இதயம் 26.2

அதை நினைத்து சிரிப்புடன் அவனைக் கண்டவள், “இன்னொரு விஷயம்,” என்று இழுக்க, கேள் எனும் விதமாக ரிஷி அவளைக் கண்டான்.

“லதா இன்னைக்கு ஒரு விஷயம் கேட்டா. அப்பதான் எனக்கும் தோணுச்சு. அந்த காலேஜ் படிக்க பண உதவி பண்ணிங்களே, அது எனக்காகவா?” என்று மலர் அவாவுடன் கேட்க, “இல்லையே,” என்று தோளைக் குளிக்கினான் ரிஷி.

ஆனால், அவன் முகத்தில் இருந்த சிரிப்பு கூறியது, அவன் அவளுக்காகத்தான் இதனை செய்தான் என்று.

அதனை உணர்ந்தவள், “நிஜமா? என் ஒரு ஆளுக்காக இருபத்தஞ்சு பேருக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்தீங்களா?” என்று மலர் வியந்து கேட்க, “தோணிச்சு. கொடுத்தேன்,” என்று ரிஷி முடித்துவிட்டான்.

“நீங்க எனக்காக செஞ்சாலும், நிறைய பேருக்கு உண்மையாவே அது உதவியா இருந்துச்சு,” என்று மலர் உணர்ந்து கூற, “தெரியும். அதனால தான் இனிமே இயர்லி ஒன்ஸ் அதை கண்டினியூ பண்றதா அனௌன்ஸ் பண்ணேன்” என்று ரிஷி பதில் மொழிந்தான்.

“இருந்தாலும், எனக்காக இவ்வளவு செலவு பண்றது எல்லாம் கொஞ்சம் ஓவர். நான் அவ்வளவுக்கெல்லாம் ஒர்த்தே இல்ல,” என்று மலர் சிரிப்புடன் இயம்ப, “நீ ஒர்த்தா இல்லையான்னு இன்னைக்கு நைட் தெரிஞ்சுடும் டி,” என்றவனது இதழ்களில் விஷம் புன்னகை ஜனித்தது.

முதலில் அவன் கூறுவது புரியாது விதித்தவள், பின் முகம் சிவந்து ஏகமாய் முறைத்தாள்.

“கார்ல வச்சு என்ன பேசுறீங்க நீங்க?” என்று மலர் மாறாத முறைடன் கேட்க, “கார்ல வச்சு பேசத்தான் முடியும்,” என்று பெருமூச்சு விட்டான் ரிஷி.

“கெட்ட பையன் நீங்க,” என்றவள் சிரிப்புடன் சாளரத்தின் புறம் திரும்பிக் கொள்ள, “நல்லவனா தான் இருந்தேன். ஒருத்தி என்னை கெட்டவளா மாத்திட்டா,” என்று குறும்புச் சிரிப்புடன் ரிஷி கூறினான்.

அதில் படக்கெனத் திரும்பியவள், “நானா?” என்று திகைப்பு முறைப்புமாகக் கேட்க, “ஆமா, நீ தான். நீயேதான்,” என்று அழுத்தி சிரிப்பில் துடித்த இதழுடன் கூறினான் ரிஷி.

மலர் முறைப்புடன் ஏதோ கூற வர, ரிஷியின் வீடு வந்திருந்தது. மகிழுந்து நிற்கவும், ரிஷி, “வா மலர். வெல்கம் டூ அவர் ஹோம்” என்று அவளது கையைப் பிடித்துக் கொள்ள, இருவரும் ஒன்றாக இறங்கினர்.

பெரிய பங்களா போல் இருந்த அவனது வீட்டைக் கண்டு ஒரு கணம் பிரமித்துத்தான் போனாள் மலர். அவளுடைய வீட்டை விட பத்து மடங்கு பெரியதாக இருந்தது ரிஷியின் வீடு.

“எவ்வளவு பெரிய வீடா இருக்கு! இதை கூட்டி தொடைக்கவே ஒரு நாள் முழுக்க ஆகும் போலவே,” என்று அவளது மனம் அவளுக்கேற்றது போலவே சிந்தித்தது.

ரிஷிக்கும் மலருக்கு முன்பாகவே அங்கு வந்திருந்த உறவினர்கள் வாசலில் கூடியிருந்தனர்.

ஆரத்தித் தட்டுடன் வந்த உறவினர் பெண் ஒருத்தி, ரிஷியிடம், “கத்தையான நோட்டா போடுங்க மாமா,” என்று கேட்க, “உனக்கு இல்லாததா, மீனு,” என்று ரிஷி தனது பையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தான்.

மீனு என்று அழைக்கப்பட்ட பெண் ஆரத்தி சுற்றி, இருவருக்கும் நெற்றியில் வைத்து விட்டு அகல, வலது காலை எடுத்து வைத்து தன்னுடைய புகுந்த வீட்டிற்குள் ரிஷியுடன் நுழைந்தாள் மலர்.

புது இடத்திற்கு வந்ததும் மலருக்கு லேசான படபடப்பு ஒட்டிக்கொண்டது. உடன்பிறந்தவர்கள், தாய் என யாராவது அருகே இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் எண்ணியது.

அவர்கள் அப்படியே சென்று விட்டனர். அதுதான் முறை என்று மாதவி கூறினார். இரண்டு நாட்கள் கழித்து மறுவீடு அழைக்க வருவோம் என்று மாதவி கூறி சென்றிருந்தார்.

அவளது என்ன ஓட்டத்தைப் அறிந்தது போலவே, “அண்ணி,” என்று வந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டாள் ஷாலினி.

“அண்ணி,” என்று சிரிப்புடன் வந்து மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டாள் யாழினி, சுபாஷின் தங்கை.

அவர்களது செயலில் மலருக்குப் புன்னகை அரும்பியது. ஷாலினி, “என்ன அண்ணி, புது இடம், ஆளுங்களைப் பார்த்ததும் கொஞ்சம் நெர்வெஸ் ஆயிட்டீங்களா?” என்று சரியாகக் கேட்க, மலர் சிரிப்புடன் ஆம் என்ற தலையைசைத்தாள்.

ரிஷி அவளது கையை ஆதரவாகப் பிடித்து விடுவிக்க, அவன் முகம் பார்த்தவள் மெலிதான புன்னகை சிந்தினாள்.

“மார்னிங்ல இருந்து நின்னதுல உங்க அண்ணி டையர்ட் ஆகி இருப்பா. ரெஸ்ட் எடுக்க கூட்டிட்டு போங்க,” என்று தங்கைகளிடம் கூற, “வாங்க அண்ணி. போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம்,” என்று ஷாலினி அவளது கை பிடித்து அறைக்கு அழைத்துச் சென்றாள்.

ரிஷி வந்தவர்களை வரவேற்று, அவர்களிடம் பேசியவாறு அங்கேயே அமர்ந்து கொண்டான்.

அறைக்கு சென்ற மலர் மீது பார்வையைப் பதித்திருந்த ராதாவிற்கு, மகன் தன்னிடம் கோபமாகப் பேசிய கணம் நினைவில் நிழலாடியது.

ராதா மலரை மிரட்டியது தெரிந்து, அன்று ரிஷி வீட்டிற்குப் புறப்பட்டு இருந்தான்.

அவன் சென்றது மாலைவேளை என்பதால், வீட்டில் உள்ள அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர்.

ரிஷியைக் கண்டதும் ராதா வியந்து, “என்ன கண்ணா, சொல்லாம வந்திருக்க?” என்று எழுந்து வந்து அவனது கையைப் பிடித்துக் கொள்ள, தாயை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தான்.

“என்ன கண்ணா, உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று அவனது கன்னம், கழுத்து என்று தொட்டுப் பார்த்தவர், “காபி போட்டு தரவா?” என்று வினவினார்.

வேண்டாம் என்பதாய் தலையசைத்தவன், ராதாவின் விழிகளைப் பார்த்து, “மலரை போய் பார்த்தீங்களாம்மா?” என்று கேள்வி கேட்டான்.

அவனது கேள்வியில் லேசாகத் திகைத்த ராதா, “ஆமா, ஆமா கண்ணா, போய் பாத்துட்டு வந்தேன்,” என்று பதில் அளிக்க, “ஏன்மா இப்படி பண்றீங்க?” என்று வருத்தத்தைத் தாங்கிய குரலில் வினவினான் ரிஷி.

“என்ன கண்ணா?” என்று அப்போதும் புரியாத பாவனையில் ராதா அவனைக் காண, ரிஷி முகத்தை கண்டே அகத்தை உணர்ந்த ஷாலினி, “அண்ணா, எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டபடி அவனருகே வந்தாள்.

“எனக்கு புடிச்ச மலர உங்களுக்கும் பிடிக்கும்னு தான் நான் நினைச்சு உங்க கிட்ட சொன்னேன். ஆனா, நீங்க என்ன பண்ணி இருக்கீங்க? அவள கேட்கக் கூடாத வார்த்தையால பேசி இருக்கீங்க,” என்று ரிஷி பொறுமையாகவே வினவ, எல்லாவற்றையும் மகனிடம் கூறிவிட்டாளா அவள் என்று மலர் மீது கோபம் கொண்டவர், அதற்கு மேல் நடிக்க அவசியமின்றி, “ஆமா கண்ணா, நான் அவளை பேசினேன் தான்,” என்று ஒப்புக் கொண்டார்.

“ஏன்மா?” என்று ரிஷி ஒற்றை வார்த்தையில் அவரைக் காண, “ஏன்னா, என்ன பதில் சொல்ற, கண்ணா? நம்மளோட ஸ்டேட்டஸ், பேக்ரவுண்ட் எல்லாம் உனக்கு தெரியும் தானே. அப்படி இருக்கும் போது, நான் எப்படி ஒரு வேலைக்காரிய, அதுவும் குப்பத்துக்காரிய…” என்று முகம் சுழித்தவர், “என் வீட்டு மருமகளா ஏத்துக்க முடியும்?” என்று வினா எழுப்பினார்.

தாயின் கூற்றில் முகம் சிவந்தவன், “அதென்னமா, குப்பத்துக்காரின்னு இளக்காரமா பேசுறீங்க? அங்க இருக்கவங்களும் நம்மள மாதிரி சாதாரண மனுஷங்க தான்,” என்று கோபமாக இரைய, “எது அந்த குப்பத்துக்காரியை நாமளும் ஒண்ணா? என்ன கண்ணா பேசுற? நம்ம வீட்ல வேலைக்காரியா வரக்கூட அவளுக்கு தகுதி இல்லை. ஏதோ கெஞ்சுனான்னு வேலை போட்டு கொடுத்தேன். அவள போய் புடிச்சிருக்குன்னு சொல்ற,” என்று ராதாவும் பதிலுக்குக் கோபத்தில் மொழிந்தார்.

“மா, பணத்தை வைத்து மனுஷங்களை எப்பவும் எடை போடாதீங்க. உங்க கிட்ட எவ்வளவு டைம் நான் சொல்றது?” என்று ரிஷி பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேச, அவனது கோபத்தை உணர்ந்த ஷாலினி, “அண்ணா, கோவப்படாம பேசு. வா, வந்து உட்காரு,” என்று அருகில் இருந்த நீள்விருக்கையில் அமர வைத்தவள், கண்ணாடிக் குவளையில் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள்.

ராதா பேசுவதற்குள் கல்யாணி வந்து, “இதுக்குத்தான் நான் அன்னைக்கே தலை பாடு அடிச்சுக்கிட்டேன், ராதா. இந்த மாதிரி சீப்பான ஆளுகளை வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு. இப்ப நம்ம ரிஷியவே மயக்கிட்டா,” என்று கூற, “அத்தை!” என்றவனது குரல் கர்ஜனையாக வெளிவந்தது.

“அண்ணிட்ட எதுக்கு கத்துற? அவங்க சொல்றது உண்மை தானே? அவதான் உன்கிட்ட நடிச்சு மயக்கியிருக்கா உன்னை. அவங்க முன்னாடியே சொல்லும் போதே அவளை வீட்டை விட்டு துரத்தி இருக்கணும். அவ ஆளும், மூஞ்சியும் இவ்ளோ கேவலமா இருக்கும்போதே, இப்படி ஒரு வேலையை பார்த்து வச்சிருக்கா. நல்லா இருந்தா என்ன பண்ணுவா? பணத்துக்காக என்ன வேணா பண்ணுவா போல. தேர்ட் ரேட் பீப்பிள்,” என்று ராதா முகத்தைச் சுழிக்க, ரிஷியின் கையில் இருந்த கண்ணாடிக் குவளை சுக்கு சுக்காக நொறுங்கிச் சிதறியது.

கோபத்தில் ரிஷி தான் அதனை இறுக்கிப்பிடித்து உடைத்திருந்தான்.

அதனைக் கவனித்த ஷாலினி, “அண்ணா!” என்று பதற, அவனது கையில் இருந்து குருதி வழிந்தோடத் துவங்கியது.

“கண்ணா!” என்று ராதாவும் பதறிக்கொண்டு வந்து அவனது கையைப் பிடிக்க, தாயிடமிருந்து கையை  உருவிக்கொண்டான்.

அதில் ராதா அவனை அடிபட்ட பார்வை பார்க்க, அவரை நிமிர்ந்து நோக்கியவன், “இனிமே அவளை ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும், இது மாதிரி தான் நான் பண்ணுவேன்,” என்று குருதியில் நனைந்திருந்த கையை அவரிடம் காண்பித்தவன், “நானும் அவளும் வேற வேற இல்ல. நீங்க அவள பேசினா என்ன பேசினதுக்குச் சமம். இனிமே அவளைப் பத்தி பேசணுமா, இல்லையானு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க,” என்றவன்,

பிறகு தூரிகாவையும் கல்யாணியையும் கண்டுவிட்டு, “என்னோட கல்யாண விஷயத்துல யாராவது தலையிட்டு ஏதாவது பேசினா, நான் என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது,” என்று மிரட்டலாகக் கூறிவிட்டு விறுவிறுவென எழுந்து அறைக்குள் சென்றிட, ஷாலினியும் முதலுதவிப் பெட்டியுடன் எழுந்து அதன் பின்னே ஓடினாள்.

ராதா தான் ரிஷியின் இந்தப் புது அவதாரத்தில் பேச்சற்று நின்றுவிட்டார்.

error: Content is protected !!
Scroll to Top