“ஆஹா, இன்னும் உனக்கு அவ கிரீன் சிக்னலே காட்டல. அதுக்குள்ளயா? மொத போய் அவளை கரெக்ட் பண்ணிட்டு வா. அதுக்கப்புறம் அண்ணின்னு கூப்பிடுறேன்” என்ற ஷாலினி இதழை கோணிவிட்டு செல்ல, “இனிமே அது தான் என் ஃபுல் டைம் ஜாப்” என்று சுபாஷும் சிரிப்புடன் அங்கிருந்து நகந்தான்.
தன்னைப் பற்றி ஒரு விவாதமே நடந்து கொண்டிருப்பதை அறியாத சாகித்யா, ரிஷியின் அறைக்கு சென்று, “என்ன மாப்பிள்ளை சார், ரெடியாயிட்டீங்களா?” என்று வினயபடி உள்ளே நுழைய, “அதெல்லாம் மாம்ஸ் எப்பவோ ரெடி” என்று முரளி பதிலளித்தான்.
மாதவி தனது சம்மதத்தை தெரிவித்த அடுத்த நாளே, தந்தையிடம் பேசி, சொந்த பந்தங்களை அழைத்து சென்று, நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் ஒரு மாதத்திற்குள் நாளை குறித்திருந்தான் ரிஷி.
அதன் பிறகு, முகூர்த்த புடவை எடுத்தல், நகை, தாலி வாங்க என்று நாள் வேகமாக செல்ல, ரிஷியே தன்னவளுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்தான்.
இந்த இடைப்பட்ட காலத்தில் முரளியுடன் ஓரளவு நெருங்கியிருந்தான். முரளியும் ரிஷியிடம் சாதாரணமாக பேசும் அளவு தேறியிருந்தான்.
“என்ன மாம்ஸ், இன்னைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகா இருக்கீங்க?” என்று சாகித்யா சிரிப்புடன் வம்பிழுக்க, “உங்க அக்காவோட பக்கத்துல நிற்கும்போது அவளுக்கேத்த மாதிரி அழகா இருக்கணும்ல. அதான் பார்லர் போயிட்டு வந்தேன்” என்று ரிஷியும் சிரிக்காமல் பதில் மொழிந்தான்.
“ஹ்ம்ம், இருந்தாலும் எங்க அக்காவோட அழகுக்கு நீங்க கொஞ்சம் கம்மிதான்” என்று சாகித்யா விடாமல் பேச, “என்ன பண்றது, கடவுள் எனக்கு இவ்வளவுதான் கொடுத்திருக்காரு” என்று முகத்தை போலியாக பாவமாக்கினான் ரிஷி.
“இருந்தாலும்…” என்று சாகித்யா ஏதோ பேசத் துவங்க, “மாப்பிள்ளைய அழைச்சிட்டு வர சொல்றாங்க” என்று வந்த ஹரியின் குரலில் அவளது பேச்சு தடைப்பட்டது.
“போங்க மாம்ஸ், உங்கள கடமை அழைக்கிறது. நம்ம நாளைக்கு பேசலாம்” என்று அவனுக்கு வழிவிட, “நீயும் வா சாகித்யா” என்றழைத்த ரிஷி, ஹரியுடன் மணமேடை நோக்கி சென்றான்.
ரிஷி மேடைக்கு சென்றதும் மலரின் அறைக்கு சென்றவள், “அக்கா, மாமாவ மணமேடையில உட்கார வச்சுட்டாங்க. அடுத்து உன்னை கூப்பிடுவாங்க” என்று கூற, ஒருமுறை எழுந்து தன்னை கண்ணாடியில் மேலிருந்து கீழாக பார்த்தவள், “எல்லாமே ஓகே தானே, சாகி?” என்று வினவினாள்.
“ஹ்ம்ம் கா, எல்லாமே பெர்ஃபெக்ட்டா இருக்கு. இந்த ஆலிவ் கிரீன் சாரி உனக்கு ரொம்ப அழகா இருக்கு. மாமாவே உன் அழகுல கொஞ்சம் கம்மியா தான் தெரியுறாரு” என்று கூற, “அதுசரி, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் டி” என்று அலுத்தாள் மலர்.
இங்கு, பட்டு வேட்டி சட்டையில் மனக்கோலத்தில் வந்து அமர்ந்த ரிஷியை கண்டதும், ராதாவிற்கும் அண்ணாமலைக்கும் மகிழ்ச்சி பெருகியது.
ராதாவிற்கு மலரை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லாவிடினும், மகனது திருமணத்தை பார்க்கும் ஆசை அதிகமாக இருந்தது. அதற்காக தானே தேடி தேடி ரிஷிக்கு பெண் பார்த்தார்.
இப்போது வரை விருப்பம் இல்லையெனினும், மகன் மீது வைத்த பாசத்திற்காக அனைத்தையும் எடுத்து செய்தவர், கணவரின் அருகில் நின்று மகனை காண, ரிஷியின் பார்வையும் தாய் மீது தான் படிந்தது.
என்னதான் ராதாவின் செயலில் ரிஷிக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தாய் மீது நிறையவே அன்பு வைத்திருந்தான். அவர் வரவில்லை என்றால், நிச்சயம் இந்த திருமணத்தை நடத்த ரிஷி யோசித்திருப்பான்.
ஆனாலும், உள்ளுக்குள் அவனுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. தனக்காக தாய் கண்டிப்பாக வருவார் என்று. அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல் தான் ராதா வந்திருந்தார்.
ரிஷி தந்தையை புன்னகையுடன் கண்டு விட்டு, தாயைக் காண, அவருக்கும் இதழ்கள் மகிழ்ச்சியில் விரிந்தது.
தாயின் முகத்தில் சிரிப்பை கண்டதும் தான், ரிஷிக்கு அவ்வளவு நேரம் இருந்த அழைப்புறுதல் நீங்கி ஆசுவாசம் பிறந்தது. மூன்று பிள்ளைகளிலும் தன்னை மட்டும் சற்று பிரத்தியேகமாக எதிலும் கவனிப்பார் ராதா. ரிஷிக்குமே ராதாவிடம் நல்ல ஒட்டுதல் இருந்தது.
அப்படி இருக்க, அவரின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ய ரிஷிக்கு எப்படி மனது வரும்.
அங்கே முதல் வரிசையில் அமர்ந்திருந்த தூரிகா, “பாத்தியாம்மா, இந்த பிச்சைக்காரிக்கு வந்த வாழ்வு” என்று பொறுமலுடன் கூற, “எனக்கும் அது தான்டி வயிறு எரியுது. அன்னைக்கே சொன்னேன் நான், நீ தான் கேட்கல” என்று கல்யாணி பதில் அளித்தார்.
“நான் என்னத்த கண்டேன்? இவள எல்லாம் நம்ம வீட்டு டிரைவர் கூட பார்க்க மாட்டான்னு நினைச்சேன். ஆனா, இந்த ரிஷி பாத்திருக்கான். அவன் டேஸ்ட்டு ஏன் இவ்வளவு மட்டமா இருக்கு? பார்த்த அழகான பொண்ணெல்லாம் வேணாம்னு சொல்லிட்டு, இவள தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னு கல்யாணம் பண்ண போறான்” என்று முகத்தை சுழிக்க, “அதான் டி, எனக்கும் தெரியல. இவகிட்ட அப்படி என்னத்த பாத்தான்னு” என்று அங்கலாய்த்தார்.
தூரிகாவின் தந்தை, ரிஷி கொடுத்த டோஸில் இந்த திருமணத்திற்கே வரவில்லை. அதனைப் பற்றி ரிஷி பெரிதாக கவலைப்படவும் இல்லை. ராதா தான் தம்பி வரவில்லை என்று வருந்தினார்.
மகனுக்காக தான் மன்னிப்பு கேட்பதாக கூறி அழைத்தார் ராதா. இருந்தும், அவர் வர மறுத்துவிட்டார். ஏனெனில், ரிஷி பேசிய பேச்சுக்கள் அப்படி.
“என்ன, ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?” என்றபடி ஹரி வர, “ஒன்னும் இல்லையே” என்று சிரித்து சமாளித்தாள் துரிகா.
காரணம், தாங்கள் பேசிய விடயம் தெரிந்தால், ஹரி திருமண மண்டபம் என்றும் பார்க்காமல் அடித்து விடுவான். இல்லையெனில், வெளியே அனுப்பி விடுவான் என்று அவளுக்கு நிச்சயமாக தெரியும்.
இந்த திருமண பேச்சின் துவக்கத்திலேயே தெளிவாக கூறிவிட்டான். “ரிஷியின் திருமணம் அவனுடைய விருப்பம். அதில் தேவையில்லாது ஏதாவது பிரச்சனையை கிளப்பினால், நீ உன் தாய் வீட்டிலே இருந்து கொள். உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முடிவு செய்துகொள்” என்று திட்டவட்டமாக கூறி விட, தூரிகாவால் எதையும் செய்ய முடியவில்லை.
அதற்கு மேல், ரிஷியின் கோபம். அந்த கோபத்தில் கண்ணாடி கோப்பையை உடைத்தானே, அதை கண்டுவிட்டே தூரிகா அரண்டு போயிருந்தாள். அவனுக்கு கோபம் வரும் என்று தெரியும். ஆனால், இவ்வளவு அதிகமாக வரும் என்று அப்போதுதான் தூரிகாவிற்கு தெரிந்தது.
அதுவும், தன்னுடைய திருமண விடயத்தில் யாராவது தலையிட்டு ஏதாவது தேவையில்லாமல் பேசினால், “தான் என்ன செய்வேன் என்று தெரியாது” என்று கோபத்தில் துரிகாவை மறைமுகமாக பேசியிருக்க, அவள் கப்சிப் என்றானாள்.
இருந்தும், உள்ளுக்குள் இந்த வேலைக்காரி தனக்கு சமமாக தன்னுடைய அத்தை வீட்டில் மருமகளாக வருவதா என்று வன்மம் கனன்று கொண்டுதான் இருந்தது.
வெளியில் எதையும் காண்பிக்க முடியாதவள், தாயிடம் புலம்பி தனது ஆற்றாமையை தீர்த்துக் கொண்டிருக்கிறாள்.
மனைவியின் முகத்தை வைத்தே அவள் ஏதோ மறைக்கிறாள் என்பதை உணர்ந்த ஹரி, “நாம ஸ்டேஜ்ல போய் நிற்போம்” என்று அவளை கையோடு அழைத்து சென்றுவிட்டான்.
வேண்டா வெறுப்பாக அவனுடன் மேடைக்கு சென்றவள், வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டாள்.
சாகித்யா அனைவருக்கும் அட்சதையை தரத் துவங்கி இருந்தாள்.
புரோகிதர் பெண்ணை அழைத்து வரக் கூற, ஷாலினி, “வாங்கண்ணி, போகலாம்” என்று மலரது கைபிடித்து மணமேடைக்கு அழைத்து வந்தாள்.
மகளை மணக்கோலத்தில் கண்ட மாதவிக்கு விழிகள் கலங்கியது. கணவன் இறந்த பிறகு இவர்களை எப்படி கரைசேர்க்கப் போகிறோம் என்று எத்தனை நாள் வேதனைப்பட்டிருப்பார். இப்போது மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து விம்மியது.
இங்கு, ரிஷியின் அருகே அமர்ந்ததும், மலரின் விழிகள் தாயை தான் தேடியது. மாதவியை கண்டதும் அழகாய் புன்னகைத்தவள், விழிகள் ரிஷியின் மீது படிந்தது.
அவளது பார்வை உணர்ந்தவன், நிமிர்ந்து மென்னகையுடன் கண்டான். இருவருக்கும் அந்த நொடியில் மகிழ்ச்சியில் மனது நிறைந்து போயிருக்க, பேச வார்த்தைகள் அவசியமற்று போனது.
“மாங்கல்யம் தந்துனானே” என்று மந்திரத்தை கூறிய புரோகிதர், திருமாங்கல்யத்தை எடுத்து ரிஷியிடம் கொடுக்க, அதனைப் பெற்றுக் கொண்டவன், அவளது அனுமதி வேண்டி முகம் கண்டான்.
“இப்போ ஒன்னும் அவசரம் இல்லை. உங்களுக்கு இந்த நிமிஷம் வரைக்கும் சான்ஸ் இருக்கு. முடிவு பண்ணிக்கோங்க. நான் தான் வேணுமா?” என்று மலர் சிரிக்காமல் கூற, இவன் போலி முறைப்பொன்றை கொடுத்துவிட்டு மாங்கல்யத்தை அவளது கழுத்தில் அணிவித்தான்.
சுற்றி இருந்த அனைவரும் அட்சதையை தூவி அவர்களை ஆசீர்வதிக்க, இருவரது பெற்றோரும் மனம் நிறைந்து போயினர்.
மாங்கல்யம் அணிவித்த பின், அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்தவன், “கங்கிராஜுலேசன்ஸ், மிஸ்ஸஸ் ரிஷிகேஷவ்” என்று கூற, மலரும், “தேங்க்ஸ், மிஸ்டர் கருணைமலர்” என்று அழகாய் புன்னகைத்தாள்.