“இல்ல மனோ… எங்க மிஸ் லவ் எல்லாம் தப்புன்னு சொல்லியிருக்காங்க. அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க டா!” என்றாள் கலக்கமாய்.
“குட்டி… நீ அழாத. நான் இதைப் பார்த்துக்குறேன். என் ஃப்ரெண்ட்ஸைக் கூட்டீட்டுப் போய் அவனை ரெண்டு அடி போட்றேன்…”
“ஐயோ மனோ… அப்படிலாம் பண்ணிடாத டா. நான், நான் கீதா மிஸ்கிட்டே சொல்லிக்கிறேன். அவங்க நான் சொன்னா நம்புவாங்க. சர்ஜூனைக் கூப்பிட்டு தண்டனை கொடுப்பாங்க. நீ எதுவும் செய்யாத. உங்கம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. என் அம்மாவும் திட்டுவாங்க!” பதறிய குரலில் இயம்பினாள் சந்தனா.
“குட்டி… நீ மிஸ்கிட்டே சொல்லு. ஆனாலும் நான் அவனைப் பார்க்கணும்!” எரிச்சலாய் உரைத்தான். எத்தனை தைரியமிருந்தால் அவனுடைய குட்டிக்கு காதல் கடிதம் எழுதியிருப்பான். இந்த வீடு, பூந்தொட்டி, மணல்மேடு, அவர்களது ஆஸ்தான இடத்தோடு குட்டியும் சேர்த்து அவனுடைய உடைமைதான். அதை யாருக்கும் விட்டுத் தருவதில் சர்வ நிச்சயமாய் மனோவுக்கு உடன்பாடில்லை. முகத்தில் பிடித்தமின்மையைக் காண்பித்தான்.
“மனோ… ப்ளீஸ்டா… பிரச்சனை வேணாம். நானே பார்த்துக்கிறேன். இந்த மாதிரி எதாவது நடந்தா, உடனே என்கிட்ட சொல்லுங்கன்னு கீதா மிஸ் சொல்லிருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க!” என இவள் கூறும்போதே கண்ணீர் வடிந்துவிட்டது.
அவள் அழுகைப் பொறுக்காதவன், “ப்ம்ச்… குட்டி… அழாத டி. நான் அவனை அடிக்க மாட்டேன்…” என்றான் சலிப்பாய்.
ஆனாலும் இதை இப்படியே விட்டுவிடும் எண்ணம் மனோவுக்கு உத்தமமாய் இல்லை. அவன் பதிலில் சமாதானமடைந்தாலும் வீட்டிற்குச் செல்லும்போதும் அவனிடம் மீண்டும் அறிவுறுத்தி நகர்ந்திருந்தாள் சந்தனா.
மறுநாள் காலை சந்தனா சிறப்பு வகுப்பிற்காக எட்டு மணிக்கே பள்ளிக்குச் சென்றுவிட்டாள். அவர்கள் வகுப்பாசிரியை தாமதமாக வருவேன் எனக் கூறி, பக்கத்து வகுப்பு வாத்தியாரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி சென்றிருக்க, “எல்லாரும் அமைதியா படிக்கணும். பேச்சு சத்தம் கேட்டுச்சுன்னா, அடிவாங்குவீங்க…” என அவர் கூறி நகர, சந்தனா புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்.
அருகிலிருந்த சகமாணவிகள் இவளைப் பார்த்து ஏதோ கிசுகிசுவென பேசுவதாய் தோன்ற, பார்வையை அவர்கள் புறம் திருப்பினாள். சட்டென அவர்கள் பேச்சு தடைபட்டிருந்தது. இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
வகுப்பு தோழியொருத்தி எழுந்து சந்தனாவின் அருகே அமர்ந்தாள். “சந்தனா… அது உன் ஃப்ரெண்ட் மனோ இருக்கான் இல்ல?” அவள் இழுக்க, இவளுக்கு நொடியில் வியர்த்திருந்தது.
“சீதா… மனோ, மனோவுக்கு என்னாச்சு?” இவள் பதற்றப்பட,
“மனோ நம்ப ட்வெல்த் சி க்ளாஸ் சர்ஜூனோட ரோட்ல சண்டை போட்டுட்டு இருக்கானாம். பசங்க சொன்னாங்க!” என மற்றவள் உரைத்ததும் அமர்ந்த இடத்திலிருந்து நொடியில் எழுந்திருந்தாள் சந்தனா. மனம் முழுவதும் படபடவென அடிக்க, குடுகுடுவென வெளியே ஓடினாள். வாயிலருகே கூட்டமாயிருந்தது. அங்கேதான் மனோ இருக்கக் கூடுமென கருதி அங்கே விரைந்தாள்.
“டேய், சந்தனா என் ஆளு டா. அவளுக்கு நான் லவ் லெட்டர் கொடுப்பேன். உனக்கென்ன வந்துச்சு? அவளுக்கும் என்னைப் பிடிக்கும்!” சர்ஜூன் கூறியதில் மனோவின் முகம் கோபத்தில் சிவந்தது.
“டேய்… அவ என் குட்டி டா. என் சந்தனா, அவ எனக்கு மட்டும்தான்!” மனோ கோபத்தை இழுத்துப் பிடித்துப் பேச,
“மனோ… இது எங்க ஸ்கூல்ல நடக்குறது. நீ தேவையில்லாம தலையிடாத. எங்க ஸ்கூல்ல படிக்கிற சந்தனாவை சர்ஜூனுக்கு பிடிச்சிருக்கு. அதனால லவ் பண்றான். அந்தப் பிள்ளைக்கும் இவனை பிடிக்கும். நீ இடையில வராத. சந்தனா உனக்கு ஃப்ரெண்ட் மட்டும்தான். ஆனால் சர்ஜூனுக்கு ஆளு!” வேறொரு மாணவன் பேசியதும் மனோ அவனை அடிக்கப் பாய, சந்தனா அந்நேரம் கூட்டத்தில் நுழைந்திருந்தாள்.
“மனோ…” என அவள் மூச்சு வாங்க கத்த, அனைவரது கவனமும் அங்கே குவிந்தது.
“என்ன பண்ற மனோ. நான்தான் நேத்தே சொன்னேன்ல பிரச்சனை வேணாம்னு. ஏன் டா இப்படி பண்ற?” என அவன் கையைப் பிடித்திழுத்தாள் இவள். விழிகள் தளும்பி நின்றன.
“ப்ம்ச்… அவன் என்ன பேசுறான்னு பாரு டி. என்னை போக சொல்ற நீ. இன்னைக்கு அவனை அடிக்காம நான் போக மாட்டேன்!” மனோ துள்ள, “மனோ… நான் சொல்றதை கேக்கப் போறீயா இல்லையா?” என இவள் கோபமாய்க் கத்தினாள்.
“முடியாது குட்டி…” அவன் மறுக்க, “அப்போ இனிமே உங்க வீட்டுக்கு நான் வரமாட்டேன்!” என்றாள் தீர்க்கமாக.
“ப்ராமிஸ் பண்ணிருக்க குட்டி. அதை மறக்காத!” மனோ பல்லைக் கடிக்க, அவனை இயலாமையுடன் பார்த்தாள் சந்தனா.
“பாரு டா… இப்போ கூட அவ உன்னைத்தான் போக சொல்றா. ஏன்னா, அவளுக்கு சர்ஜூனைத்தான் பிடிச்சிருக்கு. நீ வேற ஸ்கூல். இது எங்க ஸ்கூல் டா. நாங்க பார்த்துக்குறோம். நீ கிளம்பு!” எள்ளலாக ஒருவன் உரைக்க, மனோ சந்தனா கையை உதறியிருந்தான்.
“மனோ…” என அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் நுழைந்தவள், “நான் சொல்றதை கேட்டு இங்கருந்து கிளம்புற நீ. இல்ல, நான் உன்கூட எப்பவுமே பேச மாட்டேன். வீட்டுக்கு வருவேன்னு மட்டும்தான் ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்!” சந்தனா கூறியதும், மனோ பல்லைக் கடித்தான்.
மறுபுறம் திரும்பியவள், “ப்ளீஸ், எல்லாரும் கிளம்புங்க. இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க. மிஸ்க்கு தெரிஞ்சா திட்டுவாங்க. போய்டுங்க…” என அவள் கெஞ்ச,
“சந்தனா, சர்ஜூன் உன்னை லவ் பண்றான்னு தெரியும்தானே. அவனுக்கு பதில் சொல்லு…” ஒருவன் கேட்க, சர்ஜூன் அவளது கையைப் பற்ற வந்தான்.
நொடியில் அவளின் கையைப் பிடித்திழுத்து தோளில் கையைப் போட்ட மனோ, “குட்டி என் ஆளு டா. அவளும் நானும் லவ் பண்றோம். அவளுக்கு என்னை மட்டும்தான் புடிக்கும். இனிமே அவகிட்டே வம்பு பண்ணாதீங்க!” எனக் கூறியதும், அவளுக்கு நெஞ்சடைத்துப் போனது. என்னப் பேசுகிறான் இவன் என மருண்ட விழிகளுடன் அவனை நோக்கினாள். அவன் பேசியது ஆசிரியர் வரை சென்றுவிட்டால் அவளுடைய பெயர் என்னாவது? படிப்பு என்னாவது என நினைத்ததும் அழுகை வரப் பார்த்தது.
“சந்தனா… அவன் சொல்றது உண்மையா. நான் தான் உனக்கு முதல்ல லவ் லெட்டர் கொடுத்தேன். என்னை உனக்குப் பிடிக்கலையா?” என சர்ஜூன் கோபப்பட, மனோ அவனை நக்கலாகப் பார்த்தான்.
அதில் மேலும் சீண்டப்பட்டவன், “சந்தனா, உனக்கு அவனைப் புடிக்குமா? என்னைப் புடிக்குமா?” என வினவ, அவள் மௌனமாய் இருவரையும் வெறித்தாள்.
“குட்டி… பதில் சொல்லுடி…” மனோ தனது பிடியை இறுக்க,
“சர்ஜூன், எனக்கு மனோவும் ஃப்ரெண்ட். நீயும் ஃப்ரெண்ட்தான். இனிமே இப்படி லவ்னு பேசிட்டு வராத. அப்படி மறுபடியும் வந்தன்னா, நான் ஸ்கூல் மிஸ்கிட்டே, ஹெட்மிஸ்கிட்டே சொல்லிடுவேன். எனக்கு இதெல்லாம் பிடிக்காது!” என தன் தோளிலிலிருந்த மனோவின் கையையும் சேர்த்து தட்டிவிட்டு விறுவிறுவென பள்ளிக்குள்ளே நுழைந்தாள். அவன் அவளைக் சினத்துடன் பார்த்தான்.
அத்தனை பேரின் முன்பும் மனோ அப்படி பேசியதில் அவளுக்கு அழுகையும் கோபமும் ஒரு சேரப் பொங்கியது. மனோ அவளைக் காப்பாற்றுவதற்காக அப்படி கூறியிருந்தாலும், இந்த விஷயம் தன் தாயின் காதிற்கு சென்றால் என்னாவது என இப்போதே மனம் பிசைய, தேம்பியழுதாள். வகுப்பாசிரியர் வந்துவிட்டார். இவள் அவசர அவசரமாக முகத்தைத் துடைக்க, அதை கவனித்தவர், மற்றவர்களைப் படிக்க பணித்துவிட்டு அவளை அழைத்தார்.
“சந்தனா… என்னாச்சு? ஏன் அழுற?” என அவர் வினவ, திக்கித் திணறி அவள் நடந்ததைக் கூறிவிட்டாள். அவளை அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றவர் அந்த மாணவனை அழைத்துக் கண்டித்தார்.
இது போல இனியொரு முறை நடந்தால் பெற்றவர்களிடம் கூறிவிடுவோம் என அவனை மிரட்டி அனுப்பியவர், சந்தனாவை சமாதானம் செய்தார். பிரச்சனை முடிந்ததில் அவளுக்கு நிம்மதி பிறந்தது.
அவளுமே ஆசிரியர் வந்ததும் இதைக் கூறி பூதாகரமாக வெடிக்கும் முன்னே சரி செய்துவிடலாம் என்றெண்ணியிருக்க, மனோ வந்து அனைத்தையும் தலைகீழாய் மாற்றிவிட்டிருந்தான். இப்போது அதை நினைத்ததும் அவளுக்கு கோபம் வந்தது.
அதனாலே மாலை அவனைக் காணச் செல்லவில்லை. வயிற்று வலி என தாயிடம் பொய்யுரைத்து வீட்டிலே இருந்துவிட்டாள். மனோ சந்தனாவுக்காக அவளுக்கு குறையாத கோபத்துடன் காத்திருந்தான். ஆனால் ஏமாற்றிவிட்டாள் பெண்.
மறுநாள் சந்தனா வந்ததும் வராததுமாய், “குட்டி… என்னைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்…” என அடமாய் நின்றிருந்தான் அவளது உற்றத் தோழன்.
தொடரும்…