அன்பு 9.3

காலையிலிருந்து அலைந்தது மனோவுக்கு உடல் சோர்வை உண்டு பண்ணியிருந்தது. அதுமட்டுமின்றி ஊடுகதிர் எடுப்பதற்காக காலை அங்குமிங்கும் அசைத்தது வலியை கொடுத்திருக்க, அழக்கூடாது என வைராக்கியமாய் இருந்துவிட்டான்.

காலை அசைக்க முடியவில்லை. ஊன்று கோல் உதவியுடன் அவன் நடக்க, உமாநாதன் மறுபுறம் மகனைத் தாங்கிக்கொண்டார். அவர்களது அரவம் கேட்டு வெளியே வந்த சதாம்பிகா, அருகே விரைந்தார்.

“என்னங்க, டாக்டர் என்ன சொன்னாரு?” என வினவியவர், மகனின் ஊன்று கோலைப் பார்த்தார்.

“உடைஞ்ச எலும்பு சேர ஆரம்பிச்சிடுச்சு. அதனால இனிமே ஸ்டிக் வச்சு மெதுவா நடக்கலாம்!” என அவர் கூற, சதாம்பிகாவின் முகம் மலர்ந்தது.

நடந்து கொண்டிருந்த மனோ லேசாய் கல்தடுக்கி கீழே விழச் செல்ல, உமாநாதன் தாங்கிப் பிடித்திருந்தார். இருந்தும் அவனின் காலில் அடிபட்டுவிட, கண்ணெல்லாம் கலங்கி கண்ணீர் வந்துவிட்டது.

“மனோ… என்னாச்சு டா, பார்த்து வா!” சதா பதறிப்போனார். கட்டிடாத கையை மகனின் தோளில் வைத்தார். சிறிய எலும்பு முறிவு எனினும், அவரது வயது காரணமாக சதாவின் எலும்பு கூட சற்றே நாட்கள் எடுத்தன. அவரது கைகட்டைப் பிரிக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என மருத்துவர் உரைத்திருக்க, மனைவியை அலைய வைக்க வேண்டாம் என உமாநாதன் மகனுடன் மருத்துவமனைச் சென்று வந்தார்.

“மனோ… வலிக்கிதா. ஏன் டா அழற?” தீனா அவன் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைக்க, இவன் தலையை இடம் வலமாக அசைத்தான். ஆனாலும் கண்ணில் நீர் நிற்கவில்லை. சந்தனா அவனது முகத்தைதான் பார்த்தாள். அவன் அழுததும் இவளுக்கும் விழிகள் கலங்கின.

அவர்கள் உள்ளே நுழைய, இவள் அமைதியாய் வாசலில் அமர்ந்துவிட்டாள். கூடத்தில் என்ன நடக்கிறது என இவளது விழிகள் உள்ளே நோக்கின.

“மனோ… நீ மேல ரூம்ல இருக்க வேணாம். இனிமே எழுந்து டெய்லி நடக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதனால எப்பவும் போல கீழ இருக்க ரூம்லயே இருந்துக்கோ டா…” என உமாநாதன் கூற, மகன் தலையை மட்டும் அசைத்து வைத்தான்.

“பூரணி…. நாளைக்கு மனோ ரூம்ல இருக்க திங்க்ஸை எல்லாம் கீழே இருக்க ரூம்ல மாத்தி வச்சிடுங்க…” சதா பூரணியிடம் கூற, தலையை அசைத்தார் அவர்.

“ஐ, மனோ… அப்போ நம்ப ரெண்டு பேரும் இன்னைக்கு ஒன்னா தூங்கலாம்…” தீனா கூற, அவன் புன்னகைத்தான்.

பூரணி வேலையை முடித்துவிட்டு வர, சந்தனா மனோவின் முகத்தையே பார்த்திருந்தாள். அவன் இவளைக் கவனிக்கவில்லை. சற்றே அவளது நினைவு பின்னகர்ந்திருந்தது.

“குட்டி… பையை எடுத்துமாட்டு. போ…” என்றவர் காலணியைப் போட, இவள் அவனைப் பார்த்தவாறே பள்ளிப் பையைத் தூக்கித் தோளில் போட்டாள்.

இரண்டெட்டு நடந்த பூரணி, “குட்டி… எத்தனை தடவை சொல்லி இருக்கேன். மண்ணை இங்க வரைக்கும் வாரி வைக்காதன்னு. அந்தம்மா பார்த்தா திட்டுவாங்க…” என்றவர் விளக்குமாறை எடுத்து மண்ணை ஓரமாய் தள்ள, இவள் பார்வை மீண்டும் வீட்டினுள்ளே சென்றது.

அப்போது தீனாவும் அவளைப் பார்த்தான். “குட்டி… பாய், நாளைக்கு வீடு கட்டலாம்!” என அவன் கையை அசைக்க, மனோவின் பார்வையும் அவளிடம் திரும்பியது.

“குட்டி பாய்…” என அவனும் கையை அசைக்க, இவளது முகம் மலர்ந்து போனது.

“பாய் தீனா… பாய் மனோ…” என பற்கள் தெரிய புன்னகைத்தவள், தாயுடன் கிளம்பிச் சென்றாள்.

மறுநாள் காலை மணி ஆறாகியிருக்க, பூரணி வட்ட வட்டமாய் பனியாரங்களை சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தார். மகள் இன்னும் எழாது சுகமாய் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்க, அவளை இத்தனை விரைவாய் எழுப்புகிறோம் என தினமும் அவருக்கு வருத்தம்தான்.

ஆனாலும் அவரது வேலை நேரம் அவ்வாறு இருக்க, வேறு வழியின்றி பெருமூச்சை விட்டவர், “குட்டி… மணி ஆறாச்சு பாரு… எழுந்திரி டி…” என்றார்.

சந்தனா மறுபுறம் திரும்பிப் படுத்தாள். உறக்கம் பாதி கலைந்திருந்தது. “குட்டி…” இவர் மீண்டும் அதட்டலிட, மகள் கண்ணைக் கசக்கிக்கொண்டே எழுந்தமர்ந்தாள்.

பனியார வாசனை மூக்கைப் துளைக்க, “ம்மா… பனியாரம் செய்றியா?” என குடுகுடுவென அவரிடம் ஓடி வந்தாள். அவள் முகத்திலிருந்த சிரிப்பிற்காகத்தானே பூரணியின் இந்த மெனக்கெடல்கள் எல்லாம்.

நேற்றைக்கு தீனா கொடுத்த இன்னட்டை அவள் தனக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக வாங்கவில்லை, பொய் கூறினாள் எனத் தெரிந்ததும் மனம் கனத்தது. அதற்காகத்தான் காலையிலே அவளுக்கென்று பனியாரம் செய்தார்.

“ஆமா டி… போ, போய் குளிச்சிட்டு வந்து சாப்டு…” என அவர் கூற, “ஒன்னே ஒன்னு மா…” என ஆசையாய் ஒன்றை வாயில் எடுத்துப் போட்டாள். அதன் தித்திப்பு அடிநாக்கு வரை கரைய, “சூப்பரா இருக்கு மா…” என்றாள் சப்புக் கொட்டி.

“பல்லை விளக்காம என்னடி பழக்கம் இது…போ, போய் பல்லு விளக்கி குளிச்சிட்டு வா…” என பூரணி கூற, படுத்தப் படுக்கையை எடுத்து வைத்தவள், அவசரமாய் குளித்து முடித்துவிட்டு, வந்து ஆசையாய் பனியாரம் சாப்பிட்டாள்.

மகள் உண்பதை வாஞ்சையுடன் பார்த்திருந்தார் பூரணி. அவர் குளிக்கச் செல்ல, இவளுக்கு தீனாவிற்கும் மனோவிற்கும் பனியாரம் கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

பூரணி அவர்களிடமிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது என்று தானே கூறியிருக்கிறார். அவர்களுக்கு இவள் திண்பண்டம் கொடுக்கலாம் எனத் தோன்ற, தாய்க்குத் தெரியாது நான்கு பனியாரங்களை டப்பாவில் அடைத்தாள். அவர் குளித்துவிட்டு வர, இருவரும் கிளம்பினர்.

மனோவிற்கு பனியாரம் கொடுத்து அவனுடன் விளையாட வேண்டும் என்ற எண்ணம் சின்னவளுக்கு மனம் முழுவதும் இருந்தது. அவனுக்கு கால் வலி எப்படி இருக்கிறதென கேட்க வேண்டும் என்ற சிந்தனையோடு சதா வீட்டை நோக்கி நடையிட்டாள்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top