“அதுவும் சரிதான், டாக்டரம்மா சொன்னா கரெக்டாதான் இருக்கும்!” என்றவன்,
“ஏன் இப்படி அவனை அவர் இவர்னு ரொம்ப ஃபார்மலா பேசுற. இதுவே பழைய மனோவா இருந்தா நம்ப இப்படி பேசிட்டு இருக்கதுக்கே செம்ம காண்டாகி உன்னைக் கூட்டீட்டுப் போய்டுவான் இல்ல?” என்றவன் முகம் சிறுவயது நினைவில் கனிந்தது. தீனா பேச பேச ஏனோ சந்தனாவிற்கு அழுகை வரும் போலிருந்தது.
அவள் அமைதியாய் இருக்க, “உன்கிட்டதான் கேட்குறேன் டாக்டரம்மா…” என்றான்.
“இப்போ என்னை அவருக்கு அடையாளமே தெரியலை தீனா. திடீர்னு புதுசா மீட் பண்ற மாதிரிதான் நான் அவரைப் பார்த்தேன். எப்படி அவன் இவன்னு பேச முடியும். அது நல்லா இருக்காது. இப்போ அவர் ஷோபியோட ஹஸ்பண்ட் ரஞ்சன்!” என்றவளுக்கு நெஞ்சடைத்துக் கொண்டது. தளும்பி நிற்கத் தயாராகும் விழியை அரட்டி உருட்டி அடக்கினாள்.
ஷோபனாவின் கணவன் என்பது உண்மைதானே. அவனுக்கும் எனக்கும் என்ன இருக்கிறது? இவன் மனோ இல்லை. மனோவின் அவளுக்கான பார்வையில் ஒருபோதும் அந்நியத் தன்மையிருக்காதே.
‘குட்டி… குட்டி!’ எனத் தன்னையே சுற்றி வரும் விழிகளில் அவளுக்கான நேசம் எப்போதும் ததும்பி வழியும். தன்னுடைய நலன், தான் என்ற வார்த்தையை அன்றி அவன் வேறொன்றும் அறியாதவன். பதினேழு வயதில் என்னைத்தான் காதலிக்கிறேன் என சுற்றம் மறந்து கத்தியவனாகிற்றே. நிச்சயமாய் இவன் என் மனோ கிடையாது என எண்ணும் போதே உள்ளே இதயம் உடைந்தழுதது.
“ப்ம்ச்… நான் ஒருத்தன். இதெல்லாம் யோசிக்கவே இல்லை பாரு!” என்றவனிடம் லட்சுமி பழச்சாறை நீட்டினார்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி…” என எடுத்துக் கொண்டான்.
“சாரி… சாரி தீனா, நான் உன்கிட்ட என்ன சாப்பிட்றன்னு கேட்கவே இல்ல!” என்றவளைப் பார்த்து புரிதலாய் தலையை அசைத்தவன், “ஃபார்மாலிட்டீஸ்லா எதுக்கு குட்டி…” என்றுவிட்டு,
“உன்கிட்டே நாங்க வாங்கி மட்டும்தான் சாப்பிட்றோம். இப்போவும் மேடம் உங்க அம்மாவுக்கு செஞ்சு கொடுத்த ப்ராமிஸ்காக எங்ககிட்டே எதுவும் வாங்குறதில்லை?” என அன்பாய் குறைபடித்தான். இவள் புன்னகைத்தாள் அன்றி பதிலுரைக்கவில்லை.
“பையனை எங்க குட்டி? அம்மா எங்க?” என வீட்டைக் கண்களால் துழாவினான்.
“ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய்ருக்கான் அவன்…” என சில நொடி அமைதி காத்தவள், “அம்மா இல்ல தீனா…” என்றாள் வருத்தப் புன்னகையுடன்.
அந்தக் குரலின் பேதத்தை உணர்ந்தவன், “சாரி குட்டி… சாரி ஆன்ட்டிக்கு என்னாச்சு, எப்போ? எங்ககிட்டே சொல்லவே இல்ல நீ?” என ஆதங்கமாய்க் கேட்டான்.
“ஃபைவ் இயர்ஸ் ஆச்சு தீனா. அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்ஷூ!” என உரைத்தவளுக்கு குற்றவுணர்வு கழுத்துவரை மேவி உந்தியது.
பெற்ற அன்னையின் இறப்பிற்கு தானே காரணமாய் போய்விட்டோம் என்ற எண்ணம் இத்தனை வருடங்களில் அவளைக் கொன்று புதைத்திருந்தது. தன்னால்தான் பூரணி இறந்தார் என மனசாட்சி எத்தைனையோ முறை சுயகோபத்தில் கத்தியின்றி அவளைக் கிழித்து கீறி சந்தோஷித்த நாட்கள் எல்லாம் நரகத்தையொத்த பக்கங்கள்.
அவளருகே வந்து தோளணைத்தவன், “குட்டி… நாங்க இருக்கோம் உனக்கு. இனிமே எதுனாலும் எனக்கு நீ கால் பண்ணி சொல்லணும். தனியா கிடந்து கஷ்டப்படாத!” என தன்னுடைய இலக்கத்தை அவளிடம் கொடுத்து, அவளுடைய எண்ணயும் வாங்கிக் கொண்டான். அவனின் ஆதரவான பேச்சிலும் வாஞ்சையான பார்வையிலும் சந்தனாவின் விழியோரம் ஈரம் கோர்த்தது.
“ஹஸ்பண்ட் என்ன பண்றாரு? எங்க இருக்காரு?” இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன் என்பதை போல பதிலை இத்தனை நேரம் உருப்போட்டிருந்தவள், “அவருக்கு ஃபாரின்ல ஜாப் தீனா. அப்போ அப்போ வருவாரு…” என்றாள்.
“சரி… சரி, ஒருநாள் ஃபேமிலியோட நம்ப வீட்டுக்கு வா குட்டி…” என்றான் அன்பாய் கையைத் தட்டிக் கொடுத்து. இவள் புன்னகைத்து தலையை அசைத்தாள்.
“ஹம்ம்… அன்டைம்ல வந்து டிஸ்டர்ப் பண்றேன் நான். சென்னை போறதுக்கு முன்னாடி ஒரு தடவை வந்து பையனைப் பார்த்துட்டுப் போறேன். இப்போ நான் கிளம்புறேன்…” என எழுந்தவன்,
“அப்பப்போ போன் பண்ணுங்க டாக்டரம்மா. மெசேஜும் பண்ணணும்!” என்றவன் நடக்க, இவள் தலையை அசைத்துப் புன்னகைத்தாள்.
சில எட்டுகள் வைத்தவனின் நடை நிதானப்பட, “உன் பையனுக்கு எத்தனை வயசு குட்டி?” எனக் கேட்டான்.
அந்தக் கேள்வியில் சந்தனா தடுமாற, “மனோவுக்கு பத்து வயசாகப் போகுதுப்பா…” என அந்நேரம் சமையலறையில் இருந்து வெளியே வந்த லட்சுமி பதிலளித்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னே அவன் சந்தனாவைப் பார்த்தான். அப்போது அவளுக்கு திருமணமாகியிருக்கவில்லை. அப்படி பார்த்தால் பத்து வயதில் இப்போது மகனிருக்க வாய்ப்பே இல்லையென மூளை கூறியது.
“சந்தனா… மனோ உன்னோட சொந்தப் பையனில்லையா?” என முழுதாய் அவள் புறம் திரும்பிக் கேட்டான். அவனது பார்வை அவளது நெற்றி கழுத்து கால்விரல் என அளந்தன. அவளுக்குத் திருமணமான எவ்வித அடையாளமும் அதிலில்லையென மூளை உணர, பதிலுக்காய் அவள் முகத்தைப் பார்த்தான்.
ஒரு நொடி தயங்கி தலையை அசைத்தவளின் உள்ளம் பதறியது. இதற்கு மேலும் எதுவும் என்னிடம் கேட்டுவிடாதே என்ற இறைஞ்சலுடன் அவனை நோக்கினாள்.
“உன் ஹஸ்பண்ட் போட்டோ காட்டு குட்டி. நான் பார்க்கணும்!” என மீண்டும் உள்ளே நுழைந்தவனுக்கு இவள் பொய்யுரைப்பதாய் ஓர் எண்ணம் தோன்றிற்று. இத்தனை நேரம் கண்ணிலும் கருத்திலும் பதியாத அவளது தோற்றம், விழிகள் என எல்லாம் இப்போது ஏதோ கதை சொல்லின. புசுபுசுவென இருந்த தேகம் இப்போது எலும்பின் உறைவிடமாகியிருந்தது. கண்ணாடிக்குப் பின்னே ஒளிந்திருக்கும் விழிகளில் சர்வ நிச்சயமாய் உயிர்ப்பில்லை.
“என் ஃபோன்ல அவர் போட்டோஸ் இல்ல தீனா. லேப்டாப்ல தான் இருக்கு. நீ நெக்ஸ்ட் டைம் வரும்போது நான் காட்டுறேன்!” அவன் முகம் பார்க்காது பொய் உரைத்தவளைக் கண்டு நெற்றியைச் சுருக்கியவன்,
“பரவாயில்லை, நான் வெயிட் பண்றேன். லேப்டாப்பை எடுத்துட்டு வா!” என இருக்கையில் அமர்ந்த தீனாவின் மனம் ஏனோ அடித்துக் கொண்டது. இவளிடம் ஏதோ சரியில்லை. எதையோ மறைக்கப் பார்க்கிறாள் என உள்ளுணர்வு விழித்துக் கொண்டது.
சந்தனாவிடம் பதிலில்லை. பொய்யாகவேணும் கணவன் என்ற இடத்தில் ஒருவரையும் இருத்திப் பார்க்க மனம் ஒப்புக் கொள்ளாதே. மனோ என்ற வார்த்தையின் இடத்தை ஒருவராலும் நிரப்ப முடியாதே என மனம் விம்மித் துடிக்க, அவனைப் பாவமாய்ப் பார்த்தாள். எதையும் கேட்டு என்னை உடைத்து விடாதே என்ற பாவம் அதில் கொட்டிக் கிடந்தது.
“என்கிட்ட பொய் சொல்றீயா சந்தனா? ஏன் கல்யாணம் பண்ணலை நீ?” எனக் கேட்டவனுக்கு இப்போதுதான் மெது மெதுவாக பயம் படரத் தொடங்கியது.
அவன் கேள்வியில் குபுகுபுவென அடிவயிற்றிலிருந்து அழுகை வரப் பார்க்க, “நான் இன்னொரு நாள் சொல்றேன் தீனா. டைமாகிடுச்சு, இப்போ நீ கிளம்பு!” அடைத்தக் குரலை பிரம்ம பிரத்தயனப்பட்டு சரிசெய்தவாறே கெஞ்சினாள்.
“ஹ்கூம்… நீ என் கேள்விக்கு பதில் சொல்லு. ஏன் கல்யாணம் பண்ணிக்கலை நீ?” என அடமாய் நின்றான்.
“தீனா, அது என் பெர்சனல். அதுல நீ தலையிடாத. கிளம்பு!” என்றாள் கடினமான குரலில். இப்படி பேசும்போது வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் அவளுக்கு வேறு வழியில்லையே என மனம் ஊமையாய் அரற்றியது. தாய் மடி வேண்டும் என்று இன்று இரண்டாவது முறையாக தவித்துப் போனாள் சந்தனா.
“ஓஹோ… இது உன் பெர்சனலா குட்டி?” எனக் கேட்டவன் குரலிலிருந்த வேதனை இவளை ஏதோ செய்திருக்கக் கூடும்.
“பம்ச்… சாரி தீனா. நீ, நீ இப்போ கிளம்பு டா. நம்ப இன்னொரு நாள் பேசலாம்!” என்றாள் தவிப்பாக.
“மாட்டேன் குட்டி… நீ… நீ மனோவை நினைச்சுத்தான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலையா?” இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே தீனா நூறு முறை செத்துப் பிழைத்துவிட்டான்.
“லூசு மாதிரி பேசாத தீனா. அவர், ரஞ்சன், ஷோபியோட ஹஸ்பண்ட். நான், நான் எதுக்கு அவரை இப்போ நினைக்கப் போறேன். இப்படியெல்லாம் அவங்க முன்னாடி கேட்டு வைக்காத நீ. நான், நான் கல்யாணம் பண்ணிக்காததுக்கு யாரும் காரணம் இல்ல. எனக்கு… எனக்கு விருப்பம் இல்ல. அதான் பண்ணிக்கலை போதுமா?” நடுங்கிய குரலில் மெலிதான உடல் அதிரக் கத்தினாள் சந்தனா. இந்தக் கேள்விக்கு பதிலுரைக்கும் போது மனதின் ஆதி முதல் அந்தம் வரை துடிதுடித்து செத்துப் போயிருந்தாள்.
‘இன்னும் மனோவை நினைத்துக் கொண்டிருக்கிறாயா? எனக் கேட்கிறான் இவன். நான் என்றைக்கு அவனை மறந்தேன். நினைப்பதற்கு. என் மூச்சு காற்று முதல் நொடிக்கு நொடி துடிக்கும் இதயம் வரை அவனின் ஜெபம் சொல்லாத நொடிகளே இல்லையே. தவறுதான். ஆனாலும் செய்தாள். அவளுடைய மனோ அவன். இப்போது இங்கே தன் முன்னிருக்கும் மனிதன் ரஞ்சன். அவனுக்கும் எனக்கும் எவ்வித பிணைப்புமில்லையே! அவனை ஏன் நான் நினைக்கப் போகிறேன். என் மனோவின் நினைவுகளே போதும். நான் வாழ்ந்துவிடுவேன் என நினைத்ததும் சரசரவென கண்ணீர் வழிந்தது.
தொடரும்