பற்களோடு சேர்த்து லேசாக நடுங்கிக்கொண்டிருந்த அந்தச் சிவந்த இதழ்களை தனக்குள் எடுத்துக்கொள்ளும் வேட்கை ஜனித்திட, ஏகமாய் அதிர்ந்து போனவன், சடுதியில் அவளுக்கு வழிவிட்டு, பூந்துவாலை எடுக்க அகன்றுவிட்டான்.
அறைக்குள் நுழைந்து ஒரு பூந்துவாலை எடுத்தவனது இதயம் படபடவென அடித்துக்கொண்டது. அவளது கன்னத்தில், கழுத்தில் என ஆங்காங்கே படர்ந்து வைரமாய் மின்னிய நீர்த்துளிகள் அவனை ஏகமாய் சோதிக்க, தொண்டைக்குழி வற்றிப்போனது.
விழி மூடி திறந்து, ஒரு வெப்ப மூச்சை வெளியிட்டவன், தன்னைச் சமாளித்து வெளியே வந்து, அவளிடம் துவாலையை நீட்டினான்.
மேலும், அவள் ஈர உடையுடன் இருப்பது தனக்குத்தான் அதிகமாய்ப் பாதிப்பு என்பதை உணர்ந்து, ஷாலினி, உடையை எடுத்து மாற்றி வரக் கூறினான்.
அவளிடம் பேச வந்ததைக் கூற இயலாமல் தயங்கியவன், காபியைக் கேட்டிருக்க, மலர் அதனைத் தயாரிக்க சமையலறை சென்றுவிட்டாள்.
அவளை அங்கிருந்து போகவிடாமல் தடுப்பதற்கு அவனுக்கு வேறு எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தான் அவளுக்கு ஒரு வேலை கொடுத்து அங்கே இருக்க வைக்க முயற்சித்தான்.
அதன் பிறகு காபியைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அவள் கிளம்புவதாகக் கூறியதும் தலையைச் சைத்து விட்டான் தான். இருந்தும், அவளிடம் சொல்லிவிடு, போக விடாதே என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஏகமாய்க் கூச்சலிட, “மலர்…” என்றழைத்து அவள் அருகே சென்றிருந்தான்.
“சார்…” என்று திரும்பியவள் திகைத்து அதிர்ந்து போனாள். காரணம், சில கணங்களுக்கு முன்பு அந்த நீள் இருக்கையில் அமர்ந்திருந்தவன், அவள் அருகே வெகு நெருக்கத்தில், மூச்சுக்காற்று உரசும் தூரத்தில் நின்றிருந்தான்.
மலர் அதிர்ந்த முகத்தை இயல்பாக்கியவள், “ரிஷி சார்…” என்று படபடப்பை மறைத்தபடி அவன் முகம் நோக்கினாள்.
அவளிடம் எப்படி துவங்கி, எப்படி முடிப்பது என்று தெரியாதவன், ஒரே வார்த்தையில், “என்னை விட்டுப் போகாத மலர்,” என்று மனதை உணர்த்தியிருந்தான்.
அதன் பிறகு மலரின் எதிர்வினை, ரிஷி எதிர்பார்த்தது போலத்தான் இருந்தது. நிச்சயம் அவள் இதற்குச் சம்மதிக்க மாட்டாள் என்று ரிஷிக்குத் தெளிவாய்த் தெரிந்திருந்தது.
இருந்தும், அவளை விட்டால் தன்னால் இந்தப் பிறவியில் நிம்மதியாய், சந்தோஷமாய் வாழ்ந்திட முடியாது என்று அவனுக்கு உறுதியாய்த் தெரிந்துவிட, அவளை நேசத்தால் துரத்தினான்.
தனது நேசத்தின் தீவிரத்தை அவளுக்கு உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்க, ரிஷியின் பின்புலத்தை எண்ணி மலர் அஞ்சி, அவனை ஏற்றுக்கொள்ளத் தயங்கினாள்.
அவளது அச்சத்தைப் போக்குவதற்காகவே தனது வீட்டிற்குச் சென்று பேசியிருக்க, அதன் எதிர்வினை இப்படி மோசமாய்ப் போகும் என்று ரிஷி கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அவள் தன்னுடைய காலடியில் விழுந்து, விட்டுவிடக் கூறி கதறிய போதும், மனது, அவளை விட்டுவிடாதே, அவளை விட்டால் நீ ஒன்றுமே இல்லை என்று ஆயிரம் முறையாவது ஜெபிக்க, அதன் பொருட்டு அப்போதும் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
இங்கு நடந்தவற்றை நினைத்தவாறு ரிஷி சிந்தையில் ஆழ்ந்திருக்க, அங்கு மலரின் வீட்டில் அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர் அவளது உடன்பிறப்புகள்.
எதிரே மாதவி அமர்ந்திருந்தார். அவர்களை எதிர்கொள்ள வெகுவாகத் தயங்கியவள், தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“அம்மா, நெஜமாதான் சொல்றியா? ரிஷி சாரும் அவங்க அப்பாவும் வந்து பொண்ணு கேட்டாங்களா?” என்று சாகித்யா மகிழ்ச்சியும் சந்தேகமுமாகக் கேட்க,
“ஆமாடி,” என்று மாதவி தலையசைத்தார்.
“ஐ சூப்பர்! அக்காவுக்கு கல்யாணம் ஆகப்போகுது!” என்று வித்யா குதிக்க, மாதவியின் பார்வை அவள் மீது முறைப்புடன் படிந்து மீண்டது.
“ரிஷி சார் ரொம்ப நல்ல சாய்ஸ்தான். ஆனா, அவரோட பேக்ரவுண்ட் ரொம்ப பெருசு இல்லையாக்கா?” என்று யோசனையுடன் முரளி மலரைக் கண்டான்.
மாதவியும், “அதான் எனக்கும் யோசனையா இருக்கு,” என்று மொழிந்திட, மலருக்கு இதயம் படபடவென அடித்துக்கொண்டது.
மலரின் முகத்திலிருந்து அவளது அகத்தை உணர்ந்துகொண்ட சாகித்யா, “என்ன பெரிய பேக்ரவுண்ட்? பணத்துக்கு இம்பார்டன்ட் குடுக்குறவங்களா இருந்தா, நம்ம வீடு தேடி வந்து பொண்ணு கேட்டு இருப்பாங்களா? அதுவும் அக்கா ரிஷி சாரைப் பத்தி எவ்வளவு டைம் சொல்லி இருக்கா? அவர் கண்டிப்பா ரொம்ப நல்லவர்தான். அக்காவ நல்லா பார்த்துப்பாரு. நான் தான் இந்த இயர் படிச்சு முடிச்சிட்டேன்ல? அடுத்த வருஷம் வேலைக்குப் போய் அக்காவுக்கு நகை எல்லாம் வாங்கிப் போடலாம். ஏன், முரளி, நீயும் படிச்சு முடிச்சு செய்ய மாட்டியா?” என்று தம்பியைக் கேட்க,
“கண்டிப்பா செய்வேன். படிச்சு முடிச்சு வேலைக்குப் போனதும் அக்காவுக்கு நகை, சீர் எல்லாமே நான் தான் செய்வேன்,” என்றான் முரளி.
உடன்பிறந்தவர்களின் பாசத்தில் மலருக்கு விழிகள் கலங்கியது. மாதவிக்கும் பிள்ளைகளின் பாசத்தில் உள்ளம் பெருமிதத்தில் விம்மியது.
“ம்மா, என்னம்மா யோசனை? சம்மதம் சொல்லுமா? அக்காவும் இங்க பக்கத்துல இருக்கும். நம்மளும் போய் அடிக்கடி பார்த்துட்டு வரலாம். நீயும் அப்பாவும் லவ் மேரேஜ்தானே பண்ணிக்கிட்டீங்க?” என்று மலருக்காகப் பேச, மாதவிக்கும் மகளது விருப்பத்திற்கு சம்மதிக்க ஆசை பிறந்தது.
இருந்தும், உள்ளுக்குள் தங்களது பொருளாதார நிலை ஒரு ஓரத்தில் முள்ளாகக் குத்தியது.
“அம்மா, நான் இன்ஜினியரிங் படிச்சு முடிச்சிட்டு அக்காவுக்கு நிறைய நகை வாங்கிப் போடுறேன். நீ அதைப் பத்தி கவலைப்படாத. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு,” என்று முரளியும் தமக்கைக்காகப் பேச, பிள்ளைகளின் பேச்சில் மாதவிக்கும் திடம் ஜனித்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மலரின் ஆசை மாதவிக்குப் பிரதானமாகத் தெரிந்தது. காரணம், இத்தனை வருடங்களாகக் குடும்பச் சுமையை ஒற்றை ஆளாகத் தோளில் சுமந்தவள், இப்போது அவளுக்கென ஒன்றை ஆசைப்பட்டிருக்க, அதனைக் கொடுக்கவே மனம் விழைந்தது.
மெல்லிய புன்னகையுடன் மலரைக் கண்டவர், “ரிஷி தம்பியோட அப்பாவ வர சொல்லு. நானும் உங்க பெரியப்பா, பெரியம்மாவ வரச் சொல்றேன். பேசி முடிச்சிடலாம்,” என்க, மலரின் முகத்தில் பெரிதான ஆசுவாசப் புன்னகை முகிழ்ந்தது.
மாதவி கூறியதும், “ஹேய்! அக்காவுக்கு கல்யாணம் ஆகப்போகுது!” என்று மற்ற மூவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
“சாகித்யா, அக்கா, நான் மாம்ஸைப் பார்த்துப் பேசணும். நான் இதுவரைக்கும் நேர்ல பார்த்ததே இல்லை. எங்க அக்காவைக் கட்டிக்கப் போறவரு எப்படின்னு நான் பேசி தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று சிரிப்புடன் மலரை வம்பிழுக்க,
“பேசலாமே. நாளைக்கு அவர் வீட்டுக்கு போகும்போது உன்னையும் அழைச்சிட்டு போறேன்,” என்று மலரும் சிரிப்புடன் பதிலளித்தாள்.
“அப்ப நானு?” என்று வித்யா தன் பங்கிற்கு வர,
“எல்லாரும் கூட்டமா சேர்ந்து ஊர்வலமா போறீங்க? அமைதியா இருங்க. கல்யாணம் முடியற வரைக்கும் சும்மா சும்மா போய் அந்தத் தம்பியைத் தொந்தரவு பண்ணாதீங்க. மலரையே அந்தப் பொண்ணு ஷாலினி சொல்லிட்டு போனதாலதான் சமைக்கிறதுக்கு அனுப்புறேன்,” என்று மாதவி அதட்டினார்.
“மா, மாம்ஸ் அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாரு. எங்களைத் தம்பி, தங்கச்சி மாதிரி பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்காரு. அவரு நாங்க போய்ப் பார்க்கிறதைத் தொந்தரவா நினைப்பாரா? அதுவும் அவரு கைல வேற அடிபட்டு இருக்குமா? நான் போய் காயம் எப்படி இருக்குன்னு பார்த்து, டிரெஸ்ஸிங் பண்ணிட்டு வரேன்,” என்றாள் சாகித்யா.
சாகித்யாவின் இரண்டாவது கூற்றை ஏற்றுக்கொண்ட மாதவி, “ஆமா, சாகி. மலருக்காக அவங்க வீட்டில பேசப் போய்தான் கோவத்தில கண்ணாடி டம்பளரை உடைச்சு கையில காயம் ஆயிடுச்சு போல. போய் காயம் பெருசா என்னன்னு பாத்துட்டு சொல்லு,” என்று மொழிய,
தாயின் பேச்சில் குஷியான சாகித்யா, “சரி மா. நாளைக்கு காலையில் போய் செக் பண்ணிட்டு வந்து சொல்றேன்,” என்றாள்.
அதனைக் கண்ட வித்யா, “அம்மா, நானும் போவேன். நானும் மாமா கிட்ட பேசணும்,” என்று முகத்தைத் தூக்கிக்கொண்டு கூற,
“நீ இல்லாமலா? கண்டிப்பா அழைச்சிட்டு போறேன், வித்து குட்டி,” என்று மலர் தங்கையைச் சமாதானம் செய்தாள்.
“சாகித்யா, முரளி, நீயும் வாடா நாளைக்கு மாமாவைப் பாக்க,” என்று அழைக்க,
“நானா? எனக்கு அவரைப் பார்த்தாலே பயம். நீங்க போயிட்டு வாங்க,” என்று மறுத்தான் முரளி.
“என்னடா பயம்? அவர் நம்மளோட மாமா. நமக்கு இல்லாத உரிமை யாருக்கும் இல்ல. நீயும் நாளைக்கு வர,” என்று சாகித்யா முடித்துவிட, மலர் சிரிப்புடன் அவர்களைப் பார்த்திருந்தாள்.
மாதவி ஒரு வழியாக மனமிறங்கி, “சரி, நாலு பேரும் போய்ப் பாத்துட்டு சீக்கிரமா வந்துடணும். இந்த ஒரு தடவைதான் அனுமதி கொடுப்பேன். அடுத்து கல்யாணத்துக்கு அப்புறம்தான்,” என்று கண்டிப்புடன் கூறிட, மூவரும் நல்ல பிள்ளைகளாகத் தலையசைத்து கேட்டுக்கொண்டனர்.
மலருக்கு இப்போதே ரிஷியை அழைத்து, தாய் சம்மதித்ததைக் கூறிவிட வேண்டும் என்று உள்ளே அவா பரபரத்தது. இருந்தும், நாளை நேரில் கூறி அவனது எதிர்வினையைக் காண வேண்டும் என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.