இதயம் 23
அதன் பின்னர், மலர் தனது தம்பியின் கல்லூரிக் கட்டணத்தை கட்டுவதற்காக மிகவும் சிரமப்படுவதை அறிந்தவன், அவள் ஒருத்திக்கு உதவுவதற்காக நிறுவனத்தில் இருந்து இருபத்தைந்து பேருக்கு கல்வி உதவி செய்வதாக அறிவிப்பு செய்திருந்தான்.
தன்னுடைய பெயரை அறிவிப்புப் பலகையில் கண்டதும் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியில் லதாவைக் கட்டிக்கொண்டவளைக் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ நிறைந்து போனது.
அவளது அந்த வாடாத புன்னகையில் தான் சிறிது சிறிதாய் கரைந்து போவதை அக்கணம் உணர்ந்தான். அந்தப் புன்னகைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று உள்ளே ஒரு குரல் கூச்சலிட்டது.
மலருக்காக அந்த உதவியைச் செய்தாலும், இதனால் நிறைய பேர் பலனடைவதை உணர்ந்தவன், வருடம் தோறும் இதனைச் செயல்படுத்த எண்ணினான்.
அன்றே மாலையே பணிக்கு வந்து, “குட் ஈவினிங், ரிஷி சார்,” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் கூறியவள் உள்ளே நுழைந்து,
“ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். ஆபீஸ்லயே உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். ஆனா உங்களைப் பார்க்க முடியல. அந்த இருபத்தஞ்சு பேர்ல என்னை செலக்ட் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை, சார். நீங்க பண்ணியிருக்கறது ரொம்ப பெரிய உதவி, சார்,” என்று மனமுவந்து நன்றி நவின்றாள்.
அந்தப் புன்னகை தனக்காக, தன்னால் பூத்தது என்ற எண்ணமே அவனுக்குள் சிலிர்ப்பை உண்டாக்க, அதனைத் தடையில்லாமல் அனுபவித்தவன், மெல்லிய தலையசைப்புடன் அவளது நன்றியை ஏற்றுக்கொண்டான்.
அவள் தான் தன்னுடைய வாழ்க்கை. அவளைக் கடந்து செல்வது அத்தனை சுலபமில்லை என்று உணர்ந்த பிறகு, அவளிடம் தனது மனதைத் தெரிவிக்க எண்ணினான்.
ஆனால், சட்டென்று அவளிடம் எதையும் கூறிவிட அவனால் முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது.
அப்போதுதான் ரோஹினியின் வருகை நிகழ்ந்தது. அவளைக் கண்ட பிறகுதான், தான் ஒரு முடிவுக்கு வராமல் அவளுக்குப் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவோமா என்ற எண்ணம் தோன்றியது.
அன்றே அவளிடம் தனக்கு அவரிடம் எந்தவித விருப்பமும் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறிவிட எண்ணினான்.
அதன் பொருட்டு ரோஹினியுடன் ரிஷி வெளியே சென்றான். ஆனால், மலர் என்னவோ தான் அவள் மீது விருப்பப்பட்டு வெளியே சென்றுள்ளதாக எண்ணி வீட்டினரிடம் கூறியிருக்க, அவர்களது பேச்சு அதற்கு மேல் இருந்தது.
தான் ரோஹினியிடம் தன்னுடைய விருப்பமின்மையைக் கூறச் சென்றால், இவர்கள் என்னவோ திருமணத்திற்கு நாள் குறிக்கும் வரை பேச, ரிஷிக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. அதுவும் மலர் மீதுதான்.
இங்கே தான் அவளது நினைப்பில் கிட்டத்தட்ட பைத்தியமாகச் சுற்றிக்கொண்டிருக்க, இவள் என்னவோ என்னுடைய கல்யாணத்தை எண்ணி மகிழ்ந்து வீட்டினரிடம் அவள் விருப்பத்திற்கு ஏதேதோ கூறியிருக்கிறாள் என்று.
அதுவும் ரோஹினியிடம் அவள் என்னவோ இந்த வீட்டு முதலாளி போல தன்னுடைய சமையல் திறமையையும், வீட்டு வேலை செய்யும் திறமையையும் எடுத்துக் கூறிக்கொண்டிருக்க, ரிஷிக்கு சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போலத் தோன்றியது.
ரோஹினியை வெளியே அழைத்துச் சென்றவன், தனக்கு வேறொரு பெண் மீது விருப்பம் இருப்பதைக் கூறிட, அவள் புன்னகையுடன் வாழ்த்துக்கள் கூறி விடைபெற்று சென்றுவிட்டாள். இத்துடன் முடிய வேண்டிய விஷயம், மலரின் செய்கையால் ரிஷியின் வீடு வரை சென்றுவிட்டது.
அதன் பிறகு வீட்டினரைச் சமாளிப்பதற்குள் ரிஷிக்குப் போதும் போதும் என்றாகிவிட, அந்தக் கோபமும் சேர்ந்து மலர் மீதுதான் திரும்பியது.
தான் சதா அவளது நினைப்பாகவே இருக்க, இவளுக்குத் தன் மீது எந்த விருப்பமும் இல்லை என்று தன் மீது கோபம் உண்டானது.
அந்தக் கோபத்தில்தான் மலரிடம் அவ்வாறு பேசியிருந்தான். ஆனால், வாடிய முகத்துடன் மலர் அங்கிருந்து அகன்றதும், ரிஷிக்குத் தன்மேலேயே எக்கச்சக்கமாகக் கோபம் வந்தது.
இனி மலரிடம் கோபப்படாது, தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தான்.
அதன் பிறகு, கூடிய விரைவில் அவளிடம் தன்னுடைய மனதை வெளிப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் ரிஷிகேஷவ்.
ஆனால், அதற்கான சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அவனுக்கு அமையாது போக, தாய் அடுத்த பெண்ணுடைய புகைப்படத்தைக் கொண்டு வருவதற்குள் சொல்லிவிட வேண்டும் என்று உள்ளுக்குள் குரல் ஒன்று கூச்சலிட்டது.
என்ன சொல்வது, எப்படி சொல்வது? தான் ஏதாவது சொல்லப்போய் அவள் தவறாக எண்ணிவிட்டால், அவளுக்குப் புரியும்படி எப்படி கூறுவது என்று பலவாறாகச் சிந்தித்துக்கொண்டிருக்கையில்தான் மலர் புடவையில் வந்து நின்றாள்.
அதுவும் அந்தப் பச்சை நிறப் புடவையும், அதற்கேற்ற ஜிமிக்கி, கழுத்தில் மெல்லிய சங்கிலி, எல்லாவற்றிற்கும் மேல் முத்தாய்ப்பாய் அந்த ஒற்றைக்கல் மூக்குத்தி, சிறிய கூந்தலிழைகளை மட்டும் எடுத்து குத்தியிருந்த பாங்கு என்று மொத்தமாய் அவனைச் சாய்த்து இருந்தாள்.
புடவையில் பெண்கள் அழகா? இல்லை இவள் புடவையில் இவ்வளவு அழகா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தும் அளவு அவனுக்குள் போராட்டம் துவங்கியது.
விழிகளை மெலிதாகச் சுருக்கி, இதழில் சின்னப் புன்னகையுடன் ஷாலினியுடன் பேசிக்கொண்டிருந்தவள், அவனது உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருகிக்கொண்டிருந்தாள்.
அதனை உணர்ந்தவன் பட்டென்று அறைக்குள் நுழைந்துவிட்டான். மூடிய கதவின் மீது நின்று, “ஊஃப்…” என்று பெருமூச்சு வெளியிட்டவன், “இதற்கு மேல் தாங்காது டா சாமி,” என்று புலம்பவே செய்திட்டான்.
எத்தனையோ பேரழகிகளைக் கடந்து வந்துவிட்டான்தான். ஆனால், இவள் மட்டும் அவனது உயிரைத் தொட்டு, உணர்வுகளில் விளையாடிக்கொண்டிருந்தாள்.
பிறகு சில நிமிடங்கள் தன்னைச் சமாளித்து, சாதாரண முகபாவத்துடன் வெளியே வந்து இருவரையும் ஏறிட்டான்.
அதுவும் ஷாலினி, மலர் புடவையில் அழகாக இருக்கிறாளா என்று கேட்டபோது, என்னென்னவோ கூற வாய் துறுதுறுத்தது. இருந்தும், சூழ்நிலை கருதி தலையசைப்புடன் அகன்றுவிட்டான்.
அன்றே அவளிடம் தன்னை உணர்த்திவிட வேண்டும் என்று மனம் உந்தித் தள்ள, ஷாலினியின் இருப்பு அவனைத் தடுத்தது.
தங்கை ஊருக்குக் கிளம்பிய அடுத்த நாளே அவளுக்குத் தன்னுடைய நேசத்தை, தன்னுடைய தவிப்பை உணர்த்திட வேண்டும், புரிய வைக்க வேண்டும் என்று தனக்குள்ளே பலவாறாக ஒத்திகை பார்த்துக் காத்திருக்க, அவனைச் சோதிக்கும் விதமாக மழையில் நனைந்த கோழிக் குஞ்சாக நடுங்கிக்கொண்டு வந்து நின்றாள் மலர்.
முழுதாய் நனைந்து, நீர் சொட்டச் சொட்ட, பற்கள் தந்தியடிக்க, நடுக்கத்துடன் வந்து நின்றவளை அவனது விழிகள் நொடி நேரத்தில் ஆழமாய் ஆராய்ந்தது.
உச்சியில் இருந்து வடிந்த மழைத்துளி அவளது விழியைக் கடந்து, நாசியில் பயணித்து, இதழ்களில் மோட்சமடைய, இவனது பார்வை அவளது ஈர இதழ்களில் தங்கிவிட்டது.