அன்பு – 7.3

“குட்டி… நேத்து மாதிரி இன்னைக்கும் விளையாடலாமா?” அவன் ஆர்வமாய் வினவ, “மண்ணுல விளையாடி ட்ரெஸ் அழுக்காகிட்டா, அம்மா திட்டுவாங்க தீனா…” என்றாள்.

“சரி… நம்ப வேற கேம் விளையாடலாம். எனக்கு நிறைய தெரியும்…” என்றான். சந்தனாவிற்கு அப்போதுதான் நினைவு வந்தது.

“தீனா… வீடியோ கேம் விளையாடலாமா? நான் அது விளையாண்டதே இல்ல. எப்படி விளையாடணும்னு எனக்கு சொல்லித் தரீயா?”

“குட்டி… வீடியோ கேம் நல்லா இருக்கும். நீ வா, நம்ப விளையாடலாம். மாமா ப்ளே ஸ்டேஷன் வாங்கிக் கொடுத்திருக்காரு…” அவன் கூற, சந்தனா புரியாது விழித்தாள்.

“நீ வா… மனோ ரூம்ல வீடியோ கேம் இருக்கும். விளையாடலாம்…” என்றான் துள்ளலாய்.

“இல்ல… இல்ல, நம்ப அந்தக் கேமை இங்கேயே விளையாடலாம். வீட்டுக்குள்ள வேணாம் தீனா!” இவள் மறுத்தாள்.

“ஐயோ குட்டி… வீடியோ கேம் இங்க வச்சு விளையாட முடியாது…”

“ஏன் முடியாது?”

“அதுக்கு ரிமோட், டீவி வேணும். அப்போதான் விளையாட முடியும்…” என்றான்.

“டீவில கேம் விளையாட முடியுமா? எங்க வீட்ல படம் மட்டும்தான் வரும்…” அவள் யோசிக்க,

“ஆமா… உண்மைதான். நீ வந்தா நான் விளையாடிக் காட்டுறேன்…” என்றான்.

“இல்ல… நம்ப இங்கேயே வேற எதுவும் விளையாடலாம்..” என புத்தகத்தை மூடி வைத்தவள், “தீனா… பாவம் செடிக்கு பசிக்கும் இல்ல. அதுக்கு தண்ணீ ஊத்தீட்டு விளையாடப் போவோமா?” எனக் கேட்டாள்.

“அப்படியா… சரி, வா. நானும் ஊத்துறேன்…” என அவனும் முன்வர, இருவரும் சேர்ந்து செடிக்கு தண்ணீர் ஊற்றினர். சந்தனா சிறிய குடம் ஒன்றில் நீரைப் பிடித்து செடிகளுக்கு ஊற்ற, தீனா குடத்தைத் தூக்கத் தெரியாது வாரி இறைத்தான். அவள் மீதும் தண்ணீரை கொட்டிவிட்டான்.

அவளும் பதிலுக்கு அவன் மீது நீரைக் கொட்ட, அவன் இவளைத் துரத்தினான். மனோ மேலிருந்து இவர்களையே பார்த்திருந்தான்.

“போதும் தீனா… தண்ணீ ஊத்தாத. அம்மா பார்த்தா திட்டுவாங்க. ட்ரெஸ் வேற நனைஞ்சு போச்சு…” என்றவள் வெயில் அதிகமாக படுமாறு ஓரிடத்தில் நின்றாள்.

அலுவலகம் கிளம்பிய உமாநாதன் மகனைக் காண வந்தார். நேற்றிலிருந்து அவன் அமைதியாய் இருப்பதை பார்த்திருந்தார் தான். அவன் பார்வை ஜன்னலிலே இருக்க, எட்டிப் பார்த்தவர், “நீயும் போய் விளையாடு மனோ…” என்றார்.

“நான் அவங்களை என் கூட விளையாடக் கூப்ட்டேன். நிறைய டாய்ஸ், வீடியோ கேம் கூடத் தரேன்னு சொன்னேன். குட்டி வர மாட்றா‌…” என்றான் சோகமாய்.

“அவங்களை ஏன் கூப்பிடுற. உனக்குத்தானே அவங்களோட விளையாடணும்.  அதனால நீதான் அவங்க இருக்க இடத்துக்குப் போகணும். முதல்ல கீழே போய் ரெண்டு பேரோட ஃப்ரெண்ட்ஸாகி விளையாடு. அப்புறம் அவங்களே உன்னோட வீடியோ கேம்ஸ் விளையாட வருவாங்க…” என்றார் மகனின் தலையைக் கோதி.

“நிஜமா வருவாங்களா பா?” இவன் திரும்பித் தந்தையைப் பார்த்து வினவ, “நிச்சயமா வருவாங்க…” என்றார் மகனின் தலைக்கோதி.

“சரிப்பா… நான் கீழே போறேன்!” என அவன் அகல, மகனை மெதுவாக கூட்டிச் சென்றார்.

“தீனா இங்க வா…” என அவர் அழைக்க, அவன் இவரை நோக்கி வந்தான்.

“நீயும் வாம்மா…” என சந்தனாவையும் அழைத்தார்.

அவர்கள் இருவரும் வந்து நிற்க, “மனோவையும் உங்களோட விளையாட சேர்த்துக்கோங்க‌…” என்றார்.

“சரி மாமா… நான் கூப்ட்டேன். அவன்தான் வரலை!” தீனா புகாரளிக்க, சந்தனா தயக்கமாய், “சரிங்க சார்…” என்றாள்.

“இந்தாங்க… மூனு பேரும் ஷேர் பண்ணிக்கோங்க…” என அவர் இன்னட்டுகளை சந்தனாவிடம் நீட்ட, அவள் வாங்கவில்லை.

“மாமா… சந்தனாவுக்கு பூச்சி பல்லு, வலி இருக்காம். அவங்கம்மா சாக்லேட் சாப்பிட கூடாதுன்னு சொல்லீட்டாங்களாம்” தீனா கூற, அவர் அவளைப் பார்த்தார்.

“டாக்டர்கிட்டே போனீயா மா… இப்போ வலி பரவாயில்லையா?” அவர் கேட்க, என்னப் பதிலுரைப்பது எனத் தெரியாது திணறியவள், தலையை மட்டும் அசைத்தாள்.

அப்போதுதான் அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்தவர், “கன்னம் ஏன் மா வீங்கி இருக்கு?” எனக் கேட்டார். கைரேகை தெரிந்தது அவருக்கும்.

“அது… சார்… நேத்து விளையாடும்போது கீழே விழுந்துட்டேன். அடி பட்டிருச்சு சார்…” என்றாள். தாய் அடித்ததைக் கூற பிஞ்சுக்கு மனம் வரவில்லை. உமாநாதனுக்கு அவள் பொய்யுரைக்கிறாள் எனத் தெரிந்தாலும் மேலும் எதையும் கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

“சரி மா… இனிமே பார்த்து நட…” என்றதோடு அகல, மனோ இருவரையும் பார்த்தான்.

“மனோ, நீ முன்னாடியே வந்திருக்கலாம் இல்ல. நாங்க தண்ணீல ஜாலியா விளையாண்டோம்…” தீனா உற்சாகமாக கூறினான்.

சந்தனாவிற்கு மனோவை தங்களோடு சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை. அவன் அடித்தது ஒரு காரணம் என்றால், நேற்று அவன் தாயிடம் மாட்டிவிடுவேன் எனக் கூறி மிரட்டியது மற்றொரு காரணம்.

அவனோடு விளையாடும் போது தாய் பார்த்து திட்டுவாரோ என பயமும் எழுந்தது. ஏற்கனவே நேற்று வாங்கிய அடியில் இன்னுமே கன்னத்தைத் தொட முடியவில்லை. வலிக்கவில்லை என பூரணியிடம் கூறினாலும் முதுகு இப்போது வரை எரிந்தது.

காலையில் குளிக்கும் போது நீர் பட்டதும் வலித்தது. பூரணி அறியாது தேங்காய் எண்ணெயை எடுத்துப் பூசிக்கொண்டாள். இதுபோல மீண்டும் அடிவாங்க விருப்பமில்லை. அதனாலே மனோவுடன் விளையாடலாமா? வேண்டாமா? எனத் தன் அம்மாவிடமே கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தாள்.

“குட்டி… வா, நம்ம ஹைட் அண்ட் சீக் விளையாடலாம்..” தீனா கூற, “குட்டி… ஸ்கூலுக்கு டைம் ஆச்சு… கிளம்பு…” எனப் அன்னப்பூரணி உள்ளிருந்து குரல் கொடுத்தார்.

“இதோ போறேன் மா…” என்றவள், “சாயங்காலம் விளையாடலாம் தீனா. ஸ்கூலுக்குப் போறேன்…” என்றவள் சிதறிக் கிடந்த பொருட்களைப் பையில் எடுத்து வைத்துவிட்டு கிளம்பினாள். மனோ அவள் தன்னுடன் விளையாடவில்லை என முறைத்துப் பார்த்தான்.

“ம்மா… பாய் மா, வரேன்…” அவள் வீட்டினுள்ளே நுழையாது வெளியே நின்றே கத்திக் கூற, “பார்த்துப் போ குட்டி. நேரா ஸ்கூலுக்குத்தான் போகணும்…” என்று அவர் கூறியவற்றிற்கு தலையாட்டி நகர்ந்திருந்தாள் சந்தனா.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top