இதயம் 27.1

இதயம் 28:

“சாகி, இந்தா, இதை கொண்டு போய் மாப்பிள்ளை தம்பிகிட்ட கொடுத்துட்டு வா,” என்று மாதவி பலகாரத் தட்டை நீட்ட, “ம்மா,” என்று அதிர்ந்தவள், “இதோட எவ்ளோ தான் செஞ்சு வச்சிருக்க?” என்று விழிகளை விரித்து கேட்டாள்.

“என்னடி, நீயே கண்ணு வச்சுட்டு இருக்க?” என்று மாதவி அதட்ட, “மாம்ஸ் பாவம்மா, ஒரே ஒரு வயிறை வச்சிட்டு எப்படி இவ்வளவு சாப்பிடுவாரு? வரிசையாக குடுத்துகிட்டே இருக்கியே,” என்று சாகித்யா ரிஷிக்காக பேசினாள்.

“அதெல்லாம் அவர் சாப்பிடுவாரு. நீ கொண்டு போய் குடு. நீ பேசுறது அவர் காதுல விழுந்தா என்ன நினைப்பாரு?” என்று மாதவி மகளை முறைக்க, “என்ன நினைப்பாரு? நான் சொல்ல வந்ததை அவ சொல்லிட்டானு நினைப்பாரு. பாவம், உள்ளேயும் போகாம, வெளியவும் போகாம, மனுஷன் முழிச்சிட்டு இருக்காரு,” என்று சாகித்யா மாமனுக்காக வருந்தினாள்.

“வர வர உனக்கு வாய் கூடி போச்சுடி. பேசாம போய் குடுத்துட்டு வா,” என்று மாதவி முறைப்பை பரிசாய் கொடுக்க, “போறேன்,” என்று உதட்டை சுழித்தவள், சிரிப்புடன் வெளியே வந்தாள்.

சாகித்யாவின் கையில் இருந்த தட்டைப் பார்த்த ரிஷி அதிர்ந்து அவளை நோக்க, அவளது இதழ்களில் நமட்டுச் சிரிப்பு பூத்தது.

“என்ன மாம்ஸ், அடுத்த ரவுண்டுக்கு ரெடியா?” என்றவள் கண்ணடித்து சிரிக்க, “ஹேய், என்ன இது? வரிசையா வந்துகிட்டே இருக்கு. இதுக்கு மேல என்னால முடியாது,” என்று மெலிதாய் அலறினான்.

“அதெல்லாம் என்கிட்ட சொல்லாதீங்க மாம்ஸ். போய் உங்க மாமியார்கிட்ட சொல்லுங்க. மாப்பிள்ளை தம்பிக்கு அது பிடிக்கும், மாப்பிள்ளை தம்பிக்கு இது பிடிக்கும்னு வரிசையா செஞ்சு தள்ளிட்டு இருக்காங்க,” என்று சாகித்யா நீட்டி முழக்கினாள்.

ரிஷி இப்போது மனைவியை காண, அவனது முகம் பார்த்து அகத்தை உணர்ந்தவள், “நான் பேசுகிறேன்,” என்று விழியசைத்தாள்.

அதனைக் கண்ட சாகித்யா, “என்ன மாம்ஸ், கண்ணாலே காதல் பேசுறீங்களா?” என்று சிரிப்புடன் வம்பிழுக்க, “ஆமா, நீ சின்ன புள்ள. இது எல்லாம் பார்க்கக் கூடாது. உள்ள போ,” என்ற ரிஷியும் பதிலுக்கு வாரினான்.

“நான் சின்ன பிள்ளையா மாம்ஸ்? எனக்கு ட்வென்டி பிளஸ் ஆயிடுச்சு. அபிஷியலி ஐ அம் எலிஜிபில் ஃபார் மேரேஜ்,” என்று சாகித்யா இல்லாத காலரைத் தூக்க, “அதை இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லு,” என்று நமட்டுச் சிரிப்புடன் ரிஷி இயம்பினான்.

“எதுக்கு? எங்க அம்மா என்ன விளக்கமாத்த வச்சு விளாசவா? உங்க பிளான் எனக்கு தெரிஞ்சு போச்சு மாம்ஸ். அது மட்டும் நடக்காது,” என்று நகைப்புடன் கூறியவள் அவன் அருகே அமர, ரிஷியின் இதழ்களில் அவள் கூறிய பாவனையில் புன்னகை பூத்தது.

“அப்புறம் சாப்பிடுங்க மாம்ஸ், கொண்டு வந்த பலகாரத்தை,” என்று சாகித்யா மொழிய, “அவ்வளவுதான். இதுக்கு மேல ஒரு இன்ச் கூட என் வயித்துல இடமில்லை. இனி நைட் டின்னர் தான்,” என்று ரிஷி தனது நிலையை கூறினான்.

“என்ன மாம்ஸ், இப்படி சொல்லிட்டீங்க? எங்க அம்மா வேற நாலு வகை தொட்டுக்க வச்சு, குழம்பு, ரசம், மோர்னு லிஸ்ட் போட்டு செஞ்சு வெச்சி இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட கூப்பிடுவாங்க,” என்று சாகித்யா அவனை மேலும் அதிர வைத்தாள்.

“அதுக்குள்ள லஞ்ச்சா? இப்பதானே பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டோம்?” என ரிஷி நேரத்தைப் பார்க்க, “மாம்ஸ், நீங்க பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு மூன்று மணி நேரம் ஆச்சு. நடுவுல ஸ்னாக்ஸ் வந்துட்டு போறதால உங்களுக்கு டைம் போறது தெரியல,” என்று சாகித்யா மொழிந்தாள்.

“லஞ்ச் கொஞ்சம் லேட்டா சாப்பிடலாம். சாகித்யா, அத்தை கிட்ட சொல்லு,” என்று ரிஷி கூற, “நான் சொன்னா எங்க அம்மா கேட்காது மாம்ஸ். நீங்க சொல்லுங்க. ‘மாப்ள சொல்லிட்டாரு’ன்னு அடுத்த செகண்ட் தலையாட்டிடும். எங்க வீட்ல உங்களுக்கு அவ்வளவு பவர் இருக்கு,” என்று சாகித்யா சிரிப்புடன் இயம்பினாள்.

“இது ஏதோ வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இருக்கே,” என்று ரிஷி அவளை சந்தேகமாக பார்க்க, “ஐயோ மாம்ஸ், நிஜமாகவே உங்களுக்கு பெரிய பவர் இருக்கு. அது உங்களுக்குதான் தெரியல,” என்று மீண்டும் அழுத்தி கூறினாள்.

“என்னவோ சொல்ற,” என்று ரிஷி மீண்டும் நம்பாமல் பார்த்து வைக்க, “அத விடுங்க மாம்ஸ். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்,” என்று கூறினாள் சாகித்யா.

“என்ன?” என்று ரிஷி அவளை காண, “உங்க தம்பி வளர்ந்தவரு ஒருத்தர் இருக்காரே,” என்று சாகித்யா கேள்வியுடன் அவனை நோக்கினாள்.

ரிஷி ஒரு நொடி புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, “சுபாஷா?” என்று வினவ, “ஆமா, அந்த சுபாஷேதான். அவரு ஒரு ரெண்டு மூணு நாளா என் கண்ணுல பட்டுக்கிட்டே இருக்காரு. உங்க நிச்சயத்தில இருந்து நான் பாக்காத மாதிரி கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். என்னையே சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தாரு. இப்போ காலேஜ் சைடுலையும் கண்ணுல படுறாரு. எனக்கென்னமோ அவர் எனக்கு ரூட்டு விடுறாருன்னு தோணுது. நீங்களே உங்க தம்பி கிட்ட சொல்லிருங்க. நான் அவ்வளவு ஒருத் இல்ல, நான் ஒரு டம்மி பீஸ்னு,” என்றவளது இறுதி வாக்கியத்தில் ரிஷிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.

இருந்தும் அதனைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “ரியலி?” என்று நம்பாத பார்வை பார்க்க, “ஆமாம் மாம்ஸ். நீங்க நம்ப மாட்டீங்கன்னு தான், நேத்து அவர் வந்தப்போ அவருக்கே தெரியாம போட்டோ எடுத்து வச்சுட்டேன்,” என்றவள் தனது அலைபேசியில் எடுத்திருந்த அவனது புகைப்படத்தை காண்பித்தாள்.

அதனை உற்றுப் பார்த்துவிட்டு தனது தம்பிதான் என்று உறுதி செய்தவன், “உன்கிட்ட ஏதாவது வந்து பேசினானா?” என்று வினவிட, “இல்ல மாம்ஸ். வந்து பேசி இருந்தா நானே சொல்லி இருப்பேனே. ‘தம்பி, இதெல்லாம் நமக்கு செட் ஆகாது. போய் உங்க பொழப்ப பாருங்க’ன்னு,” என்றவளது பாவனை மீண்டும் அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

இந்த முறை வாய் விட்டே சிரித்தவன், “பாவம் என் தம்பி,” என்றிட, “ஹலோ மாம்ஸ், அதுக்குத்தான் உங்க தம்பிய இப்பவே தப்பிச்சு ஓட சொல்லி உங்களுக்கு ஹிண்ட் கொடுக்கிறேன்,” என்றவள் சிரிக்காமல் மொழிந்தாள்.

“என்னால நம்பவே முடியல. சுபாஷ் உன் பின்னாடி சுத்துறானா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இதுவரைக்கும் எந்த பெண்ணையும் அவன் பார்த்தது இல்லை,” என்று ரிஷி இயம்ப, “நான் அவருக்கு செட் ஆக மாட்டேன் மாம்ஸ். நல்ல அமைதியான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க,” என்றாள் சாகித்யா.

ரிஷிக்கு உள்ளூர வியப்புதான். தன் தம்பி சாகித்யா பின் சுற்றுகிறானா என்று அவன் இதுவரை எந்த பெண்ணையும் பிடித்துள்ளது என்று கூறியதும் இல்லை, ஏறெடுத்து பார்த்ததும் இல்லை. அதுவும் நிச்சயத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். எனக்கு தெரியவில்லையே என்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

“ஏன் வேணாம்னு சொல்ற? சுபாஷ் ரொம்ப நல்ல கேரக்டர்,” என்று ரிஷி கூற, “இதெல்லாம் நமக்கு ஒத்து வராது மாம்ஸ். உங்க தம்பிக்கு ஏத்த நல்ல குணமான பொண்ணு கண்டிப்பா கிடைப்பாங்க. நான் சொன்னதா சொல்லிருங்க,” என்று சாகித்யா முடித்துக்கொள்ள, ரிஷியும் அதற்கு மேல் அதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.

இங்கு சமையல் அறைக்கு வந்த மலர், “ஒரு வாரத்துக்கு சேர்த்து இன்னைக்கே செஞ்சிட்டு இருக்கியா?” என்று தாயிடம் வினவ, “என்னடி, நீயும் சாகித்யா மாதிரி புரியாம பேசிட்டு இருக்க? மறுவீடு வந்த மாப்பிள்ளைய நல்லா கவனிக்க வேண்டாமா?” என்று வினவினார் மாதவி.

“கவனிக்கணும் தான். அதுக்குன்னு இப்படியா? பாவம்மா, என் புருஷன் இதுக்கு மேல அவரால் எதையும் சாப்பிட முடியாது. நீ வரிசையாக கொடுத்துவிடுறதால மறுக்க முடியாம சாப்பிட்டுட்டு இருக்காரு. போதும், இதோட நிறுத்திக்கோ,” என்று மலர் கணவனுக்காக பேச, “என்னடி, அப்படி என்ன நான் நிறைய செஞ்சுட்டேன்? நாலே நாலு பலகாரம் தானே கொடுத்துவிட்டேன்?” என்று மாதவி கேட்டார்.

“நாலு தான் குடுத்த. அதுக்கு முன்னாடி காலையில சாப்பாடு சாப்பிட்டார்ல. அப்படியே வரிசையா வந்துகிட்டே இருக்கு, கேப் இல்லாம. இதுக்கு மேல அவரால சாப்பிட முடியாது ம்மா. அப்படி செய்யணும்னு ஆசையா இருந்தா செஞ்சு வை. வீட்டுக்கு போகும் போது எடுத்துட்டு போய் வச்சு சாப்பிடுகிறோம்,” என்று மலர் கூற, மாதவியும் வேறு வழியின்றி தலையசைத்தார்.

இங்கு வாழையிலை வாங்க சென்ற முரளியும் வித்யாவும் வந்து விட்டனர்.

அதனைக் கண்ட மாதவி, ரிஷியிடம் வந்து, “தம்பி, இலை வாங்கிட்டு வந்துட்டாங்க. உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று கேட்க, ரிஷிக்கோ அதிர்ச்சி. அதனைக் கண்ட சாகித்யாவிற்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதிர்ச்சியை முகத்தில் காண்பிக்காதவன், “கொஞ்ச நேரம் போகட்டும் அத்தை. இப்பதானே ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்டேன்,” என்று கூற, “சரிங்க தம்பி. ஒரு மணிக்கு மேல சாப்பிடுறீங்களா?” என்று மாதவி வினவினார்.

ஒரு மணி ஆக இன்னும் முக்கால் மணி நேரம் இருக்க, “சரிங்கத்தை,” என்று பதில் கூறினான் ரிஷி.

“என்ன மாம்ஸ், என்னை விட்டுட்டு அதிரசம் சாப்பிட்டீங்களா?” என்றபடி வித்யா வர, “உனக்கு இல்லாததா இந்த சாப்பிடு,” என்று ரிஷி அவளிடம் நீட்டி தப்பித்துக் கொண்டான்.

அதனைக் கண்ட மாதவி, “வித்யா, உனக்கு வேணும்னா என்கிட்ட வாங்கி சாப்பிட வேண்டியதுதானே? அது மாப்பிள்ளை கொடுத்தது. அவர்கிட்ட கொடு,” என்று அதட்ட, “இருக்கட்டும், அவ சாப்பிடட்டும். எனக்கு போதும் அத்தை,” என்று ரிஷி அவரைத் தடுத்தான்.

“ஏன் தம்பி, உங்களுக்கு பிடிக்கலையா அதிரசம்?” என்று மாதவி சற்று கவலையுடன் கேட்க, “அதெல்லாம் இல்லத்த,” எனச் சடுதியில் மறுத்தவன், “எனக்கு வயிறு ரொம்ப ஃபுல்லா ஆயிடுச்சு. வீட்டுக்கு போம்போது கொடுத்து விடுங்க. அங்க போய் சாப்டுக்கிறேன்,” என்று அவரை சமாதானம் செய்தான்.

error: Content is protected !!
Scroll to Top