மல்லிகா சொன்னது மாதிரி நீங்க எல்லாமே பிரஷா தான் இருக்கு கண்ணா” என்று காரில் ஏறியதும் ராதா கூற, “ஹ்ம்ம் நானும் கவனிச்சேன் ம்மா மார்னிங் தான் லோடு கொண்டு வருவாங்க போல அப்படியே சேல் பண்ணிட்டு கிளம்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்” என்று பதில் அளித்தான்.
“ஆமாடா கண்ணா நான் மீன் வாங்கினேன் இல்ல அந்த கடையில் இருந்த பொண்ணு அதான் சொல்லுச்சு காலையில தான் வாங்குவாங்க போல வித்தது போக மீதி எல்லாம் ஏதாவது கடை கொண்டு போய் கொடுத்துடுவாங்கலாம் நான் இங்க வரும்போது இனிமே இங்கேயே வாங்கிக்கலாம்” என்று கூறினார்.
இருவரும் பேசியபடியே பத்து நிமிடத்தில் அண்ணாநகரில் இருந்த அவர்களது வீட்டினை அடைந்தனர். மதுரையில் அண்ணாநகர் சற்று வளமானவர்கள் வாழும் பகுதியாக இருந்தது. ஆங்காங்கே தள்ளி தள்ளி இருந்த பெரிய வீடுகள் அதற்கு சான்று.
இன்னும் ஒருவரும் அந்த பகுதியில் எழவில்லை என்பதற்கு சாட்சியாக தெருவே அமைதியாக இருந்தது. காரை அதை நிறுத்தத்தில் நிறுத்திய இருவரும் உள்ளே நுழைய ராதா சமையலறை சென்று மகனுக்கு காலை சமையலை துவங்க மகன் தனது அறைக்குள் சென்று மெத்தையில் விழுந்து கண்களை மூடினான்.
அவன் ரிஷிகேஷவ். ராதாவால் மட்டும் கண்ணா என்று செல்லமாக அழைக்கப்படுபவன். ரிஷி, ராதா அண்ணாமலை தம்பதியின் இரண்டாவது புதல்வன். மூத்தவன் ஹரிஹரன் அவனது மனைவி தூரிகா. மூன்றாவது பெண் ஷாலினி வீட்டின் செல்லப்பிள்ளை.
அண்ணாமலையின் பூர்வீகம் சிவகாசி. அண்ணாமலை பரம்பரை பரம்பரையாக செய்து வந்த பட்டாசு தொழிலை செய்ய விருப்பமில்லாமல் மனைவியின் பெயரில் ராதா கார்ஸ் என்ற கார் விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். சிவகாசியில் மூன்று கிளையும் மதுரையில் ஒரு கிளையும் இருந்தது இதுபோக அவர்களுக்கு ஊரில் நிறைய தொழில்களும் இருக்கிறது.
ஹரிஹரன் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் தொழிலை கவனித்துக் கொண்டிருக்க ரிஷி வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு சில வருடங்கள் அங்கேயே பணி செய்து கொண்டிருந்தான்.
கடந்த மாதம் தான் தந்தையின் ஆசைக்கிணங்க வேலையை விட்டுவிட்டு குடும்பத் தொழிலை கவனிக்க வந்திருந்தான். சிவகாசியில் இருந்த மூன்று கிளையை விட மதுரை கிளையின் வருமானம் குறைவாக இருப்பதைக் கண்டவன் தான் அக்கிளையை பார்த்துக் கொள்வதாக தந்தையிடம் கூறிவிட்டு நேற்று மாலை தான் மதுரைக்கு இடம் பெயர்ந்திருந்தான்.
மகனை தனியே அனுப்ப மனமில்லாமல் விட்டு செல்வதற்காக ராதா உடன் வந்திருந்தார். அப்போதுதான் அவர்களது வீட்டில் பணிபுரியும் மல்லிகா மதுரை மீன் சந்தையை பற்றி கூறியது நினைவில் வைத்து அங்கு சென்றனர்.
எட்டு மணி வரை உறங்கியவன் அதன் பிறகு எழுந்து குளித்து வர ராதா காலை உணவு தயார் செய்து வைத்திருந்தார். மகனைக் கண்டதும், “கண்ணா சாப்பிடலாமா டைம் ஆயிடுச்சு” என்று அழைக்க மணி ஒன்பதாகியிருந்தது.
தாயுடன் அமர்ந்து பேசிக்கொண்டே காலை உணவை முடித்தவன் தனது மடிக்கணினியை எடுத்து ஏதோ வேலை செய்ய துவங்கினான்.
இங்கு மலர் அன்று வாங்கி இருந்த அனைத்து மீன்களையும் விற்று முடித்து இருந்தாள். தினமும் இதே போல் எல்லா மீன்களும் விற்பனை ஆகாது ஒரு சில நாட்கள் சில மீன்கள் அப்படியே தங்கிவிடும் அதை பாதி விலைக்கு வெளியில் உள்ள கடைக்கு கொடுத்து விடுவாள்.
இன்று அனைத்துமே விற்றதில் முகத்தில் புன்னகை பெரிதாய் பூத்திருந்தது. “எப்படியோ இன்னைக்கு எல்லாமே வித்துருச்சுடா மணி சந்தோஷமா இருக்கு” என்று அருகில் இருந்தவனிடம் கூற, “ஆமக்கா நேத்து பாதி விக்காம போனப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு இதே மாதிரி டெய்லி வித்தா நல்லா இருக்கும்லக்கா” என்று பதில் அளித்தான்.
“ஹ்ம்ம் நல்லா தான் இருக்கும் ஆனால் விக்கணுமே” என்று இழுத்தவள் கடையை மணியுடன் சேர்ந்து கூட்டி கழுவி விட துவங்கினாள். பின்னர் கீழே விரித்து இருந்த தார்ப்பாய் மற்றும் இதர பொருள்களை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் கட்டியவள் மணியுடன் வீட்டை நோக்கி புறப்பட்டாள்.
போகும் வழியில் சுதாகரன் தனது நண்பன் வீட்டிற்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்று கூறியது நினைவு வர, “டேய் சுதாகர் அண்ணா அவர் ஃப்ரெண்டு வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேணும்னு சொல்லி இருந்தாரு இப்பதான் ஞாபகம் வந்துச்சு நான் போய் பேசிட்டு வரேன்” என்று மணியிடம் கூற, “வீட்டுக்கு போய் சாப்பிட்டு போகலாம்ல க்கா” என்று மணி பதில் மொழிந்தான்.
“இல்லடா போயிட்டு திரும்பி வரணும், அலைச்சல்தான். போகும்போதே பேசிட்டு போயிட்டா நாளைல இருந்து வேலைக்கு வர ஆரம்பிச்சிடலாம்ல அதுவும் இல்லாம வேலை வேற ரொம்ப டிமாண்டா இருக்கு வேற யாராவது போய் கேட்டுட்டா என்ன பண்றது போன மாசமே வீட்டு செலவுக்கு காசு பத்தல நான் போயிட்டு வரேன்” என்றவள் அவனிடம் இரு சக்கர வாகனத்தை கொடுத்துவிட்டு சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
சாலையை கடந்து அண்ணா நகரின் முதல் தெருவில் நுழைந்தாள் மலர். கருணை மலர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாதவி ரவிச்சந்திரன் தம்பதியின் முதல் புதல்வி. இரண்டாவது சாகித்யா அடுத்து முரளி கடைசியாக வித்யா. ரவிச்சந்திரன் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். சமையல் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் சமையல் கலைஞராக பணிபுரிந்தார். ரவிச்சந்திரனின் சம்பளத்தில் குடும்பத்தை சரியாக நிர்வகித்து வந்தார் மாதவி.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் ரவிச்சந்திரன் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை குணப்படுத்த இருந்து பணத்தை எல்லாம் செலவழித்து கடன் வாங்கி எவ்வளவோ முயற்சித்தனர் இருந்தும் காப்பாற்ற முடியவில்லை.
திடீரென கணவனை இழந்துவிட்ட மாதவிக்கு திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை. அப்போதுதான் மலர் கல்லூரி முதல் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக வேலைக்கு சேர்ந்தவள் தாய்க்கு உதவியாக குடும்ப பாரத்தை தூக்கி சுமக்க துவங்கினாள். தந்தை இருந்தவரை அவருடன் பள்ளி விடுமுறையில் சமையல் வேலைக்கு சென்றதால் சமையல் திறமை அவளிடமும் இருந்தது. அதைவிட கை பக்குவம் மிகவும் நன்றாக வர பகுதி நேர வேலையாக சமையல் வேலை செய்ய துவங்கினாள்.
மாதவியும் வீட்டிலிருந்தே தையல் வேலை செய்து ஓரளவு குடும்பச் செலவை சமாளிக்க, அதே நேரம் கடன் கொடுத்தவர்களும் கடனை உடனடியாக அடைக்க கூறி மொத்தமாய் முற்றுகையிட வேறு வழி இன்று தங்கள் இருந்த சிறு வீட்டை விற்று முக்கால்வாசி கடனை அடைத்து இருந்தனர்.
அப்போது சாகித்யாவிற்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது தங்கையை தனியே விடுதியில் விட மனமில்லாதவள் தூரத்து உறவினர் ஒருவரது உதவியால் குடும்பத்தினரோடு மதுரைக்கு இடம் பெயர்ந்திருந்தாள்.
இங்கு வந்த பிறகு பக்கத்து வீட்டு ஆட்களின் உதவியால் இந்த மீன் சந்தையில் ஒரு கடையை வைத்து அதே பகுதியில் வசிக்கும் மணியையும் துணைக்கு சேர்த்துக் கொண்டாள். மீன் விற்று வந்த பணம் கடனை அடைக்கவே சரியாக இருக்க வீட்டு செலவிற்கு மிகவும் திண்டாட்டமாக இருந்தது இதுபோக வாடகை வேறு கொடுக்க வேண்டியதாயிருக்க வந்த புதிதில் மிகவும் அல்லாடிப் போனாள்.
இவர்களது துன்பத்தைக் கண்ட பக்கத்து வீட்டு சுமதி தான் வேலை செய்யும் பகுதியில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டாள். அதுதான் சுதாகரின் வீடு. சுதாகர் திருமணமாகி மனைவி மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்தான்.
சுதாகரன் மற்றும் அவரது குடும்பம் மலரிடம் நன்முறையில் நடந்து கொள்ள மலரும் அண்ணா அண்ணி என்று உரிமையாக அழைக்கும் அளவிற்கு அவ்வீட்டில் ஒரு வருடமாக வேலை செய்தாள். இந்த நிலையில் சுதாகருக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு வர தான் இருந்த வீட்டை விற்றுவிட்டு வெளிநாடு சென்றிருந்தான்.
சுதாகரின் வீட்டில் வேலை செய்து வந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென வருமானம் நின்று போகவும் மீண்டும் பழைய நிலைக்கு உள்ளானாள். அப்போது அவளை காப்பது போல சுதாகரிடமிருந்து நேற்று ஒரு செய்தி வந்திருந்தது.
சுதாகரின் நண்பன் ரிஷி தான் அந்த வீட்டை வாங்கி இருந்தான். ராதா சுதாகரிடம் வீட்டு வேலைக்கு ஆள் வேண்டும் என்று பேசும்போது கூறியிருக்க தன் வீட்டில் முன்பு வேலை செய்த பெண் நன்றாக வேலை செய்வாள் அவளை வரக் கூறுகிறேன் என்று அவர்களிடம் மலருக்காக பேசியிருந்தான்.
அன்றே மலருக்கு அழைத்து கூறி இருந்தான். அதன் விளைவு தான் மலர் இப்போது முன்பு வேலை செய்த அதே வீட்டை நோக்கி சென்றாள்.
பத்து நிமிட நடையில் வீட்டை அடைந்தவள் விழிகளால் சுற்றிப் பார்த்தாள். ஒரே மாதத்தில் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு வீடு பளபளவென மின்னியது.
‘ஒரே மாசத்துல வீட்டை புதுசு மாதிரி ஆக்கிட்டாங்களே?’ என்று ஆச்சரியமாக நினைத்தவள் அழைப்பு மணியை அழுத்த இரண்டு நிமிடங்களில் கதவு திறக்கப்பட்டது.
கதவைத் திறந்த ராதாவை கண்ட மலர், “அம்மா நீங்களா? நீங்க தான காலையில என்கிட்ட இறாலும் நண்டு வாங்கிட்டு போனீங்க?” என்று வியப்புடன் கேட்க, “ஆமாம்” எனும் விதமாக தலையை அசைத்தவர், “நீ எங்க இங்க?” என்று வினா எழுப்பினார்.
“சுதாகர் அண்ணா வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு நீங்க கேட்டதா சொன்னாங்க” என்று மலர் கூற, “ஓ… வீட்டு வேலைக்கு வந்து இருக்கியா?” என்று வினவியவர், “உள்ள வா” என்று அழைத்தார்.
மலர் உள்ளே வந்ததும் கதவை பூட்டிவிட்டு நீள்விருக்கையில் அமர்ந்தவர் நேர்காணல் செய்யும் தோரணையில், “நீதான் சுதாகர் வீட்ல இதுக்கு முன்னாடி வேலை பார்த்துட்டு இருந்தியா?” என்று வினா எழுப்பினார்.
“ஆமாம்மா சமையல் வேலை வீட்டு வேலை எல்லாம் வேலையும் நான் தான் பாத்துட்டு இருந்தேன்” என்று பதில் மொழிந்தாள் மலர்.
ராதா, “காலையில மீன் மார்க்கெட்ல வேலை முடிச்சுட்டு இங்க வந்து வேலை பாப்பியா?” என்று பதில் வினவினார்.
“ஆமாங்கம்மா காலைல நாலு மணியிலிருந்து ஆறரை வரைக்கும் அங்க வேலை பார்ப்பேன் கரெக்டா ஏழு மணிக்கு சுதாகர் அண்ணா வீட்டுக்கு வேலைக்கு வந்துடுவேன்ம்மா” என பதில் இயம்பினாள்.
ராதா அடுத்த கேள்வியை கேட்பதற்குள், “அம்மா…” என்ற ரிஷியின் குரல் இடையிட்டது. குரல் வந்த திசையை நோக்கி ராதா திரும்ப மலரின் பார்வையும் அந்த புறம் நகர்ந்தது.
அங்கே தனது அறையின் வாயிலை அடைத்தவாறு நின்று கொண்டிருந்தான் ரிஷிகேஷவ். அவனது விழிகளை கண்டவளுக்கு அவன் தான் காலையில் வந்தவன் என்று புரிந்தது.
தாயும் மகனும் ஏதோ பார்வையாலே பரிமாறிக் கொள்ள மலர் புரியாது நின்றிருந்தாள்.
மகனின் முகம் பார்த்து அகம் அறிந்தவர், “நீ இந்த வேலைக்கு வேண்டாம் வேற ஆள பாத்துக்குறோம்” என்று கூற, மலரின் முகத்தில் ஏகமாய் அதிர்ச்சி பரவியது.
“அம்மா என்னாச்சு ஏன் திடீர்னு வேணாம்னு சொல்றீங்க?” என்று அதிர்ந்த குரலிலே வினவ, “என் மகனுக்கு மீன் ஸ்மெல்லே ஆகாது. நீ வந்ததும் உனக்கு முன்னாடி மீன் ஸ்மெல் வருது. அதனால்தான் வேணாம்னு சொன்னேன் நான் வேற யாராவது பாத்துக்குறேன் நீ போயிட்டு வா” என்று பதில் அளித்தார்.
அவரது பதில் ஒரு நொடி திகைத்தவள், “அம்மா உங்களுக்கு இந்த மீன் வாசம் தான் பிரச்சனைனா டெய்லி வியாவாரம் முடிஞ்சதும் வீட்டுக் போய் குளிச்சிட்டு ஜவ்வாது போட்டுட்டு நல்லா சுத்த பத்தமா மீன் வாசம் வராத மாதிரி வர்றேன் மா ஒரே ஒரு தடவை வாய்ப்பு கொடுங்கம்மா எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்மா இப்பவே போய் ஒரு மணி நேரத்துல குளிச்சிட்டு மீன் வாசம் இல்லாம கிளம்பி வரேன்மா” என்று கெஞ்சலுடன் கேட்க, ராதாவின் பார்வை மகனிடம் சென்றது.
அதை உணர்ந்து, “ப்ளீஸ் சார் இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம் இதை வச்சு தான் என் குடும்பத்தை பாக்கணும்” என்று தவிப்புடன் கூறியவள் விழிகளில் இறைஞ்சலுடன் அவனை கண்டாள்.