இதயம் – 29
தன் அருகில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பவளைக் கண்டு ரிஷிக்கு புன்னகை பூத்தது.
அதனை இதழ்கடையில் மறைத்தவன் சாலையில் கவனத்தை வைத்து மகிழுந்தை இயக்க, மலர் இருந்தும் அவனது புன்னகையைக் கண்டுவிட்டவள் முகத்தைத் திருப்பி அவனை முறைத்தாள்.
அவளது முறைப்பை உணர்ந்தவனுக்கு புன்னகை மேலும் விரிந்திட, இதழோரம் சிரிப்பில் துடித்தது.
அதனைக் கண்டவள், “என்னங்க?” என்று அழைக்க, “ஹ்ம்ம்” என்று தலையைத் திருப்பாமலே குரல் கொடுத்தான்.
“என்னங்க?” என்று மீண்டும் அழுத்தமாக அழைத்தவள் சிணுங்கிட, “ஏங்க?” என்று அவளைப் போலவே கேட்டவன் சிரிப்புடன் திரும்பிப் பார்த்தான்.
“நிஜமாவே நம்ம காலேஜ்க்குத்தான் போயிட்டு இருக்கோமா?” என்று நம்பாமல் வினவ, “உண்மைக்கே காலேஜுக்குத்தான் போயிட்டு இருக்கோம். இன்னும் பத்து நிமிஷத்துல காலேஜ் வந்துடும்,” என்று ரிஷி பதில் மொழிந்தான்.
“கண்டிப்பா நான் படிக்கணுமா?” என்றவள் பாவமாக முகத்தை வைத்து அவனைக் காண, அந்தப் பாவனையில் ரிஷிக்கு உள்ளே உருகியது.
இருந்தும் முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொண்டவன், “கண்டிப்பா படிக்கணும். வெறும் யூஜி டிகிரி வச்சு என்ன பண்ணப் போற?” என்று அவளைப் புருவம் உயர்த்திப் பார்க்க, “நான் எதுவும் பண்ணல. ஹவுஸ் வைஃபா வீட்டிலயே இருந்துக்கிறேன்,” என்று அவனது விழி பார்த்தாள்.
“நீ தானடி வீட்ல இருக்க போர் அடிக்குதுன்னு சொன்ன?” என்று ரிஷி அவளை லேசான முறைப்புடன் பார்க்க, “ப்ச், தெரியாம சொல்லிட்டேன். என்ன விட்டுடுங்க ப்ளீஸ்,” என்று விழி சுருக்கிக் கெஞ்சினாள்.
“பொண்டாட்டி புருஷனை கொஞ்சனும். இப்படி கெஞ்சக் கூடாது,” என்றவன் நமட்டு சிரிப்புடன் அவளைக் காண, “நீங்க மட்டும் இப்பவே வண்டிய வீட்டுக்கு விடுங்க. பொண்டாட்டி எப்படி கொஞ்சுறான்னு மட்டும் பார்ப்பீங்க,” என்றவள் ஆர்வமாக அவனது முகத்தைக் கண்டாள்.
“காலேஜுக்கு போயிட்டு வந்த பிறகு கொஞ்சு டி என் அழகு பொண்டாட்டி,” என்றவன் அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, “ஒன்னும் தேவைல்ல, போங்க,” என்றவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அதில் ரிஷிக்கு புன்னகை இமை நீள, “மலர்,” என்று அழைக்க, அவளிடம் பதில் இல்லை.
“மலர், உன்னத்தான்,” என்றவன் மீண்டும் அழுத்தி அழைக்க, “என்ன?” என்பதாய் திரும்பி அவனது முகம் பார்த்தாள்.
“நான் கூட்டிட்டு போற காலேஜ் உனக்கு கண்டிப்பா பிடிக்கும்,” என்று ரிஷி உறுதியாகக் கூற, “எனக்கு படிக்கவே பிடிக்காது, போங்க. இதுல காலேஜ் எங்க பிடிக்கப் போகுது?” என்றவள் சோகமாக இயம்பினாள்.
“ஹேய், என்ன நம்புடி. கண்டிப்பா இந்த கோர்ஸ் உனக்கு பிடிக்கும்,” என்று ரிஷி அவளது முகம் காண, “நான் தான் சொல்றேன்ல்ல, எனக்கு சின்ன வயசுல இருந்தே படிக்கிறதுனா ஆகாது,” என்று மலர் தன்னிலையை விளக்கினாள்.
“நீ என்கூட காலேஜ் வந்துட்டு அப்புறம் சொல்லு. உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்,” என்று ரிஷி கூறியது தான் தாமதம், “நிஜமாவா?” என்று விழி விரித்தவளின் முகத்தில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.
அதனைக் கண்டவன் லேசான முறைப்புடன், “ஹ்ம்ம்,” எனத் தலையசைக்க, “அப்போ ஓகே. கண்டிப்பா எனக்கு பிடிக்காது. நம்ம அட்மிஷன் போட மாட்டோம்,” என்று குஷியாகிவிட்டாள் மலர்.
“ஏன்டி பாசிட்டிவாவே பேச மாட்டியா? இன்னைக்கு கண்டிப்பா நம்ம அட்மிஷன் போடுவோம்,” என்று ரிஷி கூற, “பெட் வச்சுக்கலாமா? கண்டிப்பா போட மாட்டோம்,” என்று மலர் விடாது வாதாடினாள்.
ரிஷி சரி என்பதாய் தலையசைக்க, “ஓகே, நான் ஜெயிச்சா நான் கேக்குறது நீங்க செய்யணும். நீங்க ஜெயிச்சா நீங்க சொல்றத நான் செய்வேன்,” என்று மலர் மொழிந்தாள்.
“ஓகே, நான் சொல்றத செய்றதுக்கு ரெடியா இரு,” என்று ரிஷி உறுதியாகக் கூற, “வாய்ப்பே இல்லை, நான்தான் ஜெயிப்பேன்,” என்ற மலர், “ஜெயிச்ச பின்னாடி என்ன கேட்பேன் தெரியுமா?” என்று வினாவுடன் அவனைக் கண்டாள்.
“என்ன கேட்ப? எனக்கு எப்போ உன் மேல இன்ட்ரஸ்ட் வந்துச்சுன்னு கேட்ப, அதானே?” என்று ரிஷி சாதாரணமாய்க் கூற, “ஹை!” என்று மலர் வியப்பில் விழி விரித்தாள்.
ரிஷி சிரிப்புடன், “என்ன?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்த, “எப்படி… எப்படி நான் அதான் கேட்பேன்னு சரியா சொன்னீங்க?” என்றவள் வியப்பு மாறாது வினா தொடுத்தாள்.
ரிஷி ஆர்ப்பரிப்பில்லாத புன்னகையுடன், “ஐ நோ யூ,” என்றிட, “நீங்க சரியா என்னைத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. எனக்குத்தான் உங்கள தெரிய மாட்டேங்குது,” என்று மலர் லேசான வருத்தம் தோய்ந்த குரலில் அவனைக் கண்டாள்.
“என்ன இப்போ உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும்? அவ்வளவுதானே? வீட்டுக்கு போன உடனே எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம். இன் அண்ட் அவுட்,” என்றவன் மந்தகாசப் புன்னகையுடன் கூற, அவன் கூறுவதன் அர்த்தம் புரியாது ஒரு கணம் விழித்தவள், பிறகு முகம் சிவந்து அவனை முறைத்தாள்.
“என்னடி, நீதானே என்னைத் தெரிஞ்சுக்கணும்னு கேட்ட?” என்றவன் விஷமச் சிரிப்புடன் அவளைக் காண, “நான் சொன்னது அந்தத் தெரிஞ்சுகிறது இல்ல,” என்ற முறைப்புடன் கூறினாள்.
“எனக்குத் தெரிஞ்சு தெரிஞ்சுக்கறதுன்னா இது மட்டும் தான் பா,” என்றவன் சிரிப்புடன் அவளை வம்பிழுக்க, “எப்ப பாத்தாலும் அதே நினைப்புதான். கெட்ட பையன் நீங்க,” என்ற மலரும் சிரிப்பு முறைப்புமாக அவனை நோக்கினாள்.
“நான் கெட்ட பையன்னா என்னோட சேர்ந்த நீயும் கெட்ட பொண்ணுதான்டி,” என்று ரிஷி நமட்டுச் சிரிப்புடன் கூற, “அது சரி,” என்றவளுக்கும் புன்னகை அரும்பியது.
இருவரும் பேசியபடியே வந்து சேர வேண்டிய கல்லூரியை அடைந்தனர். ரிஷி அவ்வளவு தூரம் சொல்லி இருந்ததால், மகிழுந்து நின்ற அடுத்த கணமே மலர் தலையை வெளியே நீட்டி கல்லூரியைக் காண, அவளது விழிகள் வியப்பில் விரிந்தது.
காரணம் கல்லூரியின் பெயர்தான். அது ஒரு உணவக மேலாண்மைக் கல்லூரி.
கல்லூரியின் பெயர்ப் பலகையையும் அவனையும் ஒரு நொடி மாறி மாறிப் பார்த்தவள், “என்னங்க!” என்று சிரிப்புடன் ஆர்ப்பரிக்க, “ஏங்க?” என்று அவளைப் போலவே சிரிப்புடன் கேட்டான் ரிஷி.
“என்ன, கேட்டரிங் காலேஜ்ல சேர்த்து விடப் போறீங்களா?” என்றவள் ஆர்ப்பரிப்புடன் கேட்க, ரிஷியின் தலை ஆம் எனும் விதமாக அசைந்தது.
“அப்போ நான் செஃப் ஆகப் போறேனா?” என்றவள் நம்பாமல் விழி விரித்து வினவ, “ஆமா, பெரிய செஃப் ஆகப்போற,” என்று ரிஷி சிரிப்புடன் கூறினான்.
மலர் மாறாத குஷியுடன், “எப்படிங்க?” என்று வினா தொடுக்க, “என்ன எப்படி?” என்று பதிலுக்கு ரிஷியும் கேட்டான்.