இதயம் 25
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அந்த ஸ்ரீவாரி திருமண மண்டபத்தின் வாயிலில், “கருணை மலர் வெட்ஸ் ரிஷிகேஷவ்” என்று பொறிக்கப்பட்ட பெயர்கள் பொன்னிறத்தில் மின்னிக் கொண்டிருக்க, விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வரத் துவங்கியிருந்தனர்.
அண்ணாமலையும் ராதாவும் வாசலில் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, மாதவி திருமணத்திற்கு தேவையான பொருட்கள் மேடையில் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
மறுபுறம், மலரின் பெரியப்பாவும் பெரியம்மாவும் அவர்களின் பங்கிற்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தனர்.
ராதாவிற்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை எனினும், மகனின் ஆசைக்கிணங்கி முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையுடன் திருமண மண்டபத்தில் நின்றிருந்தார். ஆனால், அண்ணாமலையோ மகனின் திருமணத்தில் முழு மகிழ்ச்சியுடன் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.
இப்போதுதான் ஆட்கள் ஒவ்வொருவராய் வரத் துவங்கியிருக்க, நாற்காலிகள் ஆங்காங்கே நிரம்பியிருந்தது.
இங்கே மணப்பெண் அறையில், ஷாலினி, “அண்ணி, இந்த சாரி கலர் உங்களுக்கு சூப்பரா இருக்கு” என்று பாராட்ட, “என்னோட மாம்ஸ் செலக்சன் நல்லாதான் இருக்கும்” என்று சாகித்யா சிரிப்புடன் கூறினாள்.
மலர், நம்பாத பாவணையில், “நிஜமாகவே இந்த கலர் எனக்கு எடுப்பா இருக்கா?” என்று வினவிட, “உண்மைக்கே அழகா இருக்கீங்க அண்ணி. நம்புங்க, இப்ப மட்டும் என் அண்ணா உங்கள பாத்தா தூக்கிட்டு போயிருவாரு” என்று ஷாலினி குறும்பு சிரிப்புடன் கூற, மலரது முகத்தில் புன்னகை பூத்தது.
“ஆமாக்கா, அவங்க சொல்றதும் சரிதான். மாம்ஸ் இப்பவோ அப்பவோனு தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு. அதான் ஒரு மாசத்துல கல்யாணத்தை வைக்க சொல்லி இருக்காரு” என்று தானும் வம்பிழுக்க, “சும்மா இருடி” என்று தங்கையை அதட்டிய மலரின் முகத்தில் நாணப்புன்னகை.
“பார்ரா, எங்க அக்காவுக்கு வெட்கத்தை” என்று சாகித்யா அதற்கும் வம்பிழுக்க, “ஹேய் சாகித்யா, போதும். என் அண்ணிய ரொம்ப கலாய்க்காதீங்க” என்று ஆதரவு கரம் நீட்டினாள் ஷாலினி.
“ஆஹா, நார்த்தனார் இப்பவே சப்போர்ட்டா?” என்று ராகமாய் சாகித்யா இழுக்க, “ஆமா, என் அண்ணிக்கு நான்தான் சப்போர்ட் பண்ணுவேன்” என்று விடாமல் பதிலளித்தாள் ஷாலினி.
“ஷாலினி, உங்களுக்கு நாத்தனார் பவுசே தெரிய மாட்டேங்குது. நாத்தனார்னா கெத்தா வந்து, அது சரியில்லை, இது சரியில்லைன்னு சொல்லணும். எங்க சொல்லுங்க பாப்போம்” என்று சாகித்யா சிரிப்புடன் கூற, “அதெல்லாம் பண்றதுக்கு தான் என்னோட அண்ணியும் அவங்க அம்மாவும் இருக்காங்களே” என்று மெல்லிய குரலில் ஷாலினி கூறி சிரிக்க, அங்கே சிரிப்பலை பரவியது.
அருகில் அமர்ந்திருந்த வித்யா, ஷாலினிக்கா பார்த்து, “மெதுவா பேசுங்க. அவங்க ரெண்டு பேரும் வந்துட போறாங்க” என்று வாசலை எட்டிப் பார்த்தவாறு கூற, “அதெல்லாம் இந்த பக்கம் கூட அவங்க எட்டிப்பாக்க மாட்டாங்க, வித்யா. இந்நேரம் முகத்துக்கு நாலு கோட்டிங் போட்டுட்டு இருப்பாங்க” என்று சிரிக்காமல் ஷாலினி கூற, மற்றவர்களுக்கு நகை பூத்தது.
“பெரியவங்களை இப்படிலாம் பேசக்கூடாது” என்று மலர் அவர்களை அதட்ட, “அண்ணி சொல்லிட்டா, நோ அப்பீள். அவங்கள பத்தி பேச மாட்டோம்” என்று ஷாலினி முடித்துவிட்டாள்.
“கொடுத்து வெச்ச ஆளுக்கா, நீ? உன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத நாத்தனார் கிடைச்சிருக்காங்க” என்று சாகித்யா சிரிப்புடன் கூற, மலருக்கும் அவளது கூற்றில் புன்னகை எழுந்தது.
“உனக்கும் ஆசையா இருந்தா சொல்லு, சாகித்யா. எனக்கு இன்னொரு அண்ணா இருக்கான், பெரியம்மா பையன். உன்ன அடுத்த அண்ணி ஆக்கிடுறேன்” என்று சிரிக்காமல் ஷாலினி கூற, “எது, இந்த சிவப்பு கலர் சாரி கட்டிட்டு, கழுத்தெல்லாம் நகையோட சுத்துறாங்களே, அவங்கதான் உங்க பெரியம்மா?” என்று சாகித்யா சரியாக வினவினாள்.
“ஆமா, கரெக்டா சொல்றியே” என்று ஷாலினி ஆச்சரியமாக கேட்க, “ஐயோடா, அந்த அம்மாவோட பிள்ளைன்னா கண்டிப்பா வேணாம்பா. அவங்களே கழுத்துல இவ்வளவு நகையோட சுத்துறாங்க. மருமகளுக்கு எவ்வளவு கேட்பாங்க? என்னால அவங்களோட எல்லாம் மாரடிக்க முடியாதுப்பா” என சாகித்யா சிரிக்காமல் மொழிய, ஷாலினிக்கு புன்னகை அரும்பியது.
“ஹேய், எங்க பெரியம்மா தான் அப்படி. மத்தபடி எங்க அண்ணா ரொம்ப நல்ல கேரக்டர் தெரியுமா? ரிஷி அண்ணா மாதிரியே” என்று ஷாலினி தமையனுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க, “எவ்வளவு நல்லவரா இருந்தாலும் எனக்கு வேணாம்பா. நான் என்ன மாதிரியே ஒரு மிடில் கிளாஸ் பையனை கல்யாணம் பண்ணி நிம்மதியான வாழ்க்கை வாழ்வேன்” என்று சாகித்யா கூறினாள்.
ஷாலினி பதிலுக்கு ஏதோ கூற வர, “பொண்ணு ரெடியா?” என்று கேட்டபடி வந்தார் ரிஷியின் சித்தி முறையுள்ள ஒருவர்.
“பொண்ணெல்லாம் எப்பவோ ரெடி. சித்தி, மாப்ள ரெடியா?” என்று ஷாலினி கிண்டலாக வினா தொடுத்தாள்.
“மாப்பிள்ளையும் ஏற்கனவே ரெடி தான். இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணை வர சொல்லுவாங்க. அப்போ, ஷாலினி, நீ தான் அழைச்சிட்டு வரணும், சரியா?” என்று அவரும் பதிலளிக்க, “சரிங்க சித்தி. என் வேலையை கரெக்டா பண்ணிடுவேன்” என்று ஷாலினி பதில் மொழிந்தாள்.
“நான் போய் மாம்ஸ பாத்துட்டு வரேன்” என்று சாகித்யா எழுந்து கொள்ள, “நானும் வரேன்கா” என்று வித்யா இயம்பினாள்.
“நீங்க அக்கா கூட துணைக்கு இரு. நான் போய் பாத்துட்டு வரேன். அப்புறம் உன்ன அழைச்சிட்டு போறேன்” என்று தங்கையை அங்கேயே அமர வைத்தவள் வெளியே வர, எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவன் அவளை லேசாக இடித்து விட்டான்.
“ஹலோ, பாத்து வர மாட்டீங்களா?” என்று சாகித்யா முறைப்புடன் கூற, “பாத்துட்டு தானே வந்தேன்” என்று மனதிற்குள் நினைத்தவன், “சாரி, கவனிக்கல” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
இதனை கவனித்துவிட்ட ஷாலினி அவனருகே வந்து, “என்னண்ணா, அடுத்து நீ கல்யாணத்துக்கு ரெடியாயிட்ட போலயே?” என்று சிரிப்புடன் வம்பிழுக்க, “அப்படியா தெரியுது?” என்று அவனும் நகைப்புடன் கேட்டான்.
“அப்பட்டமா தெரியுது” என்று ஷாலினி அவனை வார, “யார்கிட்டயும் சொல்லிடாத” என்று சிரிப்புடன் கூறினான்.
“அது சரி, நானும் நீ எங்கேஜ்மென்ட்ல இருந்து அவளை சைட் அடிச்சிட்டு இருக்கியேன்னு தான் அவகிட்ட ஒரு பிட்டு போட்டு பார்த்தேன். ஒன்னும் தேறலை” என்று ஷாலினி கூற, “என்ன கேட்ட?” என்று ஆர்வமாக வினவினான் எதிரில் இருந்த சுபாஷ்.
“எனக்கு இன்னொரு அண்ணா இருக்காரு. அவர கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு அண்ணியா வந்துருன்னு சொன்னேன்” என்று ஷாலினி நிறுத்திவிட்டு, அவனை காண, “என்ன சொன்னா?” என்றவனது முகத்தில் அவா தொக்கி நின்றது.
“யாரு அந்த சிவப்பு சேலை கட்டிட்டு இருக்காங்களே, அவங்க மகனா? அப்போ கண்டிப்பா வேணாம்னு சொல்லிட்டா” என்று சிரிப்பை அடக்கியபடி ஷாலினி கூற, எதிரில் இருந்தவன் முறைத்தான்.
“ண்ணா, நெஜமா இதான் அவ சொன்னா. நான் பொய்யெல்லாம் சொல்லல” என்று ஷாலினி அவனை நம்ப வைக்கும் முயற்சியில் இறங்க, “அதென்ன, அவ இவ? அவ உனக்கு அண்ணியா வரப் போறவ. மரியாதையா அவங்க இவங்கன்னு பேசு” என்று சுபாஷ் கூறினான்.