முகம் முழுவதும் தவிப்புடனும் விழிகளில் கெஞ்சலுடனும் தன் எதிரே நிற்பவளை ஒரு நொடி அமைதியாய் நோக்கியவன் பிறகு மெதுவாய் தலையை அசைத்து சம்மதத்தை தெரிவிக்க மலரின் முகத்தில் நிம்மதி படர்ந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றவளது குரலில் அவனுக்கான நன்றி விரவிக்கிடந்தது.
சடுதியில் ராதாவின் புறம் திரும்பியவள், “ஒரு மணி நேரத்துல போய் குளிச்சிட்டு ரெடி ஆகிட்டு வரேன்ம்மா” என்று மொழிய, ராதா சம்மதமாய் தலையசைத்தார்.
ராதாவிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் வேகமாக அங்கிருந்து வெளியேறியவள் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். மலரின் வீடு அங்கிருந்து பதினைந்து நிமிட நடை பயணத்தில் வந்து விடும். அந்த பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் மற்றொருபுறம் தான் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியும் இருந்தது.
அரக்க பறக்க வீட்டை அடைந்தவள் காலணியை கழட்டிவிட்டு உள்ளே நுழைய, “அம்மா அக்கா வந்துட்டா” என்ற வித்யா கூடத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாள். முரளி அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தான். இருவரும் பக்கத்தில் உள்ள பள்ளியில் தான் பயில்கின்றனர்.
வித்யாவின் குரலில் சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்த மாதவி, “என்ன மலரு போன வேலை என்னாச்சு? என்று வினா தொடுத்தார்.
“வேலை கிடைச்சிருச்சுமா இன்னும் ஒரு மணி நேரத்துல போகணும் நான் போய் குளிச்சிட்டு வரேன் சாப்பாடு எடுத்து வை” என்றவள் குளியல் அறைக்குள் நுழைந்து ஒன்றுக்கு மூன்று முறை சோப்பை நன்றாக தேய்த்து குளித்து முடித்து வெளியே வந்து அங்கிருந்த செல்ஃபில் எதையோ தேட துவங்கினாள்.
அதனைக் கண்ட மாதவி, “என்ன தேடுற மலர்?” என்று வினா எழுப்ப, “சுதாகர் அண்ணா வாங்கி கொடுத்த சென்ட் இங்க தான இருந்துச்சு எங்க போச்சு?” என்று பதில் வினவினாள்.
உண்டு முடித்து கையை கழுவி வந்த வித்யா, “உனக்கு எதுக்கு கா சென்ட் நீ தான் சென்ட் வாசமே ஆகாதுன்னு சொல்லுவியே?” என்று வினவ, “சென்ட் வாசம் ஆகாது தான் ஆனா என்ன பண்றது சென்ட் அடிக்கலனா வேலை கிடைக்காது” என்றவளது கையில் வாசனை திரவியம் சிக்கியது.
“என்ன சொல்ற மலரு” என்று மாதவி புரியாது வினவ, “ம்மா இந்த சுதாகரன் அண்ணாவோட ஃப்ரெண்ட் இருக்காருல அந்த சாருக்கு மீன் வாசமே ஆகாதாம். நான் வேற மீனை வித்துட்டு அப்படியே போய் நின்னேன்னா அவங்க வேலைக்கு வர வேண்டாம் வேற ஆளை பார்த்துகிறேன்னு சொல்லிட்டாங்க. நான் தான் குளிச்சு முடிச்சு சென்ட் எல்லாம் போட்டு மீன் வாசம் வராம பார்த்துகிறேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன்” என்றவள் தன்னுடையில் ஆங்காங்கே வாசனை திரவத்தை தெளிக்க துவங்கினாள்.
“இது என்ன கொடுமையா இருக்கு மீன் வித்தா மீன் வாசம் வரத்தான் செய்யும்” என்று மாதவி நொடிக்க, “அதானே மீன் வாசம் வந்தா வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிடுவாங்களா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அவங்க” என்று வித்யா பின்பாட்டு பாடினாள்.
“வித்து குட்டி நெஜமாவே அவங்கள பார்த்தா அப்பாடக்கர் மாதிரி தான் இருக்கு. அந்த அம்மாவோட சேலை நகை எல்லாம் பார்க்கும்போதே தெரியுது பெரிய பணக்காரங்களா தான் இருப்பாங்கன்னு. காலையில கூட என்கிட்ட வந்து நண்டு இறாலும் வாங்கிட்டு போனாங்க. அதுவும் விலையே கேட்காம வாங்கிட்டு போனாங்க தெரியுமா?” என்று தங்கையிடம் வினா தொடுத்தாள்.
“அப்படியா பெரிய பணக்காரங்களா அவங்க?” என்று வித்யா விழி விரித்து கேட்க, “அப்படித்தான்டி நினைக்கிறேன். அவங்க வச்சிருக்க காரை பாத்தாலே கப்பல் மாதிரி இருக்குடி” என்று பதில் மொழிந்தவள் துப்பட்டாவை எடுத்து தோள்பட்டையின் இருபுறமும் பின் குத்தினாள்.
“எல்லாம் சரிதான் மலரு மீன் வியாபாரம் பாக்குறவங்க மேல மீன் வாசம் வர தான செய்யும் அதுக்கு என்ன பண்ண முடியும்?” என்று மாதவி மீண்டும் கேள்வி எழுப்பினார்.
“அதாம்மா நானும் நெனச்சேன் வேற யாராவது இருந்தா மூஞ்சில அடிச்ச மாதிரி கேட்டிருக்கலாம். இவங்க வேலை கொடுக்க போறவங்க அப்படி பேச முடியுமா? அதுவும் அந்தம்மா தோரணையே எப்படி இருக்கு தெரியுமா? பரம்பரை பணக்காரங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றவள், “சாப்பாடு எடுத்து வைம்மா பசிக்குது ஒரு மணி நேரத்துல வர்றேன்னு வேற சொல்லிட்டு வந்து இருக்கேன் சரியா போகணும்” என்று மொழிந்தாள்.
“என்னவோ போடி…” என்ற மாதவி உணவை எடுத்து வர செல்ல, மலர் தங்கையிடம், “வித்து குட்டி கொஞ்சம் கிட்ட வந்து என் மேல மீன் வாசம் வருதான்னு பாத்து சொல்லு” என்று கூறினாள்.
வித்யாவும் தமக்கையின் அருகில் வந்தவள் சுற்றி சுற்றி முகர்ந்து பார்த்துவிட்டு, “சுத்தமா வரலக்கா சென்ட் வாசம் தான் குப்புன்னு அடிக்குது” என்று பதில் அளித்தாள்.
“அப்பாடி… இப்பதான் நிம்மதியா இருக்கு இனிமே தினமும் இந்த சென்ட் அடிச்சிட்டு போக வேண்டியது தான்” என்று மலர் இயம்ப, “ஆனா அக்கா உனக்கு தான் தலை வலிக்கும் இல்ல டெய்லி எப்படி போடுவ?” என்று இளையவள் கவலையுடன் கேட்டாள்.
“அதெல்லாம் பாத்துக்கலாம் விடு டி” என்று மலர் பதிலளிக்க, இவர்களது உரையாடலை கேட்டபடி படித்துக் கொண்டிருந்த முரளி தனது புத்தகத்தை பையில் வைத்து பூட்டிவிட்டு வந்து, “அக்கா நீ இந்த வேலைக்கு போய் தான் ஆகணுமா? தலைவலியோட எப்படிக்கா பார்ப்ப” என்று வருத்தம் இழையோடிய குரலில் கேட்டான்.
“முதநாள் தான்டா தலைவலிக்கும் இரண்டாவது மூனாவது நாள் பழகிரும்…” என்றவள் தாய் உணவை கொண்டு வந்ததும் அமர்ந்து உண்ண துவங்கினாள்.
“மலரு எத்தனை பேர் டி அந்த வீட்ல? நிறைய வேலை இருக்குமோ?” என்று மாதவி தன் பங்கிற்கு வருத்தப்பட, “ம்மா மொத்தம் ரெண்டு பேரு தான் நினைக்கிறேன். அந்தம்மாவும் அந்த சாரும் மட்டும் தான் இருந்தாங்க. முன்னாடி பார்த்த வேலைய விட கம்மியா தான் இருக்கும்” என்று தாயை சமாதானம் செய்தபடி உண்டு முடித்தவள் எழுந்து சென்று தட்டை கழுவி வைத்துவிட்டு வந்தாள்.