மருமகனின் பேச்சில் சற்று சமாதானம் அடைந்தவர், “சரிங்க தம்பி. உங்களுக்கும் மலருக்கும் செஞ்ச பலகாரத்தை எடுத்து வைக்கிறேன்,” என்று சமையலறைக்குள் நுழைந்து, தூக்குவாளியில் அவர்களுக்கு பலகாரத்தை அடுக்கத் துவங்கினார்.
“மகனும் மருமகளும் மறுவீட்டுக்கு வந்த சந்தோஷத்துல எங்க அம்மா தலைகால் புரியாமல் சுத்திட்டு இருக்கு மாம்ஸ். அதுதான் இப்படி,” என்று சாகித்யா சிரிக்க, ரிஷிக்கும் அது புரிந்தது.
இருந்தாலும், “எங்க அம்மா கொஞ்சம் ஓவர் கவனிப்புதானே மாம்ஸ்?” என்று சாகித்யா சிரிப்புடன் கேட்க, ரிஷியும் மென்னகையுடன் அதனை ஆமோதித்தான்.
“என்ன, மாமாவும் கொழுந்தியாவும் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கீங்க?” என்றபடி மலர் ரிஷியின் மறுபுறம் அமர, “அதெல்லாம் சீக்ரெட். நாங்க சொல்ல மாட்டோம்,” என்று தலையை சிலுப்பினாள் சாகித்யா.
உடனே மலரின் பார்வை கணவனிடம் படிய, “மாம்ஸ், நம்ம பேசின அந்த முக்கியமான விஷயத்தை மட்டும் அவக்கிட்ட சொல்லிடாதீங்க,” என்று சிரிப்புடன் கூறினாள் சாகித்யா.
“என்ன விஷயம்?” என்று மலர் ஆர்வமாக கணவனை காண, “அப்படி இம்பார்டன்ட்டா நாங்க எதுவும் பேசல. அவ சும்மா உன்ன வம்பு இழுக்கிறா,” என்று ரிஷி சாகித்யா கூறியதை சரியாக பிடித்துக் கொண்டான்.
தன் கூறுவதைப் புரிந்து கொண்ட மாமனை கண்டு சாகித்யாவிற்கு புன்னகை எழுந்தது.
அப்படியே பேசியபடி அவர்களது நேரம் கழிய, மாதவி மதிய உணவை அவர்களுக்கு பரிமாறினார்.
எல்லோரும் உண்டு விட்டு மதியம் ஓய்வெடுத்தனர். ரிஷிக்கு அங்கு சற்று வசதி போதவில்லை எனினும், அதனைக் காண்பிக்காது அங்கேயே ஓய்வெடுத்தான்.
பிறகு மாலை நேர சிற்றுண்டி அருகில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்று ஐஸ்கிரீம் என்ற நேரம் நகர, இரவுணவை முடித்துவிட்டு மலரும் ரிஷியும் தங்களது வீட்டிற்கு கிளம்பினர்.
“மலரே, இந்தா. இதுல பலகாரம் இருக்கு. வச்சு சாப்பிடுங்க,” என்று இரண்டு பெரிய தூக்குவாளியை மாதவி கொடுக்க, “என்னம்மா, ஆறு மாசத்துக்கு சேர்த்து கொடுத்து இருக்கியா?” என்று சாகித்யா வம்பிழுத்தாள்.
“சும்மா இரு சாகித்யா,” என்று அவளை அதட்டிய மாதவி, “நீ எடுத்துட்டு போ மலரு. உனக்கும் மாப்பிள்ளைக்கும் புடிச்சதா பார்த்து பார்த்து செஞ்சு இருக்கேன்,” என்று பாசத்துடன் கூறினார்.
“சரிம்மா,” என்று தலையசைத்த மலர் அதனை எடுத்து தங்களது மகிழுந்தில் வைக்க, இருவரும் கூறிவிட்டு விடைபெற்றனர்.
“என்ன, மாமியார் வீட்டு மறுவீட்டு விருந்து எப்படி இருந்துச்சு?” என்று மலர் சிரிப்புடன் வினவ, “இருந்தாலும், உங்க அம்மா ரொம்ப விழுந்து விழுந்து கவனிச்சிருக்க வேணாம்,” என்று நகைப்புடன் பதில் மொழிந்தான் ரிஷி.
“புது மாப்பிள்ளை இல்ல, அதான். இன்னும் கொஞ்ச நாள் போனா கண்டுக்க மாட்டாங்க,” என்று மலர் அவனை வம்பிழுக்க, “எனக்கென்னமோ உங்க அம்மா எப்பவுமே இப்படித்தான் நடந்துப்பாங்கன்னு தோணுது,” என்று தானும் புன்னகையுடன் பதில் அளித்தான் ரிஷி.
“அடுத்த மாப்பிள்ளை வர வரைக்கும் இந்த கவனிப்பு இருக்க வாய்ப்பிருக்கு,” என்று மலர் இயம்ப, ரிஷிக்கு சுபாஷின் நினைவு வந்தது.
சாகித்யா கூறியதை அவனிடம் தெளிவாக பேசிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
இருவரும் பேசியபடியே வீட்டை அடைந்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும், “சாப்ட்டு சாப்ட்டு இன்னைக்கு நான் டயர்ட் ஆயிட்டேன்,” என்றபடி நீள்விருக்கையில் விழ, ரிஷியும் அவளருகே அமர்ந்தான்.
இருவரும் ரிஷியின் வீட்டில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. இடையில் ரிஷிக்கு சிறிது வேலை இருந்ததால் மறுவீடு சற்று தள்ளி போயிருந்தது.
அதன் காரணமாகவே இன்று சென்று வந்திருந்தனர். நடுவில் மலரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ரிஷி அனைவரிடமும் அறிமுகப்படுத்தி இருக்க, அங்கிருந்து எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி, ஆச்சரியம் எனக் கலவையான உணர்வே வந்து போனது.
தங்களுடன் பணி புரிந்தவள் இப்போது தங்களுக்கு முதலாளியா என்று பலருக்கு எண்ணம் தோன்ற, அது அவர்களது முகத்திலும் பிரதிபலித்தது.
அதனைக் கண்ட மலருக்கும் அவர்களது எண்ணம் புரிந்தது. அதன் பிறகு அங்கே இருக்க ஒருவித அசௌகரியமாக இருக்க, மலர் சிறிது நேரத்தில் ரிஷியிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.
ரிஷி ஏன் என்று கேட்டதற்கும் மலரிடம் பதிலில்லை. தன்னுடன் அலுவலகத்தில் வந்து மேற்பார்வை பார்க்கும் படி ரிஷி அழைக்க, மலர் மறுத்துவிட்டாள்.
வீட்டில் இருப்பதற்கு அவளுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. காலை எழுந்து மீன் வியாபாரம், அதன்பிறகு ரிஷியின் வீட்டில் வேலை, பிறகு அலுவலகம், கல்லூரி என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவளுக்கு வீட்டில் எதுவும் செய்யாமல் இருப்பது வெறுப்பாக இருந்தது.
அதுதான் ரிஷியிடம் கேட்டு வேறு ஏதாவது வேலைக்கு செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளது முகத்தை வைத்து எதையோ போட்டு குழப்பிக் கொள்கிறாள் என்று அறிந்து கொண்ட ரிஷி, “என்ன, உன் மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடிட்டு இருக்கு?” என்று வினவிட, “எனக்கு வீட்டில சும்மா இருக்க ரொம்ப போர் அடிக்குது,” என்று அவனது முகம் பார்த்தாள்.
“அவ்வளவுதானா? நாளைக்கு என் கூட ஆபீஸ்க்கு வா. எனக்கு ஒர்க் நிறைய இருக்கு. உனக்கு சொல்லி தரேன். நீயும் செய், எனக்கு ஒர்க் லோடு குறையும்,” என்று ரிஷி கூற, “வேணாம், நான் ஆபீஸ் வரல,” என்று மறுத்தாள்.
“ஏன்? நம்ம ஆபீஸ் வரதுல என்ன பிரச்சனை உனக்கு?” என்று ரிஷி அவளது முகம் பார்த்து வினவிட, “இவ்வளவு நாள் அங்க ஒர்க் பண்ணிட்டு, இப்போ எம்.டியோட பொண்டாட்டியா வந்து உட்கார எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அதான்,” என்று இழுத்தபடி மலர் அவனைப் பார்த்தாள்.
“சோ மேடம், என்ன பண்றதா இருக்கீங்க?” என்ற ரிஷி அவளைக் கேள்வியாக காண, “நான் ஏதாவது வேற வேலைக்கு போகட்டுமா?” என்று ஆர்வமாக அவனது முகம் பார்த்தாள்.
“அப்போ நம்ம ஆபீஸ்க்கு வர்றதா ஐடியாவே இல்ல?” என்று ரிஷி அவளை முறைக்க, “அப்படிலாம் இல்ல. கொஞ்ச நாள் கழிச்சு வரேன்,” என்று அவனை சமாதானம் செய்தாள்.
“என்னைக்கா இருந்தாலும் நீ வரத்தானே வேணும்? அது இப்பவே இருக்கட்டும். ஒரு ஒன் வீக்ல உனக்கு எல்லாம் பழகிடும்,” என்று ரிஷி மொழிய, “கொஞ்ச நாள் கழிச்சு வரேன், ப்ளீஸ்,” என்று அவனது நாடியைப் பிடித்து கெஞ்சினாள்.
மனைவியின் செயலில் புன்னகை எழ, “ஏதோ சின்ன பிள்ளைய கொஞ்சுற மாதிரி பண்றடி,” என்று சிரிப்புடன் அவளை அருகில் இழுத்தான்.
“ஏன், சின்ன பிள்ளைங்கள தான் கொஞ்சணுமா? நான் என் புருஷனை எப்படி வேணா கொஞ்சுவேன்,” என்றவள் அவனது கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள்.
“ஹ்ம்ம், கொஞ்சலாமே. கொஞ்சுறதுக்கு மட்டுமில்ல, என்ன வேணா செய்யலாம். எல்லாத்துக்கும் உனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு,” என்றவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, மலருக்கு முகம் சிவந்தது.
“நான் கொஞ்ச மட்டும் தான் சொன்னேன்,” என்றவள் லேசாக முணுமுணுக்க, “நானும் கொஞ்சம் தான் சொன்னேன்,” என ரிஷியும் அவளைப் போலவே முணுமுணுத்து சிரிக்க, மலர் சிரிப்புடன் முறைத்தாள்.
“முறைக்கும் போது தான்டி நீ அநியாயத்துக்கு அழகா இருக்க,” என்றவன் அவளது கன்னத்தில் இதழ் பதிக்க, “பொய்,” என்று உடனே மறுத்தாள் மனைவி.
“நம்புடி,” என்றவன் அவளது தாடையில் முத்தமிட, “ஹ்ம்ம், ஹ்ம்ம்,” என்று தலையசைத்தவள், “நான் வேலைக்கு போகட்டுமா?” என்று மீண்டும் வினவினாள்.
“காரியத்துல கண்ணா இருக்கடி,” என்று அவளைப் போலியாக முறைத்தவன், “வேற என்ன வேலைக்கு போவ?” என்று மலரை காண, “அதான், நமக்கு கம்பெனி பக்கத்துல டொயோட்டா இருக்கே, அங்க போவேன்,” என்று அடுத்த நொடி பதில் அளித்தாள்.
“அதுசரி, பக்கத்து கம்பெனி ஓனர் பொண்டாட்டிக்கு எவன் வேலை கொடுப்பான்?” என்று ரிஷி அவளை முறைப்புடன் பார்க்க, “ஆமால்ல,” என்று அவனைப் பார்த்து பாவமாக விழித்தாள்.
அவளது பாவனை ரிஷிக்கு அள்ளிக் கொள்ளத் தோன்ற, அதனை அப்படியே செய்தவன், மனைவியை தன் மடிக்கு மாற்றி அவளது இதழோடு இதழ் உரசினான்.
அவனது முத்தத்தில் மயங்கி கிறங்கி போனவள் அவனை அப்படியே கட்டிக்கொள்ள, “பேசாம நீ மேல படிக்கிறியா?” என்று ரிஷி கேட்டான்.
அடுத்த நொடியே முத்தமிட்ட மயக்கம் தலைதெறிக்க ஓடியிருக்க, “ஏதே, படிக்கிறதா?” என்று அதிர்ந்து விழிகளை விரித்து அவனை நோக்கினாள் மலர்.