எனக்கு செஃப் ஆக ஆசைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவள் வியப்புடன் கேட்க, இப்போதும் அதே பாவனையுடன், “ஐ நோ யூ,” என்றான்.
அந்தப் பாவனை அவனைக் கட்டிக்கொள்ளத் தோன்றியது மலருக்கு. இருக்கும் இடம் கருதி தன்னைக் கட்டுப்படுத்தியவள் அவனது கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி, “நீங்க ரொம்ப ஸ்வீட்,” என்க, “டேஸ்ட் பண்ணிப் பாக்காமலே சொல்றியேடி,” என்றவனது முகத்தில் குறும்புச் சிரிப்பு மின்னியது.
“வீட்டுக்கு போனதும் முதல் வேலையே உங்களை டேஸ்ட் பண்றதுதான்,” என்றவளது பதிலில் அதிசயத்துப் போனவன், “மலர்!” என்று விழிகளை விரித்துப் பார்த்தான்.
“நெஜமா, வீட்டுக்கு போனதும் உங்களை டேஸ்ட் பண்றதுதான் என்னோட முதல் வேலை,” என்றவள் கிசுகிசுப்புடன் கூறிக் கண்ணடிக்க, ரிஷிக்கு லேசாக முகம் சிவந்தது.
“பாருடா, சாருக்கு வெட்கத்தை,” என்றவள் அவனது கன்னத்தை மீண்டும் கிள்ளிக் கொஞ்ச, “ஹேய், பப்ளிக் ப்ளேஸ்டி, சும்மா இரு,” என்று மெதுவாக அதட்டினான்.
“எது பப்ளிக் ப்ளேஸ்? இது எனக்கு மட்டும் சொந்தமான ப்ளேஸ்,” என்றவள் விஷமச் சிரிப்புடன் கூற, “ஓவர் குஷில என்ன பேசுறோம்னு தெரியாம பண்ணிட்டிருக்க டி,” என்றவன் சிரிப்பு முறைப்புமாக அவளை நோக்கினான்.
“அதெல்லாம் நல்லா தெரிஞ்சுதான் பண்றேன். வீட்டுக்கு வாங்க, எனக்கு இன்னும் என்னென்ன தெரியும்னு காட்டுறேன்,” என்று மேலும் அவனை வம்பிழுக்க, அதற்கு மேல் அவளைச் சமாளிக்க முடியாதவன், “இறங்கு, வந்த வேலையைப் பார்க்கலாம்,” என்று மகிழுந்தைத் திறந்து வெளியே வந்தான்.
தானும் இறங்கி அவனருகே வந்தவள், “ஆமா, இங்க வந்த வேலையைப் பார்த்துட்டு முக்கியமான வேலைய வீட்ல போய் பார்ப்போம்,” என்று மேலும் அவனை வம்பிழுத்தபடி அவனுடன் நடந்தாள்.
“வீட்டுக்கு வாடி, உனக்கு இருக்கு,” என்ற ரிஷி மெலிதான முனுமுனுப்புடன் நடக்க, “ஐ அம் வெயிட்டிங்,” என்றவள் அவனுடன் கல்லூரிக்குள் நுழைந்தாள்.
அது மதுரையிலேயே மிகவும் புகழ்பெற்ற உணவக மேலாண்மைக் கல்லூரி. ரிஷிக்கு மலரை இந்தியாவிலே மிகப்பெரிய கல்லூரியில் சேர்த்து விட வேண்டும் என்றுதான் ஆசை. இருந்தும் அவளைப் பிரிய மனம் இல்லாது, மதுரையில் உள்ள சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஏற்கனவே பேசி வைத்திருந்தான்.
கல்லூரியின் சேர்க்கைக்கான நாள் முடிவடைந்து இருந்தாலும், ரிஷியின் செல்வாக்கினால் மலரைச் சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டிருந்தனர் கல்லூரி நிர்வாகத்தினர்.
“காலேஜ் அட்மிஷன் டேட் முடிஞ்சிடுச்சே, இப்போ என்னை சேர்த்துப்பாங்களா?” என்று மலர் கவலையுடன் கேட்க, “யாரோ காலேஜ் பார்த்தாலும் சேரமாட்டேன்னு சொன்னாங்க,” என்று ரிஷி அவளை வம்பிழுத்தான்.
“யாரு யாரு அப்படி சொன்னது?” என்று மலர் எதுவுமே நடக்காத பாவனையில் கேட்க, “நடிப்புக்காரி,” என்று ரிஷி முனுமுனுத்தான்.
“இங்கதான் சேர்த்து விடுறேன்னு நீங்க சொல்லி இருந்தா, நான் ஏன் இவ்வளவு நேரம் மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருந்திருக்கப் போறேன்? எல்லாம் உங்க தப்பு பாஸ்,” என்று மலர் அவனைக் குற்றம்சாட்ட, “சொல்லியிருக்கலாம் தான். இருந்தாலும் சொல்ல மனசு வரல. எனக்கும் கொஞ்சம் என்டர்டைன்மெண்ட் வேணுமில்ல,” என்று ரிஷி சிரிப்புடன் பதில் அளித்தான்.
“ஓஹோ, நான் உங்களுக்கு என்டர்டைன்மென்டா?” என்று மலர் அவனை முறைக்க, இருவரும் அலுவலக அறையை அடைந்திருந்தனர்.
“அப்புறம் பேசிக்கலாம் மலர்,” என்று அவளிடம் கூறியவன் அலுவலக அறைக்குள் நுழைய, கல்லூரியின் தாளாளர் எழுந்து வந்து, “வாங்க மிஸ்டர் ரிஷிகேஷவ்,” என்று வரவேற்றார்.
கணவனது செல்வாக்கினைக் கண்டு மலர் விழியுயர்த்த, அவரது வரவேற்பிற்கு பதில் அளித்தவன், “இவங்க என்னோட வைஃப் கருணை மலர்,” என்று அறிமுகம் செய்து வைத்தான்.
“வெல்கம் மிஸஸ் ரிஷிகேஷவ்,” என்று கல்லூரி தாளாளர் வரவேற்க, மலரும் புன்னகையுடன் அவரது வரவேற்பை ஏற்றுக்கொண்டாள்.
“கணேஷன் எல்லா டீடைல்ஸும் சொன்னாரு. அட்மிஷன் டேட் முடிஞ்சாலும் இஸ்ஸூ இல்ல, நாங்க அட்மிஷன் போட்டுக்கிறோம். நான் ஆல்ரெடி சொல்லிருந்தேன், டாக்குமெண்ட் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டீங்களா?” என்று தாளாளர் ரிஷியிடம் கேட்க, ரிஷி மலரிடமிருந்த சான்றிதழ்களை வாங்கி அவரிடம் கொடுத்தான்.
சான்றிதழ்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தவர், “எல்லா சர்டிபிகேட்டும் கரெக்ட்டா இருக்கு. நான் எங்க ஸ்டாப்பை வரச் சொல்றேன். அவங்க உங்களுக்கு அட்மிஷன் ப்ராசஸ், ஃபார்ம் ஃபில் பண்றது, ஃபீஸ் ஸ்ட்ரக்சர் எல்லாம் சொல்லுவாங்க,” என்று கூறிய தாளாளர் ஒரு ஆசிரியரை வரக்கூறினார்.
அந்த ஆசிரியர் வந்து கல்லூரி சேர்க்கைக்கான படிவத்தைக் கொடுத்து நிரப்பக் கூறி அடுத்தடுத்த படிநிலைகளைக் கூற, இருவரும் அனைத்தையும் முடித்து மதியம் போல வீட்டிற்குக் கிளம்பினர்.
“லஞ்ச் டைம் வந்துருச்சு. எங்கயாவது சாப்பிட்டு போலாமா?” என்று ரிஷி கேட்க, “ஹ்ம்ம், போகலாம். எனக்கும் பசிக்குது,” என்று பதில் அளித்தாள் மலர்.
பின் இருவரும் ஒரு உணவகத்திற்குச் சென்று காலியான இருக்கையில் அமர்ந்தனர்.
அது மதிய உணவு நேரம் என்பதால், கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
ரிஷியிடம் பேசியபடி உண்டுகொண்டிருந்த மலரது பார்வையில், இரண்டு கல்லூரிப் பெண்கள் தனது கணவனையே பார்த்துக்கொண்டிருப்பது விழுந்தது.
அதனைக் கண்டதும் மலர் ரிஷியிடம், “என்னங்க, உடனே திரும்பிப் பார்க்காதீங்க. சைட்ல இருந்து ரெண்டு பொண்ணுங்க உங்களையே பார்த்துட்டு இருக்காங்க,” என்று மென் குரலில் கூற, “எங்க?” என்றவன் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான்.
இரண்டு கல்லூரிப் பெண்கள் சிரிப்புடன் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இவன் பார்த்ததும் பார்வையை அகற்றிக்கொண்டனர்.
“ஆமா,” என்றபடி அவள்புறம் திரும்பியவன், “அழகா இருந்தா பாக்கத்தான் செய்வாங்க. அழகா பிறந்தது என் தப்பா?” என்று சிரித்தபடி கூற, “ஏதே,” என்று மலர் முறைத்துப் பார்த்தாள்.
“என்ன, உண்மையதான சொன்னேன்,” என்று ரிஷி நமட்டுச் சிரிப்புடன் வம்பிழுக்க, “அழகா இருந்தா பார்ப்பாங்களா? பார்க்கக் கூடாது. நீங்க என்னோட ப்ராப்பர்ட்டி,” என்று அவனது வார்த்தையைத் திருப்பிக் கூறினாள்.
“விடுடி, பார்க்கத்தான் செய்றாங்க. பார்த்துட்டுப் போறாங்க,” என்று ரிஷி சிரிப்புடன் கூற, “அவங்க பாக்குறதுல உங்களுக்கு தான் ரொம்ப சந்தோசம் போலவே,” என்று மலர் முறைத்தாள்.
“எனக்கு என்ன சந்தோஷம்?” என்றவன் சிரிப்பில் துடித்த கன்னக்கதுப்புடன் கூற, “வீட்டுக்கு வாங்க, உங்களுக்கு இருக்கு,” என்று மலர் முறைத்தாள்.
“என்ன இருக்கு மலர்?” என்றவன் விடாது கேட்க, “ஹ்ம்ம், அது வீட்டுக்கு போனதும் தெரியும். சீக்கிரம் சாப்பிடுங்க,” என்று முறைப்புடன் கூறினாள்.
ரிஷிக்கு அவளது செயலில் புன்னகை நீண்டது. “ஹேய், நீ பொசசீவ் ஆகறியாடி?” என்று ரிஷி வினவிட, “பொசசீவ்வா? அதெல்லாம் ஒன்னும் இல்ல,” என்று உதட்டைச் சுளித்தாள்.
“சரிதான்,” என்றவனது இதழ் கரையோரம் சிரிப்பில் மின்ன, மலர் அவனை முறைத்துவிட்டு குனிந்து உணவுண்ணத் துவங்கினாள்.
இருவரும் உண்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப, மகிழுந்தை இயக்கிய ரிஷி, “உன் பொசசிவ்னஸ் ரொம்ப க்யூட்டா இருக்கு மலர்,” எனச் சிரிப்புடன் கூறினான்.
“ஒன்னும் தேவை இல்ல உங்க காம்ப்ளிமென்ட். அந்த பொண்ணுங்க பார்த்த உடனே அத்தனை பல்லயும் காட்டுனீங்கல்ல, போய் அவங்க கிட்ட பேசுங்க,” என்று மலர் முகத்தைத் திருப்பிக்கொள்ள, “ஏய், அவங்க பாத்தா நான் என்னடி பண்ண முடியும்?” என்று ரிஷி வினவினான்.
“நீங்க அழகா இருக்குறதாலதான் பார்த்தாங்க. இனிமே அழகா இருக்காதீங்க,” என்றவள் கூற, “என்ன?” என்றவன் திகைப்புடன் அவளை நோக்கினான்.
“ஆமா, இனிமே நீங்க அழகா இருக்கக் கூடாது,” என்று மலர் மீண்டும் அழுத்தமாய் கூற, “ஹேய், அது எப்படி முடியும்?” என்று ரிஷி வினா எழுப்பினான்.
“அதெல்லாம் முடியும். உங்களால் முடியணும். இனிமே வெளியே வரும்போது நீங்க அழகா வரக்கூடாது,” என்று மலர் கோபத்தில் பேச, அவளது எண்ணப் போக்கை உணர்ந்தவனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.
“என்ன, என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு உங்களுக்கு? அமைதியா ரோட்டை பார்த்து ஓட்டுங்க,” என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு மலர் கூற, “உத்தரவு மகாராணி,” என்று மாறாத சிரிப்புடன் மொழிந்தவன் சாலையில் கவனத்தைப் பதித்தான்.
இடையிடையே ஓரக்கண்ணால் மனைவியைக் காண, அவள் கணவனை முறைத்தபடிதான் வந்தாள்.
ரிஷி மகிழுந்தை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வர, மலர் முதலே இறங்கி விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள்.
மனைவியின் செயலில் புன்னகையுடன் ரிஷி வீட்டிற்குள் செல்ல, மலர் நீள்விருக்கையில் அமர்ந்திருந்தாள்.
ரிஷி சிரிப்புடன் அவள் அருகே அமர்ந்து தோளில் கைப்போட, அதனைத் தட்டிவிட்டாள் மலர்.
“என்னடி, ஏதோ வீட்டுக்கு வந்த உடனே என்ன டேஸ்ட் பாக்குறதுதான் மொத வேலைன்னு சொன்ன? இப்ப என்னவோ மூஞ்சிய தூக்கிட்டு உட்கார்ந்திருக்க,” என்று ரிஷி கேட்க, “எனக்கு இப்போதைக்கு எதையும் செய்ய மூட் இல்ல,” என்று தோளைக் குலுக்கினாள்.
“ஆனா நான் ஃபுல் மூட்ல இருக்கேனே,” என்றவன் மனைவியை இடையோடு சேர்த்தணைக்க, “போங்க, போய் அவங்களையே சைட் அடிங்க,” என்று மலர் முகத்தைத் திருப்பினாள்.
“அழகான பொண்டாட்டி இருக்கும் போது நான் ஏன்டி அடுத்த பொண்ண பார்க்கப் போறேன்?” என்றவன் அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, “பொய்,” என்று மறுத்தாள் மலர்.
பதிலுக்கு ஒரு விஷமச் சிரிப்பைக் கொடுத்த ரிஷி, “உன்னை எப்படி நம்ப வைக்கணும்ணு எனக்குத் தெரியும்,” என்று அவளை அப்படியே அள்ளிக்கொள்ள, “என்ன பண்றீங்க, விடுங்க,” என்று மனைவி திமிறினாள்.
“இன்னும் எதுவுமே பண்ணல, அதுக்குள்ள ஆரம்பிக்காதடி,” என்று போலியாக அதட்டியவன் மனைவியோடு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.