இதயம் 26
தன் அருகே அமர்ந்திருந்தவனைத் திரும்பிப் பார்த்த மலருக்குப் புன்னகை அரும்பியது. அவர்கள் இருவரும் இருந்த மகிழுந்து ரிஷியின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அவளது பார்வையை உணர்ந்த ரிஷி திரும்பி, “என்ன?” என்பதைப் புருவம் உயர்த்த, ‘ஒன்றுமில்லை’ எனும் விதமாகத் தலையை இடவலமாக அசைத்தவள், சாளரத்தின் புறம் பார்வையைப் பதித்தாள்.
முதலில் உறைந்திருந்த புன்னகை மட்டும் வாடாமல் இருந்தது. அதற்கு முற்றும் முதலான காரணம் அருகில் அமர்ந்திருந்தவன் மட்டுமே.
ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு யாராவது வந்து, இப்படி எல்லாம் நடக்கும் என்று கூறினால், நிச்சயமாக மலர் விழுந்து விழுந்து சிரித்திருப்பாள். ஆனால், இப்போது அவள் கனவிலும் எதிர்பாராத விடயம் நடந்து கொண்டிருக்கிறது.
திடீரெனத் தன் வாழ்வில் நுழைந்து, புயலை ஏற்படுத்தியவன், தன்னை அவனுக்குள் சுருட்டிக் கொண்டதை மலர் அக்கணம் உணர்ந்தாள்.
ரிஷி இடத்தில் வேறு யாராவது இருந்து காதலைத் தெரிவித்திருந்தால், மலர் இத்தனை தூரம் நம்பிக்கையாக வந்து இருப்பாளா என்று தெரியவில்லை.
மலருக்கு ரிஷி மீது நேசம் தோன்றவில்லை தான். ஆனால், அவன் தன் மீது கொண்டிருந்த அந்த அன்பின் மீது அவளுக்கு நேசம் பிறந்தது.
இருபத்தியொரு வருட வாழ்க்கையில் எந்த ஆணையும் திரும்பிப் பார்க்காதவள் மலர். அவளைத் தன்னுடைய தேசத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தான் ரிஷிகேஷவ்.
எந்த ஆணையும் ஏறிட்டுப் பார்க்காதவளது மனதில் முதன்முதலாய் சலனத்தை உண்டாக்கியவன் ரிஷி மட்டுமே.
எல்லாவற்றிற்கும் தொடக்கப் புள்ளியாக, அவன் தன்னைப் பிடித்திருப்பதாகக் கூறிய கணம், மலருக்கு எந்தவித ஈர்ப்பும் நிச்சயமாக ஏற்படவில்லை.
ஆனால், தன்னையும் ஒருவன் பார்க்கின்றான், ரசிக்கின்றான் என்று உள்ளுக்குள் சில்லென்ற சாரல் பூத்தது என்னவோ உண்மைதான்.
அந்த சாரல் நேசமாய், காதலாய், அன்பாய் மாறியது அவன் தன்னைப் பற்றி ஷாலினியிடம் விவரித்த அந்த கணம்தான்.
தானே தன்னைப் பற்றி இவ்வளவு அழகாய் வர்ணித்திருப்போமா, கவனித்து இருப்போமா என்று மலருக்கு தெரியவில்லை. ஆனால், ரிஷி கவனத்திருந்தான். அந்த கனம் தான் அவன் மீது மலருக்கு நேசம் என்ற பூ பூத்தது.
ஆனால், இருவரது பொருளாதார நிலையையும் மனதில் கொண்டு, அதனை மறுத்து விடவே மலர் முயற்சித்தாள். ஆனால், ரிஷி அவளை விடுவதாக இல்லை.
இப்படி துரத்தி துரத்தி காதல் செய்பவனே, அவளாலும் ஒரு கட்டத்தில் மறுக்க முடியவில்லை. இருந்தும், ஏற்றுக் கொள்வதாக எதையும் கூறவில்லை. ஆனால், அன்று அணைத்துக் கொண்டு, “ஒரே ஒரு வாய்ப்பு கொடு,” என்று கேட்டானே, அந்த கணம் மனம் அவனுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவே விரும்பியது.
அப்படி கொடுத்ததன் விளைவு தான், இப்போது அவளது அருகில் அன்புக் கணவனாக அமர்ந்திருந்தான்.
நடந்ததை நினைத்துப் பார்த்த மலருக்கு புன்னகை இமை நீண்டது.
அதை கவனித்த ரிஷி, “என்னவாம்? முகம் முழுக்க மைலா இருக்கு,” என்று சிரிப்புடன் வினவிட, “ஒன்னுமில்ல,” என்று சிரிப்புடன் கூறியவள், பின், “கேட்கணும்னு நினைச்சேன். நான் தொட்ட டிரஸ்ஸையே போடக் கூடாதுன்னு தூக்கிப் போட நினைச்சவருக்கு எப்படி என் மேல காதல் வந்துச்சு?” என்று மலர் வினவினாள்.
“இது எப்போ?” என்று ரிஷி திகைப்புடன் பார்க்க, “அதுதான், அன்னைக்கு ஒரு அம்மா அடிபட்டு இருந்தாங்களே. உங்க கார்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோமே. அப்போ உங்க சட்டையை புடிச்சு இழுத்துத்தான் உங்களை நிப்பாட்டினேன் நான். அடுத்த நாளே அந்த டிரஸ்ஸ வேணாம்னு யாருகிட்டயாவது குடுக்கச் சொல்லிக் கொடுத்தீங்க தானே?” என்று மலர் சரியாக நினைவு வைத்து கேட்க, “ஹேய், நீயா எதையாவது இமேஜின் பண்ணிப்பியா?” என்று லேசான முறைப்புடன் பார்த்தான் ரிஷி.
“நான் எதும் கற்பனை பண்ணல. அதுதானே உண்மை?” என்று மலரும் விடாது கேட்க, “அந்த ட்ரெஸ்ல பிளட் ஸ்டைன் இருந்துச்சு. அதனாலதான் அதை போடப் பிடிக்காம யாருகிட்டயாவது குடுக்கச் சொன்னேன்,” என்று ரிஷி விளக்கினான்.
சடுதியில் மலர் முகம் மிளிர, “உண்மையாவா?” என்று விழிகளை விரித்து கேட்க, “உண்மைதான். நீ வேணா அந்த ஷர்ட்டை எடுத்துப்பாரு. லைட்டா பிளட் ஸ்டைன் தெரியும்,” என்றான்.
“இத அன்னைக்கே சொல்றதுக்கு என்ன? நாம தொட்டதால தான் அவர் அந்த ட்ரெஸ்ஸ போடலன்னு எவ்வளவு நாள் பீல் பண்ணேன் தெரியுமா?” என்று மலர் வினவிட, “ஏன், நீ அன்னைக்கு கேட்டிருக்க வேண்டியதுதானே. நீயா எதையாவது கற்பனை செஞ்சிட்டு ஃபீல் பண்ணிட்டு இருந்திருக்க,” என்று ரிஷி பார்த்தான்.
“சரி, அத விடுங்க. இன்னொரு முக்கியமான விஷயம் கேட்கணும்,” என்று மலர் மொழிய, “என்ன?” என்று கேள்வியை அவளை நோக்கினான்.
“உங்களுக்கு எப்போ என் மேல இன்ட்ரஸ்ட் வந்துச்சு?” என்று மலர் ஆர்வமாக வினவிட, ரிஷியின் இதழ்களில் விஷம புன்னகை பூத்தது.
“அது சீக்ரெட். சொல்றதுக்கில்லை இந்த ரிஷி,” என்று சிரிப்புடன் கூற, “என்கிட்ட கூட சொல்ல மாட்டீங்களா?” என்று ஏமாற்றம் நிறைந்த குரலில் கேட்டாள் மலர்.
“ம்ஹூம். வாய்ப்பில்லை,” என்று ரிஷி தலையசைக்க, “நானே கண்டுபிடிக்கிறேன். போங்க,” என்று மலர் இதழைச் சுழித்தாள்.
சுழித்த அவள் இதழ் மீது பார்வையைப் பதித்தவன் சற்று நெருங்கி வர, மலர் மெல்லிய படபடப்புடன் அவனை கண்டாள்.
“ஒன்னும் பண்ண மாட்டேன். பயப்படாத டி. ஆல் த பெஸ்ட். முடிஞ்சா கண்டுபிடி,” என்று சிரிப்புடன் கூறிவிட்டு பின்னகர, “கண்டிப்பா கண்டுபிடிப்பேன்,” என்று மலரும் உறுதியாகக் கூறினாள்.
பதிலுக்கு ரிஷி, உன்னால் முடியாது என்பது போல ஒரு குறும்புச் சிரிப்பைக் கொடுக்க, அவனை முறைப்புடன் நோக்கினாள் மலர்.
“நீ சிரிக்கிறதை விட, முறைக்கும் போது தான் அநியாயத்துக்கு அழகா இருக்கடி,” என்றவன் பார்வை ரசனைக்குத் தாவ, மலருக்கு முகம் சிவந்துவிட்டது.
“இதெல்லாம் எங்க வச்சிருந்தீங்க? வந்த புதுசுல எப்படி விரைப்பா சுத்திட்டு இருந்தீங்க நீங்க. அந்த விரைப்ப பாத்துட்டு, இப்ப இருக்குறது நீங்கதான்னு யாருமே ஒத்துக்க மாட்டாங்க தெரியுமா?” என்று மலர் விழிகளை விரிக்க, “என்ன பண்றது? ஒரு பொண்ணு கிட்ட குப்புற கவுந்துட்டேனே,” என்று சிரிப்புடன் பதிலளித்தான் ரிஷி.
மலர் கேட்பது உண்மைதான். திருமணத்திற்கு வந்து இருந்த ரிஷியின் தோழர்கள், தோழிகள் நிறைய பேர், “நீ காதல் திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று கேலியாக கேட்டுவிட்டு, மலரிடம், “எப்படி இருந்த எங்க நண்பனை இப்படி ஆக்கிட்டீங்களே,” என்று சிரிப்புடன் அகன்றனர்.
மலருக்குமே தன்னால்தான் இவன் இப்படி தலைகீழாக மாறிவிட்டானா என்று சிறிது ஆச்சரியம் கலந்த வியப்புதான்.