“முட்டை சப்பாத்தியா? எப்படி இருக்கும் அது?” என இவன் அதை உண்டான்.
“நல்லா இருக்கே குட்டி… நீயா செஞ்சீயா?” அவன் கேட்க, “ஹம்ம்…ஆமா. நான்தான் செஞ்சேன்…” என அவள் சிரிப்புடன் பொய்க் கூறினாள்.
“பொய்தானே சொல்ற குட்டி, உனக்கு சமைக்க தெரியாதுல்ல?” அவன் சரியாய் கேட்டுவிட, அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள். அவன் உண்டு முடிய, இவள் டப்பாவை கழுவி பையில் வைத்தாள்.
“குட்டி… அடுத்த வாரம் எக்ஸாம் லீவ்க்கு தீனா வர்றான்…” மனோ கூறியதும், இவளது முகம் மலர்ந்தது.
“அப்படியா… சூப்பர் மனோ, நம்ப மூனு பேரும் சேர்ந்து ஒளிஞ்சு பிடிச்சு விளையாடுவோம்…” என துள்ளலாய்க் கூறியவள், அவனருகே பொத்தென அமர்ந்தாள்.
மனோ காலை எடுத்து அவளருகே வைக்க, “இன்னைக்கும் கால் வலிக்குதா மனோ?” என சந்தனா அக்கறையாய்க் கேட்க, வலிக்கவில்லை எனினும் மனோவின் தலை தானாய் அசைந்தது. அவனது காலை எடுத்து தன் மடிமீது வைத்தவள், மெதுவாய் அமுக்கினாள்.
அடிக்கடி விளையாடும்போது மனோ கால் வலிக்கிறது என அமர்ந்துவிட, இவள் அவன் காலை பிடித்துவிடுவாள். சுகமாய் இருக்க, கால் வலிக்கவில்லை எனினும் பொய்க் கூறி காலை அவள்புறம் நீட்டுவதை வாடிக்கையாக்கியிருந்தான் மனோ.
“மனோ… ஜூஸ் குடிக்க வா…” என சதா குரல் கொடுத்ததும் சந்தனா ஓடிச்சென்று அவரிடம் பழச்சாற்றை வாங்கிவந்து அவனிடம் கொடுத்தாள். அவன் குடித்து முடித்ததும் மீண்டும் குவளையை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தாள். இப்போதெல்லாம் அவளுடைய கால்கள் மனோவிற்கு சொந்தமாகிப் போயின.
இவள்தான் அவனுக்காக அங்குமிங்கும் ஓடினாள். அவனை அமர்ந்த இடத்திலே பார்த்துக்கொண்டாள். அவன் எழுந்து நடந்தால், தன்னுடைய தோளில் அவன் கையைப் போட்டு தாங்கிக் கொள்வாள். முதலில் அவன் காலையே வருத்தமாய்ப் பார்த்துதான் அத்தனையும் செய்தாள். ஆனால், இப்போதெல்லாம் அது தன்னுடைய கடமையென்பது போல அவனை அக்கறையாய்ப் பார்த்துக் கொண்டாள்.
சிலசமயம் விளையாட்டில் தோற்கும் நிலை வந்தால், “குட்டி… கால் வலிக்குது. போதும், நாளைக்கு விளையாடலாம்…” என அவன் பின்வாங்கிவிட, இவளுக்கு அத்தனைத் தெளிவு இல்லை.
“ஐயோ… மனோ, ரொம்ப வலிக்கிதா? நான் மேடம்கிட்டே கேட்டு மாத்திரை வாங்கிட்டு வரவா?” என அவள் கேட்க,
“வேணாம் குட்டி… கால் அமுக்கிவிட்டா, சரியா போய்டும்…” என அமர்ந்துவிடுவான். இவள் அவனுக்கு காலை மெதுவாகப் பிடித்துவிடுவாள். இப்படித்தான் அவர்களது நாட்கள் நகர்ந்தன.
“குட்டி… என் ரோஸ் நிறைய பூத்திருக்கு. உன் தொட்டில பூவே இல்ல?” மனோ கூற, இவளது முகம் வாடிப்போனது.
“ஆமா மனோ… என் செடில பூவே இல்ல…” என சந்தனா விழிகள் கலங்க, “குட்டி… இந்தா, இந்த ரோஸை உன் தொட்டில வைப்போம்!” என வெள்ளை ரோஜா ஒன்றைப் பறித்து அந்தத் தொட்டியில் வைத்தான்.
“பாவம், பூவுக்கு வலிக்கும்…” என அவள் கூற, “சாயங்காலம்தான் பூ தூங்கும். அதனால வலிக்கும். இப்போ ரோஸ் முழிச்சிருக்கும் குட்டி, வலிக்காது!” என மனோ கூற, இவள் தண்ணீரைப் பிடித்துச் செடிக்கு ஊற்றினாள். நேரமானதை உணர்ந்து சந்தனா பள்ளிக்கு கிளம்ப, இவன் தந்தை முன்னே சென்று நின்றான். உமாநாதன் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.
“வா மனோ…” என அவர் கைத்தாங்கலாக மகனை அழைத்து அமர வைத்தார்.
“ப்பா… எனக்கு ரோஸ் செடி வேணும்…” என்றான்.
“ஈவ்னிங் வரும்போது அப்பா வாங்கிட்டு வரேன் டா…”
“இல்ல, எனக்கு மார்னிங்கே வேணும்…” அவன் அடமாய் நிற்க, “ஆஃபிஸ்க்கு டைமாச்சு மனோ…” என்றார் அவர்.
“வாங்கித் தாங்கப்பா…” என அவன் கத்த தொடங்க, இப்போதுதான் மகன் மனநிலை சரியாகி வருகிறது. அவனைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள மருத்துவர் அறிவுறுத்தியது அவருக்கு நினைவு வர, “சரி டா… வா, நான் வாங்கித் தரேன்…” என அவனை கடைக்கு அழைத்துச் சென்றார்.
“அப்பா… ரெட் ரோஸ் எனக்கு, வொய்ட் ரோஸ் குட்டிக்கு பா. அவளுக்கு வொய்ட் ரோஸ் பிடிக்கும்!” என இவன் கேட்டவற்றை வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் அவர்.
“ப்பா… ரெட் ரோஸை எடுத்துட்டு வந்து இங்க வைங்க. இந்த ரோஸ் தொட்டியை பின்னாடி வச்சுடலாம். வொய்ட் ரோஸ் இங்க வைங்க…” என மகன் அவரை ஒருவழியாக்கிவிட்டான். ஆனாலும் உமாநாதன் முகத்தில் அயர்வையும் மீறி சந்தோஷம் மிளிர்ந்தது. மனதளவில் மனோ நன்றாய் மீண்டு விட்டானென மருத்துவர் கூறிய வார்த்தைகள் அவருக்கு எத்தனை பெரிய ஆசுவாசத்தை அளித்தன என்பதை அவர் மட்டுமே அறிவார்.
“சரி பா… நீங்க ஆஃபிஸ் கிளம்புங்க…” என்றவன் மாலை வீட்டிற்கு வரும் சந்தனாவிற்காக அப்போதே காத்திருக்கத் தொடங்கினான். அவள் வந்து இந்த ரோஜாக்களைப் பார்த்ததும் எப்படி சந்தோஷப்படுவாள் என எண்ணியவனின் முகம் மலர்ந்தது. அவன் நினைத்தது போலவே மாலை பள்ளி முடிந்து வந்த சந்தனா துள்ளி குதித்தாள்.
“மனோ… என் செடில ரோஜா பூத்திருக்கு. நாலு ரோஜா அதுவும்… சூப்பரா இருக்குல்ல?” என அவள் ஆர்ப்பரிக்க, “குட்டி… நான் மேஜிக் பண்ணி ரோஸ் வர வச்சேன்…” என்றான் அவன்.
“மனோ… நிஜமா வா? உனக்கு மேஜிக் தெரியுமா?” என அவள் ஆச்சர்யத்துடன் கேட்க, “ப்ராமிஸா குட்டி…” என அவன் சத்தியம் செய்ய, சந்தனாவின் சந்தேகம் முழுதாய் அற்றுப் போனது. சத்தியம் செய்தாலே அதை உண்மையென நம்பும் மனது அவளுடையது.
“மனோ…செம்ம, எனக்கு வெள்ளை ரோஜா செடி ஒன்னு வேணும். மேஜிக் பண்ணி வர வைக்குறீயா? அம்மாகிட்ட கேட்டேன், வாங்கித் தரவே இல்ல…” என்றாள் சோகமாய்.
அவள் கேட்டதும் இவனுக்கு சந்தோஷம் தாளவில்லை. காலையில் அவளுக்காக வாங்கி வைத்த வெள்ளை ரோஜா செடியை மாயாஜாலம் செய்து வரவைத்ததாகக் கூறி கொடுத்துவிடலாம் என எண்ணியவன், “சரி குட்டி… ஒன் டைம்தான் மேஜிக் பண்ண முடியும். நீ கண்ணை மூடி, ரோஸ் ரோஸ் வேணும்னு சொல்லிட்டே இரு. நான் மேஜிக் போட்டு வர வைக்கிறேன்…” என்றான்.
“மனோ… என் முன்னாடி மேஜிக் பண்ணிக் காட்டு. நானும் பார்க்குறேன், ஆசையா இருக்கு பா…” என்றாள்.
“ஐயோ… நீ பார்த்தா மேஜிக் பலிக்காம போய்டும் குட்டி. உனக்கு ரோஸ் வேணுமா? வேணாமா?” என அவன் கேட்க,
“வேணும்… வேணும்” என பலமாய் தலையை அசைத்தாள் சந்தனா.
“அப்போ கண்ணை மூடித் திரும்பிக்கோ…” என்றான் அவன். இவளும் திரும்பி நிற்க, சுவரைப் பிடித்து மெதுவாய் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து சென்றவன் ரோஜா செடியருகே நின்றான். லேசாய் கால் வலிக்க, சில நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு மெதுவாய் அதை நகற்றிக்கொண்டு வந்து அவள் முன்னே வைத்தான்.
கால் வலியெடுத்தது போல. அதைப் பொறுத்தவன், “குட்டி… மேஜிக் போட்டுட்டேன்…” எனக் கூறியதும் கண்ணைத் திறந்த சந்தனா வியந்து போனாள். உண்மையிலே அவள் முன்னே வெள்ளை ரோஜா செடி ஒன்றிருக்க, மனோவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“மனோ… சூப்பர்… நிஜமா நீ மேஜிக் பண்ணிட்ட. தேங்க்ஸ் மனோ… ரெண்டு வெள்ளை ரோஜா இருக்கு. எனக்குதானே இது? நான் எடுத்துக்கவா?” என மூச்சுவாங்கப் படபடவென கேட்டாள்.
“ஆமா குட்டி… உனக்குத்தான். வீட்டுக்கு எடுத்துட்டுப் போ…” என அவன் கூற, அவளது முகம் மலர்ந்தது.
பின்னர் எதையோ யோசித்தவள், “மனோ… அம்மா திட்டுவாங்க. எனக்கு வேணாம்…” என்றாள் வருத்தமாய்.
“குட்டி… ஆன்ட்டி திட்ட மாட்டாங்க. நான் அப்பாகிட்டே சொல்லி பேச சொல்றேன்…” என அவன் கூறினாலும், தாய் ஒப்புக் கொள்ள மாட்டார் என செடியை நிராசையாய்ப் பார்த்தாள். தந்தையிடம் பேசச் செல்கிறேன் என இவன் நடக்க, சந்தனா அவனை வீட்டு வாயிலருகே அழைத்துச் செல்ல, இவன் உமாநாதனிடம் பேசி பூரணியை ஒப்புக்கொள்ளச் செய்தான்.
பூரணியும், “வீட்டுக்குப் போகும்போது எடுத்துட்டுப் போகலாம்…” என கூற, சந்தனாவின் முகம் மலர்ந்து போனது.
மனோ அவளது சிரித்த முகத்தைப் பார்த்து புன்னகைத்தான். அவனைக் கைத்தாங்கலாக கொட்டகைக்கு அழைத்து வந்தாள் அவள். காலை நீட்டி சுவரில் சாய்ந்து அமர்ந்த மனோவுக்கு கால் வலியெடுத்தது. பூந்தொட்டியை குனிந்து தள்ளியதில் லேசாய் காலுக்கு அழுத்தம் கொடுத்திருந்தான். அதனாலே வலித்தது.
அவனது முகத்தைப் பார்த்த சந்தனா, “மனோ… நடந்தது கால் வலிக்குதா?” எனக் கட்டுப் போட்டிருந்த காலில் மெதுவாய்த் தடவிக் கொடுத்தாள்.
“நான் நாளைக்கு வெள்ளை ரோஜா வச்சுட்டு ஸ்கூலுக்குப் போவேன் மனோ…”
“நாளைக்கு சண்டே, ஸ்கூல் லீவ் குட்டி…” என அவன் நினைவுபடுத்த, “ஆமால்ல… அப்போ திங்கள்கிழமை வச்சுட்டுப் போவேன்…” என்றாள் குஷியாய். பின்னர் அவள் சுவரில் சாய்ந்து அவன் பக்கத்தில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுத, மனோ அவளது மடியில் தலை வைத்துப்படுத்தான்.
“மனோ வலிக்குதா ரொம்ப? நான் மேடம்ட்ட மாத்திரை வாங்கிட்டு வரவா?” அவள் கேட்க, “இல்ல குட்டி… கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன்…” என அவன் வசதியாய்ப் படுத்தான். ஒருபக்க காலில் அவன் தலையிருக்க, மறுபுறமாய் நோட்டை வைத்து வீட்டுப் பாடம் எழுதினாள் சந்தனா.
“குட்டி… நானும் அடுத்த வருஷம் ஸ்கூலுக்குப் போவேன். அப்போ எனக்கு ஹோம் வொர்க் எழுதி தரீயா?”
“எனக்கு இங்கிலீஷ் தெரியாதே மனோ!”
“நீ எனக்கு மேக்ஸ் எழுதி கொடு. நான் உனக்கு இங்கிலீஷ் எழுதித் தரேன்…” என இருவரும் உடன்படிக்கைக்கு வந்தனர்.
“குட்டி… நானும் உன் ஸ்கூல்ல சேர்ந்துடவா?” அவன் கேட்க,
“ஆமா மனோ… நீயும் என்கூடவே வரீயா? எங்க ஸ்கூல்ல பெரிய இடம் இருக்கு. நம்ப விளையாடலாம். நான் உன்னைப் பார்த்துக்குறேன்…” பெரிய மனுஷியாய் அவள் கூற, இவனும் தலையை அசைத்துக் கொண்டான்.
தொடரும்…