ரீட்மெண்ட் பார்க்க முடியும்” என்று அவளது வாயை அடைத்தாள்.
“படிப்புனா எல்லாம் படிப்பு தான். அது என்ன என் படிப்பு உசத்தி, உன் படிப்பு கம்மி” என்று சாகித்யா விடாது வாதாட, “ரெண்டு பேரும் சாப்பிட வராம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று மாதவி குரல் கொடுத்தார்.
“வா போய் சாப்பிடலாம்” என்று மலர் எழுந்து கொள்ள, சாகித்யாவும் உடன் சென்றாள். அங்கே ஏற்கனவே முரளியும் வித்யாவும் உண்ண அமர்ந்திருந்தனர். காலை உணவு அவர்களது விருப்பப்படி உண்டாலும் இரவு உணவு எப்போதும் ஒன்றாய் தான் அமர்ந்து உண்ணுவர்.
தம்பியின் அருகே அமர்ந்து உணவை ஒருவாய் எடுத்து உண்டவள், “ம்மா இப்ப புதுசா சேர்ந்திருக்க வீட்டில பன்னெண்டாயிரம் சம்பளம் தரேன்னு சொல்லி இருக்காங்க” என்று தாயிடம் தெரிவிக்க, “ஒரு ஆளுக்கு சமச்சு வீடு சுத்தம் பண்ண பன்னெண்டாயிரமா?” என்று மாதவி வியப்புடன் கேட்டார்.
“ஆமாம்மா அதுவும் நான் கேட்கவே இல்லை. அவங்களே இதுக்கு முன்னாடி எவ்வளவு சம்பளம் வாங்கினேனு கேட்டுட்டு இவ்வளவு தரேன்னு சொன்னாங்க. அவங்களுக்கு காசு பெருசு இல்லையாம். வேலை கரெக்ட்டா இருக்கனுமாம். அந்த சாருக்கு வீடு எப்பவும் சுத்தமா இருக்கணுமாம். இன்னும் நிறைய கண்டிஷன் போட்டாங்கம்மா. அந்தம்மா சரியான நொச்சுமா. நல்ல வேலை அவங்க ஊருக்கு போயிருவாங்க. சாருக்கு மட்டும் தான் வேலை செய்யணும். இந்த சார் ரொம்ப அமைதி போல எது கேட்டாலும் தலையை மட்டும் அசைச்சு பதில் சொல்றாரு” என்று காலையில் நடந்தவற்றை கூறினாள்.
“மலரு ஒரு ஆம்பள தனியா இருக்க வீட்ல கண்டிப்பா நீ வேலைக்கு போய் தான் ஆகணுமா? பேசாம நான் போய் பார்க்கவா?”என்று மாதவி யோசனையுடன் கேட்க, “மா நீ தேவையில்லாமல் பயப்படுறம்மா. அந்த சாரு என் முகத்தை பார்த்து கூட பேசல தெரியுமா? அவர பாத்தா நல்ல மனுசனா தான் தெரியுது. அதுக்கு மேல என்ன பார்த்துக்க எனக்கு தெரியும்மா. நீ பயப்படாத” என்று முடித்துவிட்டாள்.
“அக்கா எங்க ஸ்கூல் பக்கத்துல இருக்க பேக்கரியில் நான் பார்ட் டைம் ஜாப் கேட்டிருந்தேன். ஈவினிங் ஆறு டூ ஒன்பது வேலைக்கு ஆள் வேணும்னு சொல்லி இருக்காங்க. நான் சேர்ந்துக்கவா?” என்று முரளி கேட்க, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு இந்த வருஷம் ட்வெல்த். நல்ல மார்க் எடுத்தா தான் நல்ல காலேஜ் போக முடியும். நீ படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்துக்க. அதுவரைக்கும் நான் பார்த்துக்கிறேன்” என்று தம்பியை அடக்கிவிட்டாள்.
மலர் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருப்பதால் வீட்டு செலவிற்கு சற்று கஷ்டமாக தான் இருந்தது. அதனால்தான் இளையவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம் என்று வேலைக்கு கேட்டு வைத்திருந்தனர். அதற்குள் மலர் ரிஷியிடம் வேலைக்கு சேர்ந்துவிட்டதால் அவர்களை மறுத்துவிட்டாள்.
“நீங்க மூணு பேரும் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனா அது தான் எனக்கும் அம்மாவுக்கும் சந்தோசம். இப்போதைக்கு வீட்டு செலவ நானும் அம்மாவும் எப்படியாவது சேர்ந்து சமாளிச்சுடுவோம். நீங்க படிப்புல மட்டும் கவனத்தை வைங்க” என்று மூவருக்கும் பொதுவாய் கூறியவள் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
உணவை உண்டு விட்டு வந்து கட்டிலில் விழுந்தவளுக்கு உறக்கம் வரவில்லை. எப்போதும் காலை மூன்றரை மணிக்கு எழுந்து விடுவதால் இரவு ஒன்பது அல்லது ஒன்பதரைக்கு உறங்கி விடுவாள். இன்று மதியத்தில் இருந்து உறங்கியதால் விழிகளை உறக்கம் அண்டவில்லை.
தனது அலைபேசியை எடுத்து புலனத்தில் ஏதாவது செய்தி வந்துள்ளதா என்று பார்க்க கல்லூரி தோழிகளிடம் இருந்து செய்தி வந்திருந்தது. இன்று ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று நெருங்கிய தோழிகள் கேட்டிருக்க தலைவலி என்று பதில் அனுப்பியவள் விழிகளில் பட்டது ரிஷியின் முகப்புபடம்.
கண்ணன் சார் என்று சேமித்து வைத்திருந்த தொடர்பிற்குள் சென்றவள் அவனது முகப்பு படத்தை பெரிதாக்கி பார்த்தாள். ராதா கண்ணா என்று அழைப்பதை கண்டவள் ரிஷியின் பெயர் கண்ணன் என்று தானே முடிவு செய்து சேமித்து இருந்தாள்.
சிவப்பு நிற டி சர்ட்டூம் அடர் கருப்பு நிறத்தில் பேண்ட்டும் அணிந்து சுவற்றில் சாய்ந்தவாறு நின்றிருந்தவனது ஒரு கையில் கைக்கடிகாரம் இருந்தது. சராசரி ஆண்களது உயரத்தில் நல்ல சிவந்த நிறத்தில் இருந்தான்.
உண்டு விட்டு தமக்கையின் அருகில் சரிந்த சாகித்யா அவளது அலைபேசியின் திரையை கண்டுவிட்டு, “யாருக்கா இது ஏதாவது மூவி ஹீரோவா?” என்று வினவினாள்.
“படத்துல வர்ற ஹீரோலாம் இல்ல. நான் சொன்னேன்ல ஒரு சார் வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்து இருக்கேன்னு அவர்தான் இவரு. வாட்ஸப்ல டிபி வச்சிருக்காரு” என்று மலர் பதிலளிக்க, “ஓ… ஆள பாத்தாலே தெரியுது பெரிய இடம்தான் போல” என்று யோசனையுடன் சாகித்யா கூறினாள்.
“அதான் நானும் நெனச்சேன்” என்று மலர் ஒப்புக்கொள்ள, “ஏன்கா இந்த பணக்காரங்க அழகா? இல்ல அழகா இருக்கவங்ககிட்ட பணம் இருக்கா?”என்று சாகித்யா தனது சந்தேகத்தை கேட்க, “அதான்டி எனக்கும் புரியல நானும் இதே தான் யோசிச்சிட்டு இருந்தேன். அந்த அம்மா கூட இந்த வயசுலயும் அவ்ளோ அழகா இருந்தாங்க. அவங்க உட்கார்ந்து இருக்கதே ஒரு மாதிரி ராஜா தோரணை டி” என்று மலர் பதிலளித்தாள்.
“அப்படியா?” என்பது போல் சாகித்யா நோக்க, “ஆமா என்ன பணம் இருக்குன்னு கொஞ்சம் நிறையவே அந்த அம்மாட்ட திமிர் இருக்கு அது அவங்க பேச்சிலே தெரிஞ்சது” என்று மலர் இயம்பினாள்.
“அந்த சாரும் அப்படித்தானா க்கா ?” என்று சாகித்யா வினா எழுப்ப, “தெரியலடி இப்ப வரைக்கும் அவர் என்கிட்ட எதுவும் பேசல. போகப் போக தான் தெரியும். இவர் அப்படி இருக்கமாட்டாருனு தான் நினைக்கிறேன்” என்று மலர் மொழிந்தாள்.
“அதெப்படி நீயே சொல்ற? இந்தம்மா அப்படி இருக்கும் போது அவங்க பிள்ளையும் அதே மாதிரி தான் இருப்பாங்க” என்று சாகித்யா வினா தொடுக்க, “என்னவோ தோணுச்சு அவர் ரொம்ப அமைதின்னு நினைக்கிறேன்” என்று மலர் பதில் கொடுத்தாள்.
சமையலறையில் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வந்த மாதவி, “தூங்காம இரண்டு பேரும் என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க. காலையில சீக்கிரம் எந்திரிக்கணும்ல தூங்குங்க” என்று அதட்டல் போட, இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு உறங்க ஆயத்தமானார்கள்.
பெண்கள் மூவரும் அறையில் இருந்த கட்டிலில் படுத்துக் கொள்ள முரளியும் மாதவியும் கூடத்தில் படுத்துக் கொள்வார்கள். அது ஒரு படுக்கையறை சிறிய கூடம் ஒரு சமையலறை கொண்ட வீடு. கூடத்தின் ஒரு ஓரத்தில் தையல் இயந்திரத்தை வைத்திருந்தனர்.
மாதவிக்கு ஓரளவு நன்றாக தைக்க வரும் ஆதலால் இங்கு வந்த கொஞ்ச நாளிலேயே நிறைய வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். இளையவர்கள் பள்ளி கல்லூரிக்கு சென்றதும் வீட்டில் உள்ள வேலையை முடித்துவிட்டு தினமும் தைக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சிறிது நேரம் அளவளாவி கொண்டிருந்த மூவரும் உறக்கத்தை தழுவியிருந்தனர்.
மறுநாள் காலை வழக்கம் போல மூன்றரைக்கு அலாரம் அடித்ததும் அதனை அமர்த்திவிட்டு எழுந்தவள் முகத்தை கழுவி வர, மாதவி எழுந்து அவளுக்கு தேநீரை தயாரித்துக் கொடுத்தார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று தேநீராவது மலர் அருந்திவிடுவாள்.
உணவுண்ண நேரம் இல்லாத போது தேநீரை தான் அருந்திவிட்டு வேலையை பார்ப்பாள். தான் எழும் நேரம் மாதவியும் எழ வேண்டாம் என்று பலமுறை கூறியும் அவர் கேட்காததால் அவர் போக்கிற்க்கே விட்டுவிட்டாள்.
தான் தான் வேலை இருக்கிறது இவ்வளவு விரைவாக எழுந்து கொள்கிறோம் தாய்க்கு எந்த வேலையும் இல்லையே எதற்கு தனக்காக எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கூறுவாள்.
மாதவி மகள் தினமும் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு வேலைக்கு கிளம்ப தான் மட்டும் உறங்குவதா என்ற எண்ணத்தில் தான் மகள் எழும்போதே எழுந்து கொள்வார்.
மலர் தேநீரை அருந்திவிட்டு வெளியே வர, “அக்கா போகலாமா?’ என்று வந்தான் மணி. மலரை விட மணிக்கு ஒரு வயது குறைவு. அவனும் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறான்.
மணியின் இருசக்கர வாகனத்தில் இருவரும் மீன் சந்தையை நோக்கி சென்றனர். சரியாக நாலு மணிக்கு அவர்கள் சந்தையை அடைய மீன் கொண்டு வரும் வாகனமும் வந்தது. வழக்கம்போல விலையைப் பேசி மீனை வாங்கிக் கொண்டவள் கடையை திறந்து விற்பனை துவங்கினாள்.
ஆறு மணிக்கு முன்பாகவே அனைத்து மீன்களும் விற்று போக விரைவாக அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு இருவரும் கிளம்பினர். முன்பானால் வேலை முடிந்து அப்படியே சுதாகர் வீட்டுக்கு சென்று விடுவாள். ஆனால் இப்போது அப்படி அல்லவே வீட்டிற்கு சென்று குளித்து தயாராகி செல்ல வேண்டும் அதனால் கிளம்புவதில் வேகம் கூட்டினாள்.
ஆறே காலுக்கு வீட்டை அடைந்து விறுவிறுவென குளித்துவிட்டு வாசனை திரவியத்தை உடலெங்கும் அடித்துக் கொண்டவள் காலை மற்றும் மதியம் இருவேளை உணவையும் டப்பாவில் அடைத்துவிட்டு ரிஷியின் வீட்டை நோக்கி சென்றாள்.
பொழுது நன்றாக விடிந்து இருந்தால் ஆங்காங்கே ஆட்கள் தென்பட்டனர். நடைப்பயிற்சி செய்பவர்கள் காலையில் விரைவாக எழுந்து பணிக்கு செல்பவர்கள் என்று ஆட்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
சரியாக ஏழு மணிக்கு முன்பே ரிஷியின் வீட்டை அடைந்துவிட்டவள் அழைப்பு மணியை அழுத்த சில நிமிடங்கள் முன்பு தான் எழுந்து முகம் கழுவி வந்த ரிஷி வந்து கதவை திறந்தான்.
“குட் மார்னிங் சார்…” என்று மலர்ந்த புன்னகையுடன் மலர் கூற, ஒரு சிறு தலையசைத்துடன் அதை ஏற்றுக் கொண்டவன் நகர்ந்து கொள்ள, ‘சார் பேசவே மாட்டார் போல’ என்று மீண்டும் எண்ணி கொண்டவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக வெளியே சென்று கூடையில் போடப்பட்டிருந்த பால் மற்றும் செய்தித்தாளை எடுத்து உள்ளே வந்தாள்.
ரிஷி நீள்விருக்கையில் அமர்ந்திருக்க, ‘சார் நியூஸ் பேப்பர்” என்று அவனிடத்தில் செய்தித்தாளை கொடுத்தவள் பாலை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு நுழைந்தாள்.